Tuesday, December 5, 2017

கொழும்பு கல்விவலயத்தால் 39 ஆசிரியர்களுக்கு முறையற்ற இடமாற்றம் : ஏற்கவேண்டாம் என ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு!


மேல்மாகாணத்திற்குட்பட்ட கொழும்பு கல்வி வலயத்தினால் 39 தமிழ்மொழிமூல ஆசிரியர்களுக்கு முறையற்ற விதமாக – 2007/20 தேசிய இடமாற்றச் சுற்றறிக்கையை மீறி – எவ்வித இடமாற்றச் சபையும் இன்றி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய முறையற்ற இடமாற்றத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் முழுமையாக எதிர்ப்பதுடன்  - இவ்விடயம் தொடர்பாக – மேல்மாகாண கல்விச் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும்; கொண்டுவரப்பட்டுள்ளது.

முறையற்ற வகைகளில் கதிரைகள் ஏறிய தகுதியற்ற அதிகாரிகளால் - அரசியல்வாதிகளின் அரசியல் தேவைகளை  நிறைவு செய்வதற்காகவே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே –
இத்தகைய முறையற்ற இடமாற்றம் வழங்கப்பட்ட 39 ஆசிரியர்களும் - எவ்வகையிலும் இந்த இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் - எதிர்வரும் 08.12.2017 ஆம் திகதி மதியம் 1.00 மணிக்கு கொழும்பு – 2 விதானகே மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு கல்வி வலயத்தில் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்திப்பதன் மூலம் இடமாற்றத்தை நிறுத்தமுடியும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.