Wednesday, September 21, 2016

அதிபர் சேவையின் முரண்பாடுகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட்டும் : ஜனாதிபதி மேலதிக செயலாளர் தெரிவிப்பு


அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று 21.09.2016 புதன்கிழமை காலை 10.30 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய சுமார் 500 வரையான அதிபர்கள் ஜனாதிபதி காரியாலயம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதன்போது பொலிஸார் லோட்டஸ் வீதியில் வைத்து ஊர்வலத்தை வழிமறித்தனர். இதன்போது ஏற்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து – தொழிற்சங்க உறுப்பினர்கள் ஐவரை பொலிஸார் தமது வாகனத்தில் ஜனாதிபதி காரியாலத்துக்கு ஏற்றிச்சென்றனர்.


இங்கு வைத்து ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப்பெருமவுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்போது - இலங்கையின் சகல அதிபர்சேவைகளிலுமுள்ள அதிபர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தொழிற்சங்க உறுப்பினர்களால் தெளிவுபடுத்தப்பட்டதுடன் - எழுத்துமூல ஆவணமும் வழங்கப்பட்டது.  அதிபர்களின் பிரச்சினைகளின் நியாயப்பாட்டை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதுடன் - மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக நாளை அறிவிப்பதாகவும் - விரைவில் கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முயல்வதாகவும் மேலதிக செயலாளர் உறுதியளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Monday, September 19, 2016

“எழுக தமிழ்” பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு


24.09.2016 அன்று நடைபெறவுள்ள “எழுக தமிழ்” பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் இணைந்து தமது ஒத்துழைப்பினையும் ஆதரவினையும் தெரிவித்துக் கொள்வதாக  கூட்டறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ளும் - பிரச்சினைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முகமாக – எதிர்வரும் 24.09.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் எமது பூரண ஒத்துழைப்பினையும் அனுசரணையையும் வழங்கி நிற்கின்றோம்.

நடந்துமுடிந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்னய சூழ்நிலைகளும் - நம்பிக்கையூட்டக்கூடிய அளவுக்கு - தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. மாறாக – தமிழ் மக்களின் 70 ஆண்டுகால அரசியல் கோரிக்கைகைகள் அனைத்தையும் பெறுமதியற்றதாக மாற்றுவதற்குரிய சூழ்ச்சியே தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

தமிழர் தாயகமானது - சிங்கள பௌத்த மயமாக்கலுக்குட்பட்டு - பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பௌத்தர்களையும், சிங்கள சகோரர்களையும்  வெறுக்கும் மதவாதிகளோ அல்லது இனவாதிகளோ நாமல்ல. மாறாக - எமது இனத்துக்கான அடையாளங்களை நாமாகவே தீர்மானிக்கக்கூடிய அதிகாரத்தினை வழங்காது – அடக்குமுறையின் அடையாளமாக – சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினைத் திணிக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. இது தமிழரின் தனித்துவத்தை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடாகும். எனவே – தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்று தனித்துவத்தை அழிக்கும் வேலைத்திட்டத்தினை செய்யும் இராணுவம் எமது மண்ணிலிருந்து முதலில் அகற்றப்படவேண்டும்.

கடந்த 30 ஆண்டு காலமாக சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு - அரச படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமது மக்களின் பூர்வீக நிலங்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு -  மக்களுக்கு வழங்கவேண்டும்.

இறுதி யுத்தத்தின் முன்னரும் பின்னரும் கடத்தப்பட்ட - சரணடைந்த பின்னும் காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவரின் நிலைமை தொடர்பாகவும் உண்மை கண்டறியப்பட்டு - பொறுப்புக் கூறல் இடம்பெற வேண்டும்.

இன அழிப்பு தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான – பக்கச்சார்பற்ற – சர்வதேச விசாரணை வேண்டும். அத்துடன் - இவையெல்லாம் மீண்டும் ஏற்படாத வண்ணம் தமிழர் தேசம் அதன் தனித்துவம், இறைமை, சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சம~;டி தீர்வுத்திட்டம் உள்ளடக்கிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும்.

இவைபோன்ற கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் இப்பேரணியில் கலந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒட்டுமொத்த தமிழரின் குரலாக ஓங்கி ஒலிக்கவேண்டும். தற்போதைய சூழலில் ஒன்றிணைந்த மக்கள் எழுச்சி ஒன்றே தமிழ் மக்களின் வரலாற்றினை தீர்மானிக்கும் என்பதை அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் சிந்தித்து செயற்படவேண்டும். ‘எழுக தமிழ்” பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, September 9, 2016

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்




யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் - சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இப்பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போது – அப்பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட - அம்மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை – மாணவிகள் மேல் வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
இம்மாணவிகள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் - செய்திகளாகவும் வீடியோ ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் கூட - இதுவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது நடந்து முடிந்த ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துகின்றது.
மிக அண்மைக்காலமாக – மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மட்டில் அதீத அக்கறைகொண்டவர்கள் போல் செயற்பட்டு வந்த சட்டம் - இன்றுவரை உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் மீது - எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் காரணம் ஏன்? என்பது புரியவில்லை.
எனவே – சட்டம் அனைவருக்கும் சமமாக பின்பற்றப்படவேண்டும் என்பதுடன் - வன்முறையை கையாண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Wednesday, September 7, 2016

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரின் அதிகாரதுஸ்பிரயோகம் முறையான விசாரணை கோருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்




முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரின் அதிகாரதுஸ்பிரயோகம் தொடர்பாக – முறையான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதன் பிரதிகளை வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வியமைச்சர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பிவைத்துள்ளது.


மு/புதுக்குடியிருப்பு ...............வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றும் ................................என்பவருக்கு NP/44/20/01/05 இலக்க 30.08.2016 திகதியிடப்பட்ட முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரினால் சுயவிபரக்கோவையினுள் இடப்பட்ட கடிதம் எவ்விதமான ஆசிரியரின் நியாயப்பாடுகளையும் ஆராயாமல் மேற்கொள்ளப்பட்ட அதிகாரதுஸ்பிரயோக நடவடிக்கையாகும். (கடிதப் பிரதி இணைக்கப்பட்டுள்ளது)
குறித்த கற்பித்தல் நிகழ்வு 30.08.2016 அன்று நடைமுறைப்பட்டுத்தப்பட்டுள்ளது.  இதற்கு முன்னைய நாள் 29.08.2016 அன்றே அதிபரினால் ஆசிரியருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தெரியப்படுத்தப்பட்டபோதே – குறித்த ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தனது சுகயீனம் தொடர்பாகவும், இதனால் வரமுடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செயற்பாடு தவணை விடுமுறைக் காலங்களிலேயே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பாடசாலை விடுமுறை விடுவதற்கு முன்னர் - முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையினர் - திட்டமிடல்களை மேற்கொண்டு எவ்விதமான எழுத்துமூலமான அறிவித்தல்களையும் ஆசிரியருக்கு வழங்கவில்லை.  ஒழுங்காக திட்டமிடல்களை மேற்கொண்டு – ஆசிரியர்களுக்குரிய சாதகமான நேரங்களையும், பிரச்சினைகளையும் அறிந்து செயற்படுத்துவதை விடுத்து – அச்சுறுத்தும் பாணியில் விடுமுறைக்கால செயற்பாடுகளை முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் மேற்கொண்டமையையும் - அதேவேளை சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் ஏதும் கோராமல் - ஆசிரியர்களை அச்சுறுத்தும் பாணியில் குறித்த முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆசிரியரின் சுயவிபரக்கோவையில் ஆசிரியரை அச்சுறுத்தும் விதமாக தனது கடிதத்தை இட்டு - மேற்கொண்ட இந்த முறைகேடான செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தாபன விதிக்கோவையை மீறும் செயற்பாடுமாகும்.
அத்துடன் - செல்வி .............................. என்னும் குறித்த பாடசாலை மாணவி இவ்வருட 2016 ஆங்கில தினப்போட்டியில் கவிதைப்போட்டியில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றிருந்த போதிலும் - மாகாணமட்டப் போட்டியில் கலந்துகொள்ள மாணவிக்கோ, பாடசாலை அதிபருக்கோ அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இது முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஒன்றாகும். இவ்விடயம் குறித்த பாடசாலை அதிபரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)
அத்துடன் - குறித்த மாணவி மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றாமையால் மிகுந்த மனவுழைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என அவரது தாயார் மூலமும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் - முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையினர் தமது தவறுகளை மூடி மறைப்பதற்கு – இந்தப் பழியையும் குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் ஆசிரியர் மேலும்  போட்டு – தாம் தப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டு - ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரின் திட்டமிடாத செயற்பாடுகளால் ஏற்படும் விபரீதங்களை - இறுதியில் ஆசிரியர்கள் மத்தியில் திணித்து தாம் தப்பிக்க முயலும் செயற்பாடுகள் தொடர்பாக - உடனடியாக முறையான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.