Sunday, February 26, 2017

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டக்களத்தில் இன்று வடக்கு ஆசிரியர்கள், அதிபர்கள் பங்கேற்பு


இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் - வடமாகாணத்திலுள்ள ஆசிரியர்கள்ஒன்றிணைந்து - முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் - கேப்பாப்பிலவு சிறுவர்களுக்கும் உளவள செயற்பாடுகளை வழங்கினர்.


மேலும் - கேப்பாப்பிலவு காணியை விடுவிப்பதற்காக – தொடர்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்களுக்காக காலைமுதல் மாலைவரை போராட்டக் களத்தில் தங்கியிருந்து - இன்றைய மதிய உணவுகளுக்கான பொருட்களையும் வழங்கி – போராட்டக்களத்திலுள்ள மக்களுடன் இணைந்து  மக்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம், நாடகம், விளையாட்டுக்கள், பாடல்கள் போன்றவற்றுடனான ஆற்றுப்படுத்தல்களிலும் ஈடுபட்டனர்.

இந்த ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சிதெரிவித்தனர். அத்துடன் - சில நல்லுள்ளங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களையும் மக்களுக்கு கையளித்தனர்.

 இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்தும் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்  மற்றும் வடக்குமாகாண புதிய அதிபர்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






Wednesday, February 22, 2017

கேப்பாப்புலவிற்கு ஆதரவாக கொழும்பில் நடந்தது ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 20 நாட்களைக் கடந்தும் தீர்வின்றி உள்ள நிலையில் - இன்று 22.02.2017 கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக காலை 11.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் - தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தென்னிலங்கை மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களான – சிவசக்தி ஆனந்தன், விக்கிரபாகு கருணாரட்ண, சிறிதுங்க ஜெணசூரிய, குமரகுருபரன், அசாத்சாலி, செந்திதவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொண்டுவரும் நியாயமான போராட்டத்துக்கு நல்லாட்சி அரசு விரைவில் தீர்வு வழங்கவேண்டும்.

2012 ஆம் ஆண்டு கேப்பாப்பிலவு மக்கள் மெனிக்பாம் முகாமிலிருந்த போது – கேப்பாப்பிலவிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியிருந்தனர். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மக்களை அழைத்து காணிவிடுவிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறி ஏமாற்றியுள்ளனர். போர்முடிந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் - இராணுவ முகாம்கள் என்னும் போர்வையில் மக்களின் காணிகளை அபகரித்து வைக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விட்டு இராணுவம் வெளியேறவேண்டும். தமது காணிகளில் மக்கள் சுதந்திரமாக நடமாட நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்பவர்கள் ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். நல்லாட்சி அரசு எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஒருமுகத்தையும் - தமது நாட்டு மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி ஏமாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிடவேண்டும். நேர்மையாக மக்களை வழிநடத்தவேண்டும். வடபகுதி மக்களின் காணிமீட்புப் போராட்டம் வெற்றிபெற தென்னிலங்கைசக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டத்துக்கு  வலுச்சேர்ப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Friday, February 17, 2017

3 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணித்தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண கல்விப்பணிப்பாளரினால் 3ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணித்தடை வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு சம்பளமும் வழங்கப்படும். ஆசிரியர்கள் செயலாளரைத்தாக்கிய குற்றம் நீக்கப்பட்டு - கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக - ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.
பணித்தடை விலக்கக்கோரி கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டமை - ஆரம்பக்கட்ட விசாரணைக்காக தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.


Friday, February 10, 2017

13.02.2017 செம்மணி வீதியில் ஆரம்பமாகிறது தொடர்போராட்டம்


வடமாகாண கல்வியமைச்சினால் ஆசிரியர்கள் மட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும்  அநீதிகளுக்கெதிரான போராட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை 13.02.2017 அன்று செம்மணி வீதியிலுள்ள வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அலுவலகத்துக்கு முன்னால் - காலை 9.00 மணிமுதல் தீர்வு கிடைக்கும் வரையான தொடர்போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது.

10.01.2017 இல் தமது வெளிமாவட்ட சேவை நிபந்தனைக் காலத்தைப் பூத்தி செய்த ஆசிரியர்களால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் - செயலாளரை தாக்கியதாக பொய்யான ஜனநாயக விரோத குற்றச்சாட்டுக்களை வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் சுமத்தி – அடிப்படையான விசாரணைகள் எதுவுமின்றி - மூன்று ஆசிரியர்களுக்கு பணித்தடை வழங்கப்பட்டது. ஆனால் - இன்றுவரை அவ்வாசிரியர்களை மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளையும் வடமாகாண கல்வியமைச்சு மேற்கொள்ளவில்லை. இவ்விடயம் தொடர்பாக  - வடமாகாண கௌரவ முதலமைச்சரின் கவனத்துக்கு கவனயீர்ப்பு மூலமாக கொண்டுவந்திருந்த நிலையிலும் - அதற்கான பதிலை கடந்த திங்கட்கிழமை வழங்குவதாகக் கூறிய நிலையிலும், முதலமைச்சரின் செயலகம் எவ்விதமான சாதகமான பதிலையும் வழங்கவில்லை.

வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் - பொலிஸில் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டில் கூட – செயலாளரால் குற்றங்களை நிரூபிக்க முடியாத நிலையில் - சமரசத்தில் முடிந்துள்ளது. பொலிஸாரின் முறைப்பாட்டில் தன்னை தாக்கியதாக முறைப்பாடு செய்த ஆசிரியரின் பெயர் தவறானது எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்படியாயின் - அந்த ஆசிரியருக்கு ஏன் பணித்தடை வழங்கப்பட்டது? அதேவேளை குறித்த மூன்று ஆசிரியர்களும் அலுவலகத்தில் தன்னை சந்தித்தபோது தாக்க முயற்சித்ததாக செயலாளர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் - அம்மூவரில் ஒரு ஆசிரியரே செயலாளருடனான சந்திப்பில் கலந்து கொண்டதாக விசாரணையின் போது ஆசிரியர்களால் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியாயின் மற்றைய இருவருக்கும் ஏன் வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் பணித்தடை வழங்கப்பட்டது?

இதேவேளை – வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ தவராசா – செயலாளரின் கொலரை ஆசிரியர்கள் பிடித்தனர் என ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டை வடமாகாண சபையில் குற்றம் சாட்டியுள்ளார்.

பொலிஸில் செயலாளரால் தன்னை தாக்கியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிலும் - வடமாகாண எதிர்க்கட்சித் தலைவரால் செயலாளரின் கொலரைப் பிடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிலும் உள்ள முரண்பாடுகளே – ஆசிரியர்கள் மட்டில் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளராலும்;, வடமாகாண கல்விப் பணிப்பாளராலும் வேண்டுமென்றே  சுமத்தப்பட்ட பழிதீர்க்கும் நடவடிக்கை என்பது நிருபணமாகியுள்ளது.   இதன்மூலம் ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளனர்.

அத்துடன் - இடமாற்றச் சபையில் தீர்மானிக்கப்பட்ட பல விடயங்களை நடைமுறைப் படுத்தாமல் - ஏனைய தீர்மானங்களுடன் தொடர்புடைய வெளிமாவட்ட கல்வி தொடர்பாக சிந்திக்காமல் - அங்கு நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்தவர்களை விடுவிக்காமல் விட்டது - இடமாற்றச்சபையின் தீர்மானம் என எமது தொழிற்சங்கத்தினையும் சாடி வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் தப்பிக்க முயற்சிக்கின்றார். எனவே – வடமாகாண கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகள் விசாரிக்கப்படவேண்டும்.

எனவே - வடமாகாண கல்வியமைச்சினால் ஆசிரியர்கள் மட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும்  அநீதிகளுக்கெதிரான போராட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை 13.02.2017 அன்று செம்மணி வீதியிலுள்ள வடமாகாண கல்வியமைச்சின் முன்னால் - காலை 9.00 மணிமுதல் தீர்வு கிடைக்கும் வரையான தொடர்போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது. அனைத்து ஆசிரியர்களையும் ஒன்றிணைந்து பலம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.




Wednesday, February 8, 2017

கேப்பாப்பிலவு புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கமும் இணைந்துள்ளது.


முல்லைத்தீவு பிரதேசத்தில் தாம் வாழ்ந்த சொந்தக் காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவிப்பதுடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் - இன்று 08.02.2017 போராட்டக்களத்தில் மக்களுடன்; இணைந்து ஆதரவு தெரிவித்து வருகின்றர். இம்மக்களது கோரிக்கையை நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் அரசும் - தமிழ் அரசியல் தலைமைகளும் உடனடியாக நிறைவேற்றவேண்டும்.  இம்மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று மக்களின் காணிகளிலிருந்து படையினரை அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும்.

Tuesday, February 7, 2017

கிழக்கு மாகாண “எழுக தமிழ்” பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

10.02.2017 வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள  “எழுக தமிழ்” பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் - பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முகமாக – எதிர்வரும் 10.02.2017 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பினையும் அனுசரணையையும் வழங்கி நிற்கின்றோம்.

நடந்துமுடிந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னய சூழ்நிலைகளும் - நம்பிக்கையூட்டக்கூடிய அளவுக்கு - தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக – தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் கோரிக்கைகைகள் அனைத்தையும் பெறுமதியற்றதாக மாற்றுவதற்குரிய சூழ்ச்சியே தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

தமிழர் தாயகமானது - சிங்கள பௌத்த மயமாக்கலுக்குட்பட்டு - பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பௌத்தர்களையும் சிங்கள சகோரர்களையும்  வெறுக்கும் மதவாதிகளோ அல்லது இனவாதிகளோ நாமல்ல. மாறாக - எமது இனத்துக்கான அடையாளங்களை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தினை வழங்காது – அடக்குமுறையின் அடையாளமாக – சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினைத் திணிக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இது தமிழரின் தனித்துவத்தை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகும். எனவே – தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று தனித்துவத்தை அழிக்கும் வேலைத்திட்டத்தினை செய்யும் இராணுவம் எமது மண்ணிலிருந்து முதலில் அகற்றப்படவேண்டும்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு, பிலவுக் கிராம மக்களாலும், புதுக்குடியிருப்பு மக்களாலும் தமது சொந்தக் காணியை விடுவிக்க இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுவரும் நியாயமான போராட்டத்தைக் கூட நல்லாட்சி அரசு கவனிக்கவில்லை.  கடந்த 30 ஆண்டு காலமாக சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு - அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பூர்வீக நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு -  மக்களுக்கு வழங்கவேண்டும்.

இறுதி யுத்தத்தின் முன்னரும் பின்னரும் கடத்தப்பட்ட - சரணடைந்த பின்னும் காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவரின் நிலைமை தொடர்பாகவும் உண்மை கண்டறியப்பட்டு - பொறுப்புக் கூறல் இடம்பெற வேண்டும்.

இன அழிப்பு தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான – பக்கச்சார்பற்ற – சர்வதேச விசாரணை வேண்டும். அத்துடன் - இவையெல்லாம் மீண்டும் ஏற்படாத வண்ணம் தமிழர் தேசம் அதன் தனித்துவம் - இறைமை - சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஸ்டி தீர்வுத்திட்டம் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும்.

இவைபோன்ற கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக இப்பேரணியில் கலந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்கவேண்டும். தற்போதைய சூழலில் ஒன்றிணைந்த மக்கள் எழுச்சி ஒன்றே தமிழ் மக்களின் வரலாற்றினை தீர்மானிக்கும் என்பதை அறிவுபூர்வமாகவும் - உணர்வுபூர்வமாகவும் சிந்தித்து செயற்படவேண்டும். அனைவரையும் 10.02.2017 ‘எழுக தமிழ்” பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

புதிய அதிபர்களை பதவி விலக வற்புறுத்தும் செயற்பாட்டுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

புதிய அதிபர்களை பதவி விலக வற்புறுத்தும் செயற்பாட்டுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்

வடமாகாண கல்வியமைச்சினால் புதிதாக நியமனம் பெற்ற தரம் 3 அதிபர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலை நியமனங்களை குழப்பி – அவர்களை குறித்த பதவியை இராஜினாமா செய்து – தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விட்டுக்கொடுக்குமாறும், அவ்வாறு விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விரும்பிய பாடசாலைகளை வழங்குவதாகவும் கூறி – வடமாகாண கல்வி அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருவதாக குறித்த சில அதிபர்களால் எமது சங்கத்துக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கல்வி வலயங்கள் ஊடாக அவர்களை அழைத்து அவர்களை சம்மதக்கடிதம் தருமாறு வற்புறுத்தும் செயற்பாடுகளிலும் சில வலயக் கல்விப் பணிப்பாளர்கள் செயற்பட்டுவருகின்றமையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட அதிபர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.