Saturday, May 16, 2020

கல்வியமைச்சின் அனுமதியின்றி – கிழக்கில் பாடசாலைகள் நடாத்தமுடியாது: கல்வியமைச்சர் – ஜோசப் ஸ்ராலினிடம் தெரிவிப்பு!


சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பாக - சுகாதார சேவைகள் பணிமனையின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளாமல் - கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணாக -கிழக்கு மாகாண பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களை மே 18 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாடசாலைகள் உரியமுறையில் தொற்றுநீக்கம் செய்யப்படவேண்டும்.  முகக் கவசங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பாடசாலைகளில் கடைப்பிடிப்பதற்குரிய ஏற்பாடுகளுக்கான நிதி விடயங்கள் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்குரிய  பொறிமுறைகளை கல்வியமைச்சு உருவாக்க வேண்டும்.  இவ்வாறாக - சுகாராப் பிரிவினரின் அனுமதியும் பெறப்படவேண்டும்.

இவை தொடர்பாக  கரிசனைகொள்ளாமல் - கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எடுக்கும் முயற்சிகளானது – மாணவர்களுக்கு நோய்த் தொற்றை அதிகரிக்கச் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என இலங்கை ஆசிரியர் சங்கம் -  கிழக்கு மாகாண ஆளுநருக்கும் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

ஆயினும் - சில தேசிய பாடசாலைகளிலும் மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவ்விடயங்கள் தொடர்பாக – கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெருமாளுடனும் - தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளருடனும்- இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தனித்தனியாகத் தொடர்பு கொண்டுள்ளார்.

இதன்போது - சுகாரதர சேவைகள் அமைச்சின் பரிந்துரையின்றி – எந்தப் பாடசாலைகளும் ஆரம்பிக்க முடியாது எனக் கல்வியமைச்சர் குறிப்பிட்டதுடன்–  இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை – தேசிய பாடசாலைகளுக்கான பணிப்பாளர் கிட்சிறி லியனகம அவர்களும் - கல்வியமைச்சின் அனுமதியின்றி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது தவறான விடயம் எனவும்-  உடனடியாக கவனத்துக்கு எடுத்து செயற்படுவதாகவும் - தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Tuesday, May 12, 2020

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரால் - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி சம்பளத்தொகை அறவிடமுடியாது! -ஜோசப் ஸ்ராலின் -


 கொவிட்-19 க்கான அரச நிவாரணத்துக்கான அறவீடாக - ஒரு நாள் சம்பளத்தை - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி அறவிடமுடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம்  தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

இவ்வாறான நிலையில் - கிழக்கு மாகாணத்திலும் - அதிபர் ஆசிரியர்களின் சம்பளத்தினைப் பெறுவதற்கு – அதிகாரிகள் அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.  அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு – அதிபர் ஆசிரியர்களின் அனுமதியின்றி கழிக்க முடியாது என்பதை -– கிழக்கு மாகாண ஆளுநருக்குக் கடிதம் மூலம் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியுள்ளது.

அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை - கொவிட்-19 நடவடிக்கைகளுக்கு – அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பெறுவது தொடர்பாக - கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரினால் - கிழக்கு மாகாணத்தின் அனைத்து செயலாளர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தின் கீழ் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் - அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் - "அனைத்து ஆசியர்களிடமும் அறவிடுவது குறித்து அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு" குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் மூலம் - அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கி -அதிகாரிகளின் அழுத்தங்கள் மூலமாக – அடிபணிய வைக்கும் முயற்சிகளே நடைபெறுகின்றன.

எனவே – அதிபர், ஆசிரியர்களின் சம்மதிமின்றி – ஒரு நாள் சம்பளமோ, அல்லது ஒருமாத சம்பளங்களோ கழிப்பது தொடர்பான - அதிகாரிகளின் எவ்வித அழுத்தங்கள் ஏற்பட்டாலும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கவனத்துக்கு கொண்டுவருமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.



Friday, May 8, 2020

மே மாதச் சம்பளத்தை வழங்க முடியாது. அழுத்தங்களுக்கு அடிபணியத்தேவையில்லை! - ஜோசப் ஸ்ராலின் -

கோவிட் 19 தொற்றுநோயைத் தொடர்ந்து- இலங்கை அரசு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளைத் தணிப்பதற்கு எனக் கூறி - குறைந்த ஊதியங்கள் பெறும் அரச ஊழியர்களிடம் அவர்களின் மே மாதச் சம்பளத்தை அரசாங்கம் கேட்பது முறையற்றது என்று - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.; 
இவ்விடயம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவிக்கையில் - 
கடன்கள் மற்றும் பொருளாதாரப் பின்னடைவுகள் போன்ற - கடுமையான நிதிச் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களின் ஏப்ரல் மற்றும் மே மாதக் கடன் தவணைகளை செலுத்த வேண்டாம் என்ற முடிவு அரசால் அறிவிக்கப்பட்டிருந்தம் கூட - அந்த சலுகை - ஏப்ரல் மாத சம்பளம் தொடர்பாக - ஆசிரியர்கள், அதிபர்கள் உட்பட பல அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் அரச ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பண்டிகைக் கால முற்பணங்களும் பலருக்குக் கிடைக்கவில்லை. அதிகமான வெளிநாட்டு உதவிகள் தற்போது அரசுக்கு கிடைப்பதுடன் - கச்சாய் எண்ணையின் விலை குறைவாகக் கிடைக்கும் தற்போதைய நிலையிலும் கூட இந்த அரசு எரிபொருள் விலைகளைக் குறைக்காமல் – அதிக விலைக்கே விற்றுவருகின்றது. 
இதுபோன்ற நிலையில் - ஜனாதிபதியின் செயலாளரின், அரச ஊழியர்களின் ஒருமாத சம்பளத்தைக் கோரும்   கோரிக்கை நியாயமற்றதாகும். இதற்கு எவரும் அடிபணியத் தேவையில்லை. 
ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஜெயசுந்தரா - 2020 மே 5 திகதியிட்ட ஒரு கடிதத்தின் மூலம், அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைவர்களும் - தங்கள் சம்பளத்தை அரசாங்க செலவினங்களுக்காக - நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதமானது அனைத்து நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு முகவரியிடப்பட்டுள்ளது. அதில் “நான் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கிறேன். நீங்களும் உங்கள் கீழ் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த ஊக்குவிப்புக்கள் - அரச ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிடுவதிலேயே எப்படி அமைந்திருந்தது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கத்தினராகிய நாம் நன்கு அறிவோம். பலர் - அதிகாரிகளின் அழுத்தங்களுக்குப் பயந்து தமது சம்பளத்தை வழங்கும் நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. இது அரச ஊழியர்களை பாதிப்படையச் செய்யும் அநீதியான செயற்பாடாகும். அதுமட்டுமல்லாமல் - இதற்காக ஜனாதிபதி செயலகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை – தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு முறைகேடாகவும் - ஜனாதிபதியின் செயலாளர் பயன்படுத்தியுள்ளார்.
கோவிட் 19 நோய்த்தொற்றைக் காரணமாக காட்டி - அனைத்து அரசு ஊழியர்களின் மே சம்பளத்தை நன்கொடையாகக் கோரிநிற்கும் - அரசின் இத்தகைய முறையற்ற கோரிக்கையானது - ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்கும் போராட்டம் - தபால், ரயில்வே, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பிற பொது சேவைகளின் சம்பள போராட்டங்கள் - எதிர்காலங்களில் தோன்றுவதைத் தடுப்பதற்கான அரசின் தந்திரோபாயமா? என்பதே நமக்கு முன்னுள்ள கேள்வியாகும். 
அரச ஊழியர்களின் சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்கான ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையானது - கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அதிபர், ஆசிரியர்-களின் சம்பள உயர்வு போராட்டத்தைக் கூடப் பாதித்துள்ளது. 
வெளிநாட்டு உதவிகள் தாராளமாகப் பெறப்பட்டு – எரிபொருள் மூலமும் இலாபமீட்டிக்கொண்டு - அரச ஊழியர்களின் சம்பளத்தை - அரசு கோரிநிற்பதானது – “நிதி நெருக்கடி” என்று பாசாங்கு செய்வதான அரசாங்கத்தின் முயற்சி என்றே எமக்கு வலுவான சந்தேகம் எழுகின்றது. அதுமட்டுமல்லாமல் - தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் - இ;வ்வாறு பெறப்படும் நிதிகள் - தனிப்பட்ட நபர்களின் பைகளை நிரப்பும் அபாயகரமான சூழலும் உள்ளது.
உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் - ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்தை நியாயப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்திருக்கிறாh.; இதனை அரச ஊழியர்களின் அன்பளிப்பு எனவும் கூறியிருக்கிறார். இதே உயர்கல்வி அமைச்சர் தான் - ஒரு குடும்பம் வாழ்வதற்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபா (2500/-) போதுமானது எனவும் பொறுப்பற்று கருத்துத் தெரிவித்தவராவார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.  
இவர்களின் - இந்தக்கோரிக்கை மிகவும் அநீதியானது என்பதுடன் - இதன்மூலம் அரச நிறுவனங்களின் தலைவர்கள் - ஊழியர்களின் ஊதியங்களை நன்கொடையாக வழங்குவதற்கு தேவையற்ற அழுத்தங்கள் கொடுக்கவும் வாய்ப்புள்ளது. ஜனாதிபதியின் செயலாளரும் அத்தகைய அழுத்தங்களை மறைமுகமாக ஊக்குவித்துள்ளார் என்பதையும் நாம் அறிவோம். இதனை இலங்கை அசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இத்தகைய அழுத்தங்களுக்கு – அதிபர், ஆசிரியர்கள் அடிபணியத்தேவையில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 
என்று ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். 

Wednesday, May 6, 2020

பழிவாங்க முயலும் செயற்பாடுகளை- துணுக்காய் வலய பணிப்பாளர் நிறுத்தவேண்டும்! - ஜோசப் ஸ்ராலின் -


துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் - கொவிட் -19 நிதிக்காக - ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தை அறவிடுவது தொடர்பாக - சம்மதத்துக்கான கையொப்பம் பெறும் கடிதத்துடன் - கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் - ''இப்படிவம் சமர்ப்பிக்காத பாடசாலைகளுக்கு மே மாத சம்பளப் பட்டியல் வழங்கப்படமாட்டாது'' என எழுத்துமூலம் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு குறிப்பிட்டமை - ஆசிரியர்களையும் அதிபர்களையும் அச்சுறுத்துவது மட்டுமல்லாமல் - நிதிப் பிரமாண நடைமுறைகளுக்கும் முரணானதாகும்.

இவ்விடயம் தொடர்பாக - எமது துணுக்காய் கல்வி வலயத்தின் செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டு - அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் - எமது துணுக்காய் வலய செயலாளரை - தொலைபேசிமூலம் அச்சுறுத்தியதோடு - பழிவாங்க முயலும் செயற்பாடுகளிலும் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஈடுபட்டுள்ளமை - ஆசிரியர்களின் கருத்துச் சுதந்திரத்தையும்,
தொழிற்சங்க உரிமைகளை நசுக்கமுயலும் - மிகமோசமான செயற்பாடாகும்.

தமது சம்பளங்களில் - முறையற்ற விதமாக அதிகாரிகள் கைவைக்க முயலும்போது - ஆசிரியர்கள் மௌனிகளாக இருக்கவேண்டும் என்னும் எண்ணத்துடன் செயற்பட முனையும் - துணுக்காய் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்கிறது.

எமது சங்கத்தின் செயலாளரை பழிவாங்கும் செயற்பாடுகளில் - துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்ந்தும் ஈடுபடுவாராயின் - தொழிற்சங்க நடவடிக்கைகள் தவிர்க்கமுடியாததாக அமையும் என - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Tuesday, May 5, 2020

இ.ஆ.சங்கத்தின் தலையீட்டால் மீளளிப்பு செய்யப்பட்ட EDCS கடன்தொகை!


கொரோனா நெருக்கடி நிலை காரணமாக - வங்கிகளில் பெறப்பட்ட சிறு கடன்தொகைகளுக்கான சலுகைகள் வழங்குமாறு அரசு அறிவித்திருந்தது.
 மத்தியவங்கியின் தாமதமான அறிவுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வழங்கப்பட்ட சம்பளங்களிலிருந்தும் - வங்கிகள் கடன் தொகையை அறவிட்டிருந்தன.

இந்நிலையில் - ஆசிரியர்களை அதிகமான அங்கத்தவர்களாக கொண்டு இயங்கும் கல்வி அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமும் <EDCS> கடன்தொகைகளை அறவிட்டிருந்தது.

ஏப்ரல் மாதச் சம்பளத்திலிருந்து கழித்த கடன் தொகையை மீள செலுத்துவதாக ஏப்ரல் 23 ஆம் திகதி -  நுவரெலியா மாவட்ட EDCS நிர்வாகம் ஆசிரியர்களிடமிருந்து படிவங்களைப் பெற்றிருந்து.
ஆயினும் - இன்றுவரை கழித்த தொகை ஆசிரியர்களின் கணக்கில் மீளளிப்பு செய்யப்படாமல் இருந்துள்ளது.



ஆயினும் - ஒரு சிலருக்கு மட்டும் - மீளளிக்கப்பட்டுள்ளதாகவும் - அந்த மீளளிப்புக்கு நுவரெலியா மாவட்ட  EDCS இல் பணியாற்றுபவர்களும், EDCS தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டவர்களும் - ஆசிரியர் சிலரிடம் சிறு தொகைப்பணம் பெற்று - அவர்களுக்கு மீளளிப்பு செய்துள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டிருந்தனர்.

 இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்திரச்செல்வன் உட்பட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் -பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக சென்று  -நுவரெலியா மாவட்ட  EDCS நிர்வாகத்துடன் கலந்துரையாடினர். விவாதங்களினையடுத்து - உடனடியாகவே ஆசிரியர்களின் பணத்தை நுவரெலியா மாவட்ட EDCS நிர்வாகம் மீளளிப்புச்செய்துள்ளதோடு.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையையடுத்து மீளளிப்புச் செய்யப்பட்டவர்களின் பெயர்விபரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


Friday, May 1, 2020

இ.ஆ.சங்கம் ,யாழ். ப.ஊ.சங்கத்தினரின் மே தினச் செய்திகள் - 2020


இலங்கை ஆசிரியர் சங்கமும் அதன் தோழமைச்சக்திகளான யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், புதிய அதிபர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து பல காலமாக சர்வதேச தொழிலாளர் தினத்தை தொடர்ச்சியாக கொண்டாடிவந்துள்ளது.

கோவிட் 19 உலக நோய்த் தொற்று  இலங்கை உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா நாட்டு மக்களின்  வழமையான செயற்பாடுகளை முடக்கியுள்ள நிலையில் , தவிர்க்க முடியாத ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் யாழ்ப்பாண  பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினதும் அதன் தோழமை சக்திகளான  இலங்கை ஆசிரியர் சங்கம்,  புதிய அதிபர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம் போன்றவர்களினதும் - வருடாந்த மேதின ஒன்று கூடலை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் எமது சிந்தனைகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

மே தினச்செய்தி - 2020
இலங்கை ஆசிரியர் சங்கம்

அன்பான தோழர்களே!

''தொழிலாளர்களாக ஒன்றுபடுவோம் '' என்னும் தொனிப்பொருளில் வழமையாக சர்வதேச மே தினத்தில் ஒன்றிணையும் தொழிலாளர்களாகிய நாம் - கொவிட்-19 நோய்த்தொற்றின் உலகளாவிய நெருக்கடியின் மூலம் ஒன்றுபடமுடியாத சூழலில் உள்ளோம்.

இலங்கையின் - இன்றைய இந்தச் சூழல்  - இலவசக் கல்வியையும் இலவச சகாதாரத்துறையையும் - தொழிற்சங்கங்கள் பாதுகாத்ததன் விளைவை - அனுபவரீதியாக அனைவரையும் உணரவைத்துள்ளது.

உலக வரைபடத்தில் - வெற்றியடைந்ததாகக் கருதிய - முதலாளித்துவ வல்லரசு நாடுகள் - சுகாதாரத்துறையையும், கல்வித்துறையையும் தனியார் மயமாக்கியதன் விளைவால் - மீளச்சிரமப்படும் பாரிய நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளதை நாம் அறிவோம்.

இலங்கை அரசு - 'சைட்டம்' முறைமை மூலம் - இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் - தனியார் மயப்படுத்தி நசுக்க முற்பட்டவேளை - அதனை எதிர்த்துப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் இணைந்து முன்கொண்டு சென்றதன் விளைவாலேயே -  இலவச சுகாதாரமும், இலவச கல்வியும் - இன்றும் மக்களைப் பாதுகாத்துவருகிறது. 

ஆயினும் - சுதந்திரமான கல்விக்கானதும் சுகாதாரத்துறைக்கானதுமான போராட்டம் இன்னும் முழுமைபெறவில்லை.

யுனஸ்கோவின் அறிக்கையிடலின் அடிப்படையில் - கொவிட் -19 பிரச்சினையால் உலகளவில் 1.7 பில்லியன் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. உலக தொழிலாளர் சம்மேளனத்தின் தரவுகள் 1.5 பில்லியன் வேலையிழப்புகள் உலகளவில் காணப்படுவதாக குறிப்பிடுகிறது.

இந்நிலையில் - இந்த நெருக்கடிக்குள்ளிருந்து எவ்வாறு மீள்வது? என்று சிந்திக்கும் பொறுப்பு எம் அனைவர்மேலும் சுமத்தப்பட்டுள்ளது.

ஆயினும் - இலங்கை கல்வித்துறையில் - மே-11 பாடசாலை ஆரம்பிக்கும் என ஏப்ரல் -11 இலேயே தீர்மானித்திருந்தார்கள். ஏப்ரல் -11 இல் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் தொகை 197 ஆக மட்டுமே இருந்தது. மே-1 இல் கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் தொகை 600 ஐ தாண்டியிருக்கிறது.

அவ்வாறாயின் - இந்த நெருக்கடிக்குள்ளிருந்து எவ்வாறு மீள்வது என்று இன்றைய அரசு  பொறுப்புடன் செயற்படுகிறதா?

பாடசாலைப் பிள்ளைகளின் பாதுகாப்பைப் புறம்தள்ளி - வெறும் தேர்தலை நோக்காகக்கொண்டே இந்த அரசு செயற்படுகிறது. மக்களின் பாதுகாப்பைப் பற்றி இந்த அரசு சிந்திக்கவில்லை.

அதுமட்டுமல்லாமல்- 
கொரோனா கல்விப் பாதிப்பு தொடர்பாக - தற்போது உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் - தனியார் பாடசாலை உரிமையாளர் ஒருவர் உட்பட தனியார் பாடசாலைகளின் இரண்டு அதிபர்களுமே உள்வாங்கப்பட்டுள்ளனர். இது இலவசக் கல்வி தொடர்பாக இந்த அரசின் அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது. இதற்கு தொழிற்சங்கமாகவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம்.

இலங்கையின் பொருளாதாரத்தில் - சிறு தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், ஆடை உற்பத்தியாளர்கள், தோட்டத்தொழிலாளர்கள் எனப் பலதரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களுக்கான ஒரு அவசரத்தீர்வும் அவசியமானதாகும்.

நோய்த்தொற்று என்பது - மனிதருக்கு தெரிந்தே வருவதில்லை. ஆனாலும் நோயாளிகளை உளவியல் ரீதியாக பாதிப்படையச்செய்யும் செயற்பாடுகள் உருவாகி வருவது தவிர்க்கப்படவேண்டும். கொரோனா நோய்த்தொற்றைக் காரணமாகக்கொண்டு - அடிப்படை வாதங்களையும் - இனவாதங்களையும் தூண்டும் அரசின் நோக்கம் தோற்கடிக்கப்படவேண்டும்.

எனவே - இக்கட்டான இந்த சூழலிலிருந்து - உலக தொழிலாளர்கள் மீண்டுவரவும் - இலங்கையில் - கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் இலவசமாக தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி - நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என - இன்றைய மே தினத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.

மே தினச் செய்தி - 2020
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்.

2020 மே தின அறைகூவல்: ஊழிக்கால பேரபாயம் - 
பல்கலைக்கழக ஊழியர் சங்கம் எச்சரிக்கை. 


தோழர்களே!
கோவிட் 19 உலக நோய்த் தொற்று  இலங்கை உள்ளிட்ட ஏறத்தாழ எல்லா நாட்டு மக்களின்  வழமையான செயற்பாடுகளை முடக்கியுள்ள நிலையில் , தவிர்க்க முடியாத ஊரடங்கும் தனிமைப்படுத்தலும் யாழ்ப்பாண  பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினதும் அதன் தோழமை சக்திகளதும் வருடாந்த மேதின ஒன்று கூடலை தவிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் எமது சிந்தனைகளை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

1. இந்த ஊரடங்கும் சுய தனிமைப்படுத்தலும் அவசியமானதெனினும் இது தொழிலாளிகளுக்கு இச் சூழ்நிலையில் மிக அவசியமான கருத்துப் பரிமாறலுக்கான மிகவும் முக்கியமான சாதனமாக இருந்த ஒன்று கூடலை இல்லாதாக்கியுள்ளது. தொழிலாளர்களின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கு இயலாததாகியுள்ளது.

2.வதந்திகளிடமிருந்து உண்மைகளை பிரித்தறிவதற்கோ, கண்டறிந்த உண்மைகளை வெளிக்கொணருவதற்கோ முடியாத நிலை  காணப்படுகிறது.

3.அமெரிக்காவிலும், ஆபிரிக்க நாடுகளிலும் மட்டுமன்றி இலங்கையிலும் யாழ்ப்பாணத்திலும் கூட நலிவுற்ற தரப்பினரும் நாளாந்த வேதனத் தொழிலாளர்களும் "பரிசோதனை எலிகளாக" தங்களையறியாமலே மாறும் அபாயத்தை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

4. அரசாங்களின் தற்காலிக நிவாரணங்கள் உரிய மக்களுக்கு சென்றடைவதற்கு அரச அதிகாரிகள்,வங்கிகள் போன்ற அரச இயந்திரங்களே தடையாக உள்ளமையை இலங்கையில் காண்கிறோம்.

5.மேலும் குறுகிய அரசியல் நோக்குடையதாக  விமர்சிக்கப்படும் அரசாங்க கடன் சலுகை நிவாரணங்கள் நீண்ட காலத்தில் கடனாளிக்கு பாதிப்பை ஏற்படுத்துமென்ற வாதம் இதுவரை மறுத்துரைக்கப்படவில்லை.

6.முறைசாரா தொழிலாளர்களதும் நிரந்தரமற்ற பணிகளில் நாளாந்த வேதனம் பெறுவோரினதும் வேலையிழக்கும் நிலைமைக்கு உடனடி நிவர்த்தியையோ அல்லது நிவாரணங்களையோ வழங்கவேண்டிய கடப்பாடு அரசாங்களுக்கு உள்ளது.அதிலிருந்து அவை விலகிவிடமுடியாது என்பதை தொழிற்சங்கங்கள் இடித்துரைக்கப்படவேண்டும்

7.ஆட்சியாளர்களும்,அதிகார தரப்பினரும் தமக்கு இயைந்த வகையில் தாம் தீர்மானித்த நேரத்தில்,தீர்மானித்த இடத்தில்,தீர்மானித்த தரப்பினருக்கு மட்டும்  தமது திட்டங்களை விளக்கி அங்கீகாரம் பெறுவதற்கு இன்றைய சூழல் இடமளிக்கிறது.

8.இன்றைய சூழலில் நோய்பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை/சமுகத்திற்கு ஏற்படக்கூடியஅபாயங்களை/ஊழல்களை சுட்டிக் காட்டும் மிகச் சிலரின் குரல்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.

9.இன்றைய சூழலில் தவிர்க்க முடியாமல் உருவான மிகச்சில நல்ல விளைவுகளான சுய உற்பத்தி,கிராம  தன்னிறைவு விவசாயம், இயற்கை விவசாய முயற்சிகள் போன்றன நோய்த்தொற்று முற்றிலும் நீங்கிய பின்னான காலத்திலும் தொடர்ந்து நிலைபெற ஆகவேண்டியதைச் செய்யாவிட்டால் முதலாளித்துவ சக்திகளால் இவை திட்டமிட்டே அழிக்கப்படும்.

கடந்த காலங்களில் இந்திய படைகளின் போர்க் காலங்களிலும், 1995 மாபெரும் இடப்பெயர்விலும்,சுனாமி மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலங்களிலும்" படம்" காட்டியவர்களை நீங்கள் அறிவீர்கள். இப்போதும் அவ்வாறானவர்கள் அதைத் தான் செய்கிறார்கள்.

இதனால் தான் தோழர்களே , நாம் மிகவும் அவசியமாக, அவசரமாக கலந்துரையாட வேண்டியுள்ளது.

இந்த அவசர கலந்துரையாடலை நாம் செய்யத் தவறின்,இவ்விடர் காலத்தில் நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பிற்காலத்தில் பயன்படுத்த தவறியவர்களாவோம்

அதுமட்டுமின்றி பல்வேறு பிற்போக்கு சக்திகளும் சுயநலபேர்வழிகளும் இக் காலத்துக்கு பின்வரும் காலத்தை  பொதுநலனுக்காகவன்றி தமது சொந்த நலனுக்காக பயன்படுத்த போகும் கொடுமையை பார்த்தும் வாளாவிருப்பவர்களாவோம்.

ஆகவே தோழர்களே,சோர்விலிருந்து மீண்டெழுவோம்.ஒன்று சேருவோம்.இன்றே!இப்போதே!