Sunday, August 26, 2018

தமிழர்களின் காணிகள் அபகரிப்புக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு!

தமிழர் தாயகப் பிரதேசத்தில் அரசாங்கத்தின் திட்டமிட்டுத் திணிக்கப்படும் புதிய குடியேற்றங்களின் மூலம் - தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதும்-  அவர்கள் தமது வாழ்வுரிமைக்காகப் போராடுவதும் - அச்சத்தின் மத்தியில் தமிழ் மக்கள் - தமது பகுதிகளிலேயே வாழ்வதுமே தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில்  இந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் முனைப்பாக ஈடுபட்டுவருகின்றது. - மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் மகாவலி அதிகாரசபையூடாக தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி சிங்கள மக்களுக்கு வழங்க எடுக்கப்படும் முன்னெடுப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

ஏற்கனவே தமிழ் மக்கள் வாழ்ந்த பல ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது- தமது சொந்தக் காணிகளின் விடுவிப்புக்காக இன்னும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்  -   மணலாற்றுப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மாகாவலி அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்தப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் மிக இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே – திட்டமிட்ட ரீதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்குகின்றது. 28.08.2018 செவ்வாய்க்கிழமை மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்

Thursday, August 2, 2018

பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினர் ஈடுபடமாட்டார்கள்: தொழிற்சங்க பிரதிநிதிகள் - பரீட்சை ஆணையாளர் சந்திப்பில் இணக்கம்!

ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவது தொடர்பாக – பரீட்சை திணைக்களத்தினரால் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் - இவ்வாறு இராணுவத்தினரை பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து - இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜிதவுடன் - கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தினர் இன்று (02.08.2018) காலை கந்துரையாடினர்.

இச்சந்திப்பின்போது – தற்போது நடைபெறவிருக்கும் பொது பரீட்சைக் கடமைகளில்  மேலதிக பரீட்சை மேற்பார்வையாளர்களாக இராணுவத்தினரை ஈடுபடுத்த தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை உடனடியாக நிறுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. - இவ்வாறான இராணுவமயமாக்கலை அனுமதிக்க முடியாது என தொழிற்சங்க ஒன்றியத்தினரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் - தற்போது இலங்கை பாடசாலைகளில் 41000 ஆசிரியர்களும், 11000 அதிபர்களும் பணியாற்றுகின்ற நிலையில் - பரீட்சைக் கடமைகளுக்கு அண்ணளவாக 3000 பேரே தேவைப்படுவர். இவ்வாறான நிலையில் போதிய ஆளணியினர் உள்ளபோது - இராணுவத்தினரை பரீட்சைச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது அவசியமற்றது எனவும் - இது இராணுவமயமாக்கல் செயற்பாடு எனவும், இதனை நிறுத்தவேண்டும் எனவும் தொழிற்சங்க ஒன்றியத்தினர் வலியுறுத்தினர்.

இவ்விடயம் தொடர்பான நீண்ட கலந்துரையாடலின் பின்னர் – பரீட்சைக் கடமைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதில்லை என – பரீட்சை ஆணையாளர் உறுதிவழங்கியுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்தார்.