Tuesday, December 5, 2017

கொழும்பு கல்விவலயத்தால் 39 ஆசிரியர்களுக்கு முறையற்ற இடமாற்றம் : ஏற்கவேண்டாம் என ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு!


மேல்மாகாணத்திற்குட்பட்ட கொழும்பு கல்வி வலயத்தினால் 39 தமிழ்மொழிமூல ஆசிரியர்களுக்கு முறையற்ற விதமாக – 2007/20 தேசிய இடமாற்றச் சுற்றறிக்கையை மீறி – எவ்வித இடமாற்றச் சபையும் இன்றி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய முறையற்ற இடமாற்றத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் முழுமையாக எதிர்ப்பதுடன்  - இவ்விடயம் தொடர்பாக – மேல்மாகாண கல்விச் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கும்; கொண்டுவரப்பட்டுள்ளது.

முறையற்ற வகைகளில் கதிரைகள் ஏறிய தகுதியற்ற அதிகாரிகளால் - அரசியல்வாதிகளின் அரசியல் தேவைகளை  நிறைவு செய்வதற்காகவே இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே –
இத்தகைய முறையற்ற இடமாற்றம் வழங்கப்பட்ட 39 ஆசிரியர்களும் - எவ்வகையிலும் இந்த இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு இடமாற்றம் பெற்ற ஆசிரியர்கள் - எதிர்வரும் 08.12.2017 ஆம் திகதி மதியம் 1.00 மணிக்கு கொழும்பு – 2 விதானகே மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு கல்வி வலயத்தில் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்திப்பதன் மூலம் இடமாற்றத்தை நிறுத்தமுடியும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Monday, November 27, 2017

நாளை 28.11.2017 செவ்வாய்க்கிழமை – வவுனியா வடக்கு கல்விவலய அதிபர், ஆசிரியர்களுடன் - ஜோசப் ஸ்ராலின் சந்திக்கவுள்ளார்

வவுனியா வடக்கு கல்விவலய அதிபர் - ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நாளை 28.11.2017 செவ்வாய்க்கிழமை வவுனியா வடக்கு - வவு/மறுகரம்பளை அ.த.க.. பாடசாலையில் மாலை 2.00மணியளவில் நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான இக் கலந்துரையாடலில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் - புதிய சம்பள மாற்றங்கள் - இடமாற்றங்கள் - மற்றும் அதிபர் ஆசிரியர் எதிர்கொள்ளும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. வவுனியா வடக்கு  கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள்-  அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய முடியுமென வவுனியா மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Wednesday, November 22, 2017

குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து தீர்மானங்களை எடுப்பவர்கள் – ஆரோக்கியமான தீர்மானங்களை எடுக்கவேண்டும்.


வடமாகாணத்தில்அ மைந்துள்ள பல கஸ்டப்பிரதேச பாடசாலைகளில் வெளிமாவட்டங்களிலிருந்து சென்று பணியாற்றுவதற்கு தடையாக - ஒழுங்கற்ற போக்குவரத்துக்களும் - தங்குமிட வசதிகளின்மையையும் காணப்படுகின்றது. – வெளிமாவட்டங்களிற்கு சென்று பாரிய மனச்சுமைகளோடு பணியாற்றும் ஆசிரியர்களின் நலன்சார்ந்து சிறிதளவேனும் சிந்திக்காது –வடமாகாணத்தின் கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என வடமாகாண கல்வியமைச்சு கருதுகின்றதா? என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியர்களின் வரவை உறுதிப்படுத்தும் இயந்திரப்பதிவு முறையினால் - ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ள மனஅழுத்தங்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை அண்மைய நாட்களில் வடமாகாணத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசாங்க நிர்வாக முகாமைத்துவ அமைச்சினால் - விரல் அடையாள இயந்திரப் பதிவுமுறையை அமுல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பினும் - அது சார் நடவடிக்கையினை பாடசாலைகளில் அமுல்படுத்தமுன்னர் – வடமாகாணத்தின் பாடசாலைகளின் - இதர வசதிவாய்ப்புக்களின் சாதக - பாதக நிலைகள் கருத்திலெடுத்து – பாடசாலைகளுக்கான நேர நிர்ணயம் வடமாகாண கல்வியமைச்சால் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

பல மாவட்டங்களில் உள்ள - பல பாடசாலைகளிற்கு காலை 7.30 மணிக்கு முன்னர் சென்றடையமுடியாத போக்குவரத்து காணப்படுகின்றது. இவ்விடயங்கள் சீர் செய்யப்படாமலேயே 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் அரை மணிநேரம் முன்னரான 7.30 க்கு ஆரம்பிக்குமாறு வடமாகாண கல்வியமைச்சால் அறிவுறுத்தப்பட்டது.

பாடசாலைகளின் ஆரம்பிக்கும் நேரங்களை மாற்றியமைக்கும் சுதந்திரம் சுற்றுநிருபத்தினூடாக வழங்கப்பட்டிருந்தும் - பாடசாலை நேரத்தினை பிந்தி ஆரம்பித்து முடிப்பதற்கு – ஆசிரியர்களின் நலன் சார்ந்து சிந்தித்து அதிகாரிகள் செயற்படவில்லை. இந்த நிலையில் -  வரவை உறுதிப்படுத்தும் இயந்திரப்பதிவு முறையும் - காலை 7.30 மணிக்கு வடமாகாணத்தின் பாடசாலைகளின் இயங்கு நிலையும் - பின்தங்கிய பிரதேசங்களில் மேலதிக நேரங்கள் நின்று பணியாற்றியும் கூட-  ஆசிரியர்களுக்கு அவசியமற்ற விடுமுறை இழப்புக்களையும் -பாரிய மனஅழுத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

விரலடையாளப் பதிவிடலில் சட்டம் பற்றிப் பேசும் அதிகாரிகள் - பாடசாலை முடிந்த பின்னரும் ஆசிரியர்களை மறித்து மேலதிக நிகழ்வுகளையும், ஆசிரியர் கூட்டங்களையும் நடாத்துவது சட்டவிரோதம் என்பதை பேசமறுக்கின்றனர். இவற்றை அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையின் அடையாளமாகவே நோக்கவேண்டியுள்ளது. இத்தகைய அதிகார அடாவடித்தனங்களின் மூலம் ஆசிரியர்களை அடக்க நினைப்பவர்களின் செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

மாணவர்களுடன் நேரடியாக தொடர்புபடுபவர்கள் ஆசிரியர்களே. இவர்களே களப்பணியாளர்கள். இவர்களின் உளவியல் என்பது மிகமுக்கியமானது.  குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து தீர்மானங்களை எடுப்பவர்கள்  – ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கக்கூடிய தீர்மானங்களை எடுக்கவேண்டும். மாறாக – தமது அதிகாரத் திணிப்பினூடாக ஆசிரியர்களையும் மாணவர்களையும் விரக்திநிலைக்கும் கொண்டுசெல்லும் முடிவுகளை எடுக்கக்கூடாது.

பாடசாலை முடிவடைந்த பின்னர் - நடைபெறும் நிகழ்வுகளில் ஆசிரியர்கள் கலந்துகொள்வது அவரவர்களின் விருப்பமாகும். ஆசிரியரின் விருப்பின்றி எவ்வித நிர்ப்பந்தங்களையும் எவரும் வழங்கமுடியாது. அவ்வாறான நிர்ப்பந்தங்களை வழங்கும் - அடக்குமுறைச் செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கின்றது.

இவ்விடயங்கள் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சு பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோசப்ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்


Tuesday, October 31, 2017

பல்கலை மாணவர்களின் போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.


தமிழ் அரசியல் கைதிகளை – அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும் -;  உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் - அதனை  இழுத்தடிப்பின்றி உடனடியாக  நிறைவேற்ற வேண்டும் என்று – அரசையும் - பொறுப்புக்கூறவேண்டிய தமிழ் தரப்பினரையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட - பொதுஅமைப்புக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக - யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.

சமூக நீதிக்கான தேடல் வியாபித்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை - அனைத்துத் தரப்பினரும் கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்க வேண்டியது சமூகக் கடமையாகும். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது – தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு - தமிழ் சமூகம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்பதை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே – மாணவர்களை அச்சுறுத்தல் மூலம் நசுக்கும் செயற்பாட்டை செய்யும் எவராயினும் - தமிழ் மக்களின் சமூகக் கடமையை நிறைவேற்றத் துடிக்கும் மாணவர்களுக்கு இடைஞ்சல் புரிந்தவராகவே வரலாற்றில் இடம்பிடிப்பார். அத்தகைய வரலாற்று அவமானத்தை  எவரும் பெற்றுவிடக்கூடாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டிநிற்கின்றது.

எனவே – அரசியல் கைதிகள் - அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் நிபந்தனையற்ற விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்து - இணைக்கப்பட்ட பொதுஅமைப்புக்களுடன் இணைந்து அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலைக்காக குரல்கொடுப்பவர்கள் என்னும் வகையில் - யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரித்து நிற்கின்றது.

Sunday, October 29, 2017

"இலங்கை ஆசிரியர் சங்கத்தின்" அங்கத்துவம் தொடர்பாக - ஆசிரியர்களின் கவனத்துக்கு …!



ஆசிரியர்கள் தாம் அங்கத்துவராக சேர்ந்துகொள்ளும்போது -  தாம் அங்கத்துவம்பெறும் ஆசிரியர் தொழிற்சங்கள் தொடர்பாக – அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

EDCS (கல்வி ஊழியர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம்)  என்பது ஒரு கூட்டுறவுச் சங்கம் ஆகும். அது ஒரு சுயாதீனமான கூட்டுறவுச் சங்கம் ஆகும். அதில் - எந்தத் தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெறுபவர்களும் அல்லது அங்கத்துவம் பெறாத ஆசிரியர்களும் கூட – தனக்கென கணக்கினை ஆரம்பித்து – தமக்குரிய சேவைகளை ஏனைய வங்கிகளைப் போன்றே பெற்றுக்கொள்ள முடியும். –EDCS வங்கியின் சுயாதீன செயற்பாடுகளுக்காக - எந்தவொரு தொழிற்சங்கத்திலும் இணைந்திருப்பது அவசியமில்லை. 
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் விளக்கேற்ற காத்திருக்கும் ரில்வின் சில்வா – ஜே.வி.பி.


மாநாட்டு மண்டபத்தில் ரில்வின் சில்வா
ஆனால் -EDCS என்பது தமது சங்கத்தின் வங்கி எனக் கூறியும் - தமது சங்கத்தில் இணைந்தால்தான் - வங்கி வழங்கும் சலுகைகளைப் பெறமுடியும் எனக் கூறியும் - தமது “இலங்கை ஆசிரியர் சேவை” சங்கத்தில் தமிழர் விரோதப் போக்குடைய இனவாத – ஜே.வி.பி. கட்சியினர் - வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு சென்று – தமது வங்கியூடாக கடன்வசதி செய்துதருவதாகவும் - கடன்வசதி பெறுவதற்கு தமது சங்கத்தில் இணைந்திருப்பது அவசியமெனவும் கூறி  -  மோசடியான முறைகளில் - ஆசிரியர்களை இணைத்து வருகின்றனர்.  இத்தகைய செயற்பாடு கண்டனத்துக்குரியதாகும்.

அதுமட்டுமல்லாமல் - சில ஆசிரியர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் “இலங்கை ஆசிரியர் சங்கம்” மும் “இலங்கை ஆசிரியர் சேவை” சங்கமும் ஒன்று எனப் பொய்யான பரப்புரைகளையும் செய்து மடு,  மன்னார் போன்ற மாவட்டங்களில் ஜே.வி.பி.யினர் ஆசிரியர்களை இணைத்துள்ளனர். 

இதே ஜே.வி.பி கட்சியினர் தான் -   வடகிழக்கு மாகாணமாக இருந்த பிரிக்கமுடியாத தமிழர் பிரதேசத்தை வடக்கு – கிழக்கு மாகாணங்களாகப் பிரிப்பதற்கு வழக்குப்போட்டவர்களாவர் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது. 

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக – முழுமையாக செயற்பட்ட ஜே.வி.பியினர் – தற்போது - தமது கட்சியை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வளர்ப்பதற்காக – EDCS கூட்டுறவு வங்கிக்குச் சொந்தமான வாகனங்களையும், அதன்சாரதிகளையும் மோசடியான முறையில் பயன்படுத்தி இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயற்பாட்டுக்கு பயன்படுத்தி வருவது தொடர்பாகவும் - கூட்டுறவுச் சங்க செயலாளருக்கும் எழுத்துமூலமாக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

EDCS க்கு சொந்தமான வாகனத்தில் சென்று ஆசிரியர்களை தமது சங்கத்தில் இணைக்கும் மோசடி  

இந்த நிலையில் - “இலங்கை ஆசிரியர் சங்கம்” இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்துடன் எவ்விதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பெயரைப் பாவித்து ஜே.வி.பியினரால் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற ஆசிரியர்களுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் எவ்வகையிலும் பொறுப்புக்கூறல் கொண்டிருக்காது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Friday, October 20, 2017

பல்கலைக்கழக மாணவர்களின் விசாரணை துரிதப்படுத்தப்படவேண்டும். இலங்கை ஆசிரியர் சங்கம் - சட்டமா அதிபருக்கு கடிதம்.



பல்கலைக்கழக மாணவர்களின் விசாரணை துரிதப்படுத்தப்படவேண்டும்.
இலங்கை ஆசிரியர் சங்கம் - சட்டமா அதிபருக்கு கடிதம்.

கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குழப்பிட்டிச் சந்தியில் வைத்து; சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஸன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக - இன்றுடன் ஒருவருடம் கடந்த நிலையிலும் - உயர் நீதிமன்றத்தில் உரியமுறையில் வழக்குத்தாக்கல் செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக – முதலில் விபத்தினாலேயே மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறிய நிலையில் - ஐந்து பொலிஸாரைக் கைது செய்து – அவர்களுக்கும் பிணைவழங்கப்பட்ட நிலையில் - உயர் நீதி மன்றத்தில் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படாதமையால் மாணவர்களின் மரணம் தொடர்பாக உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை..

பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால் - உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அவ்வாறெனில் – உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருப்பாரானால் - அம்மாணவர்கள் சுடப்பட்டு இறந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இவ்விரு மாணவர்களின் மரணத்திற்கு நீதியான விசாரணை கோரி 25.10.2016 அன்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது – இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடைபெறும் என ஆளுநரால் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் - அதற்குரிய நடவடிக்கைகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே – உடனடியாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருமாணவர்களின் மரணம் தொடர்பாக – விசாரணையை துரிதப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சட்டமா அதிபரிருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளது.  குற்றத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.


Tuesday, October 10, 2017

13.10.2017 ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவு

வெள்ளிக்கிழமை 13.10.2017 நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றது.   தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது – அவர்களுக்காக குரல் கொடுப்பது என்பது தமிழ் மக்களின் பாரிய பொறுப்பாகும்.

தேசிய பிரச்சினைக்கு உளத்தூய்மையுடன் தீர்வைமுன்வைக்க விரும்பும் அரசாங்கம் - முதலில் அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து விடுதலை செய்யவேண்டும்.
இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என்றும் -  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள் எனவும் - நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஊடாக தான் இவர்களுக்கு தண்டனை கொடுத்து விடுதலை செய்யலாம் என்பதும்  .    அரசின் இனவாத நோக்கிலமைந்த பழிவாங்கல் நிகழ்ச்சிநிரலாகும்.



பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைதுசெய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் பல ஆண்டுகளாக பெரும் இன்னல்களுக்கு மத்தியிலும் - உளவியல் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நடைப்பிணமாக தமிழ் அரசியல் கைதிகள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் விடுதலை தொடர்பில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்ககப்படவில்லை.   தங்கள் விடுதலைக்காக பல தடவைகள் சாத்வீக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டங்களை தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்தனர். நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எனக் கூறும் அரசாங்கம் இந்த அரசியல் கைதிகள் விவகாரத்தை பயங்கரவாதத்தோடு தொடர்புபட்ட பிரச்சினையாக மட்டுமே பார்க்கின்றது.   தேசிய இனப்பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காணப்படவேண்டுமாயின் - தமிழ் இனத்தின் அடக்குமுறைக்கெதிதாக போராடியவர்களை முதலில் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து அனைவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அரசியல் கைதிகளாக இருந்த 12000 பேரை விடுவிக்க முடிந்ததென்றால் - நல்லிணக்கம் எனவும் நல்லாட்சி எனவும் கூறும் தற்போதைய அரசால் தற்போது அரசியல் கைதிகளாக உள்ள 132 பேர்களை மட்டும் விடுவிக்கமுடியவில்லை என்பது பேரினவாதத்தின் அடக்குமுறையின் பழிவாங்கல் நோக்கமே என்பது தெளிவாகின்றது..

இந்த நிலையில் -

(1) தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து - சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்..
(2) முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் ..


13.10.2017  வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கதவடைப்புக்கு போராட்டத்தில்
பாடசாலைசெயற்பாடுகளும் ஸ்தம்பிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்பிலும் ஆசிரியர்கள் கலந்து தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது. அன்றைய தினம் மாணவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் அக்கறை செலுத்துமாறும் -. மாணவர்களை வீதிகளுக்கு அனுப்பாது பாதுகாப்பாக வீடுகளில் வைத்து பொறுப்பாக செயற்படுமாறும்  இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

13.10.2017 வெள்ளிக்கிழமை கதவடைப்புக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் பூரண ஆதரவு


 வெள்ளிக்கிழமை 13.10.2017 நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு 20 பொதுஅமைப்புக்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது – அவர்களுக்காக குரல் கொடுப்பது என்பது தமிழ் மக்களின் பொறுப்பாகும். எனவே – அன்றைய தினம் பாடசாலைகளும் ஸ்தம்பிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்பிலும் ஆசிரியர்கள் கலந்து தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது. அன்றைய தினம் மாணவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் அக்கறை செலுத்துமாறும் -. மாணவர்களை வீதிகளுக்கு அனுப்பாது பாதுகாப்பாக வீடுகளில் வைத்து பொறுப்பாக செயற்படுமாறும்  இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக – பொதுஅமைப்புக்கள் இணைந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

எதிர்வரும் 13.10.2017- வெள்ளிக்கிழமை- வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்ளுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடு
அழைக்கின்றோம். அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி - நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம்.

தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகத் தங்களது வாழ்வை அர்ப்பணித்துப் போராடியவர்கள் உட்படப் பலர் அரசியற் கைதிகளாகச் சிறைகளில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருப்பதனைக் கண்டிக்க வேண்டியதும்இ அவர்களது விடுதலையை வலியுறுத்திப் போராட வேண்டியதும் - ஒவ்வொரு தமிழ்மகளதும் - ஒவ்வொரு தமிழ்மகனதும் தார்மீகப் பொறுப்பும் வாழ்வுக் கடமையும் ஆகிவிட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு என்பது - தற்போது ஒரு சட்ட ரீதியான விடயம் என்பதைக் கடந்துவிட்டது. அதுஇ நியாயத்தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஓர் விடயமாக ஆகிவிட்டது. அத்தோடு - ஓர் அரசியல் தீர்மானத்தின் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படையான பிரச்சனைகளுள் ஒன்று என்ற பரிமாணத்தையும் அடைந்துவிட்டது.
போரின் இறுதிநாள்வரை ஆயுதங்கள் தாங்கிப் போராடிய பல மூத்த போராளிகள் உட்பட - 12000 முன்னாள் விடுதலைப் புலிகளை- குறுகிய காலத் தடுப்பிற்குப் பிறகு - மீளவும் சமூகத்துடன் இணைய வழிவகை செய்த ஓர் அரச பொறிமுறையானது - வெறும் 132 பேர்களை மட்டும் தொடர்ந்தும் சிறைகளில் அடைத்திருப்பதானது எவ்வித சட்ட அர்த்தமும் இல்லாத ஓர் செயற்பாடு ஆகும். தமிழர்களுடன் தொடர்பில்லாத அரசியற் காரணங்களினாலேயே அவர்கள் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.

எமக்கான காரியங்களை ஆற்றுவதற்காக எமது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் - அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறி - அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். நாடாளுமன்றச் செயற்பாடுகள் அனைத்திலும் அரசாங்கத்தை நியாயப்படுத்தி ஆதரிக்கின்றார்கள். தமது ஆதரவுக்கான ஒரு பிரதியீடாகத்தன்னும் - உறுதியான தளம்பலற்ற வார்த்தைகளால் பேசி - சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அவர்களால் முடியும். ஆனால் - எமது உறவுகள் சிறைகளில் வாடினாலும் பரவாயில்லை - தாம் அரசாங்கத்தைச் சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காகவும் - அரசாங்கத்துடனான தமது உறவுகள் பாதிப்புறக்கூடாது என்பதற்காகவும் - மென்மையாகப் பேசி எமது பிரதிநிதிகள் காலத்தைக் கடத்தி வருகின்றாhர்கள்.
எமது பிரதிநிதிகளின் இந்த அலட்சியப் போக்கினதும் - உதாசீனத்தினதும் - அக்கறையின்மையினதும் விளைவாக — தான்தோன்றித் தனமாகச் செயற்படும் இந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் - தமிழ் பிரதேச நீதிமன்றங்களில் உள்ள எமது அரசியற் கைதிகளின் வழக்குகளை - சிங்களப் பிரதேசங்களுக்கு மாற்றுகின்றது. அவர்களுக்கு எதிரான சாட்சிகளுக்குப் பாதுகாப்புப் பிரச்சனை என்று சினமூட்டும் காரணங்களை அடுக்குகின்றது. அத்தோடு - வழக்குகளைத் துரிதமாக நடத்தி முடிக்காமல் - வேண்டுமென்றே இழுத்தடிக்கின்றது.
இதன் காரணமாக - தமக்கான அடிப்படை நீதியைக் கோரி தமிழ் அரசியற் கைதிகள் மூவர் - கடந்த 16 நாட்களாக உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தங்களது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றுவதுடனஇ; தமது வழக்குகளை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதுவே அவர்களது உடனடிக் கோரிக்கையாக உள்ளது.
அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி - எமது அதிகூடிய வல்லமைக்கு உட்பட்ட எமது அழுத்தத்தை நாம் ஒவ்வொருவரும் ஒன்றாய் திரண்டு பிரயோகிப்போம். எவர் கைவிட்டாலும் - அவர்களை நாம் கைவிடமாட்டோம் என்ற தகவலைச் சொல்லுவோம்.
(1) தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும்இ அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு - தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து - அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்..
(2) முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் ..
(3) அசமந்தப் போக்கைக் கைவிட்டும் - மழுப்பல் பதில்களை வழங்காமலும் - அனைத்து தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிப்பதற்கான நேரடி அழுத்தத்தினை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்குமாறு எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வற்புறுத்தியும் ..
(4) வரும் 14.10.2017இ சனிக்கிழமைஇ யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு - தாமதமற்ற தீர்வு காண வேண்டிய இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்குமாக -
எதிர்வரும் 13.10.2017 - வெள்ளிக்கிழமை - வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்ளுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடு
அழைக்கின்றோம். அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி - நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம்.

தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை - இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் - எமது நாடாளுமன்றப் பிர-திநிதிகளுக்கும் - இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13.10.2017 - வெள்ளிக்கிழமை - காலை 09:30 மணிக்கு - வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றெனத் திரள்வோம்.

Friday, October 6, 2017

அதிபர் ஆசிரியர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஆசிரியர் தினமான இன்று கொழும்பில் கவனயீர்ப்பு



அரசாங்கம்  மற்றும் அதிகாரிகள்  - ஆசிரியர் அதிபர்களது அடிப்படைத் தேவைகளை நடமுறைப்படுத் துவதில்லை. - ஆசிரியர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் -  போலி விளம்பரங்கள் மூலமாக ஆசிரியர்,  அதிபர்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இச்செயற்பாட்டைக் கண்டித்து ஆசிரியர் தினமான இன்று (06.10.2017) கொழும்பு வலயக் கல்விப் பணிமனைக்கு அருகில்  மாலை 2.30 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 2014 ஒக்டோபர்மாதம் வெளியிடப்பட்ட - புதிய ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பிலும் , புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிலும் குறிப்பிட்டுள்ள உரிமைகள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. 16/2017 சுற்றறிக்கையின்படி அதிபர்களின் சம்பளம் 6500 ரூபாவரை உயர்த்தப்பட்ட நிலையில் - ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைவிட - ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைகளை வழங்காமை, வருடாந்த சம்பள
ஏற்றங்களை உரிய நேரத்தில் செயற்படுத்தாமை,  ஆசிரியர்களின் சேவைக்கால செயலமர்வுகளை முறைப்படி திட்டமிடாமல் நடத்துதல்,  ஆசிரியர்களின் 10 மாத கடன்தொகையை வழங்குவதில் இழுத்தடிப்ப செய்தல் , பரீட்சைப் பெறுபேறை அதிகரித்தல் எனும் பெயரில் நடைமுறைசாத்தியமற்ற நிபந்தனைகளை திணித்தல். போன்றவற்றுடன்
 ஆசிரியர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை மதிக்காது - நசுக்கத்துடிக்கும் அதிகாரத்தரப்பு - ஆசிரியர்தினத்தை கொண்டாடுவதாக போலி முகங்களையே காட்டுகின்றன.
இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன்- ஆசிரியர்களின் உரிமைகள் கிடைக்க அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தக் கவனயீர்ப்பு  நடைபெற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Tuesday, August 22, 2017

வடமாகாண ஆளுநருடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் சந்திப்பு



வடமாகாண ஆளுநருக்கும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று 22.08.2017 மாலை 3.00 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது – வடமாகாணக் கல்விப் புலத்தில் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு - மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பான விடயங்கள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன.  
முன்னாள் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளரும், தற்போது மடுவலயத்துக்கு கல்விப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள திருமதி மாலினி வெனிற்றன் மற்றும் வவுனியா விபுலானந்தா மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி தற்போது மன்னார் பாடசாலையொன்றில் கடமையாற்றும் தனபாலசிங்கத்தினதும் முறையற்ற மீள் நியமனங்கள் தொடர்பாகவே ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. 
இந்த இருவருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் - வடமாகாண கல்வி அமைச்சில் தகவல் பெறப்பட்டன.

இதனடிப்படையில் - 
திரு.க.தனபாலசிங்கத்துக்கெதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் இவர் 55 வயதுடன் அரச சேவையிலிருந்து 04.04.2017 அன்று கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்று ஒழுக்காற்று தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. இவருக்கெதிரான 25 குற்றச்சாட்டுக்களில் 23 குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே இத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த அதிபரால் வடமாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்ருந்தது. இம்மேன்முறையீடுகள் வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் முன்னர் இரண்டு தடவைகள் நிராகரிக்கப்பட்டு இருந்தன. ஆனால் - தற்போது அவருக்கு வடமாகாணபொதுச்சேவை ஆணைக்குழு அவர் சேவையை தொடர அனுமதிவழங்கியுள்ளமையையும் - வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் சிபார்சில் - தனபாலசிங்கம் தொடர்பான நிதிக்குற்றச்சாட்டுக்கள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. ஆயினும் - அவரது ஒழுக்க்காற்று விசாரணை அறிக்கையில் - நிதிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. 
அதேவேளை –
திருமதி மாலினி வெனிற்றனுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் இவர் 396,450.00 பணத்தை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டுமென்பதுடன் 01.07.2017 அன்று அரச சேவையிலிருந்து கட்டாய ஓய்வு பெறவேண்டும் என்ற ஒழுக்காற்றுத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கௌரவ ஆளுநர் அவர்களின் அனுமதிக்கமையவே மடு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார் என வடமகாண கல்வியமைச்சால் தெரிவிக்கப்பட்ட நிலையில் - இவ்விடயம் தொடர்பாகவும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 
இவ்வாறு ஊழல் மற்றும் முறைகேடு புரிவோரை பாதுகாப்பதானது – வடமாகாண கல்விப் புலத்துக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. 
இவற்றைக் கவனத்தில் எடுப்பதாகக் கூறிய கௌரவ ஆளுநர் ஒருவார காலத்துக்குள் இவை தொடர்பாக ஆராய்ந்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.  

Saturday, August 5, 2017

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி - யாழ்.பஸ்நிலையம் முன்பாக செவ்வாயன்று கவனயீர்ப்பு!


சிறையில் கொல்லப்பட்ட அரசியல் கைதி டில்ருக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றை முன்னெடுக்க பொது அமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் - யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் - கிராமிய உழைப்பாளர் சங்கம் - சமூக விஞ்ஞான ஆய்வு மையம் - தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகியன கூட்டாக இணைந்து கவனயீர்ப்புக்கான அழைப்பினை விடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் யாழ். பேருந்து தரிப்பிடம் முன்பாக இடம்பெறவுள்ளது. இதில் அனைத்துத் தரப்பிரும் கலந்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்

இது தொடர்பில் குறித்த ஐந்து அமைப்புக்களும் இணைந்து இன்றைய தினம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் -

யுத்தம் முடிவுற்று எட்டு வருடங்கள் கழிந்தும் 130 பேர் வரையிலான அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாழ்கின்றனர். சிலருக்கு வழக்குத் தொடுக்கப்படவேயில்லை.

வழக்குத் தொடுக்கப்பட்டோரில் பலருக்கு 8-10 வருடங்கள் கழிந்தும் வழக்கு முடிவின்றி துன்புறுகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதனால் பிணை மறுக்கப்படுகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு அல்லது தொடுக்கப்பட்டிருக்கின்ற வழக்குகளைத் துரிதப்படுத்துமாறும் உண்ணாவிரதம் இருந்தனர்.

அன்றைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் அவர்கள் மீது கொடூர கொலை வெறித் தாக்குதலை மேற்கொண்டு தலை, கை, கால்களை உடைத்தனர். தாக்குண்டவர்களில் நிமலரூபன்,  டில்ருக்ஸன் இருவரும் கொல்லப்பட்டனர்.

வவுனியா சிறையில் அரசியல் கைதிகள் நடத்திய போராட்டத்தினை நிறுத்திட ஆயுதம் தரித்த இராணுவம் அனுப்பப்பட்டது.

கைவிலங்கிடப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட கைதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தோர் எனச் சந்தேகிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்தி மேற்கொண்ட பயங்கரத் தாக்குதலில் 15 பேரளவில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினார்கள்.

இதில் - நிமலரூபன் அடுத்த நாளே மரணித்தார். டில்ருக்ஸன் உடல் அசைவற்ற நிலையிலும் வைத்தியசாலையில் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் ஒரு மாதத்தின் பின்னர் மரணத்தைத் தழுவினார்.

1983 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கைதிகளில் நூறு வரையானோர் சிறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். காயங்களுக்குள்ளாகி வாழ்நாள் பாதிக்கப்பட்டோரும் உள்ளனர்.

1971 மற்றும் 1989, 1998 ஆம் ஆண்டுகளில் தெற்கின் இளைஞர்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கினர். கைது செய்யப்பட்டோரின் வழக்குகள் மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டன.

கடந்த நாட்களில் நீதியமைச்சர் 'தற்போது சிறைகளில் உள்ளோர் பயங்கரமானவர்கள். இவர்களை விடுதலை செய்ய முடியாது' என நீதிமன்றங்களில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே தமது தீர்ப்பினை வழங்கியிருப்பது நாட்டின் சட்டத்தையும் நீதிமன்றையும் அவமதிக்கும் செயலாகும்.

இவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. நல்லாட்சி அரசில் நம்பிக்கை வைத்து வாக்களித்த நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எம் அரசியல் தலைவர்களும் ஏமாற்றுகின்றார்கள் என்பது எம்மை விரக்தி நிலைக்குள் தள்ளியுள்ளது.

வடக்கின் காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை போன்றன தீர்க்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் அமர்ந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின் பெற்றோர் தம் உறவுகளின் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர், காணிகள் இழந்தோர், அரசியல் கைதிகள் போன்றோரின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆயத்தமில்லாதோர்கள் நாம் விரும்பும் அரசியல் தீர்வை முன்வைக்கப் போவதில்லை.

நல்லாட்சி முகமூடி அணிந்தோர் இனவாத அரசியலுக்குள் அடைக்கலம் புகுந்து தமது எதிர்கால அரசியலை திட்டமிடுகின்றனர் இவர்களே நல்லிணக்கம் தொடர்பாகவும் கதைக்கின்றனர். இது தமிழர்கள் விடயத்தில் இவர்களின் இரட்டை நிலைப்பாடு எனலாம்.

டில்ருக்ஸன் நினைவேந்தல் நாளில் அரசிடம் கோருவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி, இராணுவ முகாம்களை அகற்றுதல், காணிவிடுவிப்பு, அரசியல் தீர்வு என்பவற்றின் ஆரம்பகட்டமாகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் ஆட்சியாளர் அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 26, 2017

வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளரின் முறைகேடு; இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

வடமாகாண கல்வியமைச்சு சரியான நிதி மூலங்களை பாடசாலைகளுக்கு வழங்காமலும் பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் மேலதிக சேவைநேரங்களைக் கவனத்தில் எடுக்காததுமான நிலைமை - வடமாகாண கல்வியை பாதிப்பது மட்டுமன்றி -  இன்று வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் முறைகேட்டுக்கும் அதிகார துஸ்பிரயோகத்துக்கும் வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. பின்தங்கிய பாடசாலைகளிற்கு வருகை நேரக்கணிப்பு இயந்திரம் பொருத்தவில்லை என்பதற்காக வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளரால் அதிபர்களுக்கு இம்மாத சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லை.

போதிய நிதிவசதியின்றி இயக்கப்படும் பாடசாலைகளில் மாணவர்களுக்காக பயன்படுத்தப்படவேண்டிய தரஉள்ளீட்டு பணத்தில் இயந்திர கொள்வனவு செய்யவேண்டும் என வற்புறுத்துவது முறையற்ற நிதிப்பயன்பாடாகும். இத்தகைய செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அதேவேளை - குறித்த நிறுவனம் ஒன்றுடன் வலயக்கல்விப்பணிப்பாளரே ஒப்பந்தம் செய்து - இயந்திரங்களை கொள்வனவுசெய்துள்ளார் எனவும் இவற்றினை விற்றுத் தீர்க்கும் முகமாகவே அதிபர்களின் சம்பளங்களை நிறுத்தி அடாவடித்தனம் செய்வதாகவும் அறியமுடிகின்றது. இச் செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாணக்கல்வியமைச்சு விரைவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் நேசராஜா தெரிவித்துள்ளார்.

Sunday, July 16, 2017

19.07.2017 புதன்கிழமை - மடு கல்விவலய அதிபர் ஆசிரியர்களுடன் - ஜோசப் ஸ்ராலின் சந்திக்கவுள்ளார்

மடு கல்விவலய அதிபர் - ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 19.07.2017 புதன்கிழமை ஆண்டாங்குளம் றோ.க. பாடசாலைக்கு அருகிலுள்ள - ஆண்டாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் மாலை 2.00மணியளவில் நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் - வடமாகாணத்தின் இலங்கை ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ள - இக் கலந்துரையாடலில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் - புதிய சம்பள மாற்றங்கள் - இடமாற்றங்கள் - மற்றும் அதிபர் ஆசிரியர் எதிர்கொள்ளும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. மடு கல்வி வலயத்துக்குட்பட்ட ஆசிரியர்கள்-  அதிபர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய முடியுமென மடுவலய இலங்கை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Friday, July 7, 2017

போயா தினத்திலும் - தொலைபேசி அழைப்பில் வலிகாம வலயத்தில் நாளை செயலமர்வு : ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை தவிர்க்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்துள்ள போதிலும்  - அத்தகைய விடுமுறை தினங்களிலேயே ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை நடத்தி ஆசிரியர்களை அடிமைபோன்று நடத்தும் வடமாகாண கல்வி திணைக்களத்தின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாளை சனிக்கிழமை போயாவிடுமுறை தினமாகும். அத்துடன் - இந்துக்களின் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவுமாகும். இந்நிலையில் -  வலிகாமம் கல்வி வலயத்தில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை செயலமர்வுக்கு வருமாறு – திடீரென இன்று வெள்ளிக்கிழைமை தொலைபேசி வாயிலாக - அச்சுறுத்தல் தோறணையில் ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட நிதியினை செலவழிப்பதற்காகவே இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.; ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாச அழைப்பினைக்கூட விடுக்காது – தொலைபேசி அழைப்பினூடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நயினாதீவு ஆலய தேருக்கு செல்லவேண்டும் எனக் கூறிய ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு - ஆசிரியர்களை அடிமையாக நடத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக – வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்த போதிலும் - தமது செயற்பாடு தவறு என அவரால் குறிப்பிட்டிருந்த போதிலும் - அவரால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சு – ஆசிரியர்களின் நலன் சார்ந்தும் சிந்திக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.  


Thursday, June 15, 2017

இன்று (16.06.2017) பூரண ஹர்த்தால் - பாடசாலைகள் இயங்காது – வதந்திகளை நம்பவேண்டாம்


வடமாகாணசபை முதலமைச்சர்; - முறைகேடான அமைச்சர்களை பதவி நீக்க எடுத்த தீர்மானத்தை – மக்களின்  நலன் சார்ந்து சிந்திக்காமல் - கட்சி அரசியல் சார்ந்து மட்டும் சிந்தித்து – நீதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவி நீக்க முயற்சிக்கும் செயற்பாட்டை கண்டித்து  இன்று (16.06.2017) தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள – வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் - வடமாகாண புதிய அதிபர் சங்கமும் தார்மீக ஆதரவு வழங்கிவரும் நிலையில் - இதனை முறியடிக்கும் நோக்கில் - வதந்திகள் பரப்பப்படுகின்றன. எனவே திட்டமிட்டபடி இன்று – பாடசாலைகள் இயங்காது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கமும், புதிய அதிபர் சங்கமும் உறுதிப்படுத்துகின்றது.  

நாளைய (16.06.2017) ஹர்த்தாலுக்கு வடமாகாண புதிய அதிபர் சங்கமும் ஆதரவு



வடமாகாணசபை முதலமைச்சர்; - முறைகேடான அமைச்சர்களை பதவி நீக்க எடுத்த தீர்மானத்தை – மக்களின்  நலன் சார்ந்து சிந்திக்காமல் - கட்சி அரசியல் சார்ந்து மட்டும் சிந்தித்து – நீதியாக செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவி நீக்க முயற்சிக்கும் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டை கண்டித்து நாளை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள – வடமாகாணம் தழுவிய ஹர்த்தாலுக்கு வடமாகாண புதிய அதிபர் சங்கமும் தார்மீக ஆதரவு வழங்குவதாக புதிய அதிபர் சங்கத்தின் செயலாளர் நேதாஜி தெரிவித்தார்.
நாளை (16.06.2016) பாடசாலை செயற்பாடுகளை நிறுத்தி – அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையில் நிற்குமாறும். பெற்றோர்கள் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாது – வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை – நாளை காலை 10.00 மணிக்கு தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடுசெய்யப்பட்ட - முதலமைச்சருக்கு ஆதரவாக நல்லூரில் ஒன்றுகூடும் செயற்பாட்டில் பொதுமக்கள், அதிபர் ஆசிரியர்களை கலந்துகொள்ளுமாறும் வடமாகாண புதிய அதிபர் சங்கத்தின் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.  

நாளை (16.06.2017) ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு - வடமாகாண பாடசாலைகளை பகிஸ்கரிக்குமாறு கோரிக்கை


வடமாகாண சபை உறுப்பினர்களால் வடமாகாண முதலமைச்சருக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம்  வடமாகாண முதலமைச்சரை அகற்றும் தமிழரசுக் கட்சியின் முயற்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் - தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளால் முதலமைச்சராக்கப்பட்டவரை – அமைச்சர்களின் முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுத்தமைக்காக – மக்களின் அபிப்பிராயம் இன்றி தூக்கியெறிய முற்படும் ஜனநாயக விரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் - மக்கள் மயப்பட்ட போராட்டமாக -  தமிழ் மக்கள் பேரவையால் நாளை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது பூரண ஆதரவை வழங்குகின்றது. இதற்காக நாளைய தினம் வடமாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் ஸ்தம்பிக்கச்செய்து அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது. மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறும். அதிபர் ஆசிரியர்கள் சுகயீன லீவை அறிவித்து விடுமுறையில் நிற்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.

Wednesday, June 14, 2017

வடமாகாண முதலமைச்சர் தொடர்பான நிலைப்பாட்டை வாக்களித்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அரசியல்வாதிகளல்ல. இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு


வடமாகாணத்தில் அமைச்சுக்களின் முறைகேடுகளை குறிப்பிட்டு -அமைச்சரவை மாற்றத்தை கோரி முன்னர் 16 வடமாகாண ஆளும் கட்சியினர் கையெழுத்திட்டு வழங்கியிருந்ததுடன் முறைகேடுகளை விசாரிக்கக்கோரி வடமாகாண முதலமைச்சரையும் வற்புறுத்திவந்தநிலையில் - விசாரணையில் அமைச்சர்களின் முறைகேடுகள் வெளிவந்த நிலையில் - முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயன்றபோது இன்று வடமாகாண முதலமைச்சரை மாற்றுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மக்கள் ஊழலற்ற ஆட்சிகளையே எப்போதும் விரும்புவர். விசாரணை குழுவின் அறிக்கையை விட மக்களின் மனோநிலைக்கமையவே - குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்களை தமது பதவியை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே முதலமைச்சருக்கு எதிராக கொண்டுவரும் தீர்மானம் மக்களுக்கெதிரானதாகவே அமையும். பல உயிர் தியாகங்கள் நடந்தேறிய தமிழ் மண்ணில் - அமைச்சுப்பதவியை கூட தியாகம் செய்யமுடியாத நிலைக்கு சென்றுள்ளமை வேதனையான விடயமாகும்.
நல்லாட்சி என கூறி கால்பதித்த அரசாங்கமே வாக்குறுதி அளித்தும் மக்களை ஏமாற்றிவரும் வேளையில் - முன்னுதாரணமாக செயற்பட்ட வடமாகாண முதல்வரை நீக்கும் செயற்பாடு - விக்னேஸ்வரணையே முதலமைச்சராக நம்பி ஏகோபித்த வாக்களித்த மக்களுக்கு செய்யும் அநீதி என்பதை வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கின்றோம்.
13 வது திருத்தச்சட்டத்துக்கு மேலாக அதிகாரத்தைக்கோரும் வட மாகாணசபை - தனது கொள்கைகளை மீறி - மாகாணசபையின் முதலமைச்சரையே நீக்கக்கோரி ஆளுநரிடம் கேட்கின்றமை தமக்கு வாக்களித்த மக்களை மலினப்படுத்தும் செயலாகும்.
வடமாகாண முதலமைச்சர் தொடர்பான நிலைப்பாட்டை வாக்களித்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அதுவே உயர்ந்தபட்ச ஜனநாயகமும் ஆகும். எனவே - வடக்கு மக்களின் அபிப்பிராயம் இன்றி முதல்வர் விக்னேஸ்வரன் அகற்றப்படுவாரானால் - ஊழல்வாதிகளுக்கு எதிரான -முதலமைச்சருக்கு ஆதரவான வெகுஜனப்போராட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு வழங்கும் என்பதை தெரிவிக்கின்றோம்.

Thursday, June 8, 2017

வடமாகாண சபையின் நீதியான ஆட்சி தத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்.

வடமாகாண சபையின் அமைச்சுக்கள் தொடர்பாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வந்த நிலையில் - அதனை மூவரடங்கிய விசாரணைக்குழுவை நியமித்து விசாரணைக்குட்படுத்திய வடமாகாண சபையினைப் பாராட்டுகின்றோம். தமது ஆட்சியில் ஊழலை முற்றாக ஒழித்து - ஊழல் வாதிகளுக்கு தண்டனை வழங்குவதாக கூறி - நல்லாட்சி வேடம் அணிந்து ஆட்சி ஏறிய அரசாங்கமே - ஊழல்வாதிகளை காப்பாற்றும் வேளையில் - வடமாகாண அமைச்சுக்கள் தொடர்பாக - ஊழல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடு வந்தவேளை -அதனை விசாரணைக்குட்படுத்தி குற்றங்களை கண்டறிந்த வடமாகாணசபையின் முன்னுதாரணமான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர்சங்கம் வரவேற்கின்றது. 
இவ்விடயம் சார்பாக - வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டமல்லாமல் - வடமாகாண கல்வியமைச்சின் பல முறைகேடுகள் எமது சங்கத்தாலும் பலதடவைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தபட்டு வந்துள்ளன.
அன்றும் இன்றும் வடமாகாண மக்கள் கல்விமேல் அக்கறை கொண்டவர்கள். கொடூரமான யுத்த சூழ்நிலைகளில் கூட வடக்கு மக்கள் கல்வியின் முக்கியத்தும் பேணிவந்துள்ளனர். வடக்கில் கல்வியின் பின்தங்கிய நிலைக்கு வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளே காரணம் என நாம் கூறிவந்த நிலையிலும் - தற்போது விசாரணையில் ஆதாரபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே - வடமாகாண கல்வியினை பாதுகாக்கும் நோக்கில் - வடமாகாண அமைச்சுக்கள் தொடர்பான விசாரணை குழுவின் பரிந்துரையை வடமாகாணசபை உடனடியாக அமுல்படுத்தவேண்டும். இதுவே வடமாகாணசபையின் நீதியான ஆட்சித்தத்துவத்தை நிலைநாட்டும் செயற்பாடாக அமையும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.


Thursday, June 1, 2017

நியமனம் வழங்கப்படுவதற்கு முன்னர் நான்கு லட்சம் கட்டிய பணிப்பாளர் மாலினி வெனிற்றன்: விசாரணை பற்றி கல்வியமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்.


தற்போது மடு கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி மாலினி வெளிற்றன் - முன்னர் துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளராகவிருந்து – அவருக்கெதிரான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் - விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவராவார்.
இவ்விசாரணை இலங்கை கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் நடைபெற்றது.   குறித்த நிதி மோசடி தொடர்பாக – விசாரணைக் குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் என்ன?, விசாரணைக் குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் என்ன? என்பது தொடர்பாக - இதுவரை வடமாகாண கல்வியமைச்சால் வெளியிடப்படாத நிலையில் - அவர் மடு வலயத்துக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் – ஏறத்தாள நான்கு இலட்சங்கள் பணமாக செலுத்தி பற்றுச்சீட்டு வழங்கிய பின்னரே நியமனம் வழங்கப்பட்டதாக அறிகின்றோம்.
எனவே – திருமதி மாலினி வெனிற்றனுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் - விசாரணைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கு  - எடுத்த நடவடிக்கை தொடர்பாக வடமாகாண கல்விச் சமூகத்துக்கு வடமாகாண கல்வியமைச்சு தெளிவுபடுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Monday, May 29, 2017

மூதூர் தெருவெளி அ.த.க பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்


மூதூர் கல்வி வலயத்துக்கு உட்பட்ட - தெருவெளி அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஸ்பிரயோக செயற்பாட்டுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையான கண்டனத்தைத் தெரிப்பதோடு – குற்றவாளிகள் சட்டத்தின் முன் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பாடசாலைகளில் நிகழ்வது – பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கைத் தன்மையைச் சிதைவடையச் செய்கின்றன.  எனவே – பாடசாலைகளின் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்  இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு  எவ்வித பாரபட்சமுமின்றி – அதி உச்சத் தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

Wednesday, May 24, 2017

அதிபர் பிரச்சினைக்கு தீர்வுவேண்டி கொழும்பில் நடைபெற்றது ஆர்ப்பாட்டம்: நாளை 8.00 மணிக்கு கல்வியமைச்சில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு!


2009.11.13 ஆந் திகதி அதிபர்சேவை 2-1இ 3 தரத்திற்கான நியமனம் பெற்ற அதிபர்கள் புதிய பிரமாணக் குறிப்பின்படி அதிபர் வகுப்பு 2, 3 ஆகியவற்றுக்கு உள்வாங்கப்பட வேண்டியதுடன் 2015.11.13ஆந் திகதிமுதல் முதலாம் - இரண்டாம் தரங்களுக்கு தரமுயர்வைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். பதவியேற்று 6 வருடங்கள் ஆனபோதும் அவர்களுக்கு இரண்டுவருடங்களுக்கு மேலாக அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தபோதும் கல்வியமைச்சு இதுவரையும் பதவியுயர்வைபெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான எவ்விதமுயற்சியையும் மேற்கொள்ளாததினைக் கண்டித்தும் - செயற்படுத்துவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்குமாக இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (24.05.2017) ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்காக விகாரமாதேவி மைதான திறந்தவெளி அரங்கில்  - இலங்கையின் பலபாகங்களிலும் இருந்தும் பல நூற்றுக் கணக்கான அதிபர்கள் கூடி கலந்துரையாடினர். பின்னர் - அலரி மாளிகைக்கு ஊர்வலமாக தமது கோரிக்கைக் கோசங்களுடன் சென்று – தமது மனுவை பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்கவிடம் கையளித்தனர். இதன்போது – பிரதமரின் தற்போதைய ஆலோசகரும் முன்னாள் அரச நிர்வாக அமைச்சின் செயலாளருமான ததல்லகேயும் உடனிருந்தார். பிரதமரின் செயலாளர் உடனடியாக கல்வியமைச்சின் செயலாளரைத் தொடர்புகொண்டு கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாளை (25.05.2017) காலை 8.00 மணிக்கு கல்வியமைச்சில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் - இச்சந்திப்பில் பிரதமரின் ஆலோசகரான ததல்லேயும் கலந்துகொண்டு பிரச்சினைதொடர்பாக ஆராயவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Wednesday, May 17, 2017

மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் இன்று சுகயீனலீவுப் போராட்டம் - மூதூர் கல்விப் பணிப்பாளருக்கு உடனடி இடமாற்றம்


மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு எதிராகவும் - அவரை இடமாற்றவும் கோரி - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வழிநடத்தலில் மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் ஒன்றிணைந்து  - இன்று சுகயீன லீவுப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் -  இன்று மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அக்கரைப்பற்றுக்கு இடமாற்றக் கடிதம் கிழக்குமாகாண கல்வியமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளரின் பல முறைகேடுகளுக்கெதிராக - இலங்கை ஆசிரியர் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்த போதும் - எவ்விதமான நடவடிக்கைகளையும் கிழக்குமாகாண கல்வியமைச்சு மேற்கொண்டிராத நிலையில் - இன்றும், நாளையும் சுகயீன லீவுப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. (17,18.05.2017). இந்த நிலையில் - நேற்று (16.05.2017) மாலை ஆளுநருக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன்போது - மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஆயினும் - வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றக் கடிதம் வழங்கப்படாத நிலையில் - திட்டமிட்டபடி இன்று (17.05.2017) மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் சுகயீனலீவை அறிவித்து - சுகயீனலீவுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் இன்று (17.05.2017) வலயக்கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றம் கடிதம் வழங்கப்பட்ட நிலையில் - நாளை நடைபெறவிருந்த சுகயீன லீவு போராட்டத்தை நிறுத்தி ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவுள்ளதாகவும் - ஆசிரியர்களின் இதுபோன்ற ஒன்றுபட்ட உரிமைச் செயற்பாடுகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Wednesday, May 10, 2017

வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட முறையற்ற அதிபர் நியமனம் : 1998/23 சுற்றறிக்கையை அமுல்படுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற விதமாக வழங்கப்பட்ட அதிபர் நியமனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு – அந்தப்பாடசாலைகளுக்கு 1998/23 அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைவாக – ஊடகங்கள் வாயிலாக அதிபர் வெற்றிடம் கோரப்பட்டு – விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் - வடமாகாண முதலமைச்சருக்கும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட -  யா/காசிப்பிள்ளை வித்தியாலயம், யா/நீர்வேலி அ.த.க.பாடசாலை, யா/கலட்டி அ.மி.த.க. பாடசாலை, யா/பத்தைமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்,

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட - யா/உடுவில் அ.மி.த.க.பாடசாலை, யா/பொன்னாலை வரராஜப்பெருமாள் வித்தியாலயம்

தீவகம் கல்விவலயத்துக்குட்பட்ட - யா/அல்லைப்பிட்டி றோ.க.த.க.பாடசாலை

தென்மராட்சி கல்விவலயத்துக்குட்பட்ட – யா/வரணி வடக்கு சைவப்பிரகாச பாடசாலை, யா/போக்கட்டி றோ.க.த.க.பாடசாலை

வடமராட்சி கல்விவலயத்துக்குட்பட்ட யா/வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், யா/வெற்றிலைக்கேணி றோ.க.த.க. பாடசாலை

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட கிளி/தர்மகேணி அ.த.க.பாடசாலை, கிளி/முகாவில் அ.த.க.பாடசாலை

போன்ற பாடசாலைகளுக்கு எவ்விதமான அதிபர் வெற்றிடமும் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டிருக்கவில்லை. பல புதிய தகுதியான அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படாமல் - பல பாடசாலைகளில் அதிபர் தரத்தில் உள்ளவர்கள் - ஒரே பாடசாலையில் மூன்றுக்கும் அதிகமான பதில் அதிபர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். - கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளை மீறி - ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை எமது சங்கத்தின் கவனத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.  இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தரம் - 3 போட்டிப்பரீட்சையில் - வடமாகாணத்தில் 389 பேர் அதிபர்களாக நியமனம் பெற்று – தகுதியான பயிற்சிகளை மேற்கொண்டு வெளியேறியுள்ள நிலையில் - அவர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகளை வழங்காமல் - புதிய அதிபர் நியமனம் தொடர்பான 05.09.2016 திகதிய  2016/ED/E/24 இலக்க அமைச்சரவைப் பத்திரத்தையும் மீறி - ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு அதிபர் பதிவி வழங்கப்பட்டுள்ளமை மிகப் பாரிய முறைகேடாகும்.

அத்துடன் - ஒரு பாடசாலையில் - அதிபர் வெற்றிடம் உருவாகுமானால் - 1998/23 சுற்றறிக்கைக்கமைய  அப்பாடசாலைக்கு அதிபர் வெற்றிடம் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகக் கோரப்பட்டு – விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்குவதே சட்ட வரையறைக்குட்பட்டதும் நீதியானதுமான செயற்பாடாகும்.

மேற்கூறிய பாடசாலைகளுக்கு – 1998/23 சுற்றறிக்கைக்கமைய உடனடியாக அதிபர் வெற்றிடம் ஊடகங்கள் வாயிலாகக் கோரப்பட்டு – தகுதியான அதிபர் தரத்தினையுடைய அதிபர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Monday, May 1, 2017

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினச் செய்தி – 2017


இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அரங்க செயற்பாட்டுக் குழு, கிராமிய உழைப்பாளர் சங்கம், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், சமூக விஞ்ஞான ஆய்வு மன்றம் ஆகியவை இணைந்து யாழ்.பல்கலைக்கழக முன்றலிலிருந்து பேரணியொன்றையும் மேற்கொண்டிருந்தனர். அதன்பின்னர் – நிகழ்வுக்காக பல்கலைக்கழக முன்றலில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றிருந்தன. இதன்போது – அனைத்து அமைப்புக்களாலும் பொது மேதினப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தாலும் 2017 க்கான மேதினச் செய்தி வெளியிடப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது -  



இன்று மிக விரைவாக சரிந்து செல்கின்ற வடமாகாணத்தின் கல்வியை மீண்டும் மேல்நோக்கி உயர்த்த வேண்டிய ஆசிரியர் சமூகத்தினது கடப்பாடுகள் பற்றி - நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். ஆனால் - ஆசிரியர்களாகிய எம்மேல் - சுதந்திரமாக கடமையை மேற்கொள்ள முடியாததாக ஆக்கிவிட்டிருக்கும் தேவையற்ற பதிவுமுறைகள் - எமது கடமைநேரத்தை வீணடிப்பதோடு, மாணவர்களின் கற்றல் நிலைமையோடு நோக்காது, பதிவுமுறைகளூடாகவே பார்க்கின்றது. அதிகாரிகளால் திணிக்கப்படும் தேவையற்ற பதிவுமுறைகள் மனஉழைச்சலை தூண்டுகின்றன. பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு பெறப்படும் தரவுகள் போலியானதாகவே அமையும்.  சுதந்திரமற்ற கற்பித்தலை திணித்ததன் மூலம் - கல்வியை மட்டுமல்ல – மாணவர்கள் மட்டில் போதிக்கப்படவேண்டிய கலாசாரப் பாரம்பரியங்களுக்கும், அழகியல் உணர்வுகளுக்கும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது. வெறும் ஆவணப்படுத்தல்களோடும், பாடத்திட்டங்களின் வரையறைகளோடும் நின்றுவிடத் திணிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் - கல்வியில் மட்டுமல்ல, கலாசார விழுமியங்களின் வெளிப்பாடுகளிலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மாணவர்களின,; உளவியலுக்காகவும்,  அழகியல் உணர்வுகளுக்காகவும் இலங்கைக் கலைத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமல் - பெறுபேற்றினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படும் முறை வடமாகாணக் கல்வியில் தலைதூக்கியுள்ளது. இதன் விளைவு - இன்று அநேகமான மாணவர்களை பாடங்களில் விருப்பமற்ற - வன்முறையாளர்களாக மாற்றியுள்ளது. அத்துடன் - அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய பதிவுகள் போதாதென்று - வடமாகாண கல்வி அமைச்சால் தற்போது வழங்கப்பட்டிருக்கும் - பாடப்பதிவுப் புத்தகத்துக்கு மேலதிகமாக பதியப்படும் நீல நிற அட்டையைக் கொண்ட பதிவுப்புத்தகமானது –  இரட்டைப்பதிவுகளை மேற்கொள்ளும் அவசியமற்ற செயற்பாடாகும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். கல்வியை சரியான விதத்தில் போதிப்பதில் - புதுமைகளை கண்டறிய வேண்டிய எமது வடமாகாணக் கல்வியமைச்சு – பாடசாலைகளில் கைரேகை அடையாளமிடும் நேர இயந்திரப் பதிவுமுறையை அமுல்படுத்தி – சேவையாக மேற்கொள்ளவேண்டிய ஆசிரியத்தை - வேலையாகக் கருதி - கடமைக்காக மட்டும் பணியாற்றவும், ஆசிரியர் தமது பாதுகாப்புக்காக பதிவுகளை மேற்கொள்ளவும் தூண்டுவதான செயற்பாடுகள் - கல்வி நிலையில் உண்மை மாற்றத்தை ஒருபோதும் உண்டுபண்ணப்போவதில்லை.

கல்வியில் நிகழ்ந்து வரும் தொடர் ஊழல்கள் - நியமனங்களில் நடந்துவரும் அரசியல் தலையீடுகள் என்பன முற்றாக நிறுத்தப்படவேண்டும். பல அதிகாரிகளினால் - முறைகேடாக மேற்கொள்ளப்படும் நிதிநடவடிக்கைகள் மற்றும் முறையற்ற ஒப்பந்தங்கள் மூலம் சரியாக வேலைகள் முடிக்கப்படாமலே பெறப்படும் பணம் - அதற்குத் துணைபோகும் அதிகாரிகளை தண்டிக்காத தன்மை என்பன வன்மையான கண்டனத்துக்குரிய விடயமாகும்.  இவ்வாறு முறையற்று வீணடிக்கப்படும் முறையற்ற செயற்பாடுகளை எதிர்த்து பல குற்றச்சாட்டுக்களை வடமாகாண கல்வி அமைச்சிடம் தெரிவித்திருந்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படாதமையும், மாறாக – குற்றங்கள் இனங்காணப்பட்டவர்களாயிருந்தும், அவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதும் கண்டனத்துக்குரிய விடயங்களாகும்.

வடமாகாணத்தில் - அதிபர் இடமாற்றங்கள், ஆசிரியர் இடமாற்றங்கள், புதிய அதிபர் நியமனங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டும் எவ்வித பரிகாரமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. தகுதியானவர்கள் இருந்தும் நியமனங்களில் தேவையற்ற தலையீடுகள் தலைதூக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதையும் - நீதிமன்றங்களில் வழங்குத் தொடுக்கப்பட்டுள்ளமையையும் - எமது சங்கம் அவர்களுக்காக குரல்கொடுத்து வருவதையும் குறிப்பிடுகின்றோம்.

ஆசிரியர்களின் கடமைகளில் - பிழைகாண முற்படும் அதிகாரிகள் - ஆசிரியர்களின் பதவியுயர்வுகள், அவர்களுக்குரிய உரிமைகள் தொடர்பாக – அக்கறையற்றுச் செயற்படுகின்றனர். ஆசிரியர்களுக்கென  புதிய பிரமாணக் குறிப்பு வெளியாகி – இருவருடங்கள் கடந்த நிலையிலும் - ஆசிரியர்களுக்குரிய பதவியுயர்வுகள், சம்பள நிலுவைகள் முழுமையாக பூர்;த்தியாக்கப்படவில்லை. இத்தகைய ஆசிரியர்களின் மீது கொண்டுள்ள அதிகாரிகளின் அசமந்தப்போக்குகளை அதிகாரிகள் மாற்றியமைக்க வேண்டும்.

2005ஆம் ஆண்டு அதிபர் சேவை ஆட்சேர்ப்புக்கு வர்த்தமாணி அறிவித்தல் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டு 2006 ஆம் ஆண்டு போட்டிப்பரீட்சையின் மூலம் - 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்சேவை 2-II, 3ஆகிய தரங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் இப்பதவிகள் வழங்குதலின் போது - மேற்கொள்ளப்பட்ட முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவ்வாறே இச்செயற்பாட்டிற்கு எதிராக SC/FR/2012/2010  வழக்கின் தீர்ப்பிற்கமைய 2012ஆம் ஆண்டு அதிபர் சேவைக்காக 3000 ற்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்பட்டன. ஒரே போட்டிப் பரீட்சையில் தோந்;தெடுக்கப்பட்டு  2009ஆம் ஆண்டு நியமனம் பெற்றவர்களுக்கு - நிபந்தனைகளுக்கு உட்படுத்தாமல் தரமுயர்வுபெற்றுக் கொடுப்பதும் - தங்களுக்கு ஏற்பட்ட அநீக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நியமனம் பெற்றுக் கொண்டவர்களுக்கு நிபந்தனைக்குட்படுத்துவதையும் அரசாங்கம் உடனடிய நிறுத்தி அதிபர்களுக்குரிய தரமுயர்வுகளை வழங்கவேண்டும்.
கல்விக்கு நூற்றுக்கு ஆறு (100:6) வீதம் எனக் கூறி 2016 இல் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் - 2015.01.27 முற்திகதியிடப்பட்ட தனது 2015/5 சுற்றிக்கையின்மூலம் பாடசாலைகளில் பணம் அறவிடுவதனை ஊக்குவிக்கும் செயற்பாடு உடன் நிறுத்தப்படவேண்டும். இலவசக் கல்வி நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் - மற்றும் கல்வியைத் தனியார் மயப்படுத்த எத்தனிக்கும் செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தனது வரவு செலவு திட்டத்தில் போலியான நடைமுறைகளை வழங்கி ஏமாற்றிவருகின்றது.  அத்துடன் - அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியத்தினை நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. எனவே – கல்விக்குரிய ஒதுக்கீடுகளை வாக்குறுதியளித்தவாறு அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதோடு, ஓய்வூதியத்திட்டம் இல்லாமல் ஆக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கான நியமனம் என்ற போர்வையில் அரசாங்க பிரமாணக்குறிப்புக்களை மீறி – தகுதியற்றவர்களுக்கு– கல்விநிர்வாகசேவை, கல்வியலாளர்சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் சேவை போன்ற நியமனங்களை வழங்குவதை நிறுத்தி - கல்விப் பிராமணக் குறிப்புகளுக்கு அமையவே நியமனங்கள் வழங்கப்படவேண்டும்.

கடந்த ஆட்சிக் காலங்களில் - ஏற்பட்டிருந்த ஆபத்தான சூழ்நிலைகளிலும் - எமது சங்கம் போதியளவு குரல் கொடுத்து வந்துள்ளது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் - தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வின் மூலம் - இலங்கைத் தீவில் நிகழும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றும் - ஆழமாக வலியுறுத்தி குரல்கொடுத்திருந்தோம். இன்று – நல்லாட்சி அரசென்று கூறிக்கொண்டிருக்கும் இன்றைய அரசும் - தாம் மக்களுக்கு வழங்கிய ஆணைக்கிணங்க – தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை உடனடியாக வழங்க முன்வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் - பல்வேறு சந்தர்ப்பங்களிலும் - பல போராட்டக்குழுக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியதுபோல் - தற்போதைய தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி அரசாங்கம் விடுவிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

யுத்தத்தை சாட்டாகக் கொண்டு – உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் - அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் குடியிருப்பு நிலங்களும், வளம் கொளிக்கும் விவசாய பூமிகளும், உரியவர்களுக்கு வழங்கப்பட்டு - பலாலி கலாசாலை உட்பட பாடசாலைகளும் உடனடியாக திறக்கப்படவேண்டும். இதற்காக – எமது சங்கம் பல தடவைகள் குரல்கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றோம். அதுமட்டுமல்லாமல் - அத்துமீறிய புதிய குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கடத்தல், காணாமற்போதல் தொடர்பாக விரிவான விசாரணையை வலியுறுத்துவதோடு - இது தொடர்பான நியாயமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் - கடந்த 2013 வடமாகாண சபைத் தேர்தலின்போது காணாமல் ஆக்கப்பட்டு – கொலை செய்யப்பட்ட ஆசிரியர் நிரூபனின் மரணம் தொடர்பாகவும், இதேபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் தொடர்பாகவும் உண்மையைக் கண்டறிய வேண்டும்.

விவசாயிகள், மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும். அவர்களுக்குரித்தான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு செயற்படக் கூடிய அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். கடற்தொழிலாளர்கள்; தமது கடற்தொழிலை தத்தமக்குரிய கடற்பரப்பில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும். குறிப்பாக - அத்துமீறிய மீன்பிடித்தொழிலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு - போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கை அரசானது உலக வங்கி, ஐஆகு போன்றவற்றிடமிருந்து நிபந்தனை அடிப்படையில் பெற்ற கடனுக்காக – தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் எனவும்  எமது 2017 மேதினச் செய்தியில் அறைகூவல் விடுக்கின்றோம்.


ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.


Saturday, April 29, 2017

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் - ஆசிரியர்கள், அதிபர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள், உழைக்கும்மக்களின் ஒன்றிணைந்த மேதினம்


இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரங்க செயற்பாட்டுக்குழு, தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டுமையம், சமூக விஞ்ஞான ஆய்வுமன்றம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்தும் மே தின நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இம்மேதின ஊர்வலம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி ஆத்திசூடி வீதி, பலாலிவீதி, பரமேஸ்வரா வீதி ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை வந்தடையும். இறுதியில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் தலைவர்களின் உரையும் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இடம்பெறவுள்ளது. இம்மேதின நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள், உழைக்கும்  மக்கள், தமிழ்தேசிய சக்திகள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரையும் கலந்துகொண்டு தொழிலாளர் உரிமைக்கு பலம்சேர்க்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


Monday, April 24, 2017

27 ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் இணைந்து எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது தார்மீக ஆதரவினைத் தெரிவிக்கின்றது.

வடமாகாணத்தில் - பல நாட்களாக மக்கள் தமக்கு சொந்தமான நில மீட்புக்காகவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.; இத்தகைய பாதிக்கப்பட்டுள்ள மக்களினால் மேற்கொள்ளப்படவுள்ள - மக்கள் மயப்படுத்தப்பட்ட நீதிவேண்டிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது அனைத்து சமூக அமைப்புக்களினதும் தொழிற்சங்கங்களினதும் தார்மீகக் கடமையாகும்.

அத்துடன் – மக்களின் நீதிவேண்டிய நியாயமான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக – அனைத்து சக்திகளும் தமது சமூகப்பொறுப்பை உணர்ந்து ஆதரவு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, April 19, 2017

கைரேகை இயந்திர நடைமுறையூடாக - வடமாகாண கல்வியில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு வடமாகாண கல்வியமைச்சே முழுமையான பொறுப்பையும் ஏற்கவேண்டும்


வடமாகாணத்தில் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பத்திலிருந்து ஆசிரியர்களின் வரவைப் பதிவிடுவதற்கு – கை ரேகை பதிவு செய்யும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவேண்டும் எனவும் - அதனை பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நிதியைக் கொண்டு அல்லது மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் தரஉள்ளீட்டு நிதியைக் கொண்டு கொள்வனவு செய்யுமாறும் வடமாகாணக் கல்வியமைச்சு அதிபர்களைப் பணித்துள்ளது. பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய பணத்தினைக் கொண்டு அல்லது மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் தரஉள்ளீட்டு நிதியைக் கொண்டு கைரேகை இயந்திரம் கொள்வனவு செய்வது தவறான நடைமுறையாகும். இதனை நாம் மத்திய கல்வியமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.

இத்திட்டம் ஆசிரியத்தொழிலுக்கு அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சு மீள்பரிசீலனை செய்யவேண்டும். ஆசிரியத்தொழில் என்பது – மாணவர்களின் கல்விநடவடிக்கைகளுடன் தொடர்புபட்டது. மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திக்காது – ஆசிரியர்களை நிர்வாக நடமுறைகளுக்குள் முடக்குவதற்கு மட்டுமே இத்திட்டம் பயன்படக்கூடியதாக அமையவுள்ளது.

தற்போதைய விடுமுறைக் காலங்களிலும் கூட – பாடசாலைகளுக்குச்சென்று பல ஆசிரியர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் மேலதிக வகுப்புக்களையும், எதிர்வரும் தவணைகளில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழா போட்டிகளுக்கும் மாணவர்களைத் தயார்ப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் - தாம் வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாரநாட்களிலும் மேலதிக வகுப்புக்களை தமது விருப்பின் அடிப்படையில் எடுத்துவந்தனர். அத்துடன் - க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கும், உயர்தர மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் மேலதிக வகுப்புக்களும் - பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் பாடசாலை தவிர்ந்த நேரங்களிலேயே நடைபெறுகின்றன.

ஆசிரியர்களின் சேவையின் தன்மையை கருத்திலெடுக்காது – வெறுமனே நிர்வாக இயந்திரத்தைத் திணிப்பதன் மூலம் - ஆசிரியர்கள்  வெறுமனே ஆறு மணி நேரத்துக்;கு மட்டும் பணியாற்றினால் போதும் என்று வடமாகாண கல்வியமைச்சு கருதுகின்றதா?

வடமாகாண கல்வியமைச்சு அறிமுகப்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் - பாடசாலை ஆசிரியர்களின் மட்டில் பாரிய அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் - வடமாகாணக் கல்வியமைச்சு  நிர்வாக விடயத்தில் தேவையற்ற இறுக்கங்களை திணிக்குமாயின் – ஆசிரியர்களை மேலதிகமாக பணியாற்றுமாறு வற்புறுத்த முடியாது. அவ்வாறு செயற்படும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும். இல்லையேல் ஆசிரியர்கள் மாற்றுமுடிவொன்றை எடுக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர்.

இதனால் - வடமாகாண கல்வியில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு – வடமாகாண கல்வியமைச்சே முழுமையான பொறுப்பையும் ஏற்கவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.


Sunday, April 9, 2017

யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி விவகாரம் - மனித உரிமை ஆணைக்குழு தலைமைச் செயலகத்தில் விசாரணை



கடந்த வருடமளவில் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையாகிய யா-சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையை அடுத்து – வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையினால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் பரஸ்பரம் இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிய நிலையில் - குறித்த பாடசாலையின் அதிபர் பெற்றுக்கொண்ட பணத்துக்கு எவ்வித பற்றுச்சீட்டுக்களும் வழங்கப்படாமை விசாரணைக்குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் - மூன்று ஆசிரியர்களுக்கு மட்டும் இடமாற்றம் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து – அப்பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏறத்தாள இருபது பேர் இணைந்து – விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் - இல்லையேல் தம் அனைவருக்கும் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குமாறும் கோரியிருந்தனர். இதன் பின்னர் – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் - அப்போதைய உதவிச் செயலாளராக இருந்த திருமதி சுகந்தி தலைமையில் மீண்டும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழு குறித்த அதிபர் தொடர்பாக பரிந்துரைத்த விடயங்களையும் வடமாகாண கலவியமைச்சின் செயலாளர் நடைமுறைத்தாதமையினால் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் - தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக முறைப்பாட்டினை செய்திருந்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னரும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சார்பாக சமூகமளித்த பிரதிநிதிகள் - மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கூறிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தாது கல்வியமைச்சின் செயலாளர் இழுத்தடித்து வந்தார். 
இந்த நிலையில் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் - ஆறு மாதங்களுக்கு முன்னர் – தற்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் முறையிட்டிருந்தனர். இந்த முறைப்பாட்டை வடமாகாண கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக அழைத்து விசாரித்து – அதிபர் மேற்கொண்டிருந்த பண முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் - அதற்கு முன்னர் குறித்த பாடசாலை அதிபரை இடமாற்றுமாறும் உத்தரவிட்டிருந்தார். 
ஆனால் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அதனையும் நடைமுறைப்படுத்தாதிருந்த நிலையில் - இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் இருந்த – ஆசிரியர்களின் முறைப்பாடு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமையகமான கொழும்புக்கு மாற்றப்பட்டது. இதற்கமைய - இம்மாதம் 18 ஆம் திகதி (18.04.2017) காலை 10.00 மணிக்கு - இல 165 கின்ஸி வீதி கொழும்பு -8 இல் அமைந்துள்ள தலைமைச் செயலகத்து விசாரணைக்கு வருமாறு – வடமாகாண கல்விச் செயலாளர் , வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்,  வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்), சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஒருவருட காலத்தின் பின்னர் - தற்போது பத்திரிகையூடாக சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அதிபர் வெற்றிடம் வடமாகாணக் கல்வியமைச்சால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Saturday, April 8, 2017

வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு எதிரான மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய கொரிபாலனுக்கு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் - தனக்கு மீண்டும் மன்னார் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் அநீதியானது என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு விண்ணப்பம் விசாரணைக்கு நீதியரசர்களான மடவெல மற்றும் தெகிதெனிய ஆகியோர் முன்னிலையில் 06.04.2017 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மீளாய்வு விண்ணப்ப விசாரணையின்போது – மனுதாரர் சார்பில் உரிமை மீறல் நிகழ்ந்திருப்பது தொடர்பான விசாரணைக்கு எதிர்மனுதாரர்களான – வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோருக்கு மே மாதம் 18 ஆம் திகதிக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு மீளாய்வு மனு மேன்முறையீட்டு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய கொரிபாலன்-  ஏற்கனவே மன்னார் வலயத்தில் வெளிமாவட்ட சேவையினை பூர்த்திசெய்திருந்தார் - இதுவரை இடமாற்றச் சபையினுூடாக முறையாக இடமாற்றம் வழங்கப்பட்ட எவரும் திருப்பி அனுப்பப்படவில்லை . மன்னார் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் மேலதிகமாகவும், யாழ்மாவட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையாகவும் இருந்ததனால்; மூன்று வருடங்கள் வெளிமாவட்டத்தில் பூர்த்தி செய்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாற்றச்சபையின் தீர்மானத்திற்கமையவே முறைப்படி நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததாகவும். ஆயினும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் – குறிப்பிட்ட ஒருவரின் பழிவாங்கல் நோக்கத்துக்காக தன்னை மீண்டும் மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கியிருந்தார் எனவும் - இவ்விடமாற்றம் தவறானது எனவும் - இடமாற்றச்சபையினால் யாழ்மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் - இடமாற்றச்சபையின் அங்கீகாரம் இன்றி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் மீண்டும் இடமாற்றம் வழங்கியுள்ளமை தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் தெரிவித்து – யாழ்.மேல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி கடந்த மாதமளவில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது – நீதிபதி இளஞ்செழியனால் இம்மனு விசாரணையின் பின்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது.

யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட முடிவு தவறானது எனக் குறிப்பிட்டே – மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்ப மனு தாக்கல் செய்யப்பட்;டிருந்தமையும் - இந்த மீளாய்வு விண்ணப்பத்தின் மீதான மேன்முறையீடு இதற்கு முன்னரே மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Sunday, April 2, 2017

ஆசிரியர் பயிற்சி கலாசாலை அனுமதிக்கான நேர்முகத் தேர்வு திகதியை பிற்போடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிடம் கோரிக்கை


மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவா மாகாணம் போன்றவற்றில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் - ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்காத நிலைகாணப்படுகின்றது. அங்குள்ள வலயக் கல்விப் பணிமனையால் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு விடுவிக்கப்பட்ட நிலையிலும், மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதற்கு ஆசிரியர் பற்றாக்குறை எனக் காரணம் காட்டப்படுகின்றது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கு செல்ல வேண்டியவர்களுள்  அநேகமாக – 6000 ரூபா சம்பளத்துடன் பணியாற்றும் ஆசிரிய உதவியாளர்களாகக் காணப்படுகின்றார்கள். இப்பயிற்சியை முடிப்பதன் மூலமே அவர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள். இவர்களை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அனுமதிக்காது போகுமிடத்து – அவர்களினை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது தாமதமாகும். இதனால் - ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும். இது அநீதியான செயற்பாடாகும். இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஆசிரியர் பயிற்சிக் காலாசாலையில் பெறும் பயிற்சியின் மூலம் - எதிர்காலத்தில் மாணவர்களே நன்மையடைவர்.

இந்த நிலையில் - கடந்த 31.03.2017 வெள்ளிக்கிழமை மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் - ஆசிரியர் கலாசாலைக்கு விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாணத்தின் செயலாளர் செந்தில் சிவஞானம் கருத்து தெரிவிக்கையில் -  எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்றுக்கு அதிகாரிகளால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில் - இன்று ஞாயிற்றுக்கிழமை 02.04.2017 மத்திய மாகாணம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு ஆசிரியர்களை விடுவித்து கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதே நடைமுறையை ஏனைய மாகாணங்களும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இவ்வாறு - மூன்று மாகாணங்களும் ஆசிரியர்களை பயிற்சிக்கு விடுவிக்காத நிலையினை கருத்தில்கொண்டு  - இவர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கான திகதியைப் பிற்போடுமாறு மத்திய கல்வியமைச்சின் செயலாளரை இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

Thursday, March 30, 2017

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2015/05 சுற்று நிருபத்தை மீறி மாணவர்களிடம் பணம் சேகரிப்பு


வவுனியா தெற்கு கல்விவலயத்துக்குட்பட்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 6,7,8 ஆகிய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து – தளபாடங்கள் திருத்துவது மற்றும் வர்ணம்பூசுதல் என்னும் காரணத்தைக் கூறி - ருபா 2000 வீதம் பாடசாலை அதிபரால் நிதி சேகரிக்கப்படுவதும் - அப்பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்கப்படாமையும் முற்றிலும் சட்டவிரோதமானதாகும். கல்வியமைச்சின் 2015/05 ஆம் இலக்க சுற்றுநிருபத்துக்கு முற்றிலும் முரணானதாகும். இச்சுற்றுநிருபம் - பாடசாலையின் பௌதீக தேவைகளுக்காக - இவ்வாறு பணம் சேகரிக்க முடியாது எனக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு நிதிதிரட்டப்படுமானால் - குறித்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இச்செயற்திட்டத்துக்கு கல்வியமைச்சில் அனுமதிபெறப்பட்டதா? அவ்வாறு அனுமதிபெறப்பட்டிருக்குமானால் - அனுமதிவழங்கிய  அதிகாரியும் சுற்றுநிருபத்தை மீறிசெயற்பட்டுள்ளார். இது இலவசக் கல்வி முறையை தடைசெய்யும் செயற்பாடாகும். அரசாங்கத்தினால் - இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கொள்கைகளுள் சகல மாணவருக்கும் தளபாடம் வழங்கும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் - பற்றுச்சீட்டுக்கள் வழங்காது – முறைகேடாகப் பணம் சேகரிப்பது மோசடிக்கு வழிவகுக்கும் செயற்பாடாக அமையும்.  
இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இச்செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தொடருமானால் தொழிற்சங்க ரீதியான செயற்பாட்டை முன்னெடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவர் தெரிவித்தார்.

Monday, March 27, 2017

முறைகேடான அதிபர் நியமனம் - முறைப்பாட்டு செலவினமாக 5000 ரூபாவுடன் நியமனமும் வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

வடமாகாணக் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல நியமனங்களில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுவருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் - 20.03.2017 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 2012 இல் வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட வ/செட்டிக்குளம் மகாவித்தியாலயத்திற்கான அதிபர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் - இதனால் பாதிக்கப்பட்ட முறைப்பாட்டாளருக்கு பொருத்தமான தீர்வு வழங்குமாறும் தெரிவித்துள்ளதுடன் - வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் – பாதிக்கப்பட்டவருக்கு முறைப்பாட்டுச் செலவினமாக - ரூபா 5000.00 ஐ வழங்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நெறிப்படுத்தலில் - வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடான நியமனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருந்த இந்த அடிப்படை மனித உரிமை மீறல் முறைப்பாடு தொடர்பாக வெளியிடப்பட்ட பரிந்துரை மிகமுக்கியமானதாகும்.

வடமாகாண கல்வியமைச்சினால் - முறையற்ற விதமாக பல அதிபர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருத்தமான தகுதிகள் இருந்தும் - பலர் இன்றும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் - வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட மேலும் இரண்டு அதிபர்களினால்; - தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு – விசாரணைகளின் போது – அந்த அதிபர்களுக்கு குறித்த பாடசாலையை வழங்குவதாக வடமாகாண கல்வியமைச்சினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் -  இன்றுவரையிலும் அடிப்படை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத நிலையே வடமாகாண கல்வியமைச்சில் காணப்படுகின்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரையின் சாராம்சம் வருமாறு -



முறைப்பாட்டாளார் : திரு.கே.நித்தியானந்தம் - வவுனியா

பிரதிவாதிகள்:
: 1. செயலாளர் - வடமாகாணக் கல்வியமைச்சு – வடமாகாணம்
: 2. மாகாணக் கல்விப் பணிப்பாளர் – வடமாகாணம்
: 3. வலயக் கல்விப் பணிப்பாளர் – வவுனியா தெற்கு கல்வி வலயம் - வவுனியா

முறைப்பாடு:

வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனையால் 28.03.2012 அன்று வ/செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபர் பதவிக்கான நியமனம் கோரப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக (சரத்து 12(1)இ செட்டிக்குளம் கோட்டத்தின் பதில் கோட்டக்கல்வி அலுவலராக இருந்த திரு.கே.நித்தியானந்தத்தால் முறையிடப்பட்ட முறையீடு

பிரதிவாதிகள் கூற்று :

2204/4 சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்ட வாசகம் “தகுதியான எவரும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் கல்வியமைச்சின் செயலாளர் எடுக்கும் தீர்மானமே இறுதியானது” என்பதாகும்.  அத்துடன் செட்டிக்குளம் கல்விக்கோட்ட பதில் அதிகாரி என்னும் பதவிநிலை என்பது அதிபர் பணிநிலை என்பதற்கும் மேலானது. இருப்பினும் முறைப்பாட்டாளரை வ/செட்டிக்குளம் பாடசாலையின் அதிபராக நியமிக்க நேர்முகப் பரீட்சைக் குழுவினரால் பரிந்துரைக்கப்படவில்லை.

அவதானிப்பும் ஆய்வும்:

இலங்கையில் கல்வி நிர்வாக சேவையில் அதிகாரிகள் பற்றாக்குறை; காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திக்காக அதிபர் சேவையின் தரம் 2-1 தரத்தில் உள்ள முறைப்பாட்டாளர் 27.01.2012 இருந்து பதில் கோட்டக் கல்வி அதிகாரியாக பின்வரும் நிபந்தனையுடன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.
“தகுதியான கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் (SLEAS) நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில் தனது கோட்டக் கல்வி அலுவலர் என்னும் பணிநிலையிலிருந்து தாங்கள் விலகவேண்டும்”

28.03.2012 வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரினால் பின்வரும் மூன்று நிபந்தனைகளுடன் வ/செட்டிக்குளம் மகாவித்தியாலயத்துக்கான தகுதியுள்ள அதிபர் நியமனத்துக்கான பிரசுரம் வெளியிடப்பட்டது.

1. விண்ணப்பிப்பவர் வவுனியா மாவட்டத்துக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

2. விண்ணப்பிப்பவர் SLEAS - II/III / SLPS -I  தகுதியினைக் கொண்டிருக்க வேண்டும். (மேற்குறிப்பிட்ட தகுதியினைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் பணிநிலைக்கு விண்ணப்பிக்காவிட்டால் SLPS I/II  தகுதியினைக் கொண்டுள்ள விண்ணப்பதாரிகள் கருத்தில் கொள்ளப்படுவர்)

3. பணியிடத்தில் குறைந்தபட்சம் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்கள் கட்டாய சேவையினை ஆற்ற வேண்டும்.

அதிபர் பணிநிலை வெற்றிடத்துக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுள் முறைப்பாட்டாளரும் - இன்னுமொரு விண்ணப்பதாரியும் 08.06.2012 அன்று நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படடிருந்தனர். ஆயினும்; முறைப்பாட்டாளர் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியபோதும் மற்றைய விண்ணப்பதாரர் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றவில்லை. எனினும் - நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றாதவர் (திரு…….) செட்டிக்குளம் மகாவித்தியாலய அதிபராக நியமிக்கப்பட்டார்.

கல்வி அமைச்சின் சுற்றுநிருபத்துக்கமைய பணியிட வெற்றிடத்துக்கான வேண்டுகை விண்ணப்பத்தில் கோரப்பட்டிருந்த தகுதியான நிலைகள் அனைத்தையும் முறைப்பாட்டாளர் கொண்டிருந்தும் - அவர் தவிர்க்கப்;பட்டு ஆசிரியர் சேவையில் 2-II தரத்தினைக் கொண்டிருந்த (திரு….) நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றதாதவர் நியமிக்கப்பட்டார். – கல்வியமைச்சின் 2000/54 இன் சுற்றுநிருபத்தில் ஆசிரியர் சேவையில் உள்ள ஒருவர் பதில் அதிபராக நியமிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையிலும் - கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தை மீறி ஆசிரியர் சேவையில் உள்ளவருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

முறைப்பாட்டாளரின் மேன்முறையீடும் - நியமனத்தின் நியாயமற்ற தன்மையும் எடுத்துக்கூறிய போதும் பிரதிவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பதில் கோட்டக் கல்வி அலுவலராக கடமையாற்றும்போதுள்ள பணிஇடைவெளி நிரப்பும் பாதுகாப்பற்ற தன்மையினை புரிந்துகொள்ளவில்லை.

பிரதிவாதிகள் தரப்பினால் 2204/08 சுற்றுநிருபத்தின் படி – மேற்குறிப்பிட்ட எந்தவொரு தீர்மானத்தையும் சுற்றுநிருபங்களுக்கு அப்பால் -  கல்வியமைச்சின் செயலாளரால்  கையாளமுடியும் என்பதைக் குறிப்பிட்டிருந்தார்கள்.

இது நியாயமற்ற செயற்பாடாகும். - ஒரு அரச சேவையாளர் ஒருவரது அதிகாரம் என்பது அனைத்து சுற்றுநிருபங்களுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டது. மாகாண அரசாங்க சுற்றுநிருபங்கள் பொருள்கோடல் இல்லாது இதனை மீறி மேலாண்மை செய்யமுடியாது.

முடிவு :

முறைப்பாட்டாளர் வ/செட்டிக்குளம் மகா வித்தியாலத்துக்கு அதிபராக நியமிக்கப்படுவதற்கு கேட்கப்பட்டிருந்த தகுதியினைக் கொண்டிருந்த போதும் புறக்கணித்து – 1AB தர பாடசாலை ஒன்றிற்கு இலங்கை கல்வியமைச்சின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக தகுதிகளை கொண்டிராதவரும் - நேர்முகப் பரீட்சைக்குத் சமூகம் தராத ஒருவருக்கும் வழங்கப்பட்ட நியமனமானது இலங்கை அரசியல் யாப்பின் மனித உரிமைகள் சாசனத்தின் சரத்து 12(1) இன் பிரகாரம் மிக மோசமான தனிமனித அடிப்படை உரிமைமீறல் சம்பவமாகும்.


பரிந்துரைகள் :

1. மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை இல 15(4) படி முறைப்பாட்டாளர் வவு/செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக நியமிக்கப்பட இத்தால் பரிந்துரைக்கப்படுகின்றார்.

2. பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டவர்கள் தங்களால் மேற்கொள்ளப்பட்ட பிழையான தீர்மானத்திற்கு பரிகாரமாகவும் - அடிப்படை மனித உரிமையை மீறியமைக்காகவும் மனித உரிமைகள் சாசனத்தின் உறுப்புரை 15(3) (C) அமைவாக பொருத்தமான நடவடிக்கையில் ஈடுபடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றார்கள்.

3. மனித உரிமை சாசனத்தின் உறுப்புரை 11 (g)  பிரகாரம் முதலாவது பிரதிவாதி (கல்வியமைச்சின் செயலாளர்) முறைப்பாட்டாளருக்கு ரூபா 5000.00 ஐ அவரது முறைப்பாட்டுச் செலவீனமாக வழங்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்படுகின்றார்கள்.


என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Sunday, March 19, 2017

ஓய்வுபெற்ற ஆசிரியர்களைக்கொண்டு ஆசிரியர் வெற்றிடம் நிரப்பும் நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்


பட்டதாரிகள் பலர் அரச வேலையின்றி போராடிவரும் நிலையில் - மலையகத்தின் பொகந்தலாவ பாடசாலையொன்றில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் உரையாற்றியபோது  அங்கு காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார். இச்செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கின்றது. மலையகம் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளிலும் பல பட்டதாரிகள் வேலைக்காக போராடிவரும் நிலையில் - அவர்களை ஒப்பந்த அடிப்படையில்   இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் அடிப்படையில் போட்டிப்பரீட்சை மூலம் உள்வாங்குவதோடு  மேலதிகமாகவும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்  வெற்றிடங்கள் ஏற்படுமாயின் – கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கும் மாணவர் தொகைகளையும் அதிகரிக்க முடியும். இவ்வாறான – திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கும் செயற்பாட்டின் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சியடையும் அபாயநிலையையே தோற்றுவிக்கும். என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

Sunday, February 26, 2017

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டக்களத்தில் இன்று வடக்கு ஆசிரியர்கள், அதிபர்கள் பங்கேற்பு


இன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் - வடமாகாணத்திலுள்ள ஆசிரியர்கள்ஒன்றிணைந்து - முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் நில மீட்புப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்ததுடன் - கேப்பாப்பிலவு சிறுவர்களுக்கும் உளவள செயற்பாடுகளை வழங்கினர்.


மேலும் - கேப்பாப்பிலவு காணியை விடுவிப்பதற்காக – தொடர்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள மக்களுக்காக காலைமுதல் மாலைவரை போராட்டக் களத்தில் தங்கியிருந்து - இன்றைய மதிய உணவுகளுக்கான பொருட்களையும் வழங்கி – போராட்டக்களத்திலுள்ள மக்களுடன் இணைந்து  மக்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஓவியம், நாடகம், விளையாட்டுக்கள், பாடல்கள் போன்றவற்றுடனான ஆற்றுப்படுத்தல்களிலும் ஈடுபட்டனர்.

இந்த ஆற்றுப்படுத்தல் நிகழ்வுகளில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டதாக பெற்றோர்கள் மகிழ்ச்சிதெரிவித்தனர். அத்துடன் - சில நல்லுள்ளங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களையும் மக்களுக்கு கையளித்தனர்.

 இப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்னிலங்கையிலிருந்தும் இலங்கை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்  மற்றும் வடக்குமாகாண புதிய அதிபர்சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






Wednesday, February 22, 2017

கேப்பாப்புலவிற்கு ஆதரவாக கொழும்பில் நடந்தது ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் 20 நாட்களைக் கடந்தும் தீர்வின்றி உள்ள நிலையில் - இன்று 22.02.2017 கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக காலை 11.30 மணியளவில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் - தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தென்னிலங்கை மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களான – சிவசக்தி ஆனந்தன், விக்கிரபாகு கருணாரட்ண, சிறிதுங்க ஜெணசூரிய, குமரகுருபரன், அசாத்சாலி, செந்திதவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவு கேப்பாப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மேற்கொண்டுவரும் நியாயமான போராட்டத்துக்கு நல்லாட்சி அரசு விரைவில் தீர்வு வழங்கவேண்டும்.

2012 ஆம் ஆண்டு கேப்பாப்பிலவு மக்கள் மெனிக்பாம் முகாமிலிருந்த போது – கேப்பாப்பிலவிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியிருந்தனர். இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர் மக்களை அழைத்து காணிவிடுவிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு கூறி ஏமாற்றியுள்ளனர். போர்முடிந்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையிலும் - இராணுவ முகாம்கள் என்னும் போர்வையில் மக்களின் காணிகளை அபகரித்து வைக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மக்களுக்கு சொந்தமான 19 ஏக்கர் காணிகளை விட்டு இராணுவம் வெளியேறவேண்டும். தமது காணிகளில் மக்கள் சுதந்திரமாக நடமாட நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்பவர்கள் ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும். நல்லாட்சி அரசு எனக் கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஒருமுகத்தையும் - தமது நாட்டு மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்டி ஏமாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிடவேண்டும். நேர்மையாக மக்களை வழிநடத்தவேண்டும். வடபகுதி மக்களின் காணிமீட்புப் போராட்டம் வெற்றிபெற தென்னிலங்கைசக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டத்துக்கு  வலுச்சேர்ப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.