Thursday, January 23, 2020

இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் இணக்கம்


இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை - அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக புதிய கல்வியமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் - இதனை ஆரம்ப தற்காலிக தீர்வாக ஏற்க தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன எனவும் -  இணக்கம் காணப்பட்ட இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் சுற்றுநிருபம் வெளியிடப்படவேண்டும் எனவும் - 
வெளியிடப்படாதவிடத்து -ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்-

கடந்த வருடம் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு வலியுறுத்தி மார்ச் 13 மற்றும் செப்ரெம்பர் 26,27 திகதிகளில் தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்காரணமாக - கடந்த மைத்திரி -ரணில் அரசாங்கத்தினால் சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய உபகுழு அமைக்கப்பட்டது. ஒக்டோபர் 29 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் உபகுழுவுக்கும் இடையே நடந்த சந்திப்பை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் திகதி - ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கி <closed service> அமைச்சரவை தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதன்காரணமாக -  ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களும் கல்வியமைச்சும் இணைந்து முன்மொழிந்த சம்பளதிட்டத்தை ஆராய்ந்த ரனுகே ஆணைக்குழு -பரிந்துரைத்திருந்த சம்பளதிட்டத்தை நடைமுறைப்படுத்தும்வரை இடைக்கால சம்பள திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக - அப்போதைய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதனை - நடைமுறைப்படுத்த சம்பள ஆணைக்குழுவின் அனுமதிபெறவேண்டியிருந்த நிலையில் - நவம்பர் 14 இல் சம்பள ஆணைக்குழு கூடிய நிலையிலும் - முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை. 
இந்நிலையில் - நவம்பர் 16 இன் பின்னர் - தற்போதைய புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற நிலையில் - புதிய கல்வியமைச்சராக பொறுப்பேற்ற டலஸ் அழகப்பெருமாவுடன் 17.12.2019 ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.
இதன்போது - இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறியவேண்டியிருப்பதாக கூறி புதிய கல்வியமைச்சர் கால அவகாசம் கேட்டிருந்தார்.
அதனடிப்படையில் - ஜனவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பதில் வேண்டும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக கோரி கடிதம் அனுப்பியுமிருந்தது.
இதனடிப்படையில் - கடந்த 20 ஆம் திகதி ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடைபெற்றது,
ஆசிரியர் அதிபர் சேவையை ஏனைய சேவைகளோடு சேர்க்காமல் அகப்படுத்தப்பட்ட சேவையாக்கினால் சம்பளம் அதிகரிக்க முடியும் என சம்பள ஆணைக்குழுவும் தற்போது தெரிவித்துள்ளது.
எனவே - தற்போதைய அரசாங்கமும் - டிசம்பர் மாதம் ஆசிரியர் அதிபர் சேவையை அகப்படுத்தப்பட்ட <closed service> சேவையாக்கி அமைச்சரவையில் தீர்மானித்துள்ள நிலையில் -
இடைக்கால சம்பள அளவுத்திட்டத்தை அமுல்படுத்தும் வரை - அதனை இணைந்த கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வியமைச்சர் தெரிவித்தார். இதனை தற்காலிக தீர்வாக ஏற்க தொழிற்சங்கங்களும் இணங்கியுள்ளன.
ஆயினும் - இணக்கம் காணப்பட்ட இந்த கொடுப்பனவு வழங்குவது தொடர்பாக பெப்ரவரி 3 ஆம் திகதிக்குள் சுற்றுநிருபம் வெளியிடப்படவேண்டும் எனவும் - 
வெளியிடப்படாதவிடத்து ஆசிரியர் அதிபர் தொழிற் சங்கங்கள் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். 

Monday, January 13, 2020

யாழ்.வலய இடமாற்றங்களில் பாரபட்சங்கள்; தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்வோம்! -ஜோசப் ஸ்ராலின்

யாழ்ப்பாண கல்வி வலயத்தில் நடைபெற்ற 7 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் பணியாற்றியவர்களுக்கான உள்ளக இடமாற்றங்களில் - பக்கச்சார்பான செயற்பாடுகளும், முறையற்ற செயற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
மேன்முறையீடுகள் பல ஆசிரியர்கள் செய்துள்ள நிலையில் - மேன்முறையீடுகளை சபை மூலம் பரிசீலிக்காத நிலையில் - ஒரு சிலருக்கு மட்டும் மேன்முறையீடுகளுக்கு தனிப்பட்ட முறையிலேயே பக்கச்சார்பாக தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 
இதன்மூலம் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களுக்கு இடமாற்றச்சபை தீர்மானங்களுக்கு அமைய பொதுவான நீதி பின்பற்றப்படவேண்டும். யாழ்.கல்வி வலயத்தின் பாரபட்சமான செயற்பாடுகள் குறித்து ஆசிரியர்கள் பலர் மனஉழைச்சலுக்குள்ளாகியுள்ளனர்.
இடமாற்றங்களை வழங்கிவிட்டு வலயக்கல்விப்பணிப்பாளர் நீண்ட விடுப்பில் உள்ளார். யாழ்.வலய கல்வி பணிமனைக்கு நிர்வாகத்துக்குப் பொறுப்பாக நீண்ட நாட்களாக பிரதிக்கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை.
அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்களினால் - ஆசிரியர்கள் தொடர்ச்சியாக அலைக்கழிகின்றனர்.
கடமையிலுள்ள அதிகாரிகளோ - ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தீர்வுகளை கூறி செயற்படுகின்றனர்.
இவ்வாறான பாரபட்சமான முறைகள் - மேன்முறையீட்டு சபை கூடுவதற்கு முன்னர் தீர்க்கப்படவேண்டும்.
இவ்வாறான  - பாரபட்சமான அணுகுமுறையிலான இடமாற்றங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமாரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

பாரபட்சமாக இடமாற்ற அணுகுமுறை தொடருமாயின் - வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றங்கள் அனைத்துக்குமாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வோம் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Wednesday, January 8, 2020

வலிகாமம் பணிப்பாளருக்கெதிராக ஆர்ப்பாட்டம் : கல்வியமைச்சின் செயலாளருடனும் சந்திப்பு!


வலிகாமம் கல்வி பணி;ப்பாளரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக மேற்கொள்ளப்படும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இடமாற்றங்கள் மூலம் ஆசிரியர்கள் பழிவாங்கப்படும் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கை அசிரியர் சங்கத்தினால் இன்று புதன்கிழமை மாலை 2.30 மணியளவில் - நல்லூர் செம்மணிவீதியிலுள்ள - வடமாகாண கல்வியமைச்சின் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது – வலிகாமம் கல்வி வலயத்தில் நடைபெற்ற இடமாற்றங்கள் குறித்த பட்டயலின் அடிப்படையில் - ஆசிரியர்களுக்கு முறையற்று இடமாற்றங்கள் வழங்கப்பட்டமை குறித்தும், அதனால் பாதிப்படைந்துள்ளவர்கள் தொடர்பாகவும்,  வலிகாமம் கல்விப் பணிப்பாளரின் முறையற்ற செயற்பாடுகள் குறித்தும் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து – மீளவும் இடமாற்றச்சபை கூடி – மேலதிக ஆசிரியர் ஆளணி, சுயவிருப்பு என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றங்களுடன் அனைத்து இடமாற்றங்களையும் மீளாய்வு செய்யப்படும் எனவும், அதுவரை இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்திவைக்க நடவடிக்கை எடு;ப்பதாகவும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் உறுதியளித்தார்.
அத்துடன் - பல வழிகளிலும் தனக்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் தொடர்பாக – முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அங்கு பிரச்சினை உண்டென்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இவ்விடயம் தொடர்பாக – வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரை நேற்றைய  தினம் அழைத்து கலந்துரையாடியுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
இதனைத்;தொடர்ந்து -  வடமாகாண கல்விப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஏற்கனவே – வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் இருந்தபோது – எம்மால் முறைப்பாடு செய்யப்பட்ட முறைகேடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால்- வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பல நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் - இலங்கை அசிரியர் சங்கத்தால் அவரிடம் முன்வைக்கப்பட்டது.
இதன்போது – அவற்றுக்குரிய நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கு கல்வியமைச்சின் செயலாளர் இளங்கோவன் உறுதியளித்தார்.



Sunday, January 5, 2020

வலிகாமம் பணிப்பாளருக்கு எதிராக புதன்கிழமை கவனயீர்ப்பு: ஆசிரியர்கள் ஒன்றிணைய வேண்டும்.! - ஜோசப் ஸ்ராலின் அழைப்பு


வலிகாமம் கல்விப் பணிப்பாளரின் ஏதேச்சதிகாரமான அடாவடித்தனங்களினால் - வலிகாமம் கல்வி வலயத்தில் முறையற்ற இடமாற்றங்களும், பழிவாங்கல்களும் இடம்பெற்று வருகின்றன. சட்டரீதியாக ஏற்று அங்கீகரிக்கப்பட்ட தாபனவிதிகளையும், சுற்றுநிருபங்களையும் மதிக்காது தான்தோன்றித்தனமாக செயற்பட்டுவரும் செயற்பாடுகளைக் கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை 08.01.2020 மாலை 2.00 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் - கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

செம்மணி வீதி – நல்லூரில் அமைந்துள்ள வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களம் ஆகிய அலுவலகங்களுக்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் - வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் பழிவாங்கல் செயற்பாடுகளும் வரம்புமீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஒரு சில அதிபர்கள் மூலமாக – ஆசிரியர்களை வற்புறுத்தி – விருப்பக் கடிதங்கள் போன்று பெற்று முறையற்ற இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. மேலதிக ஆசிரிய ஆளணி என்ற போர்வையில் - இடமாற்றச்சபைக்கு தவறான தகவல்களை வழங்கி இடமாற்றங்களை தொழிற்சங்க உறுப்பினர்களைச் கொண்டு செய்வது போலவே இடமாற்றச்சபையை தவறாக வழிநடத்தியுள்ளார்.

வலிகாமம் வலயத்தில் தமது எடுபிடிகள் சிலரை வைத்துக்கொண்டு – ஏனைய கல்வி அதிகாரிகளையும், ஆசிரியர் ஆலோசகர்களையும் அச்சுறுத்தும் செயற்பாடுகளிலும், பழிவாங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இதனால் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளவர்கள் - வலிகாமம் கல்வி வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக – எமக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒரே பாடசாலையில் ஏழு வருடங்களுக்கு அதிகமாக பணியாற்றியவர்கள் பலர் இருக்கும்போது – அவர்களுக்கான இடமாற்றங்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் இதுவரை காட்டவில்லை. தமக்கு சார்பானவர்களை தக்கவைப்பதற்காகவும் தமக்கு வேண்டப்பட்டவர்களின் வேண்டுதல்களுக்காகவும் வலிகாமம் கல்விவலயத்தின் கல்விக் கட்டமைப்பையே தவறாக வழிநடத்திவருகின்றார்.

முறையற்ற விதத்தில் இடமாற்றம் வழங்குவதோடு – பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்யும் உரிமை - சட்டத்தில் உள்ள நிலையிலும், அதனை ஏற்க மறுக்கும் செயற்பாடுகளும் - ஆசிரியர்களை பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்களின் மூலம், மன உழைச்சலுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு – பாதிக்கப்பட்டவர்கள் எமது சங்கத்தை நாடி வந்தபோது – அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தபோது – அவர்களது பாடசாலைகளுக்கு சென்று அவர்களை அச்சுறுத்துவதுடன், பொய்க் குற்றச்சாட்டுக்களையும் சுமத்த எத்தணித்த விடயங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த  ஜனாதிபதி தேர்தல் காலங்களில் நடைபெற்ற முறையற்ற இடமாற்றங்களை – தேர்தல் திணைக்களத்தினூடாக நிறுத்தியிருந்தோம். ஆயினும் - தேர்தல் முடிவடைந்த பின்னரும் அவர்களை பழிவாங்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார்.

வெளிமாவட்டங்களில் சேவையாற்றி – ஆசிரியர்கள் தாம் கோரிய வலயத்துக்கு வெற்றிடம் இல்லை எனக் கூறி – வலிகாமம் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டபோது – தூர இடங்களில் பணியாற்றி வருபவர்கள் என்ற மனிதாபிமான சிந்தனைகள் இன்றி – தூர இடங்களுக்கு பாடசாலைகளை வழங்குவதும், அவர்கள் தமது பிரச்சினைகளைக் கூறும்போது – பொருத்தமற்ற வார்த்தைகளால் ஆசிரியர்களை துன்புறுத்துவதும் நடைபெற்று வந்துள்ளன.
எனவே - இத்தகைய செயற்பாடுகள் - கல்விப்புலத்துக்கு முன்மாதிரிகையான செயற்பாடாக  ஒருபோதும் அமையப்போவதில்லை.

எனவே – தற்போது இவரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறையற்ற இடமாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

முழுமையான விசாரணையொன்று வடமாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படவேண்டும். 

ஆசிரியர்கள் தொடர்ந்தும் அவமதிக்கப்படுவதையும், சட்டத்தை மீறி அச்சுறுத்தப்படுவதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இத்தகைய செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் புதன் கிழமை வடமாகாண கல்வியமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளோம். இதற்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லையாயின் - எதிர்வரும் காலங்களில் பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Friday, January 3, 2020

அவசர நீதி கோரி வடக்கு ஆளுநருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம்!


வலிகாமம் கல்வி அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக மேற்கொள்ளப்படும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் - பாடசாலையில் அதிபரினால் கையொப்பமிட அனுமதிக்கப்படாத நிலையில் விடுப்பில் உள்ள ஆசிரியருக்கு அவசர நீதி கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாணத்தின் புதிய ஆளுநர் திருமதி சார்ள்ஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன் பிரதி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

இணுவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய திரு.,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பவருக்கு வலிகாமம் வலய கல்விப் பணிமனையினராலும்- குறித்த பாடசாலை அதிபரினாலும் உள்நோக்கம் கொண்ட முறையற்ற இடமாற்றம் கடந்த வருட இறுதிப்பகுதியில் - இடமாற்றச்சபையின் அனுமதியின்றி வழங்கப்பட்டிருந்தது.

வெளிமாவட்டங்களில் போதிய ஆசிரிய வளம் இல்லாத நிலையில் -பட்டதாரியான குறித்த ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் தான் கற்ற புவியியல் பாடத்தை கற்பித்து 8 வருடங்கள் சேவையாற்றியிருந்தார். வெளிமாவட்ட சேவையை பூர்த்தி செய்த பின்னர் -  ஆரம்பக்கல்வி நியமனத்தை பெற்றிருந்தாலும் - இன்றுவரை அவர் புவியில் பாடத்தையே கற்பித்து வந்துள்ளதோடு - உயர்தர மதிப்பீட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். குறித்த ஆசிரியர் மிகக் கடினமான சூழ்நிலைகளில் வெளிமாவட்ட அதிகஸ்டப் பிரதேசங்களில் 8 வருடங்கள் கடமையாற்றி – தனது சொந்த வலயமான யாழ்ப்பாண கல்வி வலயத்துக்கே இடமாற்றம் கோரியிருந்தார்.

ஆயினும் - அப்போது வெளிமாவட்டம் சேவையாற்றாத ஆசிரியர்கள் யாழ்.வலயத்தில் இருந்த நிலையிலும்-  யாழ்.வலயத்தில் வெற்றிடமின்மையைக் காரணமாக கூறி - வலிகாமம் கல்வி வலயத்துக்கே இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

 1 இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த இணுவில் இந்துக் கல்லூரியில் போதிய பாடவேளைகள் வழங்கப்பட்ட நிலையில் - 2019 இல் புவியியல் பாடத்தைக் கற்பித்து வந்துள்ளார். (நேரசூசி அ-1 இணைக்கப்பட்டுள்ளது.)

2. புவியியல் பாடத்தில் தரம் 11 மற்றும் உயர்தரப் பெறுபேறுகளில் சிறந்த அடைவுமட்டத்தைக் காட்டியதற்கான ஆதாரமாக – குறித்த பாடசாலை அதிபரினால் சிபார்சுசெய்யப்பட்ட ஆசிரியர் தரங்கணிப்புப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (தரங்கணிப்புப் படிவம் அ-2 இணைக்கப்பட்டுள்ளது.) 

3. குறித்த பாடசாலையில் - நேரத்துக்கு பாடசாலைக்குச் சென்று கடமையாற்றும் ஆசிரியராகவும்இ லீவுகளை மிகக் குறைந்த அளவு பெற்று சேவையாற்றிய ஆசிரியராகவும் குறித்த ஆசிரியர் இணுவில் இந்து ஆரம்பப் பாடாசலை பரிசளிப்பு விழா மலரில் கௌரவிக்கப்பட்டுள்ளார். (2019 - பரிசளிப்பு விழா மலரின் குறித்த பக்கம் அ-3 இணைக்கப்பட்டுள்ளது.)

இவ்வாறு – அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்த ஆசிரியரை நீக்கி – அதிகாரிகள் தமக்கு வேண்டப்பட்டவர்களை இணுவில் இந்துக் கல்லூரியில் நியமிப்பதற்காக – குறித்த பாடசாலை அதிபரினால் - அதிபர் - தான் தை மாதமளவில் ஒய்வு பெறவுள்ளதாகவும் அதனால் ஆசிரியருக்கு தாவடி பகுதியிலுள்ள பாடசாலையொன்றை பெற்றுத்தருவதாக ஆசிரியரை வற்புறுத்தி – ஆசிரியரிடமிருந்து கடிதம் ஒன்றை பெற்றுள்ளார். குறித்த பாடசாலையில் 5 வருடங்களே ஆசிரியர் பணியாற்றி வருகின்றார்.  ஆனால் - ஆசிரியருக்கு குட்டியப்புலம் பாடசாலையே இடமாற்றமாக வழங்கப்பட்டது. அதிபரின் வற்புறுத்தலுக்கு இணைங்க - தாவடி பகுதியிலுள்ள பாடசாலைக்கு செல்வதற்கே இடமாற்றம் கேட்டிருந்த நிலையில் - அவருக்கு சாதகமற்ற இன்னொரு பாடசாலையை வழங்கிய போது – அவருக்கு விருப்பமில்லையாயின் - தற்போது கடமையாற்றும் பாடசாலையிலேயே கடமையாற்ற அனுமதித்திருக்க வேண்டும்.

இதற்காக குறித்த ஆசிரியர் மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால் - இடமாற்றச்சபை எதுவும் கூடாமலேயே மேன்முறையீடும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரால் தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் எமது சங்கத்தின் கவனத்துக்கு வந்தபோது – ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதால் - தேர்தல் காலங்களில் இவ்வாறு இடமாற்றம் செய்தமை தவறு என தேர்தல் திணைக்களத்துக்கு எம்மால் முறைப்பாடு செய்யப்பட்டு இடமாற்றம் நிறுத்தப்பட்டது.

ஆயினும் - குறித்த ஆசிரியர் 03.10.2019 , 07.12.2019 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் - தனக்கு வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றம் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். இதன் அடிப்படையில் - 17.10.2019 திகதிய NP/3/2/1/5/TT/IN.ZE/2019-60 இலக்க கடிதத்தின் மூலம் வடமாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளரினால் - குறித்த ஆசிரியரின் மேன்முறையீடு தொடர்பாக உரிய பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் - குறித்த ஆசிரியரின் இடமாற்றம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த 24.12.2019 நடைபெற்ற இடமாற்றச் சபையில் - குறித்த விடயமும் வந்திருந்தபோது – எமது சங்கப் பிரதிநிதி கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரால் எமது உறுப்பினரின் ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வடமாகாண கல்வியமைச்சால் குறித்த ஆசிரியரின் மேன்முறையீடு தொடர்பாக ஏற்கனவே அறிவுத்தப்பட்டிருந்த விடயத்தை - இடமாற்றச் சபைக்கு மறைத்து – குறித்த ஆசிரியரினால் வழங்கப்பட்ட மேன்முறையீட்டில் அதிபரின் கையொப்பம் இல்லை என்று வேண்டுமென்றே காரணத்தை கல்விப் பணிப்பாளர் உருவாக்கயிருந்தார். இந்த மேன்முறையீட்டை பரிசீலிக்க முடியாது என்றே ஒற்றைக்காலில் நின்றுள்ளார்.

இந் நிலையிலும்  - எமது ஆட்சேபனை  பதிவுசெய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக - மிகத் திட்டமிட்ட முறையில் அந்த இடமாற்றச் சபையில் அறிக்கை எதுவும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரால் பேணப்பட்டிருக்கவில்லை.

இடமாற்றச்சபை தீர்மானங்கள் அறிக்கைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தீர்மானங்களில் இடமாற்ற சபை உறுப்பினர்கள் கையொப்பமிடவேண்டும்.

ஆனால் - பெயர்கள் மட்டும் கொண்ட பட்டியலின் அடியில் கையொப்பம் வாங்கிவிட்டு – எம்மால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளையும் எதிர்ப்புக்களையும் மறைத்து  - எமது தொழிற்சங்கமும் குறித்த இடமாற்றத்துக்காக கையொப்பமிட்டது என்று அப்பட்டமான பொய்யைகூறி – தனது முறைகேட்டை திசைதிருப்ப முயற்சிக்கும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரின் அதிகார துஸ்பிரயோகம்மிக்க செயற்பாடுகள் கல்விப் புலத்துக்கே மிகவும் ஆபத்தானதாகும்.

இவை ஒருபுறமிருக்க – குறித்த ஆசிரியர் மேன்முறையீடு செய்திருந்த நிலையில் மேன்முறையீட்டுக்கான பதில் கிடைக்கும் வரை – குறித்த ஆசிரியர் முன்னர் தான் கடமையாற்றும் பாடசாலையிலேயே கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும். ஆனால் - பாடசாலையின் அதிபரால்  ஆசிரியர் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. கையொப்பமிட அனுமதிக்காதமைக்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரே தூண்டுதலாகவும் இருந்துள்ளார்.

எனவே – குறித்த நடைமுறையை மீறி – குறித்த ஆசிரியரை மிகக் கீழ்த்தரமாக நடத்தியதன் மூலம் - குறித்த பாடசாலை அதிபரும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரும் மிகப்பெரும் முறைகேட்டைப் புரிந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக – உடனடியாக நீதியான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து - இவைபோன்ற முறையற்ற பழிவாங்கல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் - பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 2, 2020

வலிகாமம் கல்வி வலய அதிகார துஸ்பிரயோகம்; கல்வியமைச்சு முற்று வைக்கவேண்டும்- ஜோசப் ஸ்ராலின்

வடமாகாணத்தின் வலிகாமம் கல்வி வலயத்தில் சில அதிபர்களினதும் அதிகாரிகளினதும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஆசிரியர்கள் பழிவாங்கும் முகமான இடமாற்றங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

உரிய நடைமுறைகளை பின்பற்றுவதில் தவறுவிடும் கல்விப்புல அதிகாரிகள்  - தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு நடைமுறையையும் - மற்றவர்களுக்கு வேறுநடைமுறையுமாக பாரபட்சத்தைக்காட்டி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக - வலிகாமம் கல்வி வலய அதிபர் ஒருவரினால் பாடசாலையின் முதல் நாளான இன்று 02.01.2020 ஒரு ஆசிரியரை கையொப்பமிட அனுமதிக்காத சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. இதற்கு வலிகாமம் வலய கல்வி பணிமனையின் அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் வம்மையாகக் கண்டிக்கிறது என அதன் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் -

குறித்த ஆசிரியர் ஒருவருக்கு கடந்த வருட பிற்பகுதியில் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. அந்த இடமாற்றம் பாரபட்சமான முறையில் நடைபெற்றதென குறித்த ஆசிரியர் மேன்முறையீடு செய்திருந்தார். மேன்முறையீட்டுக்கான பதில் வலிகாமம் வலய கல்விப்பணிமனையினரால் அனுப்பப்படாதிருந்த நிலையில் - குறித்த ஆசிரியரை பழைய பாடசாலையில் கையொப்பமிட அனுமதித்திருக்க வேண்டும். அந்த நடைமுறையே தாபன விதிக்கோவையிலும் - 2007/20 தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை பின்பற்றப்படாமல்  -பழிவாங்கும் நோக்கில் ஆசிரியரை கையொப்பமிட அதிபர் அனுமதிக்காமை அதிபரின் அதிகார துஸ்பிரயோகமாகும்.
இவ்விடயம் தொடர்பாக கையொப்பமிட நடவடிக்கை எடுக்குமாறு வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையினரிடம் இலங்கை ஆசிரியர் சங்கம் முறையிட்டும் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவசரஅவசரமாக குறித்த ஆசிரியருக்கு இடமாற்றக்கடிதம் வழங்கவே நடவடிக்கை எடுத்திருந்தனர். 

இடமாற்றம் வழங்கும் நடவடிக்கையின்போது - இடமாற்றக்கடிதம் கிடைக்கும் ஒரு ஆசிரியர் தனது கடமைப்பொறுப்புக்களை ஒப்படைத்து, தனக்குரிய சூழலை ஏற்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்குவது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் - வலிகாம் வலயக்கல்விப்பணிமனையினரால் குறித்த ஆசிரியருக்கு கால அவகாசம் வழங்காது - பாரிய அநீதி இழைக்கும் முயற்சி நடைபெற்றுள்ளமை மிகப்பெரிய முறைகேடும் அதிகார துஸ்பிரயோகமுமாகும்.

குறித்த ஆசிரியரை இன்றைய தினம் கையொப்பமிட அனுமதிக்காத முறையற்ற செயற்பாடு குறித்து - குறித்தபாடசாலை அதிபருக்கெதிராகவும் அதற்கு உடந்தையாக இருந்த வலிகாமம் வலயக்கல்வி அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கையை கல்வியமைச்சு விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் - குறித்த ஆசிரியருக்கு மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் - உள்நோக்கம் கொண்டது என்பதும் அதிபரதும் அதிகாரிகளினதும் முறையற்ற நடவடிக்கைகள் மூலம் அறிய முடிகிறது.

எனவே - இவ்விடயங்கள் தொடர்பாக - உரிய விசாரணை நடத்தி -அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வடமாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக - வடமாகாண ஆளுநரிடமும் முறையிடவுள்ளதாக ஸ்ராலின் மேலும் தெரிவித்துள்ளார்.