Monday, June 8, 2020

பாதுகாப்புப் படையினரை மட்டுமே கொண்ட ஜனாதிபதி செயலணி பொதுச்சேவையின் சுதந்திரத்திற்கு ஓர் அச்சுறுத்தல் ஆகும் - ஜோசப் ஸ்ராலின் -


பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலம்கொண்ட, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்காகவென உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஜனாதிபதி செயலணி ஆனது  பொதுச்சேவையின் சுதந்திரத்திற்கு ஓர்  அச்சுறுத்தல் ஆகும் எனவும் மேற்கண்ட செயற்குழுவின் பிரதிநிதித்துவத்தினைப் பற்றி கவனம் செலுத்துமாறும் பொதுச் சேவையின் சுதந்திரத்தில் பணிக்குழு தலையிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கையின் தபால் மற்றும்தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம், மாகாண பொது மேலாண்மைசேவைகள் சங்கம் ஆகியன ஜனாதிபதியின் செயலாளரிடம் கோரியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- 
2020 ஜூன் 02 ம் திகதி, இலக்கம் 2178/18 கொண்ட அதிவிசேடவர்த்தமானி அறிவிப்பு மூலம் ஜனாதிபதியின் ஊடாக பாதுகாப்பான நாடொன்றை, ஒழுக்கநெறியுள்ள, குணநலம்கொண்ட, சட்டத்தைமதிக்கும் சமூகமொன்றை உருவாக்குதல் என்ற தொனிப்பொருளைக் கொண்டு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது 13 உறுப்பினரகள் அடங்கிய இப்பணிக்குழுவில் பாதுகாப்புப் படையின் உறுப்பினர்கள் தவிர்ந்த வேறு எவ்வித  சிவில் உறுப்பினர்களும்  நியமிக்கப்படவில்லை.
அவர்களால் செய்யப்பட வேண்டிய பணிகளில் முதன்மையானது, தற்பொழுது நாட்டின் பல இடங்களில் சுதந்திரமாகவும், அமைதியான,சமூகநிலைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் மேலோங்கியுள்ளசட்டத்தை மீறி தவறுகள் இழைக்கும் “சமூகக்குழுக்களின்”சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு தேவையான துரிதநடவடிக்கைகளை எடுப்பதாகும். 

இதில் ''சமூகக் குழுக்கள்'' என்ற பதத்திற்கு   தெளிவான வரையறை ஒன்று வழங்கப்படாமல், இதனைஅடிப்படையாகக்கொண்டு , சில சில  பிரச்சினைகளுக்காக- ஜனநாயக உரிமைகளுக்காக  எதிர்க்கும் குழுக்களையும் கூட அர்த்தப்படுத்த முடியும். 

அப்படியானால் - இது நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.

மற்றும் - தற்பொழுதுமுதல் இப்பணிக்குழுவானது அரசாங்கத்தை விமர்சிக்கும் குழுக்களுக்கு எதிராகவும் விழிப்புடன் இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்படி  வர்த்தமானி மூலம் குறிப்பிடப்படும் 
“பாதுகாப்பான நாடொன்றை ஒழுக்கநெறியுள்ள குணநலம்கொண்ட சட்டத்தை மதிக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியினால் ஆலோசனைகள் வழங்கக்கூடிய அல்லது சேவைகளை வழங்குவதற்காக ஒத்துழைப்பினை கோரக்கூடிய சகல அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அத்தகைய ஏனைய நபார்களினால் அப்பணி தொடர்பாக உரியவாறு பின்பற்றக்கூடிய ஆலோசனைகளுக்கமைய செயற்பட வேண்டுமெனவும் வழங்கக்கூடிய சகல உதவிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமெனவும் சகல தகவல்களையும் வழங்க வேண்டுமெனவும் நான் இத்தால் மூலம் சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் கட்டளையிட்டு பணிப்புரை விடுக்கின்றேன்” 
என்ற வாசகத்தின் மூலம் அரச
பொதுச்சேவையானது முற்றிலும் இப்பணிக்குழுவின் கீழ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

 அதேபோன்று மேற்படி செயற்குழு மூலம்வழங்கப்படும் ஆலோசனைகள் எவ்வாறானது?  எதிர்பார்க்கப்படும் உதவிகள், தகவல்கள்   எப்படியானது ?என்று விளக்கமளிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில்  - அரச பொதுசேவைக்கு ஒரு சர்வாதிகார சக்தி திணிக்கப்படுகிறது. 
பொது சேவையின் நிர்வாகம்  அதிகார வரம்புகளைக் கொண்டுள்ளது. 
விதிகள், கட்டளைகள் மற்றும் சுற்றறிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்ற து.
ஆனால் - அதற்கு மேலதிகமாக - முழுமையாக பாதுகாப்பு  படையினரின்அங்கத்தவர்களைக் கொண்ட  இந்த செயற்குழுவிற்கு , பொதுசேவையின் மீது வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவது பொது சேவையின்சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாகும்.
இந்த நிலைமையில்  மேற்கண்ட செயற்குழுவின் பிரதிநிதித்துவத்தினைப் பற்றி கவனம் செலுத்துமாறும் பொதுச் சேவையின் சுதந்திரத்தில் பணிக்குழு தலையிடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியின் செயலாளரைக் கோருகிறது.
இப்படிக்கு,
ஜோசப் ஸ்டாலின் -  பொதுச் செயலாளர் -  இலங்கை ஆசிரியர் சங்கம்
சிந்திக்க பண்டார -  தலைவர் - இலங்கையின் தபால் மற்றும்தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம்
விஜித பிரேமரத்தனே  -  செயலாளர் - மாகாண பொது மேலாண்மைசேவைகள் சங்கம்