Wednesday, December 26, 2018

வலிகாமம் கல்விவலய முறையற்ற இடமாற்றம் ஆசிரியர்கள் இடமாற்றத்தை ஏற்க வேண்டாம்.- ஜோசப் ஸ்ராலின்


வலிகாமம் கல்விவலயத்தில் ஆசிரியர் பரம்பல் சீராக்கம் எனும் போர்வையில் - சட்ட பூர்வமான - இடமாற்றச்சபையின்றி 72 ஆசிரியர்களுக்கு இடமாற்றக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதில் பாடசாலைகளில் மேலதிகமாக உள்ளவர்களை முறையாக இனங்காணாமல் - அதிபர்களினதும் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரினதும் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே இந்த இடமாற்றக்கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விடமாற்றத்தில் பல ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பட்டுள்ளன.

இந்த முறையற்ற இடமாற்ற கடிதங்களில் - இடமாற்றம்பெற்ற புதிய பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னரே - இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடு சமர்ப்பிக்கமுடியும் எனவும் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரால் முறையற்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இது அநீதி இழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் உரிமையை நசுக்கும் செயற்பாடாகும்.

வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள இந்த முறையற்ற இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டு - 2007/20 தேசிய ஆசிரியர் இடமாற்றக்கொள்கையின் அடிப்படையில் - அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றசபையூடாக நடைபெற வேண்டும். ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்வதற்கும் போதிய சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.

முறையற்ற விதமாக -வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளர் - இடமாற்றங்கள் செய்ய முற்பட்டமை தொடர்பாக - ஏற்கனவே வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் முறையிட்டிருந்தது.

இவ்விடயங்கள் தொடர்பாக - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முறையற்ற இந்த இடமாற்றங்களை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பதுடன் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் (0779152351 / 0776629473) கேட்டுக்கொள்கின்றோம். 
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநருக்கும் முறைப்பாடு செய்யவுள்ளோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.


Friday, October 12, 2018

இன்று வலிகாமம் கல்வி வலயத்தில் கூடிய சட்டவிரோத இடமாற்றச்சபை: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்பு!


இன்று வலிகாமம் கல்வி வலயத்தில் - தொலைபேசி அழைப்பு ஒன்றினூடாக - இடமாற்றச் சபை நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இடமாற்றச்சபை உறுப்பினர் அழைக்கப்பட்ட நிலையில் - அங்கு – தாபன விதிக்கோவையிலும் - இடமாற்றகொள்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி - அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் அல்லாமல் - இடமாற்றச் சபை கூடப்பட்ட நிலையில் - அந்த இடமாற்றச்சபை சட்டவிரோதமானது என்பதன் அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்பு செய்துள்ளது.
ஏற்கனவே - கூடப்பட்ட இடமாற்ற சபைகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் -இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.  இத்தகைய விடயங்களை ஆராய்ந்து – அதற்குரிய தீர்மானங்களின் பின்னரே புதிய இடமாற்ற நடைமுறைகளை அமுல்படுத்த ஆதரவு வழங்குவது என இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருந்தது. 

இந்நிலையில் -  வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் – தாபனவிதிக்கோவைகளிலும், இடமாற்றக் கொள்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள சட்டபூர்வமான இடமாற்றச்சபை உறுப்பினர்களுக்கு மேலதிகமாக – தனக்கு ஆதரவானவர்களை திரட்டி – முறைகேடாக இடமாற்றங்கள் மேற்கொள்ளவிருந்த நிலையில் - இந்த சட்டவிரோத இடமாற்றச்சபையிலிருந்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்புச் செய்துள்ளது. 

உரிய முறையில் - இடமாற்றச்சபை உறுப்பினர்களுக்கு அறிவிப்புக்கள் வழங்காமலும், சட்டபூர்வமான அங்கீகாரமுடைய தொழிற்சங்கத்தின் உறுப்பினரை சவாலுக்கு உட்படுத்தும் நோக்கிலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான இடமாற்றச்சபைகள் செல்லுபடியற்றதாகும். 

 முறையற்ற இடமாற்றம் தொடர்பாக - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ( HRC/JA/069/2018) வழங்கிய பரிந்துரையில் -
"ஆசிரிய இடமாற்ற செயர்பாடுகள் யாவும் இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதையும் - இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள் இடமாற்ற சபையின் தீர்மானமாக அமைவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் வழங்கவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் - 

இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைவாக - உரியமுறையில் - அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இடமாற்றச்சபை கூடாமல் - வலிகாமம் கல்வி வலயத்தில் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் - இந்த இடமாற்றங்கள் தொடர்பாக சட்டரீதியாக இலங்கை ஆசிரியர் சங்கம் சவால்களுக்கு உட்படுத்தும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரித்தார்.

Thursday, October 11, 2018

வடக்கு கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் வழங்கப்பட்ட முறைகேடான இடமாற்றத்தை உடன் சீர்படுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை!



தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் 7 வருடங்கள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தின் போது 2017 ஆம் ஆண்டு இடமாற்றச்சபையின் மூலம் இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டன.

ஆயினும் - ஆசிரியர் ஒருவர் இவ் இடமாற்ற நடைமுறைகளைப் பின்பற்றியிருக்கவில்லை. இந்த முறையற்ற செயற்பாடுகளுக்கு வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் - வடமாகாண கல்விப் பணிப்பாளரும் இடமாற்ற நடைமுறைகளுக்கு மாறாக செயற்பட்டிருந்தனர்.

வடமாகாணத்தில்  எந்தவொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்டிருக்காத முறையில் - குறித்த ஆசிரியைக்கு சார்பாக – பல பாடசாலைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன.  முன்னர் தொடர்ச்சியாகப் பணியாற்றிய யாழ்.வலயத்திலுள்ள குறித்த அந்தப் பாடசாலையிலேயே தன்னை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இவ்வாறு வழங்கப்படும் இடமாற்றம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னைய வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனுக்கு தெரியப்படுத்தியமைக்கமைவாக - மீண்டும் பழைய பாடசாலைக்கு வழங்கப்படவிருந்த இடமாற்றம் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் - வடக்கு கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் இடமாற்றம் பெற்று சென்ற பின்னர் – வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அ.அனந்தராஜால் - யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளருக்கு – மீண்டும் பழைய பாடசாலையையே ஆசிரியைக்கு வழங்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆயினும்-  யாழ்.வலயக் கல்விப் பணிமனையால் கடிதம் வழங்கப்பட்டிராத நிலையில்- வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கடிதத்துடன் சென்று – பழைய பாடசாலையிலேயே குறித்த ஆசிரியை கடமையை ஆற்றிவருகின்றார்.

இம் முறையற்ற விடயம் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சர்- வடமாகாண முதலமைச்சர் -  வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியிருந்தும். இவ்விடயம் சீர்செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால் - இம்முறைகேடான இடமாற்றம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை விசாரணை செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - இவ்விடமாற்றத்தில் வடமாகாண கல்விப் பணிப்பாளரின் தலையீடு இருந்துள்ளது எனவும் - விசாரணையின் போது - இத்தலையீடு தொடர்பில் விளக்கம் எவையும் தராமல் - இவ்விடமாற்றம் ''யாழ்.வலயத்துக்குட்பட்டதால்  யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விளக்கங்களை பெற முடியும்'' எனக் குறிப்பிட்டமை தொடர்பிலும் கண்டித்துள்ளது.

குறித்த பாடசாலை அதிபரும் நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் - வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கடிதம் மூலம் செயற்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும்- 

இதனை யாழ்.பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏற்று அங்கீகரித்தமையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்-

இடமாற்ற சபை கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றியமையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஆசிரியரது இடமாற்ற விடயத்தில் குறித்த பாடசாலை அதிபர் - யாழ்.வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாக செயற்பட்டமையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானிக்கின்றது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் -
 குறித்த ஆசிரியைக்கு வேறு பாடசாலைக்கு உடனடியாக இடமாற்றத்தை வழங்க வேண்டும் எனவும் -

ஆசிரிய இடமாற்ற செயர்பாடுகள் யாவும் இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதையும் - இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள் இடமாற்ற சபையின் தீர்மானமாக அமைவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் வழங்கவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Monday, October 8, 2018

இடமாற்ற முறைகேடுகள் தீர்க்கப்படும் வரை - இ.ஆ.சங்கம் இடமாற்ற சபைகளை புறக்கணிக்கும்.


வடமாகாணத்தில் இடமாற்றங்களின்போது – ஒரு சிலருக்கு மட்டும் சலுகைகளை வழங்கும் - பாரபட்சங்களையும், அரசியல் தலையீடுகளையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. அனைவருக்கும் சமத்துவமான நீதி பின்பற்றப்படவேண்டும்.  இதுபோன்ற - கடந்தகால இடமாற்ற முறைகேடுகள் களையப்படும்வரை - இடமாற்றச்சபைகளில் கலந்துகொண்டு – புதிய இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்குவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனையும் மீறி - வலய மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களம் இடமாற்றங்களை நடடுறைப்படுத்துமானால் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் மேலும் தெரிவிக்கையில் -

வடமாகாணத்தில் கடந்த காலங்களில் இடமாற்றங்களில் நடைபெற்ற முறைக்கேடுகள் மற்றும் பாரபட்சங்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் - ஆதாரங்களுடன் பல தரப்பினரிடமும் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆயினும் - அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் பக்கச்சார்ப்பான செயற்பாடுகளினால் - நியாயத்தன்மை பின்பற்றப்படவில்லை. சட்டபூர்வமான இடமாற்றச்சபைகள் ஊடாக தீர்மானிக்கப்பட்ட இடமாற்றங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டன.

கடந்த வருடம் இடம்பெற்ற வருடாந்த இடமாற்றங்களிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் - இடமாற்றத்துக்கு தகுதிபெற்றிருந்த அழகியல் பாட ஆசிரியர்கள் சிலருக்கு இன்னமும் வடமாகாண கல்விப் பணிப்பாளரால் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக- இடமாற்றச் சபையில் பரிசீலிக்கப்படாமல் இடமாற்றங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டுள்ளன.

இவை தொடர்பாக- வடமாகாண கல்வியமைச்சர், வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமமைச்சருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தும் இம்முறைகேடுகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.
இடமாற்றச் சபைகள் கூடுகின்றபோது - இடமாற்றச்சபையின் தீர்மானங்களுக்குரிய அறிக்கைகள் பேணப்படுகின்றன. இந்த நிலையில் - வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் இடமாற்றச்சபை தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தியதாக கூறிவருவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

இவைதொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதமை கவலைக்குரிய விடயமாகும்.

யாழ்.வலயத்தில் - இடமாற்றச்சபைத் தீர்மானத்துக்கமைய நடைமுறைப்படுத்தியிருந்த சில இடமாற்றங்களிலும் - இடமாற்றச்சபையின் தீர்மானத்தை மீறி -  வடமாகாண கல்வியமைச்சால் தன்னிச்சையான முறையில் இடமாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

கடந்த கால முறைகேடுகளை நிவர்த்தி செய்வதற்கு வடமாகாண கல்வியமைச்சுக்கு ஒரு நாள் போதுமானதாகும். முறைகேடுகளை நீக்க கல்வியமைச்சும் வடமாகாண கல்வித்திணைக்களமும் உடனடியாக முன்வரவேண்டும்.

எமது இத்தகைய நிலைப்பாட்டை - வெளிமாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு காரணம் காட்டி - வடமாகாண கல்வித்திணைக்களம் வருடாந்த இடமாற்றத்தை இழுத்தடிக்கவும் நாம் அனுமதிக்கமாட்டோம். முறைகேடுகள் நிவர்த்திசெய்யப்பட்டு உரிய காலத்தில் இடமாற்றச்சபைகள் கூட்டப்படவேண்டும். உரிய காலத்தில் இடமாற்றச்சபை கூட்டப்படாத பட்சத்தில் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

எமது இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து - இடமாற்றங்கள் தொடர்பான நீதியாகச் செயற்படுவதற்கு – வடமாகாணக் கல்வியமைச்சும்இ வடமாகாண கல்வித் திணைக்களமும் தொடர்ந்தும் பின்நிற்குமானால் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படும் எனவும் எச்சரிக்கின்றோம்.

Sunday, October 7, 2018

பல லட்சங்கள் லஞ்சமாகப் பெற்ற கொழும்பு இந்து மகளிர் கல்லூரி அதிபர். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு.


பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதிக்கென பல லட்சம் ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட கொழும்பு இந்து மகளிர் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் கோதை நகுலராஜா அவர்களுக்கெதிராக இலங்கை ஆசிரியர் சங்கமும், அப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து 04.10.2018 அன்று கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குறிப்பிடுகையில் -

எமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் எண்பது பேரிடமிருந்து ஐம்பத்தேழு இலட்சம் ரூபா பெற்றுள்ளார். ஆனாலும் அந்த ஐம்பத்தேழு இலட்சம் ரூபா எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பது தொடர்பாக – எவ்வித கணக்கும் காட்டப்படவில்லை. இது தொடர்பாக கல்வியமைச்சுக்கு எம்மால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர் கடந்த மாதம் 3ஆம் திகதி இந்தப் பாடசாலை கணக்கு பேணப்படும் மிலாகிரிய இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்று இருபத்து மூன்று லட்சம் ரூபாவை அதிபர்  வைப்பில் இட்டுள்ளார். இந்த இருபத்து மூன்று லட்சம் ரூபா கட்டிய பற்றுச்சீட்டும் எம்மிடம் ஆதாரமாக உள்ளது. இது 2017 ஆம் ஆண்டு மாணவர் அனுமதிக்காக பெற்றுக்கொண்டது மட்டுமாகும். ஆனால் - ஏனைய காலப்பகுதிகளில் இவ் அதிபர் பெற்றுக்கொண்ட பணம் தொடர்பாக – எவ்விதமான விசாரணைகளும் நடைபெறவில்லை. இவை விசாரிக்கப்படவேண்டும்.

தற்போது - இப்பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி நிதியை கல்வியமைச்சு இடைநிறுத்தியுள்ளது. பாடசாலையின் வாகனத்தைப் பாவிப்பதற்காக – கல்வியமைச்சால் சாரதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் - மேலதிகமாக சாரதியொருவரை முப்பத்தையாயிரம் ரூபாவுக்கு நியமித்திருந்தார். ஆனால் - ஓட்டுநர் அட்டவணை பட்டியல் எதுவும் பேணப்படவில்லை.

பாடசாலையில் கேபிள்ரீவி, குளிரூட்டி போன்ற ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். இவையாவும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்திலேயே நடைபெற்றுள்ளது. இவையாவும் முறையற்ற செயற்பாடுகளாகும்.
இவை தொடர்பாக – மத்திய கல்வியமைச்சுக்கு முறைப்பாடு செய்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆதலால் - இவர் அதிபராக வந்த காலத்திலிருந்து இதுவரைக்குமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளோம்.

இந்தப் பாடசாலையுடன்; கோயில் ஒன்றுள்ளது. இக்கோயிலில் ஒரே செயற்பாட்டுக்கு பலரிடம் பொய்கூறிப் பணம்பெற்றுள்ளார். 
தற்போது அந்த அதிபர் கல்வியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் - பாடசாலையின் விடுதியிலேயே இன்னும் தங்கியிருக்கிறார். இங்கிருந்துகொண்டு இரவிரவாக –பாடசாலையின் கோவைகளை எடுத்து செல்வதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே - இந்த அதிபர் உடனடியாக பாடசாலைவிடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டு விசாரணை நடத்தப்படவேண்டும்.
அத்துடன் -   இந்த ஊழல் மோசடியில் ஈடுபட்ட இந்த அதிபரைப் பாதுகாப்பதற்காக – தமிழ் அரசியல் வாதிகளிகள் முயன்று வருகின்றனர். இந்தத் தமிழ் அரசியல் வாதிகளின் இந்தச் செயற்பாடு வெட்கக்கேடானதாகும்.
இந்த நேரத்தில் இத்தகைய தமிழ் அரசியல்வாதிகளிடம்  சரியான இடத்தில் நீங்கள் நில்லுங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றோம். தமது அரசியல் லாபங்களுக்காக இந்தக் களவுகள் செய்த அதிபரைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முயலக்கூடாது என்தையும் கூறிக்கொள்கின்றோம். இத்தகைய அரசியல் வாதிகள் பெற்றோர், மாணவர்கள், கல்வி சமூகத்தின் நிலைகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஊழல்வாதிகளைக் காப்பாற்ற முயலக்கூடாது என்பதைக் கூறிக்கொள்கின்றோம்.  இவ்விடயம் சம்பந்தமாக முறையான விசாரணையொன்று வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday, October 6, 2018

ஆசிரிய – அதிபர் சம்பள முரண்பாடு பற்றிய கருத்தமர்வு இன்று நடைபெற்றது


ஆசிரியர் தினமான இன்று 06.10.2018 சனிக்கிழமை  அதிபர் ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் கருத்தமர்வு ஒன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யா/வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.

 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின்  சம்பள அதிகரிப்பு தொடர்பாக - சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும், சம்பள முரண்பாடுகள் மற்றும் ஆசிரியர் அதிபர் பதவியுயர்வுகள் தொடர்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கருத்தமர்வில் ஆசிரிய – அதிபர் சம்பள முரண்பாடு என்பது என்ன? என்னும் தலைப்பிலான கையேடும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 2, 2018

தகுதியற்ற ஒருவரை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!



கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக திரு.எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளமையானது – கிழக்கு மாகாண  கல்விப் புலத்துக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாகும்.

முன்னர் -  கல்முனை, அக்கரைப்பற்று, மூதூர் போன்ற கல்வி வலயங்களில் இவர் வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் கடமையாற்றிய அனைத்து வலயங்களிலும் முறைகேடுகளிலும் - அதிகார துஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டிருந்தார்.  அத்துடன் - ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் இவர் உட்படுத்தப்பட்டமையால் - இரண்டு வருடங்களுக்குரிய வருடாந்த சம்பள ஏற்றமும் நிறுத்தபட்டது.

யுனிசெப் நிதியினை கையாடல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டமை தொடர்பாக – நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினாலும் இவருக்கெதிராக சம்மாந்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்படியான முறைகேடுகளிலும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்ட ஒருவரை மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமையானது தவறான நியமனமாகும்.

வலயக் கல்விப் பணிப்பாளராகவே இருப்பதற்கு தகுதியற்ற ஒருவரை – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமை கிழக்கு மாகாண கல்வியை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடாகும்.

திரு.எம்.கே.எம். மன்சூருக்கு வழங்கப்பட்டுள்ள தவறான நியமனத்தை - கிழக்கு மாகாண ஆளுநர் உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Saturday, September 15, 2018

கல்வியமைச்சும் தொழிற்சங்களும் இணைந்த - முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.


அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பாக – கல்வியமைச்சும், தொழிற்சங்கங்களும் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள குழுவினது முதலாவது ஆலோசனைக் கூட்டம் இன்று இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்றது.
கடந்த 12.09.2018 அன்று அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்து – அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பினால் - ஆலோசனைகள் அடங்கிய ஆவணம் ஒன்று சம்பள ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக காலையில் – கல்வியமைச்சின் செயலாளருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது - கல்வியமைச்சினாலும் சம்பள ஆணைக்குழுவுக்கு ஆலோசனைகள் அடங்கிய தீர்மான முன் வரைபு வழங்கப்படவேண்டும் எனவும் -  அதனை தொழிற்சங்கங்களுடனும் இணைந்து தயாரிக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கோரிக்கைவிடப்பட்டிருந்தது.
இதற்கமைய – கல்வியமைச்சும் தொழிற்சங ;கப் பிரதிநிதிகளையும் உள்ளடங்கியதாக குழு அமைக்கப்பட்டது. இக்குழு – தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலங்களை உள்ளடக்கியதாக இரண்டு பிரிவுகளாக உருவாக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அக்குழுவின் முதலாவது தமிழ்மொழி மூல அமர்வு - இசுறுபாயவிலுள்ள கல்வியமைச்சின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் - தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட கல்வியமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இக்குழுவில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ்.மாவட்ட தலைவர் தேவராசா செந்தூரனும் குழுவில் அங்கத்துவராக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இக்குழுவினால் - மேற்கொள்ளப்படவுள்ள ஆலோசனைகள் அடங்கிய தீர்மான முன்வரைபு விரைவில் சம்பள ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.

Tuesday, September 11, 2018

தொழிற்சங்க கூட்டமைப்பால் சம்பள முரண்பாடுகள் குறித்த பரிந்துரை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பு



இலங்கை அதிபர், ஆசிரியர் சேவையிலுள்ள சம்பள முரண்பாடுகள் தொடர்பாக நீக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான ஆலோசனைகள் அடங்கிய பரிந்துரை –இலங்கை அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியத்தினால் இன்று 11.09.2018 செவ்வாய்க்கிழமை மாலை 2.00 மணியளவில் சம்பள மறுசீரமைப்பு  ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கு முன்பதாக – காலையில்; தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் - கல்வியமைச்சின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது  அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள் குறித்து கல்வியமைச்சும் - தொழிற்சங்கங்களும் இணைந்து ஆலோசித்து சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் - ஓய்வு பெற்ற கல்வியமைச்சு அதிகாரி S.U. விஜயரத்ன தலைமையில் தொழிற்சங்க உறுப்பினர்களையும் உள்ளடக்கிய குழு அமைக்கப்;பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

முதன் முதலாக - இலங்கை ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பு 1994 இல் உருவாக்கப்பட்டது. இவை தொழிற்சங்கங்களுடன் இணைந்தே உருவாக்கப்பட்டது. ஆனால் - 1997 ஆம் ஆண்டு V.C. பெரேரா சம்பள ஆணைக்குவின் பரிந்துரைகளால் பாரிய சம்பள முரண்பாடுகள் ஏற்பட்டன. அதன்பின்னர் 2006 ஆம் ஆண்டு லயனல் பெர்னாண்டோ, சாலிய மத்தியூஸ் ஆணைக்குழுவின் பரிந்துரையிலமைந்த சுற்றறிக்கையினாலும் தொடர்ச்சியான முரண்பாடுகள் காணப்பட்டன. இதன் காரணமாக தொழிற்சங்கப் போராட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன. இதன்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாகவே - இந்த சம்பள முரண்பாடுகளை நீக்கும் வழிமுறைகளை – கல்வியமைச்சும் தொழிற்சங்கங்களும் இணைந்து சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்ற தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Sunday, August 26, 2018

தமிழர்களின் காணிகள் அபகரிப்புக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு!

தமிழர் தாயகப் பிரதேசத்தில் அரசாங்கத்தின் திட்டமிட்டுத் திணிக்கப்படும் புதிய குடியேற்றங்களின் மூலம் - தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதும்-  அவர்கள் தமது வாழ்வுரிமைக்காகப் போராடுவதும் - அச்சத்தின் மத்தியில் தமிழ் மக்கள் - தமது பகுதிகளிலேயே வாழ்வதுமே தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில்  இந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் முனைப்பாக ஈடுபட்டுவருகின்றது. - மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் மகாவலி அதிகாரசபையூடாக தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி சிங்கள மக்களுக்கு வழங்க எடுக்கப்படும் முன்னெடுப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

ஏற்கனவே தமிழ் மக்கள் வாழ்ந்த பல ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது- தமது சொந்தக் காணிகளின் விடுவிப்புக்காக இன்னும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்  -   மணலாற்றுப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மாகாவலி அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்தப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் மிக இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே – திட்டமிட்ட ரீதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்குகின்றது. 28.08.2018 செவ்வாய்க்கிழமை மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்

Thursday, August 2, 2018

பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினர் ஈடுபடமாட்டார்கள்: தொழிற்சங்க பிரதிநிதிகள் - பரீட்சை ஆணையாளர் சந்திப்பில் இணக்கம்!

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது தொடர்பாக – பரீட்சை திணைக்களத்தினரால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் - இவ்வாறு இராணுவத்தினரை பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து - இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜிதவுடன் - கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தினர் இன்று (02.08.2018) காலை கந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது – தற்போது நடைபெறவிருக்கும் பொது பரீட்சைக் கடமைகளில்  மேலதிக பரீட்சை மேற்பார்வையாளர்களாக இராணுவத்தினரை ஈடுபடுத்த தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை உடனடியாக நிறுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. - இவ்வாறான இராணுவமயமாக்கலை அனுமதிக்க முடியாது என தொழிற்சங்க ஒன்றியத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் - தற்போது இலங்கை பாடசாலைகளில் 41000 ஆசிரியர்களும், 11000 அதிபர்களும் பணியாற்றுகின்ற நிலையில் - பரீட்சைக் கடமைகளுக்கு அண்ணளவாக 3000 பேரே தேவைப்படுவர். இவ்வாறான நிலையில் போதிய ஆளணியினர் உள்ளபோது - இராணுவத்தினரை பரீட்சைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது அவசியமற்றது எனவும் - இது இராணுவமயமாக்கல் செயற்பாடு எனவும், இதனை நிறுத்தவேண்டும் எனவும் தொழிற்சங்க ஒன்றியத்தினர் வலியுறுத்தினர்.

இவ்விடயம் தொடர்பான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் – பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதில்லை என – பரீட்சை ஆணையாளர் உறுதிவழங்கியுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்தார்.

Tuesday, July 31, 2018

நடமாடும் சேவையில் வடமாகாண கல்வியமைச்சரின் அடாவடி: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.


வடமாகாணத்தின் கல்வி வலயங்களில் நடைபெறும் நடமாடும் சேவை - கல்வியமைச்சரின் அரசியலை வளர்ப்பதற்குரிய இடமாக மாறிவருவது கண்டனத்துக்குரியதாகும். நேற்றைய தினம் (31.07.2018) தீவக கல்விவலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் - பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் வகுப்புக்களை நடாத்த வலயக்கல்விப் பணிப்பாளர் அனுமதி தருவதில்லை என ஒரு அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது –  மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தான் தடைவிதிக்கவில்லை எனவும் - மேலதிக வகுப்புக்கள் நடாத்துவது தொடர்பாக தாபனவிதிகளின் அடிப்படையில் சில விடயங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் பின்பற்றுவதுடன் மேலதிக வகுப்புக்களினை நடாத்தும் ஆசிரியர்களின் சம்மதக் கடிதங்களையும் வழங்கி அனுமதிபெற்று வகுப்புக்களை நடாத்தலாம் என கூறியுள்ளதாக, தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் கூறியபோதும் - வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் அதனை செவிமடுக்காது - தகாதவார்த்தைப் பிரயோகங்களால் பேசி வலயக் கல்விப் பணிப்பாளரை பல அதிபர்களின் முன்னால் அச்சுறுத்தியுள்ளார். இதனால் அங்குள்ள சில அதிபர்கள் கல்வியமைச்சரின் இச்செயற்பாடு தவறானது என சுட்டிக்காட்டியுமுள்ளனர். இத்தகைய கல்வியமைச்சரின் அடாவடியான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கமும் மிகவன்மையாகக் கண்டிக்கிறது.

வடமாகாணத்தின் கல்வியை தமது தனிப்பட்ட அரசியல் செய்வதற்குரிய களமாக எவரும் பயன்படுத்தமுடியாது. வடமாகாணத்தின் கல்வியமைச்சர் தகாதவார்த்தைப் பிரயோகங்களால் அதிகாரிகளை அச்சுறுத்தமுடியாது. ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்படும்போது – குற்றஞ்சாட்டப்பட்டவர் சொல்லும் கருத்தினையும் ஆராய்ந்துபார்த்தே முடிவெடுக்கவேண்டும். அவ்வாறு கருத்துக்களைக் கேட்க முடியாத கல்வியமைச்சர் – பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மேலதிக வகுப்புக்களை எடுப்பதற்குரிய தாபன விடயங்களையாவது அறிந்திருக்கவேண்டும்.

இவ்வாறு – கல்வியமைச்சர் எனும் தோரணையுடன் - அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வடமாகாண கல்வியமைச்சர் உடனடியாக நிறுத்தவேண்டும். தொடருமாயின் இவ்வாறாக அச்சுறுத்தி - அடிபணியவைக்கலாம் என்னும் அரசியல் அதிகாரவர்க்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



Wednesday, July 25, 2018

நாளைய கல்விசார் பணிபகிஸ்கரிப்பு தற்காலிக நிறுத்தம்: ஜனாதிபதி எழுத்துமூல உத்தரவாதம்!


இன்று  ஜனாதிபதி மாளிகையில் - கல்விசார் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் - காணப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து – நாளை 26 ஆம் திகதி நடைபெறவிருந்த சுகயீன விடுகைப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

அரசியல்  பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படவிருந்த முறையற்ற நியமனத்தை நிறுத்தக் கோரி – கல்விசார் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை சுகயீனப்போராட்த்தை அறிவித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தயாரான நிலையில் இருந்த போது - இச்சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 இதில் - தற்போது வெளிவந்துள்ள பட்டியலை நிறுத்துவதாகவும், இதற்காக மூவர் அடங்கிய விசாரணைக் குழுவினை அமைத்து அதனைப் பரிசீலிப்பதாகவும், அதன் அடிப்படையில் உண்மையிலேயே எவராவது – அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டிருந்தால் அவை தொடர்பாக மட்டும் பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதிமொழி வழங்கப்பட்டதுடன் மேலும் சில இணக்கப்பாடுகளும் காணப்பட்டன.

ஆயினும் - இவ்விடயத்தினை எழுத்துமூலம் உறுதிப்படுத்துமாறு – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியமைக்கு அமைய – ஜனாதிபதியினால் எழுத்துமூல உறுதிப்பாடும் வழங்கப்பட்டுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இவ்வாறு காணப்பட்டுள்ள இணக்கப்பாடு காரணமாக – நாளை 26 ஆம் திகதி நடைபெறவிருந்த பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

Saturday, July 21, 2018

ஜுலை 26ம் திகதியன்று சுகயீன லீவு போராட்டம்: அதிபர், ஆசிரியர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு!


கல்விச் சேவைக்கு அரசியல் பழிவாங்கல் என்னும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து 2018 ஜுலை 26ம் திகதியன்று  அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் - சுகயீன லீவை அறிவித்து - வேலை நிறுத்தம்; செய்து – கல்வியில் அரசியல் தலையீட்டை ஒழித்து – தரமான கல்வியை உறுதிப்படுத்த பொறுப்புணர்வுடன் ஒன்றிணைய வேண்டுமென்று இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.

அரசியல் பழிவாங்கப்பட்டுள்ளதாக கூறி - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி கல்வி நிர்வாக சேவைக்கும், ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கும் அதிபர் சேவைக்கும், 1014 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வேளையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக எமது முதலாவது செயற்பாடு, 2018 ஜுலை 04ம் திகதி அன்று, சுகயீன விடுகை எடுத்து பணி நிறுத்தத்தை மேற் கொண்டு இசுறுபாய கல்வியமைச்சின் முன்னால் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.

இத்தருணத்தில் - நாம் இந்த நியமனத்தை இரத்துச் செய்ய கல்வியமைச்சுக்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கியிருந்தோம். இது வரை எவ்வித பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. இச்செயற்பாட்டிற்குப் பின்பு சகல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் 2018.07.10 அன்று பொதுச் சேவை ஆணைக்குழுவிற்குச் சென்று உரிய தகவல்களை தெரிவித்ததன்பின், இந்நியமனத்தைப் பெறவுள்ள நபர்களின் சுயவிபரக் கோவையை பரிசீலிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி,
இந்நியமனங்களைப் பெறவுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியல் வெளிவந்தது, அதில் - அடிப்படைத் தகைமையே இல்லாத, க.பொ.த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாத – அதிபர் சேவை,
நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாத – போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்காத – பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான – ஒழுக்காற்று நடவடிக்கைகளின்போது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்ற – நபர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் - அதிபர்கள் கல்வித்துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பது நாளுக்கு நாள் பின்னடைந்து வரும் வேளையில், அதாவது - சம்பளம், பதவியுயர்வுகள், சம்பள நிலுவை, வழங்குவது உட்பட தொழிற்பிரச்சினைகள் எனப் பரவிச் செல்லும் நிலையில் - நாம் முதலாவதாக செய்ய வேண்டியது, கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதில் இருந்து விடுவித்துக் கொள்வதாகும். இந்த வகையில் - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி நியமனம் வழங்குவதன் மூலம் எதிர் காலத்தில் இச்சேவைகளுக்கு உள்வாங்க எதிர்பார்த்திருக்கும் ஆசிரிய அதிபர்களுக்கு பாரிய அநீதி ஏற்படுவதோடு இது முழுக்கல்வியையும் பாரிய சரிவுக்கு இட்டுச் செல்லும் செயலாகும்.
அரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில் நியமனம் வழங்குவதை நிறுத்துவதற்காக நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை முன்னெடுக்க 2018 ஜுலை 26ம் திகதி சுகயீன விடுகை எடுத்து பணியைப் புறக்கணித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து கல்வி சார் ஊழியர்களையும் அழைக்கின்றோம்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையின்போது ஊழியர்கள் சார்பாக எழக்கூடிய அனைத்து பிரச்சினைகள் சவால்களையும் - எதிர்கொள்ள  சகல பொறுப்புக்களையும் கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தினருடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கமும் பொறுப்பேற்கும். சகலரும் கல்வி நிர்வாக சேவை, ஆசிரிய கல்வியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, அதிகாரிகள்
அனைவரும் அச்சமின்றி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய - கல்வியை அரசியல் மயப்படுத்துவதில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக பொதுச் செயற்பாடொன்றில் இணைந்துள்ளோம். இதில் பெற்றோரகளின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம். எதிர்காலத்தில் எங்கள் சந்ததியின் கல்வியினை தரமானதாக பேணவேண்டுமாயின் இப்போராட்டத்திற்கு பெற்றோர்களும், கல்விச் சமூகமும்  இணைந்து போராட வேண்டும். இதனால் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளிலும் பரீட்சை நடவடிக்கைகளிலும் தடை ஏற்படுத்துவதன் மூலம் உங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என்பதை நாம் அறிவோம். இது இப்போராட்டத்தினால் ஏற்படும் விளைவாகும்.
இப்போராட்டம் கல்வித்துறையைப் பாதுகாப்பதற்கும் - எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கானதுமானதுமாகும்.
அந்நிலைமையைத் தடுத்துக் கொள்வதற்காகவும் கல்வித்துறையை அரசியலில் இருந்து விடுவித்துக்
கொள்வதற்காகவும் கல்வித்துறையின் நலனுக்காகவும் வடமாகாணத்திலும் நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம்.



Wednesday, July 4, 2018

நாடுதழுவிய ரீதியில் நடைபெற்ற கல்வியாளர்களின் பணிப்புறக்கணிப்பு: அரச கைக்கூலிகள் போராட்டக்காரர் மீது கல்வீச்சு!


அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி தகுதியற்றவர்களுக்கு - அரசியல் ரீதியாக வழங்கப்படவுள்ள 1200 நியமனங்களை எதிர்த்து இன்று நாடுதழுவிய ரீதியில் கல்வியியலாளர்களால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாடசாலைகளுக்கு அனைத்து ஆசிரியரும் செல்லவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையிலும் நாடுதழுவிய ரீதியில் பாடசாலைகளில் ஆசிரியர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் சுகயீன விடுகை அறிவித்து பணியைப் புறக்கணித்திருந்தனர். வடமாகாணத்தில் 60 வீதமான ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் வீழ்ச்சிகண்டிருந்தது. சில பாடசாலைகள் முற்றாக இயங்கவில்லை.  வலய - மற்றும் மாகாணக் கல்வி அலுவலகங்களும் கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால் செயலிழந்திருந்தன.
இதேவேளை – கல்வி நிர்வாகசேவை - அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கள் இணைந்து பல ஆயிரகணக்கானோர் - பத்தரமுல்லையிலிருந்து இசுறுபாய கல்வியமைச்சு வரை பேரணியாக சென்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும  குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது – அரசியல் கைக்கூலிகளால் கல்வீச்சு தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் சிலர் காயமடைந்தனர்.  இக்கைக்கூலிகளின் செயற்பாடு கல்வியமைச்சின் பிரதி பணிப்பாளருள் ஒருவரான  பிரியந்த பத்தேரிய தலைமையிலேயே நடைபெற்றுள்ளது.




இதன்போது - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கருத்துத் தெரிவிக்கையில் -
இந்த அரசாங்கம் கைக்கூலிகளை ஏவி கல்லெறிவதை விட – முறையற்ற விதத்தில்- தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரசியல் நியமனங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். இதற்காக நாங்கள் 14 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளோம். இக் கால அவகாசத்துக்குள் வழங்கப்படவுள்ள முறையற்ற நியமனங்களை நிறுத்தாதுவிடின் - பரீட்சைச் செயற்பாடுகளைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளுக்கு செல்ல வேண்டியேற்படும் எனவும் தெரிவித்தார்.

Tuesday, July 3, 2018

திட்டமிட்டவாறு நாளை பணிப்புறக்கணிப்பு: பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் பிரமாணக் குறிப்புகளை மீறி – கல்வித்துறையில் முறையற்ற அரசியல் நியமனங்களை வழங்குவதற்கு எதிராக – நாளை புதன்கிழமை நாடுதழுவிய ரீதியில் 16 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் - இன்று செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் - இலங்கை கல்வி நிர்வாகசேவை, அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க அனைத்துப் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இதனால் - திட்டமிட்டவாறு நாளைய தினம் (04.07.2018) புதன்கிழமை – நாடு தழுவிய ரீதியில் கல்வியியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு நடைபெறும் எனவும் - பத்தரமுல்லவில் அமைந்துள்ள புத்ததாஸ விளையாட்டு அரங்கிலிருந்து – மத்திய கல்வியமைச்சு அலுவலகத்தை நோக்கி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியும் - மத்திய கல்வி அமைச்சின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமும் நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Monday, July 2, 2018

கல்வித்துறையினரால் 4 ஆம் திகதிய பணிப்புறக்கணிப்பு நடத்தப்படுவது ஏன்?

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - அமைச்சரவை அனுமதியினூடாக தகுதியற்ற - அரசியல் எடுபிடிகள் கல்வி நிர்வாகசேவைக்கும் - ஆசிரியகல்விச் சேவைக்கும் - அதிபர் சேவைக்கும் உள்வாங்கப்படல் - இலங்கைக் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.

இதனால் - சேவைப் பிரமாணக்குறிப்புகளுக்கு அமைய – போட்டிப்பரீட்சைகளின் மூலம் தகுதியான ஆசிரியர்கள் - அதிபர்கள் -  கல்விநிர்வாகசேவை உத்தியோகத்தர்களை சேவைகளில் உள்வாங்குவதற்கு இருக்கும் சந்தர்ப்பம் பலவருடங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் - கல்விஅமைச்சு உட்பட - மாகாண மற்றும் வலயப் பாடசாலைகள் சம்மந்தமான தீர்மானங்கள் யாவும் இப்படியான தகுதியற்ற அரசியல் எடுபிடிகளின் ஆணையின் கீழ் செயற்படுமாயின் - இலங்கையின் கல்வித்துறையில் பாரிய முறைகேடுகள் நிகழும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - குறுக்கு வழியால் - உட்புகும் தகுதியற்றவர்களால் - தகுதியானவர்களின்; பதவியுயர்வுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படவுள்ளதுடன் - தகுதியானவர்கள் - தகுதியற்றவர்களின் ஆணையின் கீழ் செயற்படும் அவமானங்களும் நடைபெறும்.

கல்வித்துறையை முறையற்ற அரசியல் நியமனங்களில் இருந்து முழுமையாக விடுவிப்போம்…….

 அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் முகமூடியைப் போர்த்துக்கொண்டு;  இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் நுழைந்து கொள்ளத் துடிக்கும் - தகுதியற்ற – தமது அரசியல் அடிவருடிகளுக்கு நியமனம் வழங்குவதே அரசினது   நோக்கமாகும்.

இதனால் - ஆசிரியர்களுக்கும் - அதிபர்களுக்கும் ஏற்படவுள்ள கேடுகளையும் - அவமானத்தையும் எண்ணிப்பாருங்கள் !

 மேற்படி தொழில்களுக்கு முறையற்ற நியமனங்கள் வழங்கப்படுவதன் மூலம்  ஆசிரிய சமூகத்திற்கும் - இலங்கைக் கல்வித்துறைக்கும் - கற்கவுள்ள எதிர்கால சந்ததிக்கும்  பெரும் சவாலும் அவமானமுமே - இதன் விளைவாகக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்!

 அரசியல் இலாபம் தேடும் குறுகிய மனப்பான்மையில் - முழுக் கல்வியையும் பணயம் வைத்து - இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கும் - இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவைக்கும் - இலங்கை அதிபர் சேவைக்கும் - தகுதியற்ற ஆயிரக்கணக்கானோரைப் பின்கதவால் நுழைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கின்றது. இதற்காக அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து - அடிப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றிவிட்டது.

முதலாவதாக - மேற்படி நபர்களுக்கு பதவிவழங்காது - வேதனம் - மற்றும் சலுகைகளை வழங்கவுள்ளது. பின்னர் நியமனங்களை வழங்கவுள்ளது.

 முன்னைய அரசாங்கமும் இவ்வாறு முயற்சித்தபோதும் - அவற்றை முறியடிப்பதில் நாம் வெற்றிபெற்றோம்.

இலங்கை கல்வி நிர்வாகசேவை - இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை - இலங்கை அதிபர் சேவை என்பவற்றில் இணைந்துகொள்வதற்கு பொருத்தமான நடைமுறை ஒழுங்குகள் உள்ளன. அந்த முறையான நடைமுறைகளுக்கு அமைய அச்சேவையில் உள்வாங்கப்படுவதற்கு எவ்வித அழுத்தங்களும் அரசால் கொடுக்கப்படுவதில்லை.

இலங்கை கல்வி நிர்வாகசேவையில் இணைந்துகொள்வதற்கு இவர்களுக்கு சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கமைய சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தும் - இவ்வாறான ஒழுங்கற்ற முறையில் உள்வாங்கப்படுவதானது - முறையாக நியமனம் பெறமுன்வரும் ஆசிரியர்கள் - அதிபர்கள் - பட்டதாரிகளுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்கிறது. இதனால் - சேவையின் தரமும் புனிதமும் இல்லாது போய்விடும்.

 இவ்வாறாக - சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக வழங்கப்படும் முறையற்ற நியமனங்களால் - இலங்கை கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை - எமது ஒன்றுபட்ட எதிர்ப்பின் மூலம் வெளிப்படுத்த சகல ஆசிரிய - அதிபர் - கல்விச் சேவையாளர் சங்கங்களும் - கல்வி நிர்வாகசேவை சங்கமும் இணைந்துள்ளன.

 இதன்படி - 2018.07.04 புதன்கிழமை சகல பாடசாலைகள் - வலயக்கல்விப் பணிமனைகள் - மாகாணக்கல்வித் திணைக்களங்கள் - கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிலையங்களிலும் சேவைசெய்யும் ஆசிரியர்கள்  -அதிபர்கள் - ஆசிரியகல்விச் சேவையாளர்கள் - கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் - சுகயீன விடுமுறையை அறிவித்து பணியைப்; புறக்கணித்து - எமது சமூகக் கடமையைப் பொறுப்புடன் முன்னெடுப்போம்.

Thursday, April 26, 2018

நுண்கலை ஆசிரியர்களுக்கு பொருத்தமான நடவடிக்கை இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை

2018 வருடாந்த இடமாற்றத்தின் போது பாதிக்கப்பட்ட சங்கீதம், நடனம் பாடங்களைக் கற்பிக்கும் வெளிமாவட்ட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நுண்கலைப் பட்டதாரிகளுக்கு இழுத்தடிப்புக்களை விடுத்து வடமாகாண கல்வித்திணைக்களம் உடனடியாக சொந்த வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கவேண்டும்.

மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கு யாழ்.மாவட்டத்தில் மேலதிகம் என காட்டப்பட்டதற்கிணங்க அவ்விடயத்தை எவ்வகையில் கையாள்வது என்பது தொடர்பில் இடமாற்றச்சபையிலும் மேன்முறையீட்டு சபையிலும் இரண்டுவிதமான யோசனைகளையும் முன்வைத்திருந்தோம்.

ஆயினும் இவ்விடயம் தொடர்பாக  ஆசிரியரின் நலனில் அக்கறையற்று - ஆசிரியர்களை வெற்றிடமுள்ள பாடசாலை விபரங்களை வலயங்களில் பெற்றுவரும்படி அலைக்களித்துள்ளனர். வலயங்களும் வெளிமாவட்ட சேவை செய்யாத தமக்கு வேண்டப்பட்டவர்களின் தரவுகளை மறைத்து காப்பாற்றியுள்ளமை தொடர்பான விபரங்களும் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இத்தகைய சுயநலமான கல்விப்புல அதிகாரிகளினால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதையும் அலைக்களிக்கப்படுவதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்தும் அனுமதிக்கப்போவதில்லை. நடைமுறை சிக்கலை வடமாகாண  கல்வித்திணைக்களத்தோடு இணைந்து தீர்ப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் போதிய ஒத்துழைப்பையும் சாத்தியமான முன்மொழிவுகளையும் போதிய கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது.

ஆயினும் எமது இந்த விட்டுக்கொடுப்புகளை வடமாகாண கல்வித்திணைக்களம் அக்கறையுடன் செயற்படுத்தத் தவறிவிட்டது. இன்னும் சில காலங்களில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் இலங்கை ஆசிரியர்சங்கம் செயற்படுவது தவிர்க்க முடியாது போகும். எனவே  இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வி திணைக்களமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Thursday, March 1, 2018

ஆசிரியர்களை அச்சுறுத்தும் சில அதிபர்கள் : தொடருமாயின் தொழிற்சங்க நடவடிக்கை!


வடக்கு மாகாணத்துக்குட்பட்ட சில பாடசாலைகளின் அதிபர்கள் - ஆசிரியர்களை அச்சுறுத்தி - எடுப்பார்கைப்பிள்ளைகள் போன்று ஆசிரியர்களைப் பயன்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன.

ஆசிரியர்களின் சம்பள உயர்வுப் படிவங்களை வேண்டுமென்றே அனுப்பாது வைத்திருப்பதும், ஆசிரியர்களை மரியாதைக்குறைவான வார்த்தைகளால் கையாண்டு அச்சுறுத்துவதும் போன்ற செயற்பாடுகள் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகும்.

பல மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு – அதிகாலை முதலே தமது போக்குவரத்தினை ஆரம்பித்து – பல மணிநேரங்கள் போக்குவரத்துக்காக செலவழித்தே கடமைக்குச் செல்கின்றனர். அதேபோல் வீடு திரும்புகின்றனர். காலை 7.30 மணிக்கு பிந்திச் செல்ல முடியாத அளவுக்கு கைரேகை இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் - கடமை நேரமாகிய 7.30 க்கு முன்னரோ 1.30 மணிக்குப் பின்னரோ ஆசிரியர்களை மேலதிக நேரங்கள் பணியாற்ற வேண்டுமென்று எவரும் கோரமுடியாது. தாபன விதிக்கோவையும் அதனையே வலியுறுத்துகின்றது.

பாடசாலை நேரம் என்பது கல்வியமைச்சினால் வரையறுக்கப்பட்டுள்ளது. கைரேகை இயந்திரத்தின் மூலம் வேலை நேரம் கணிப்பிடப்படுகின்றது. ஆனால் – சில பாடசாலைகளின் அதிபர்கள் - காலை 7.30 மணிக்கு கைரேகை இயந்திரத்தை செயலிழக்க வைப்பதும் - மாலை 2.00 மணியின் பின்னரேயே கைரேகை இயந்திரத்தில் பதிவிடமுடியும் என ஆசிரியர்ளை அச்சுறுத்தி செயற்படுவதும் அதிகார துஸ்பிரயோகமாகும் என்பதுடன் வன்மையான கண்டனத்துக்குரியது. இவை தொடர்பாகவும் – பல முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கெதிராக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாடசாலை நேரம் தவிர - மேலதிக நேரங்களில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்காமையால் கல்வி பாதிக்கும் என்னும் குதர்க்க நியாயத்தை நாம் நிராகரிக்கின்றோம். வெளிமாவட்ட பல பாடசாலைகளுக்கு போக்குவரத்து வசதிகள் இன்றிய நிலையிலும் கடமைக்குச் சென்று திரும்பும் ஆசிரியர்களிற்கு – அடிப்படை வசதிகள் இன்றும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

மேலதிக வகுப்புக்கள் என்ற போர்வையிலும் - மேலதிக பரீட்சைகள் என்னும் போர்வையிலும் - கோவில்கள் மற்றும் பொதுநிறுவனங்களின் ஞாபகார்த்தமாகவும், ஊரவர்கள் மற்றும் தனியார்களின் விளம்பரத்துக்காகவும் நடத்தும் பரீட்சைகளுக்கும் போட்டிகளுக்கும் இதே ஆசிரியர்களே பலிகடாவாக்கப்படுகிறார்கள். வடமாகாணக் கல்வியமைச்சும் இவற்றுக்கு அனுமதிவழங்கி – பொது விடுமுறைநாட்களிலும் ஆசிரியர்களை தொடர்ச்சியாக துன்புறுத்தும் செயற்பாட்டுக்குத் துணைபோகின்றது. 

இம் முறைப்பாடுகள் தொடர்பாக – வடமாகாணக் கல்வியமைச்சு அதிகூடிய கவனமெடுக்க வேண்டும் எனக்; கேட்டுக்கொள்கின்றோம். 

ஜோசப் ஸ்ராலின்,
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.

Tuesday, February 20, 2018

வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து


வடமாகாணத்தில் - வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2018 அமுல்படுத்துவது தொடர்பான – வடமாகாணக் கல்வியமைச்சின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக அமையவில்லை என்றும், அதனை விரைந்து முறையாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரி - இலங்கை ஆசிரியர் சங்கம் - வடமாகாணக் கல்வியமைச்சர் மற்றும் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

2018 ஆம் ஆண்டு அழுல்படுத்தப்படவேண்டிய – ஆசிரியர் வருடாந்த இடமாற்றச் செயற்பாடானது – மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றது. நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலின் காரணத்தைக் காட்டி - இடமாற்றம் பிற்போடப்பட்டிந்தது. ஆயினும் - உள்ளுராட்சித் தேர்தல் முடிந்த பின்னரும் கூட - இடமாற்றம் பெறத் தகுதியானவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் கூட வெளியிடாமல், இடமாற்றச்சபையின் அங்கீகாரம் இதுவரை பெறப்படாமல் - வடமாகாணக் கல்வியமைச்சு செயற்படுவது – வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மட்டில் பாரிய மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஓவ்வொரு வருடமும் பல்வேறு இழுத்தடிப்புக்களுக்கு மத்தியிலேயே ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெற்றுவந்திருக்கின்றன. ஆசிரியர்களின் நலன்கள் தொட்ர்பாக வடமாகாணக் கல்வியமைச்சு தொடர்ச்சியாக இதேவிதமான அசமந்தப்போக்குகளையே கடைப்பிடித்துவருவது கண்டனத்துக்குரியது.

இடமாற்றம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு – தமது மேனமுறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அவர்களுள் தகுதியானவர்களுக்கும் உரிமை பாதிக்கப்படாது பாதுகாக்கவேண்டும். இடமாற்றம் தொடர்பான இவ்வித இழுத்தடிப்புக்கள் - மேன்முறையீடு செய்வதற்கான ஆசிரியர்களின் சந்தர்ப்பத்தை இழுத்தடிப்பதற்கான செயற்பாடாக – வடமாகாணக் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றதோ என்னும் நியாயமான சந்தேகம் ஆசிரியர்கள் மட்டில் எழுந்துள்ளதை தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

எனவே – வருடாந்த இடமாற்றம் - 2018 ல் இடமாற்றம் பெறத் தகுதியான ஆசிரியர்களின் விபரங்கள் உடனடியாக வெளியிடப்பட்டு – மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்பட்டு – முறையாக இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, January 12, 2018

தவறான செய்தி பிரசுரித்தமை தொடர்பாக – உதயன் பத்திரிகை ஆசிரியருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம்


பிரதம ஆசிரியர்,
உதயன் பத்திரிகை.
யாழ்ப்பாணம்.
13.01.2018



தவறான செய்தி பிரசுரித்தமை தொடர்பானது


இன்றைய 13.01.2018 ஆம் திகதி சனிக்கிழமை தங்கள் உதயன் பத்திரிகையின் 6 ஆம் பக்கத்தில்
“கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்தவுடனேயே பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன என – 
இலங்கை ஆசிரியர் சங்கம் வைத்த கோரிக்கை விளக்கமில்லாத ஒன்றே!
வடமாகாண கல்வி அமைச்சர் காட்டம்”

என தலைப்பிடப்பட்டு வெளிவந்த செய்தி  - இலங்கை ஆசிரியர் சங்கமாகிய எமக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செய்தியாக   அமைந்துள்ளது.
கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்தவுடன் பரீட்சைகள் நடத்தப்படுவது தொடர்பாக "இலங்கை ஆசிரியர் சங்கம்" - எவ்வித விமர்சனங்களையும் முன்வைத்திருக்கவில்லை. என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.
இவ்விடயம் தொடாபாக – வடமாகாண கல்வியமைச்சர் கௌரவ சர்வேஸ்வரனுடன் - தொடர்பு கொண்டபோதும் கூட – தான் இலங்கை ஆசிரியர் சங்கத்தைக் குறிப்பிட்டு எவ்விதமான கருத்தும் வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே – “இலங்கை ஆசிரியர் சங்கம்” தொடர்பாக – உதயன் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தவறானது என்பதுடன் -
இச்செய்தி தொடர்பாக தெளிவை ஏற்படுத்துமாறும். தங்கள் பத்திரிகையின் நம்பிக்கைத் தன்மையை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்