Thursday, March 30, 2017

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2015/05 சுற்று நிருபத்தை மீறி மாணவர்களிடம் பணம் சேகரிப்பு


வவுனியா தெற்கு கல்விவலயத்துக்குட்பட்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 6,7,8 ஆகிய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து – தளபாடங்கள் திருத்துவது மற்றும் வர்ணம்பூசுதல் என்னும் காரணத்தைக் கூறி - ருபா 2000 வீதம் பாடசாலை அதிபரால் நிதி சேகரிக்கப்படுவதும் - அப்பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்கப்படாமையும் முற்றிலும் சட்டவிரோதமானதாகும். கல்வியமைச்சின் 2015/05 ஆம் இலக்க சுற்றுநிருபத்துக்கு முற்றிலும் முரணானதாகும். இச்சுற்றுநிருபம் - பாடசாலையின் பௌதீக தேவைகளுக்காக - இவ்வாறு பணம் சேகரிக்க முடியாது எனக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு நிதிதிரட்டப்படுமானால் - குறித்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இச்செயற்திட்டத்துக்கு கல்வியமைச்சில் அனுமதிபெறப்பட்டதா? அவ்வாறு அனுமதிபெறப்பட்டிருக்குமானால் - அனுமதிவழங்கிய  அதிகாரியும் சுற்றுநிருபத்தை மீறிசெயற்பட்டுள்ளார். இது இலவசக் கல்வி முறையை தடைசெய்யும் செயற்பாடாகும். அரசாங்கத்தினால் - இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கொள்கைகளுள் சகல மாணவருக்கும் தளபாடம் வழங்கும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் - பற்றுச்சீட்டுக்கள் வழங்காது – முறைகேடாகப் பணம் சேகரிப்பது மோசடிக்கு வழிவகுக்கும் செயற்பாடாக அமையும்.  
இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இச்செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தொடருமானால் தொழிற்சங்க ரீதியான செயற்பாட்டை முன்னெடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவர் தெரிவித்தார்.

Monday, March 27, 2017

முறைகேடான அதிபர் நியமனம் - முறைப்பாட்டு செலவினமாக 5000 ரூபாவுடன் நியமனமும் வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

வடமாகாணக் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல நியமனங்களில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் - 20.03.2017 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 2012 இல் வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட வ/செட்டிக்குளம் மகாவித்தியாலயத்திற்கான அதிபர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் - இதனால் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு பொருத்தமான தீர்வு வழங்குமாறும் தெரிவித்துள்ளதுடன் - வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் – பாதிக்கப்பட்டவருக்கு முறைப்பாட்டுச் செலவினமாக - ரூபா 5000.00 ஐ வழங்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நெறிப்படுத்தலில் - வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடான நியமனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாடு தொடர்பாக வெளியிடப்பட்ட பரிந்துரை மிகமுக்கியமானதாகும்.

வடமாகாண கல்வியமைச்சினால் - முறையற்ற விதமாக பல அதிபர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருத்தமான தகுதிகள் இருந்தும் - பலர் இன்றும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் - வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட மேலும் இரண்டு அதிபர்களினால்; - தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு – விசாரணைகளின் போது – அந்த அதிபர்களுக்கு குறித்த பாடசாலையை வழங்குவதாக வடமாகாண கல்வியமைச்சினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் -  இன்றுவரையிலும் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நிலையே வடமாகாண கல்வியமைச்சில் காணப்படுகின்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரையின் சாராம்சம் வருமாறு -



முறைப்பாட்டாளார் : திரு.கே.நித்தியானந்தம் - வவுனியா

பிரதிவாதிகள்:
: 1. செயலாளர் - வடமாகாணக் கல்வியமைச்சு – வடமாகாணம்
: 2. மாகாணக் கல்விப் பணிப்பாளர் – வடமாகாணம்
: 3. வலயக் கல்விப் பணிப்பாளர் – வவுனியா தெற்கு கல்வி வலயம் - வவுனியா

முறைப்பாடு:

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையால் 28.03.2012 அன்று வ/செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபர் பதவிக்கான நியமனம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக (சரத்து 12(1)இ செட்டிக்குளம் கோட்டத்தின் பதில் கோட்டக்கல்வி அலுவலராக இருந்த திரு.கே.நித்தியானந்தத்தால் முறையிடப்பட்ட முறையீடு

பிரதிவாதிகள் கூற்று :

2204/4 சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்ட வாசகம் “தகுதியான எவரும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் கல்வியமைச்சின் செயலாளர் எடுக்கும் தீர்மானமே இறுதியானது” என்பதாகும்.  அத்துடன் செட்டிக்குளம் கல்விக்கோட்ட பதில் அதிகாரி என்னும் பதவிநிலை என்பது அதிபர் பணிநிலை என்பதற்கும் மேலானது. இருப்பினும் முறைப்பாட்டாளரை வ/செட்டிக்குளம் பாடசாலையின் அதிபராக நியமிக்க நேர்முகப் பரீட்சைக் குழுவினரால் பரிந்துரைக்கப்படவில்லை.

அவதானிப்பும் ஆய்வும்:

இலங்கையில் கல்வி நிர்வாக சேவையில் அதிகாரிகள் பற்றாக்குறை; காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திக்காக அதிபர் சேவையின் தரம் 2-1 தரத்தில் உள்ள முறைப்பாட்டாளர் 27.01.2012 இருந்து பதில் கோட்டக் கல்வி அதிகாரியாக பின்வரும் நிபந்தனையுடன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
“தகுதியான கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் (SLEAS) நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தனது கோட்டக் கல்வி அலுவலர் என்னும் பணிநிலையிலிருந்து தாங்கள் விலகவேண்டும்”

28.03.2012 வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரினால் பின்வரும் மூன்று நிபந்தனைகளுடன் வ/செட்டிக்குளம் மகாவித்தியாலயத்துக்கான தகுதியுள்ள அதிபர் நியமனத்துக்கான பிரசுரம் வெளியிடப்பட்டது.

1. விண்ணப்பிப்பவர் வவுனியா மாவட்டத்துக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

2. விண்ணப்பிப்பவர் SLEAS - II/III / SLPS -I  தகுதியினைக் கொண்டிருக்க வேண்டும். (மேற்குறிப்பிட்ட தகுதியினைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் பணிநிலைக்கு விண்ணப்பிக்காவிட்டால் SLPS I/II  தகுதியினைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் கருத்தில் கொள்ளப்படுவர்)

3. பணியிடத்தில் குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் கட்டாய சேவையினை ஆற்ற வேண்டும்.

அதிபர் பணிநிலை வெற்றிடத்துக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுள் முறைப்பாட்டாளரும் - இன்னுமொரு விண்ணப்பதாரியும் 08.06.2012 அன்று நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படடிருந்தனர். ஆயினும்; முறைப்பாட்டாளர் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியபோதும் மற்றைய விண்ணப்பதாரர் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றவில்லை. எனினும் - நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றாதவர் (திரு…….) செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்டார்.

கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கமைய பணியிட வெற்றிடத்துக்கான வேண்டுகை விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்த தகுதியான நிலைகள் அனைத்தையும் முறைப்பாட்டாளர் கொண்டிருந்தும் - அவர் தவிர்க்கப்;பட்டு ஆசிரியர் சேவையில் 2-II தரத்தினைக் கொண்டிருந்த (திரு….) நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றதாதவர் நியமிக்கப்பட்டார். – கல்வியமைச்சின் 2000/54 இன் சுற்றுநிருபத்தில் ஆசிரியர் சேவையில் உள்ள ஒருவர் பதில் அதிபராக நியமிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலும் - கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தை மீறி ஆசிரியர் சேவையில் உள்ளவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

முறைப்பாட்டாளரின் மேன்முறையீடும் - நியமனத்தின் நியாயமற்ற தன்மையும் எடுத்துக்கூறிய போதும் பிரதிவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பதில் கோட்டக் கல்வி அலுவலராக கடமையாற்றும்போதுள்ள பணிஇடைவெளி நிரப்பும் பாதுகாப்பற்ற தன்மையினை புரிந்துகொள்ளவில்லை.

பிரதிவாதிகள் தரப்பினால் 2204/08 சுற்றுநிருபத்தின் படி – மேற்குறிப்பிட்ட எந்தவொரு தீர்மானத்தையும் சுற்றுநிருபங்களுக்கு அப்பால் -  கல்வியமைச்சின் செயலாளரால்  கையாளமுடியும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

இது நியாயமற்ற செயற்பாடாகும். - ஒரு அரச சேவையாளர் ஒருவரது அதிகாரம் என்பது அனைத்து சுற்றுநிருபங்களுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டது. மாகாண அரசாங்க சுற்றுநிருபங்கள் பொருள்கோடல் இல்லாது இதனை மீறி மேலாண்மை செய்யமுடியாது.

முடிவு :

முறைப்பாட்டாளர் வ/செட்டிக்குளம் மகா வித்தியாலத்துக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு கேட்கப்பட்டிருந்த தகுதியினைக் கொண்டிருந்த போதும் புறக்கணித்து – 1AB தர பாடசாலை ஒன்றிற்கு இலங்கை கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக தகுதிகளை கொண்டிராதவரும் - நேர்முகப் பரீட்சைக்குத் சமூகம் தராத ஒருவருக்கும் வழங்கப்பட்ட நியமனமானது இலங்கை அரசியல் யாப்பின் மனித உரிமைகள் சாசனத்தின் சரத்து 12(1) இன் பிரகாரம் மிக மோசமான தனிமனித அடிப்படை உரிமைமீறல் சம்பவமாகும்.


பரிந்துரைகள் :

1. மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை இல 15(4) படி முறைப்பாட்டாளர் வவு/செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட இத்தால் பரிந்துரைக்கப்படுகின்றார்.

2. பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டவர்கள் தங்களால் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானத்திற்கு பரிகாரமாகவும் - அடிப்படை மனித உரிமையை மீறியமைக்காகவும் மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 15(3) (C) அமைவாக பொருத்தமான நடவடிக்கையில் ஈடுபடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றார்கள்.

3. மனித உரிமை சாசனத்தின் உறுப்புரை 11 (g)  பிரகாரம் முதலாவது பிரதிவாதி (கல்வியமைச்சின் செயலாளர்) முறைப்பாட்டாளருக்கு ரூபா 5000.00 ஐ அவரது முறைப்பாட்டுச் செலவீனமாக வழங்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகின்றார்கள்.


என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Sunday, March 19, 2017

ஓய்வுபெற்ற ஆசிரியர்களைக்கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்


பட்டதாரிகள் பலர் அரச வேலையின்றி போராடிவரும் நிலையில் - மலையகத்தின் பொகந்தலாவ பாடசாலையொன்றில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் உரையாற்றியபோது  அங்கு காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இச்செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கின்றது. மலையகம் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளிலும் பல பட்டதாரிகள் வேலைக்காக போராடிவரும் நிலையில் - அவர்களை ஒப்பந்த அடிப்படையில்   இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் அடிப்படையில் போட்டிப்பரீட்சை மூலம் உள்வாங்குவதோடு  மேலதிகமாகவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்  வெற்றிடங்கள் ஏற்படுமாயின் – கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கும் மாணவர் தொகைகளையும் அதிகரிக்க முடியும். இவ்வாறான – திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கும் செயற்பாட்டின் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடையும் அபாயநிலையையே தோற்றுவிக்கும். என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.