Friday, October 28, 2016

03.11.2016 ஆம் திகதி முல்லைத்தீவு ஆசிரியர்களுடன் ஜோசப் ஸ்ராலின் சந்திப்பு - திகதி மாற்றம்


முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக - 25.10.2016 அன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினுடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் - யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பாக அனுசரிக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. பின்னர் இக்கலந்துரையாடல் 01.11.2016 செவ்வாய்க்கிழமை நடைபெறும்  என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் - அன்றைய தினம் - கல்வி நிர்வாக அமைச்சில் திடீரென சந்திப்பு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டமையினால் - பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் வருகைதர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக – 03.11.2016 வியாழக்கிழமை மாலை 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சயன்ஸ் அக்கடமியில் சந்திப்பு இடம்பெறும். இம் முக்கிய சந்திப்பில் ஆசிரியர்கள் கலந்து பயன்பெறமுடியும்.

Monday, October 24, 2016

முல்லைத்தீவு ஆசிரியர்களுடனான சந்திப்பு 01.11.2016 ஆம் திகதி நடைபெறும்



முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக - 25.10.2016 அன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினுடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடல் 01.11.2016 செவ்வாய்க்கிழமை மாலை 2.30 மணிக்கு புதுக்குடியிருப்பு சயன்ஸ் அக்கடமியில் இடம்பெறும்.

Sunday, October 23, 2016

வடக்கின் நாளைய (25.10.2016) கடையடைப்புக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு இன்று கொழும்பு புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்



யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாரின் நடவடிக்கையைக் கண்டித்தும், மாணவர்களின் படுகொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை மற்றும் நீதி கோரியும் நாளை 25.10.2016 நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தார்மீக ஆதரவினை வழங்குகின்றது. அன்றைய தினம் பாடசாலைகளின் செயற்பாடுகளையும் நிறுத்து கல்விச்சமூகம் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.
இதேவேளை -
பல்கலைக்கழக மாணவர்களின் கொலை தொடர்பாக தெற்கின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று 24.10.2016 கொழும்பு புறக்கோட்டையில் மாலை 2.00 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Friday, October 21, 2016

பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.



யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன். சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

இம்மாணவர்கள் கொலைசெய்யப்பட்ட பின்னணியில் - பொலிஸாரினால் - இம்மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக – பொலிஸாரால் எவ்விதமான முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை மறைக்கப்பட்டு - விபத்து என்னும் அடிப்படையிலேயே சடலங்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ விசாரணையிலேயே சூட்டுக்காயங்கள் இனங்காணப்பட்டன. இந்தச் சூழலிலேயே – பொலிஸாரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆயுதம் தொடர்பாகவும் - அவர்களுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் தொடர்பாகவும் தரவுகள் பேணப்படும் நிலையில் - பொலிலாரால் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டமையும், மறுநாள் காலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகமான பொலிஸார் குவிக்கப்பட்டமையும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. பொலீஸார் இக்கொலைச்சம்பவத்தை மூடி மறைக்க முயன்றது ஏன்?. அப்படியாயின் - கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகளைப் போன்றே தற்போதைய நல்லாட்சி அரசிலும் சட்டம் அமுல்படுத்தப்படவில்லையா? அல்லது திட்டமிட்டு கொலைகள் நடத்தப்படுகின்றனவா?

அத்துடன் - பொலிஸார் மறித்த போதும் மாணவர்கள் நிற்காது சென்றமைக்கான எந்த கண்கண்ட சாட்சியங்களும் இல்லை. இது பொலிஸாரினாலேயே கூறப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக - மூடி மறைக்க முற்பட்ட பொலிஸாரின் இக்கருத்தை - கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. இக்கொலைக்கான உண்மைக் காரணங்கள் கண்டறியப்படவேண்டும்.

இது போன்ற பொலிஸாரின் செயற்பாடுகளால் -அப்பாவிகளின் குடும்பங்களைச் சீரழிப்பது மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியது. இரண்டு மாணவர்களின் இறப்பும் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். அவரது குடுப்பங்களுக்கும், யாழ்.பல்கலைக்கழக சமூகத்துக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். மேலும்  கொலை தொடர்பாக – பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதிகிடைக்கவும், இழப்பீடுகள் பெற்றுக்கொடுக்கவும் சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும்.  அத்துடன் - இதுபோன்ற பொலிஸாரின் நடவடிக்கைகளால் அப்பாவிகள் பாதிக்கப்படாதவண்ணம் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.



ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்

Wednesday, October 19, 2016

முல்லைத்தீவில் 25.10.2016 இலங்கை ஆசிரியர் சங்கத்துடனான கலந்துரையாடல்


முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள், மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினுடனான கலந்துரையாடல் எதிர்வரும் 25.10.2016 அன்று மாலை 2.30 மணியளவில் புதுப்புடியிருப்பு சயன்ஸ் அக்கடமியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு வலயத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.