Wednesday, July 14, 2021

நாளை யாழ். பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது.

அரசின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிரான இப்போராட்டத்துக்கு ஆர்வமுடைய அனைவரும் கலந்துகொண்டு இப் போராட்டத்துக்கு வலுசேர்க்குமாறும் அழைப்புவிடுத்துள்ளனர்.

Thursday, July 8, 2021

Online வகுப்புக்களையும் ஆசிரியர்கள் புறக்கணிப்பர்: ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கைதை எதிர்ப்போம்!

கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிராக,  நாடாளுமன்ற சுற்றுவட்டத்தின் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட  குழுவினர் பொலீசாரால் நேற்று 8ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டு, பிற்பகல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

 ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த வேண்டுமென நீதிமன்றத்தின் அனுமதியை பொலீசார் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் பொலிசாரின் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது.

ஆயினும், அதிரடிப்படை, கலகமடக்கும் பிரிவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றுக்கு ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த அரசின் இராணுவமயமாக்கல், அரச அடக்குமுறை, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத சட்ட விரோத ஆட்சி முறை ,  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, ஆசிரியர் சங்க உறுப்பினர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பலவந்தமான கைது என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைத்து ஆசிரியர்களும் தாமாக முன்வந்து கற்பித்து வரும் 'ஒன்லைன்' வகுப்புக்களையும்  இன்று முதல் புறக்கணித்து செயற்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Thursday, July 1, 2021

கல்விக்கான சமவாய்ப்புக்கள் மறுக்கப்படுவது தொடர்பாக ம. உ. ஆணைக்குழுவில் இ. ஆ. சங்கம் முறைப்பாடு

வடக்கு மாகாணத்தைச் சேர்ர்ந்த சகல மாணவர்களினதும் கல்விக்கான சமவாய்ப்புக்கள் மறுக்கப்படும் பாரபட்ச நடைமுறைகளிலிருந்து  சகல மாணவர்களினதும் கல்வி உரிமையினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சங்கத்தால் இன்று இலங்கை மனித  உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, வடமாகாண  கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


கடந்த ஒருவருடத்துக்கும் அதிகமாக கொவிட் 19 இடர்கால சூழ்நிலையில் வடக்கு மாகாண மாணவர்கள் கல்வியில் சமவாய்ப்பினை இழந்துள்ளார்கள். 

இத்தகைய இடர்கால நிலை ஒருவருடத்துக்கும் அதிகமாக காணப்படுகின்ற போதும் மாணவர்களின் சமமான கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய கல்வியமைச்சும், வடமாகாண கல்வியமைச்சும் திட்டங்கள் எதனையும் உருவாக்கவில்லை. 

பாடசாலை ரீதியாக முன்னெடுக்கப்படும் நிகழ்நிலை online வகுப்புக்களின் மூலம் பெரும்பாலான மாணவர்கள்  கல்வியைப் பெறமுடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கல்வி கற்கும் உரிமையை பல மாதங்களாக அநேகமான மாணவர்கள் முற்றாக இழந்துள்ளனர். 

கல்விக்கான சமவாய்ப்பினை முற்றாக இழந்த மாணவர்கள் உள ரீதியான பாதிப்புக்களுக்கும், தாழ்வுச் சிக்கல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

 ஆயினும், பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு இழந்த கல்வியை வழங்கும் நடவடிக்கைப் பொறிமுறை எதனையும் உருவாக்கும் நோக்கமற்று மத்திய கல்வியமைச்சும் வடமாகாண கல்வியமைச்சும் பாராமுகமாகவே இதுவரை இருந்து வருகின்றது.  

எனவே சகல மாணவர்களும் சமகல்விவாய்ப்பைப் பெறுவதற்கும் அதற்கான வசதிவாய்ப்புக்களை கல்வியமைச்சு வழங்குவதற்குமான  பரிந்துரைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு    முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.