Saturday, September 26, 2020

வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

இறந்தவர்களை,  அவர்களது உறவுகள் நினைவு கூரும் உரிமையை  இந்த அரசாங்கம் தடுத்தமைக்கு  எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 28.09.2020 நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு தழுவிய பூரண முடக்கப்  போராட்டத்துக்கு  இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது. 

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தும் அன்றைய தினத்தில் நடைபெற திட்டமிடப்பட்ட பரீட்சைகளை,  வேறு தினமொன்றுக்கு மாற்றுமாறும் வடக்கு மற்றும் கிழக்கு  மாகாண கல்வி அமைச்சின்  அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

அரசின் இராணுவ கெடுபிடிகள் நிறைந்திருக்கக்  கூடிய அன்றைய தினம் மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளில் வைத்திருக்குமாறு பெற்றோரை கேட்டுக் கொள்கின்றோம். 

 எவ்வித அச்சுறுதல்களுக்கும் அஞ்சாமல்,  வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அனைத்து ஆசிரியர்களும் அன்றைய தினம் சுகயீன விடுமுறையை அறிவித்து உரிமை கோரிக்கைக்கு வலு சேர்க்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.

குற்றவியல் நடைமுறை கோவையின்,  பொது  தொல்லைகள், ஏற்பாடுகளின் கீழ் நினைவேந்தல் உரிமை,  ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்குரிய உரிமை உள்ளது. 

அதுமட்டுமல்லாமல் -

இறந்தவர்களை நினைவு கூருவது என்பது உலக  அளவில் ஒரு கலாசார உரிமையாகவும்,  அரசியல் உரிமையாகவும் உள்ளது.

இந்த நிலையில் - போலீசார் ஊடாக   நீதிமன்றங்களை நாடி அதன் மூலம் நினைவு கூர்வதற்கு   தடையை இன்றைய அரசாங்கம் ஏற்படுத்தியமை ஒருபோதும்   ஏற்றுகொள்ள முடியாது.

இறந்தவர்களை நினைவு கூரும் அரசியல் உரிமையை இலங்கை  அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும்.

உறுப்புரை 10 ன்  "மனசாட்சியின்  படி செயற்படுதல்",  உறுப்புரை 14 "பேச்சு சுதந்திரத்தின் பாற்பட்டது" என்பவற்றை  இலங்கை அரசாங்கம் ஏற்று கொள்ள வேண்டும். 

யுத்தம் நிறைவு பெற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும்,  இத்தகைய நினைவேந்தல் உரிமைகளை  போலீசாரை கொண்டு,  நீதிமன்றங்களின் மூலம்  இந்த அரசாங்கம் தடுக்க முயல்வதானது,  இந்த அரசாங்கத் தின் பாதுகாப்பற்ற - பலவீனமான தன்மையை வெளிப்படுத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

ஒரு முழுமையான நீதியின் பாற்பட்ட நல்லிணக்கத்துக்கு யுத்தத்தின் போதும்,  யுத்தத்தின் பின்னரும்  இறந்தவர்களையும்,  அவர்களது உறவுகள் நினைவு கூருவதை இந்த அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறுவுள்ள வடக்கு - கிழக்கு தழுவிய  பூரண  முடக்கப் போராட்டதுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.


Tuesday, September 8, 2020

கிளிநொச்சி கல்வி வலய முறையற்ற இடமாற்றங்களை உடன் நிறுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு



கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கமலராஜனால் - முறையற்ற இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், இடமாற்ற நடைமுறைகளை உதாசீனம் செய்து எதேச்சதிகாரமாக செயற்படுவரும் அவரது நடவடிக்கைகள் எல்லைமீறிச் செல்கின்றமையைச் சுட்டிக்காட்டியும் இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.


இந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கமலராஜனால் - முறையற்ற இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இடமாற்ற நடைமுறைகளை உதாசீனம் செய்து எதேச்சதிகாரமாக செயற்படுவரும் அவரது நடவடிக்கைகள் எல்லைமீறிச் செல்கின்றமையை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம். 


28.08.2020 நடைபெற்ற இடமாற்றச்சபை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட இடமாற்றங்களில் - இடமாற்றச்சபையால் நிராகரிக்கப்பட்டிருந்த இடமாற்றங்களை கூட, வலயக் கல்விப் பணிப்பாளர் தன்னிச்சையாக வழங்கியுள்ளமையானது –2007/20 தேசிய இடமாற்றக் கொள்கைகளை மீறிய சட்டவிரோதச் செயற்பாடுகளாகும். 


யாழ்.மாவட்டத்திலிருந்து – பல சிரமங்களுக்கு மத்தியிலும் வெளிமாவட்டங்களுக்கு சென்று பல ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் - கிளிநொச்சி மாவட்டத்தை தமது சொந்த வதிவிடமாகக் கொண்டவர்களுக்கும் புதிதாக நியமனம் பெற்று, நியமன நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாதுள்ள சில ஆசிரியர்களுக்கும் - அவர்களுக்கு வசதியாக பாடசாலைகளை வழங்கும் செயற்பாடுகளையே கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், பக்கச்சார்பான முறைகளிலும், முறையற்ற வழிமுறைகளினூடாகப் பின்றபற்றி வருகின்றார். 


எனவே – கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டுவரும் முறையற்ற இடமாற்றங்களை உடனடியாக நிறுத்துமாறும், 28.08.2020 நடைபெற்ற இடமாற்றச்சபையில் - இடமாற்றச் சபையால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையிலும், வலயக் கல்விப் பணிப்பாளரால் ஏதெச்சதிகாரமாக வழங்கப்பட்டிருந்த இடமாற்றங்களை நிறுத்த உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.