Wednesday, December 26, 2018

வலிகாமம் கல்விவலய முறையற்ற இடமாற்றம் ஆசிரியர்கள் இடமாற்றத்தை ஏற்க வேண்டாம்.- ஜோசப் ஸ்ராலின்


வலிகாமம் கல்விவலயத்தில் ஆசிரியர் பரம்பல் சீராக்கம் எனும் போர்வையில் - சட்ட பூர்வமான - இடமாற்றச்சபையின்றி 72 ஆசிரியர்களுக்கு இடமாற்றக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதில் பாடசாலைகளில் மேலதிகமாக உள்ளவர்களை முறையாக இனங்காணாமல் - அதிபர்களினதும் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரினதும் விருப்பு வெறுப்புகளுக்கேற்பவே இந்த இடமாற்றக்கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விடமாற்றத்தில் பல ஆசிரியர்கள் தொடர்ச்சியாக பழிவாங்கப்பட்டமை தொடர்பான முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பட்டுள்ளன.

இந்த முறையற்ற இடமாற்ற கடிதங்களில் - இடமாற்றம்பெற்ற புதிய பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்ற பின்னரே - இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடு சமர்ப்பிக்கமுடியும் எனவும் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரால் முறையற்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இது அநீதி இழைக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் உரிமையை நசுக்கும் செயற்பாடாகும்.

வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டுள்ள இந்த முறையற்ற இடமாற்றங்கள் நிறுத்தப்பட்டு - 2007/20 தேசிய ஆசிரியர் இடமாற்றக்கொள்கையின் அடிப்படையில் - அங்கீகரிக்கப்பட்ட இடமாற்றசபையூடாக நடைபெற வேண்டும். ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்வதற்கும் போதிய சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.

முறையற்ற விதமாக -வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளர் - இடமாற்றங்கள் செய்ய முற்பட்டமை தொடர்பாக - ஏற்கனவே வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் முறையிட்டிருந்தது.

இவ்விடயங்கள் தொடர்பாக - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முறையற்ற இந்த இடமாற்றங்களை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்பதுடன் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் (0779152351 / 0776629473) கேட்டுக்கொள்கின்றோம். 
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண ஆளுநருக்கும் முறைப்பாடு செய்யவுள்ளோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.