Saturday, April 29, 2017

யாழ்.பல்கலைக்கழக முன்றலில் - ஆசிரியர்கள், அதிபர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள், உழைக்கும்மக்களின் ஒன்றிணைந்த மேதினம்


இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரங்க செயற்பாட்டுக்குழு, தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டுமையம், சமூக விஞ்ஞான ஆய்வுமன்றம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து நடத்தும் மே தின நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இம்மேதின ஊர்வலம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி ஆத்திசூடி வீதி, பலாலிவீதி, பரமேஸ்வரா வீதி ஊடாக மீண்டும் பல்கலைக்கழகத்தை வந்தடையும். இறுதியில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் தலைவர்களின் உரையும் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இடம்பெறவுள்ளது. இம்மேதின நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள், உழைக்கும்  மக்கள், தமிழ்தேசிய சக்திகள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரையும் கலந்துகொண்டு தொழிலாளர் உரிமைக்கு பலம்சேர்க்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


Monday, April 24, 2017

27 ஆம் திகதி பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் இணைந்து எதிர்வரும் 27 ஆம் திகதி வியாழக்கிழமை மேற்கொள்ளவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது தார்மீக ஆதரவினைத் தெரிவிக்கின்றது.

வடமாகாணத்தில் - பல நாட்களாக மக்கள் தமக்கு சொந்தமான நில மீட்புக்காகவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகவும் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.; இத்தகைய பாதிக்கப்பட்டுள்ள மக்களினால் மேற்கொள்ளப்படவுள்ள - மக்கள் மயப்படுத்தப்பட்ட நீதிவேண்டிய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது அனைத்து சமூக அமைப்புக்களினதும் தொழிற்சங்கங்களினதும் தார்மீகக் கடமையாகும்.

அத்துடன் – மக்களின் நீதிவேண்டிய நியாயமான போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக – அனைத்து சக்திகளும் தமது சமூகப்பொறுப்பை உணர்ந்து ஆதரவு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

Wednesday, April 19, 2017

கைரேகை இயந்திர நடைமுறையூடாக - வடமாகாண கல்வியில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு வடமாகாண கல்வியமைச்சே முழுமையான பொறுப்பையும் ஏற்கவேண்டும்


வடமாகாணத்தில் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பத்திலிருந்து ஆசிரியர்களின் வரவைப் பதிவிடுவதற்கு – கை ரேகை பதிவு செய்யும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்படவேண்டும் எனவும் - அதனை பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நிதியைக் கொண்டு அல்லது மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் தரஉள்ளீட்டு நிதியைக் கொண்டு கொள்வனவு செய்யுமாறும் வடமாகாணக் கல்வியமைச்சு அதிபர்களைப் பணித்துள்ளது. பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய பணத்தினைக் கொண்டு அல்லது மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் தரஉள்ளீட்டு நிதியைக் கொண்டு கைரேகை இயந்திரம் கொள்வனவு செய்வது தவறான நடைமுறையாகும். இதனை நாம் மத்திய கல்வியமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.

இத்திட்டம் ஆசிரியத்தொழிலுக்கு அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சு மீள்பரிசீலனை செய்யவேண்டும். ஆசிரியத்தொழில் என்பது – மாணவர்களின் கல்விநடவடிக்கைகளுடன் தொடர்புபட்டது. மாணவர்களின் நலன் சார்ந்து சிந்திக்காது – ஆசிரியர்களை நிர்வாக நடமுறைகளுக்குள் முடக்குவதற்கு மட்டுமே இத்திட்டம் பயன்படக்கூடியதாக அமையவுள்ளது.

தற்போதைய விடுமுறைக் காலங்களிலும் கூட – பாடசாலைகளுக்குச்சென்று பல ஆசிரியர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் மேலதிக வகுப்புக்களையும், எதிர்வரும் தவணைகளில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழா போட்டிகளுக்கும் மாணவர்களைத் தயார்ப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் - தாம் வெளிமாவட்டங்களில் தங்கியிருக்கும் வாரநாட்களிலும் மேலதிக வகுப்புக்களை தமது விருப்பின் அடிப்படையில் எடுத்துவந்தனர். அத்துடன் - க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கும், உயர்தர மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் மேலதிக வகுப்புக்களும் - பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் பாடசாலை தவிர்ந்த நேரங்களிலேயே நடைபெறுகின்றன.

ஆசிரியர்களின் சேவையின் தன்மையை கருத்திலெடுக்காது – வெறுமனே நிர்வாக இயந்திரத்தைத் திணிப்பதன் மூலம் - ஆசிரியர்கள்  வெறுமனே ஆறு மணி நேரத்துக்;கு மட்டும் பணியாற்றினால் போதும் என்று வடமாகாண கல்வியமைச்சு கருதுகின்றதா?

வடமாகாண கல்வியமைச்சு அறிமுகப்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் - பாடசாலை ஆசிரியர்களின் மட்டில் பாரிய அதிருப்திகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் - வடமாகாணக் கல்வியமைச்சு  நிர்வாக விடயத்தில் தேவையற்ற இறுக்கங்களை திணிக்குமாயின் – ஆசிரியர்களை மேலதிகமாக பணியாற்றுமாறு வற்புறுத்த முடியாது. அவ்வாறு செயற்படும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படவேண்டும். இல்லையேல் ஆசிரியர்கள் மாற்றுமுடிவொன்றை எடுக்கக் கூடிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவர்.

இதனால் - வடமாகாண கல்வியில் ஏற்படும் பின்னடைவுகளுக்கு – வடமாகாண கல்வியமைச்சே முழுமையான பொறுப்பையும் ஏற்கவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கின்றது.


Sunday, April 9, 2017

யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி விவகாரம் - மனித உரிமை ஆணைக்குழு தலைமைச் செயலகத்தில் விசாரணை



கடந்த வருடமளவில் வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையாகிய யா-சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டு நிலையை அடுத்து – வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையினால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் பரஸ்பரம் இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிய நிலையில் - குறித்த பாடசாலையின் அதிபர் பெற்றுக்கொண்ட பணத்துக்கு எவ்வித பற்றுச்சீட்டுக்களும் வழங்கப்படாமை விசாரணைக்குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் - மூன்று ஆசிரியர்களுக்கு மட்டும் இடமாற்றம் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து – அப்பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏறத்தாள இருபது பேர் இணைந்து – விசாரணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குறித்த அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் - இல்லையேல் தம் அனைவருக்கும் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்குமாறும் கோரியிருந்தனர். இதன் பின்னர் – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் - அப்போதைய உதவிச் செயலாளராக இருந்த திருமதி சுகந்தி தலைமையில் மீண்டும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக்குழு குறித்த அதிபர் தொடர்பாக பரிந்துரைத்த விடயங்களையும் வடமாகாண கலவியமைச்சின் செயலாளர் நடைமுறைத்தாதமையினால் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் - தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக முறைப்பாட்டினை செய்திருந்தனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னரும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சார்பாக சமூகமளித்த பிரதிநிதிகள் - மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் கூறிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்தாது கல்வியமைச்சின் செயலாளர் இழுத்தடித்து வந்தார். 
இந்த நிலையில் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் - ஆறு மாதங்களுக்கு முன்னர் – தற்போதைய ஆளுநர் றெஜினோல்ட் கூரேயிடம் முறையிட்டிருந்தனர். இந்த முறைப்பாட்டை வடமாகாண கல்வியமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக அழைத்து விசாரித்து – அதிபர் மேற்கொண்டிருந்த பண முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் - அதற்கு முன்னர் குறித்த பாடசாலை அதிபரை இடமாற்றுமாறும் உத்தரவிட்டிருந்தார். 
ஆனால் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் அதனையும் நடைமுறைப்படுத்தாதிருந்த நிலையில் - இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய காரியாலயத்தில் இருந்த – ஆசிரியர்களின் முறைப்பாடு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைமையகமான கொழும்புக்கு மாற்றப்பட்டது. இதற்கமைய - இம்மாதம் 18 ஆம் திகதி (18.04.2017) காலை 10.00 மணிக்கு - இல 165 கின்ஸி வீதி கொழும்பு -8 இல் அமைந்துள்ள தலைமைச் செயலகத்து விசாரணைக்கு வருமாறு – வடமாகாண கல்விச் செயலாளர் , வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்,  வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்), சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அதிபர் ஆகியோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஒருவருட காலத்தின் பின்னர் - தற்போது பத்திரிகையூடாக சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அதிபர் வெற்றிடம் வடமாகாணக் கல்வியமைச்சால் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


Saturday, April 8, 2017

வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு எதிரான மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய கொரிபாலனுக்கு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரினால் - தனக்கு மீண்டும் மன்னார் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றம் அநீதியானது என கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மீளாய்வு விண்ணப்பம் விசாரணைக்கு நீதியரசர்களான மடவெல மற்றும் தெகிதெனிய ஆகியோர் முன்னிலையில் 06.04.2017 விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

மீளாய்வு விண்ணப்ப விசாரணையின்போது – மனுதாரர் சார்பில் உரிமை மீறல் நிகழ்ந்திருப்பது தொடர்பான விசாரணைக்கு எதிர்மனுதாரர்களான – வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ. இரவீந்திரன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோருக்கு மே மாதம் 18 ஆம் திகதிக்கு அழைப்பாணை பிறப்பிக்குமாறு மீளாய்வு மனு மேன்முறையீட்டு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

யாழ். கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய கொரிபாலன்-  ஏற்கனவே மன்னார் வலயத்தில் வெளிமாவட்ட சேவையினை பூர்த்திசெய்திருந்தார் - இதுவரை இடமாற்றச் சபையினுூடாக முறையாக இடமாற்றம் வழங்கப்பட்ட எவரும் திருப்பி அனுப்பப்படவில்லை . மன்னார் மாவட்டத்தில் 2012 ஆம் ஆண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் மேலதிகமாகவும், யாழ்மாவட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறையாகவும் இருந்ததனால்; மூன்று வருடங்கள் வெளிமாவட்டத்தில் பூர்த்தி செய்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இடமாற்றச்சபையின் தீர்மானத்திற்கமையவே முறைப்படி நிரந்தர இடமாற்றம் வழங்கப்பட்டிருந்ததாகவும். ஆயினும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் – குறிப்பிட்ட ஒருவரின் பழிவாங்கல் நோக்கத்துக்காக தன்னை மீண்டும் மன்னார் மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கியிருந்தார் எனவும் - இவ்விடமாற்றம் தவறானது எனவும் - இடமாற்றச்சபையினால் யாழ்மாவட்டத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் - இடமாற்றச்சபையின் அங்கீகாரம் இன்றி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் மீண்டும் இடமாற்றம் வழங்கியுள்ளமை தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எனவும் தெரிவித்து – யாழ்.மேல் நீதிமன்றத்தில் தடையுத்தரவு கோரி கடந்த மாதமளவில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது – நீதிபதி இளஞ்செழியனால் இம்மனு விசாரணையின் பின்னர் நிராகரிக்கப்பட்டிருந்தது.

யாழ்.மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட முடிவு தவறானது எனக் குறிப்பிட்டே – மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்ப மனு தாக்கல் செய்யப்பட்;டிருந்தமையும் - இந்த மீளாய்வு விண்ணப்பத்தின் மீதான மேன்முறையீடு இதற்கு முன்னரே மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Sunday, April 2, 2017

ஆசிரியர் பயிற்சி கலாசாலை அனுமதிக்கான நேர்முகத் தேர்வு திகதியை பிற்போடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சிடம் கோரிக்கை


மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சப்ரகமுவா மாகாணம் போன்றவற்றில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் - ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு அனுமதிக்காத நிலைகாணப்படுகின்றது. அங்குள்ள வலயக் கல்விப் பணிமனையால் ஆசிரியர்கள் பயிற்சி பெறுவதற்கு விடுவிக்கப்பட்ட நிலையிலும், மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதற்கு ஆசிரியர் பற்றாக்குறை எனக் காரணம் காட்டப்படுகின்றது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளுக்கு செல்ல வேண்டியவர்களுள்  அநேகமாக – 6000 ரூபா சம்பளத்துடன் பணியாற்றும் ஆசிரிய உதவியாளர்களாகக் காணப்படுகின்றார்கள். இப்பயிற்சியை முடிப்பதன் மூலமே அவர்கள் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படுவார்கள். இவர்களை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அனுமதிக்காது போகுமிடத்து – அவர்களினை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது தாமதமாகும். இதனால் - ஆசிரியர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படையும். இது அநீதியான செயற்பாடாகும். இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. ஆசிரியர் பயிற்சிக் காலாசாலையில் பெறும் பயிற்சியின் மூலம் - எதிர்காலத்தில் மாணவர்களே நன்மையடைவர்.

இந்த நிலையில் - கடந்த 31.03.2017 வெள்ளிக்கிழமை மத்திய மாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்னால் - ஆசிரியர் கலாசாலைக்கு விடுவிக்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய மாகாணத்தின் செயலாளர் செந்தில் சிவஞானம் கருத்து தெரிவிக்கையில் -  எதிர்வரும் திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்றுக்கு அதிகாரிகளால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில் - இன்று ஞாயிற்றுக்கிழமை 02.04.2017 மத்திய மாகாணம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு ஆசிரியர்களை விடுவித்து கையொப்பமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதே நடைமுறையை ஏனைய மாகாணங்களும் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இவ்வாறு - மூன்று மாகாணங்களும் ஆசிரியர்களை பயிற்சிக்கு விடுவிக்காத நிலையினை கருத்தில்கொண்டு  - இவர்களுக்கான நேர்முகத்தேர்வுக்கான திகதியைப் பிற்போடுமாறு மத்திய கல்வியமைச்சின் செயலாளரை இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.