Saturday, January 30, 2021

ஆசிரியர்களின் போராட்ட உரிமையை நசுக்கி சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிட முடியாது. – ஜோசப் ஸ்ராலின் -

2021.01.18ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அன்றைய நாளை சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிடுமாறு அறிவுறுத்தப்படும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் 2021.01.19 ஆம் திகதிய கடிதம் தொடர்பான நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம், இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, சுதந்திரமாக செயற்படும் தொழிற்சங்க உரிமையை நசுக்கும் செயற்பாடு எனவும் குறிப்பிட்டு,  2021.01.19 ஆம் திகதிய கடிதம் மீளப்பெறப்படவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- 

2021.01.18ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிடுமாறு அறிவுறுத்தப்படும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் 2021.01.19 ஆம் திகதிய கடிதம் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம்  வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

குறித்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக எமக்கும் அதிருப்திகள் உண்டு. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தொடர்பாகவும் எமக்கு விமர்சனம் உண்டு. விசேடமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக செயற்படும் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியிருந்தது. 

இடமாற்றச் சபையில் தீர்மானங்களை எடுத்துவிட்டு, ஆசிரியர்களைத் தவறாக வழிநடத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆயினும், ஆர்ப்பாட்டங்களுக்கு வந்தவர்களுடைய உரிமையை அடக்கும் வகையில், வடமாகாண கல்வியமைச்சு செயற்பட கூடாது. வடமாகாண கல்வியமைச்சின் 2021.01.19 திகதிய கடிதம் தொடர்பான செயற்பாட்டை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மீளப்பெறவேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம். 

ஆர்ப்பாட்டம் செய்தமை தொழிற்சங்க உரிமையாகும். தொழிற்சங்க நடவடிக்கைக்காக விடுமுறை அறிவித்தோ, அல்லது விடுமுறை அறிவிக்காமலோ கூட ஆர்ப்பாட்டம் செய்யமுடியும். இதனை இலங்கை அரசியலமைப்பும், சட்டமும் ஏற்றுக்கொண்டுள்ளது. போராட்ட வழிமுறைகளை தொழிற்சங்கங்களே தீர்மானிக்கமுடியுமென சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளபோது, அவசியமற்ற வகையில் தாபனவிதிக் கோவையைத் தொடர்புபடுத்தி ஆசிரியர்களின் உரிமைகளை நசுக்க முயல்வது அடிப்படை உரிமை மீறலாகும். 

எனவே, தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் சுதந்திரமாக செயற்படும் உரிமையை, இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள விடயங்களைக் கவனத்தில்கொண்டு, பொருத்தமற்ற நடைமுறைகளால் உரிமைகளை நசுக்கும் செயற்பாடுகளை வடமாகாண கல்வியமைச்சு உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள தொழிற்சங்க உரிமைகளை நசுக்கும் செயற்பாடு வடமாகாண கல்வியமைச்சால் மீளப்பெறப்படவில்லையாயின், இலங்கை ஆசிரியர் சங்கம் உரிமைகளை வென்றெடுப்பதற்காய் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 


  


Sunday, January 10, 2021

நாளைய கதவடைப்புக்கு வடமாகாண தரம் III புதிய அதிபர் சங்கமும் பூரண ஆதரவு


 

நாளைய முழு அடைப்பு போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் இதயங்களில் தாங்கமுடியாத வேதனையை உருவாக்கியுள்ளது. இறுதி யுத்தத்தின் போது இறந்த தமது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவாலயமானது பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட பேரினவாத அரசின் துணையுடனேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. 

2009 இறுதி யுத்தத்தின்போது மனிதப் பேரவலம் நடைபெற்றதன் அடையாளத்தை மறைக்க முயலும், இந்த இனவாத அரசின் செயற்பாட்டையும், அதற்குத் துணைபோகும் அரச இயந்திரங்களின் செயற்பாடுகளையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் இனத்தின் கலாசாரங்களோடும், உணர்வுகளோடும், தமிழ் மக்களின் பண்பாட்டுத் தனித்துவங்களோடும் பின்னிப்பிணைந்த கல்விக் கூடமாகவே இருந்து வந்துள்ளது. இத்தகைய நிலையில், அங்கிலிருந்த  முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமையானது உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களை நொருக்கியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. 

இனவாத அரசின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பைக் காட்டும் வேளையில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றின் அடிப்படைகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ள அரசாங்கம், அதனூடாக மக்களின் ஜனநாயக ரீதியான வெகுஜன எதிர்ப்புக்களையும் அடக்க முயன்று வருகின்றது.

பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட மக்கள் சமூகங்களை, மிலேச்சத்தனமான இனவாத செயற்பாடுகளினால் துன்புறுத்திவரும் இந்த அரசு, ஜனநாயக ரீதியில்  எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்களையும் பொய்யான காரணங்கள் மூலம் அடக்கியாள முற்படுகின்றமை கண்டனத்துக்குரிய விடயமாகும். 

நாளை வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் ஆரம்பநாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாரம்பரிய இனமொன்றின் அடையாளத்தினை இரும்புக் கரம்கொண்டு அடக்க நினைப்பதற்கு எதிர்வினையாற்ற வேண்டியதும், குரல் கொடுக்க வேண்டியதும் கல்விச் சமூகத்தின் பொறுப்பான கடமையாகவும் உள்ளது.

எனவே – பல்கலைக்கழக சமூகத்தினர், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள் இணைந்து ஒற்றுமையாக மேற்கொள்ளவுள்ள அனைத்து போராட்டங்களுக்கும், நாளைய தினம் வடக்கு – கிழக்கில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கும், இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றது. 

நாளைய தினம் நடைபெறவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒத்துழைத்து, போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.