Saturday, May 1, 2021

பொலிசாரின் தடைகளையும் மீறி, கோவிட் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மே தின ஊர்வலம்

 கொழும்பு CMU பாலாதம்பு இடத்திலிருந்து ஆரம்பித்து காலிமுக ஆர்ப்பாட்ட திடல் வரை சமூக இடைவெளியையும், கோவிட் 19 பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 12 தொழிற்சங்கங்கள் இன்று மே தின பேரணியை நடத்தியிருந்தனர்.



இதன்போது பொலிஸார் கோவிட் தொற்றை காரணம் காட்டி  பேரணிக்கு தடைவிதிக்க முயன்றதுடன், கைது செய்ய போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டிருந்தது.



இதில் அரசாங்கம் கோவிட் தொற்றை காரணம் காட்டி சில நிகழ்வுகளுக்கு மட்டும் பாரபட்சமாக நடக்கிறது எனவும், எமக்கும் சமூக அக்கறை உண்டு, நாமும் கோவிட் அறிவுறுத்தல்களை கடைபிடித்தே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் தொழிற்சங்க தரப்பினர் வாதித்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இதுவரை கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இதனை காரணம் காட்டி எமது மே தின நிகழ்வை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டு பொலிஸாரின் எதிர்பையும் மீறி போராட்டம் நடைபெற்றிருந்தது.



இப்பேரணியில் அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கு!, ஆசிரியர், மாணவர்களுக்கும் தரமான கோவிட் தடுப்பூசி வழங்கு!, கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்கு உள்ளிட்ட கோரிக்கை கோசங்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.