Tuesday, February 26, 2019

வடமாகாண கல்வி அதிகாரிகளின் - முறைகேடுகளுக்கு துணைபோகும் செயற்பாடு: இலங்கை ஆசிரியர் சங்கம் ஆளுநருக்கு கடிதம்.



வடமாகாண கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு துணைபோகும் செயற்பாடு தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் ஆளுநருக்கு இன்று 26.02.2019 கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அக்கடிதத்தில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
(
பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

யாழில் உள்ள  பிரபல ஆரம்ப பாடசாலையின் தற்போதைய அதிபர் பல்வேறு நிதி மோசடிளில் ஈடுபட்ட நிலையில் - அப்பாடசாலையின் உதவி அதிபராக செயற்பட்டுவருபவர் அத்தகைய மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். குறித்த உதவி அதிபர் தொடர்பாக - அதிபரால் 'தனது செயற்பாடுகளுக்கு உதவி அதிபரால் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை' என்று கூறி - யாழ்.வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

  
அதனடிப்படையில் உதவி அதிபரிடம் யாழ். வலயக்கல்விப்பணிப்பாளர் விளக்கம் கோரிய நிலையில் அவரால் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்து. இதன்போது குறித்த பாடசாலையின் அதிபரின் நிதி மோசடி உட்பட19 விதமான முறைகேடுகள் தொடர்பாக ஆதாரத்துடன் யாழ்.வலயக்கல்விப்பணிமனையினருக்கு உதவி அதிபர் முறைப்பாடு செய்திருந்தார். இவற்றுக்கு துணைபோகாததாலேயே தன்மேல் அதிபரால் குற்றம் சுமத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பாடசாலைகளில் முறையற்ற விதமாக நிதி சேகரிப்பதைத் தடைசெய்யும் கல்வி அமைச்சின்  05/2005 இலக்க சுற்றுநிருபத்தை மீறும் வகையில் குறித்த அதிபர் செயற்பட்டுள்ளதுடன் பாரிய நிதிமோசடிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

முறைப்பாடுகளில் பின்வருவன  மிகப் பாரிய நிதி மோசடி நடைபெற்றுள்ளமைக்கான சில சான்றுகளாகும்.

(
யாழ்.வலயக்கல்வி பணிப்பாளருக்குஉதவி அதிபரால் அனுப்பப்பட்ட முறைப்பாடுகளின் பிரதி தங்களின் மேலான கவனத்துக்காக இணைக்கப்பட்டுள்ளன.)

1.    2018 ஆம் ஆண்டு தரம் 1 மாணவர்களிடம் 15000/- ரூபா அதிபர் பெற்றிருந்த நிலையில் சிலருக்கு மட்டுமே பற்றச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் - பற்றச்சீட்டு வழங்கப்படாத பெற்றோரை தன்னால் இனங்காட்ட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2. 2017
ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் - இறுதி கௌரவிப்பின்போது 100000/- ரூபா சேர்த்து அதிபரிடம் வழங்கியுள்ளார்கள். இப்பணம் இன்றுவரை பாடசாலை கணக்கில் வைப்பிலிடப்படவில்லை
3.
ஒருவரால் பாடசாலைக்கென வழங்கப்பட்ட லப்டப் கணனி மற்றும் புறஜெக்டர் என்பன பொருட் பதிவேட்டில் பதியப்படவுமில்லை. பற்றுச்சீட்டும் வழங்கப்படவில்லை.
4. 2018
ஆம் ஆண்டு நடனவிழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 25000/- பெறுமதியான காசோலை வைப்பிலிடப்படவில்லை.

இவ்வாறான பாரிய மோசடியில் ஈடுபட்ட ஒரு அதிபரை அப்பாடசாலையிலேயே தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதித்துஉதவி அதிபரை ட்டும் ஆரம்பக்கட்ட விசாரணைக்காக இடமாற்றம் செய்யும் செயற்பாடு வடமாகாண கல்விப்பணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது

குறித்த உதவி அதிபரை மட்டும் இடமாற்றுவதன் மூலம் சாட்சியங்களையும், தடயங்களையும் அழிக்கக்கூடிய உதவியைப் புரிவதற்காகவே - வடமாகாண கல்வி அதிகாரிகளால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.
ஏனெனில் - யாழ்.வலய அதிகாரி ஒருவர் அதிபருக்கு எதிராக சாட்சி வழங்க தயாராயிருக்கும் அன்பளிப்பாளர் ஒருவரை அழைத்து - அதிபரின் முறைகேட்டை பெரிதுபடுத்தவேண்டாம் என கேட்டுள்ள விடயம் எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விசாரணையின் பொருட்டு - சாட்சியங்கள் மறைக்கப்படாமலும் அச்சுறுத்தப்படாமலும் இருக்கும் பொருட்டு குறித்த பாடசாலையின் அதிபரும் ஒரே நேரத்தில் இடமாற்றப்பட்டு கணக்காய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.

இவ்விதமான வடமாகாண கல்வி அதிகாரிகள் - முறைகேட்டாளர்களுக்கு சாதகமாக செயற்படும் போக்கு மிகப்பெரிய முறைகேடாகும்.
இந்த முறைகேடுகள் தொடர்பாகநீதியான விசாரணையை இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.

எனக் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது


Friday, February 22, 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் 25.02.2019 போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு




இலங்கையில் இடம்பெற்ற  போர்க்குற்றங்களின் முக்கிய விடயங்களான வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் மனிதத்துவத்துக்கு  ஒவ்வாத குற்றங்கள்  தொடர்பாகபக்கச்சார்பற்ற விசாரணைகளை சர்வதேசம் மேற்கொண்டு பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னெடுக்க வேண்டும் என்னும் தீர்மானத்தை வலியுறுத்திவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் - நீதி கோரி எதிர்வரும் 25.02.2019 திங்கட்கிழமை நடத்தப்படவுள்ள கதவடைப்பு மற்றும் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலிலிருந்து ஆரம்பிக்கவுள்ள  பேரணி  போராட்டங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவித்துக்கொள்கின்றது

அன்றைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என்பதுடன் - ஆசிரியர்கள்  பூரண கதவடைப்பு போராட்டத்துக்கு மனமுவந்து ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மாணவர்களை பெற்றோர் தமது கண்காணிப்பில் வைத்து பாதுகாக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்

கடந்த இரண்டு வருடங்களாகதமது உறவுகளைத் தேடி வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் உறவுகளுக்குநீதி வேண்டிய போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு வழங்கவேண்டியது மனிதத்துவத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் தார்மீகக் கடமையாகும்

இத்தகைய தார்மீகப் பொறுப்பை உணர்ந்தவர்களாகசமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து இப்போராட்டம் வெற்றிபெற பங்களிப்பு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம். தமது உறவுகளைக் தேடி அலையும் வேதனையுடன் - கடந்த இரண்டு வருடங்களாகவீதிகளில் இருந்து தமக்கு நீதி கோரிப் போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் உணர்வுகளுக்கு ஒவ்வொருவரும் மதிப்பளிக்க வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்து தமது இறுதிக்காலம் வரை ஏக்கத்துடனேயே தமது வாழ்வை முடித்த தாய், தந்தையருக்கும் நாம் மதிப்பளிக்கவேண்டும்.  

இந்த வகையில் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளின் 25.02.2019 திங்கட்கிழமை நடைபெறவுள்ள போராட்டங்கள்  வெற்றிபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்