Saturday, December 7, 2019

முறைகேடுகளை மறைத்த அதிகாரிகளின் நாடகம்; இ.ஆ.சங்கம் கண்டனம்!


யா/இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை. அதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - நாடகமொன்று அரங்கேற்றப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக - நீதியான மீள் விசாரணை கோரி - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன;
யா/இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர்தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை. அதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - விசாரணையாளர்கள் செயற்பட்டுள்ளமையும் அப்பட்டமாக தெளிவாகியுள்ளது. 
இதற்கு வடமாகாண கல்வியமைச்சும் உடந்தையாக இருந்துள்ளதோ எனும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எம்மால் குறித்த பாடசாலையின் அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக - விபரங்களுடனேயே வடமாகாண கல்வியமைச்சிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
பலமாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையிலேயே - எமது தொடர் அழுத்தத்துக்காக - எம்மைப் போக்குக்குக்காட்டும் நடவடிக்கையாகவே வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்டுள்ளதோ எனும் அதிருப்தி எமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்திலேயே தற்காலிக பொருள் பதிவேடு போன்று ஒன்றை தயாரித்து முறைகேடுகளை மூடிமறைக்க பலரது அனுசரணை பெறப்பட்டுள்ளமையை ஊகிக்க முடிகின்றது.

நிதிப்பிரமாணக்குறிப்பின் பிரகாரம் பாடசாலைப் பொருட்பதிவேட்டைத் தவிர்த்து - தற்காலிக பொருட்பதிவேடு ஒன்றை பேணும் நடைமுறை இல்லை. நேர்மையான நிர்வாகத்துக்கு அது அவசியமுமில்லை.
அவ்வாறு இருக்க - தற்காலிகப் பொருட்பதிவேட்டைத் தயாரித்து முறைகேட்டை மூடிமறைப்பதற்கான நாடகமே அரங்கேற்றப்பட்டுள்ளது.

விசாரணை அறிக்கையின் பிரகாரம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 26.02.2019 ஆம் திகதிய கடித முறைப்பாட்டின் அடிப்படையிலான அவதானிப்புகள் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் - முறைப்பாட்டைச் செய்திருந் இலங்கை ஆசிரியர் சங்க தரப்பிடமிருந்து - வாக்குமூலம் ஒன்றைக்கூட விசாரணைக்குழு பெற்றிருக்கவில்லை. 
முறைப்பாடு செய்த தரப்புக்களில் ஒன்றான இலங்கை ஆசிரியர் சங்கத்தினரிடம் வாக்குமூலம்பெறாமல் நடைபெற்ற இந்த விசாரணை - திட்டமிட்டு முறைகேடான முறையில் திசைதிருப்பப்பட்டுள்ளது.
பாடசாலை அனுமதிக்காக பணம் பெறுவது என்பதே முறைகேடான நடைமுறையாகும்.
எனவே - இந்த விசாரணையில் பாடசாலை அதிபர் மாணவர் அனுமதிக்காக பணமாகவும் பொருளாகவும் பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுவே - சுற்றுநிருபத்தை மீறிய தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த செயற்பாடுகளுக்காகவே அண்மையில் பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைதும் செய்யப்பட்டிருந்தார்.
ஆனால் - முறைகேடாக வாங்கிய பணத்துக்கு எம்மால் ஆதாரங்கள் திரட்டப்பட்டிருந்த நிலையில் - போலியான நடைமுறைகளூடாக தற்காலிக பொருட்பதிவேடு என்று தயாரிக்கப்பட்டமை தெளிவாகிறது.
இந்த சுற்றுநிரூபத்தை மீறிய நடைமுறையை விசாரணையாளர்கள் நியாயப்படுத்த முயன்றமை வன்மையான கண்டனத்துக்குரிய விடயமாகும்.

2017 ஆம் ஆண்டு ரூபா 100,000/- மாணவர்களுக்கான இறுதி கௌரவிப்பின் போது பணமாகவே மேடையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணம் வங்கியில் வைப்பிடப்படாமலிருந்த நிலையில் - அவை ஆவணங்களின் படி பொருட்களாகவே பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணையாளர்களால் மூடிமறைக்கப்பட்டுள்ளது.

பொருட்கொள்வனவு எனக் குறிப்பிடும் விசாரணைக்குழு - பொருட்கொள்வனவு தொடர்பாக உரிய நடைமுறை பின்பற்றப்பட்டதா? என்பது குறித்தும் தெளிவுபடுத்தாமல் மூடிமறைத்துள்ளது.

எம்மால் முறைப்பாட்டில் வழங்கப்பட்ட சில முறைப்பாடுகள் தொடர்பாக எவ்வித கருத்தும் விசாரணையாளர்கள் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. அவையாவும் திட்டமிட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்குழுவில் மூவர் நியமிக்கப்பட்டிருந்தனர். அதில் வடமாகாண கல்வித் திணைக்கள கணக்காளரும் ஒருவராவார்.
ஆனால் - குறித்த விசாரணை கணக்காளரின் பிரசன்னமின்றியே நடைபெற்றுள்ளன. எம்மால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக - ஏனைய சாட்சியாளர்கள் எவரும் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்படாமல் ஒரே நாளில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளமை வேடிக்கையான விசாரணைப் பொறிமுறையாகும். இப்பொறுப்பற்ற பொறிமுறைக்கு எமது வன்மையான கண்டத்தையும் தெரிவிக்கின்றோம்.

யா/இந்து மகளிர் ஆரம்பப்பாடசாலை அதிபர் தொடர்பாக நடைபெற்ற விசாரணை கண்துடைப்பானதும், உரிய நடைமுறை பின்பற்றப்படாத பக்கச்சார்பானதுமாகும்.

எனவே - உரிய முறையில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மீண்டும் வலியுறுத்துகிறது.
இவ்விடயம் தொடர்பாக நாம் தங்களிடமிருந்து அதிக கரிசனையுடைய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை இருவாரங்களுக்குள்  எதிர்பார்க்கின்றோம்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Thursday, November 14, 2019

பாடசாலைகளில் டெங்கு அச்சுறுத்தல் தொடர்பாக உடன் நடவடிக்கை வேண்டும்! -ஜோசப் ஸ்ராலின் -

 வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் பல மாணவர்களுக்கு டெங்கு நோய் ஏற்பட்டு - அப்பாடசாலையின் சூழலில் டெங்கு நோய்க்குரிய குடம்பிகளும் கண்டறியப்பட்ட நிலையில் - குறித்த பாடசாலை இன்று மூடப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக - இலங்கை
ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு - உடனடியாக தற்காலிக தீர்வு காண்பதில் மட்டுமே அதிகாரிகள் கரிசனை செலுத்தி வருகின்றனர். மாறாக - நிரந்தர தீர்வுகளை முன்வைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கரிசனை செலுத்தி - பொறிமுறைகளை உருவாக்குவதே பொருத்தமாக அமையும்.

பாடசாலையில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய உயிர்கொல்லி டெங்கு நோய் தொடர்பாக - பாடசாலை நிர்வாகம் பொறுப்பற்று செயற்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் அனைத்து துறைசார் அதிகாரிகளும் கூட - உரியமுறையில் செயற்பட்டிருக்காமையும் மாணவிகள் பாதிக்கப்பட்டமைக்கான காரணியாகும்.

ஒரு பாடசாலையை மூடுவதால் மட்டும் பிரச்சினைக்கு முடிவுகாணமுடியாது. டெங்கு நுளம்புகள் பாடசாலை எல்லைக்குள் மட்டுமல்லாமல் அயலிலுள்ளவர்களின் மீதும் நோயைப்பரப்ப கூடியது. ஜனாதிபதி தேர்தலையொட்டிய விடுகை காலத்தில் உடனடியாக உரிய திட்டத்தை உருவாக்கி உரிய நடவடிக்கைகள் அனைத்து தரப்பாலும் முன்னெடுக்கப்படவேண்டும். 

அத்துடன் - அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய அனைத்து வழிகளையும் தடைசெய்து - மாணவர்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவண்ணம் - பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு - தொடர் கண்காணிப்பில் பாடசாலைகள் நிர்வகிக்கப்படுவதை சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tuesday, November 5, 2019

அதிபர், ஆசிரியர் பணி பகிஸ்கரிப்பு 8 ஆம் திகதி நடைபெறாது: - ஜோசப் ஸ்ராலின் -


எதிர்வரும் 8 ஆம் திகதி – அதிபர், ஆசிரியர் தொழிங்சங்கங்களினால் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்பகிஸ்கரிப்பு, ஜனாதிபதித் தேர்தல் முடிவுறும் வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக -தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 05.10.2019 அமைச்சரவை கூடியிருந்த போதும் - சம்பள ஆணைக்குழுவினரால் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமையாலேயே முடிவினை மேற்கொள்ள முடியாது போனதாக கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் - சம்பள ஆணைக்குழுவினரின் தீர்மானம் ஆணைக்குழு உறுப்பினர்கள் ஒன்றாகக் கூடியே எடுக்கமுடியும் எனவும் -  எதிர்வரும் 14 ஆம் திகதியே சம்பள ஆணைக்குழு கூடவுள்ளதால்- அந்த அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை என்வும் கல்வியமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் - ஏற்கனவே தீர்மானித்தபடி எதிர்வரும் 8 ஆம் திகதி – பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்த போது - தேர்தல்கள் ஆணையாளர் தொழிற்சங்க உறுப்பினர்களை அழைத்து கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது – தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் - தொழிற்சங்கப் போராட்டம் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தும். அதேவேளை – தேர்தல் காலங்களில் - புதிய தீர்மானங்களை அரசாங்கத்தால் எடுப்பதும் வாக்குறுதிகளை வழங்குவதும் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடாகவே அமையும். இதனால் - அரசாங்கம் எடுக்கும் முடிவுகளிலும் தேர்தல் திணைக்களம் தலையிடவேண்டிய நிலை ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல் - தேர்தல் கடமைகளில் - அதிபர், ஆசிரியர்களும் ஈடுபடவுள்ள நிலையில் - அவர்களுக்கான தேர்தல் வகுப்புகளும் நடைபெறவுள்ள நிலையில் - தேர்தல் செயற்பாடுகளையும் தொழிற்சங்கப்போராட்டம் பாதிப்படையச் செய்யும். இதனால் - இப்போராட்டத்தை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடத்தவேண்டாம் என தேர்தல் ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் - அதிபர், ஆசிரியர் தொடர்பான சம்பளப் பிரச்சினை தொடர்பாக – விரைவாக பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பள ஆணைக்குழுவுக்கும், கல்வியமைச்சுக்கும் தான் எழுத்துமூலம் கோரிக்கையை முன்வைப்பதாகவும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு – தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாகவும் - நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர்  - தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும்  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Friday, November 1, 2019

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அசமந்தம்; நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

வடமாகாணம், வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட ஏராளமான ஆசிரியர்கள் -தபால் மூலம் வாக்களிப்பதற்கு உரிய நேரத்தில் விண்ணப்பித்திருந்தும்   - வவுனியா வடக்கு கல்வி அதிகாரிகளின் அசண்டையீனத்தினால் அவர்கள் வாக்களிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முடிவுத்திகதியான 04.10.2019 அன்று விண்ணப்பங்களை தேர்தல் திணைக்களத்துக்கு அனுப்பாமல் 08.10.2019 இன் பின்னரே வலயக்கல்வி பணிமனையால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. 
இவர்களின் அசண்டையான தாமதம் காரணமாக நூறுக்கும் அதிகமான யாழ்மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் அதிகாரிகளின் அசண்டையீனங்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி - இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடிதத்தின் பிரதி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
.

Friday, October 11, 2019

அதிபர், ஆசிரியர் இடைக்கால சம்பள திட்டம்; அடுத்தவாரம் அமைச்சரவையில் அங்கீகாரம்!



இன்று 11.10.2019 சம்பளஆணைக்குழுவினருக்கும், கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு சாதகமாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

அவர் சந்திப்பு குறித்து மேலும் தெரிவிக்கையில்-
இதுவரை அதிபர்,ஆசிரியர்களுக்கு சம்பள முரண்பாடு எதுவும் இல்லை என கூறிவந்தவர்கள், 
அதிபர்,ஆசிரியர் சம்பள முரண்பாடு உள்ளதாக வரலாற்றில் முதல் தடவையாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் இடைக்கால சம்பள திட்டம் தயாரிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொண்டமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதற்கமைய அந்த இடைக்கால சம்பள திட்டத்தை தயாரித்து - அடுத்தவாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்படும் என உறுதியளித்துள்ளனர்.

 முழு சம்பள முரண்பாட்டையும் நீக்க புதிய ஆணைக்குழுவை உருவாக்கி அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவாக மேற்கொள்வதாகவும் இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Tuesday, October 8, 2019

அதிபர், ஆசிரியர் சம்பள விவகாரம்; நாளை மேலுமொரு அமைச்சரவைப்பத்திரம்!



கல்வியமைசாசின் செயலாளருக்கும் அதிபர், ஆசிரியர் தொழில் சங்கங்களுக்குமிடையில் இன்று 08.10.2019 மாலை சந்திப்பொன்று நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கல்வியமைச்சு, தொழிற்சங்கங்களுடனான சந்திப்பு சம்பள ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

நாளை 09.10.2019 நடைபெறவுள்ள அமைச்சரவையில் சம்பள சீராக்கம் குறித்த கடந்த அமைச்சரவை தீர்மானத்தின் விரிவாக்கம் குறித்து கல்வியமைச்சால் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அவசியமற்ற தாள்கள் நிரப்பும் செயற்பாடு குறித்தும் தெளிவான சுற்றறிக்கையொன்று கல்வியமைச்சால் வெளியிடப்படவுள்ளது.

தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டம் வழங்குவது தொடர்பாகவும் எதிர்காலத்தில் அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்ய இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்தார்.

Saturday, October 5, 2019

வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளரின் அடாவடி செயற்பாடுகள்; ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!


வடமாகாணத்தின் வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளரால் முறைகேடான விதத்திலான இடமாற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இடமாற்றச்சபையின் எந்த அங்கீகாரமும் இன்றி சில ஆசிரியர்களைப் பழிவாங்குவது போன்றும், சில தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாதகமாகவும் செயற்படுத்தும் வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளரின் மிக மோசமான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்விடயங்கள் தொடர்பாக -வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும், வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கும் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் இதுவரை  பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படாமையே - வலிகாமம் வலய கல்விப்பணிப்பாளரின் இத்தகைய செயற்பாட்டுக்குக் காரணமாகும்.

சாதாரணமாக தேர்தல் காலங்களில் எந்த இடமாற்றங்களையும் வழங்க முடியாது. இத்தகைய சூழலிலும் வலிகாமம் வலயக்கல்விப்பணிப்பாளர் இடமாற்றங்களைத் தொடர்ச்சியாக முறைகேடாக செய்துவருவது - அரசியல் பின்புல செயற்பாடாக இருக்கலாம் எனவும் நாம் சந்தேகிக்கின்றோம்.

ஆசிரியர்களின் மேன்முறையீடுகளுக்கு கூட சந்தர்ப்பம் வழங்காமல் - அவர்கள் பணியாற்றிய பாடசாலைகளில் கையொப்பமிட அனுமதிக்காமல் அடாவடித்தனமாக செயற்பட்டு வருகின்றார். ஆசிரியர்களுக்கு உள்ள மேன்முறையீடு செய்யும் உரிமையை நசுக்கும் அளவுக்கு வலிகாமம் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு - சட்டத்தை மீறும் அதிகாரங்களை வழங்கியது யார்?

இவரின் இந்த அடாவடித்தனத்துக்கு - வடமாகாண கல்வியமைச்சு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

வடமாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும் இடையில் நடந்த சந்திப்பில் - தொழிற்சங்கங்களுடன் கல்வியமைச்சும் வெளிப்படைத் தன்மையாக செயற்பட தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
இச்சந்திப்பில் - வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், வடமாகாண கல்விப்பணிப்பாளரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆனால் - இந்த முறைகேடான இடமாற்றங்கள் தொடர்பான விபரத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வலிகாமம் வலயக்கல்விப்பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளரிடம் கேட்டபோதும் - எமக்கு விபரங்கள் தொடர்ச்சியாக மறைக்கப்படுகின்றன.

வடமாகாண ஆளுநருடனான சந்திப்பில் எட்டப்பட்ட கருத்துக்களை மதித்து - நாம் பல தடவைகள் வடமாகாண கல்வி செயலருக்கும், வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரிவித்திருந்த நிலையில் - இத்தகைய பல முறைகேடான இடமாற்றங்களிற்கு நடவடிக்கை எடுக்காததன் பின்னணி என்ன? என்பதை வடமாகாண ஆளுநர் கண்டறிய வேண்டும்.

இடமாற்றச்சபையின்றி வலிகாமம் கல்விப்பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றங்கள் அனைத்ததையும் உடன் நிறுத்தி - வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் -  வலிகாமம் வலய கல்விப் பணிப்பாளரின் அடாவடித்தனங்களுக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Monday, September 30, 2019

அதிபர், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக்க இணக்கம்; நாளை அமைச்சரவை பத்திரம் தாக்கல்!

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டத்தின் விளைவாக - அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக ஆராய உருவாக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை சந்திப்பு நடைபெற்றது.
இச்சந்திப்பில் - அமைச்சர்களான ரவூப்ஹக்கீம், ரஞ்சித் மத்தும பண்டார, ஹர்ஷ டீ சில்வா, ஏரான் விக்கிரமரத்ன, அசோக அபேசிங்க ஆகியோருடன் நிதியமைச்சின் செயலாளர், கல்வியமைச்சின் செயலாளர் உட்பட உயர்மட்ட குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் - ஆசிரியர் அதிபர் சம்பளத்தை அதிகரிப்பதாக இருந்தால் - பொது அரச சேவையிலிருந்து வெளியே எடுத்து - அதிபர், ஆசிரியர் சேவையை ஒன்றிணைந்த சேவையாக்கவேண்டும் என இணக்கம் காணப்பட்டது.
அத்துடன்- 
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு உள்ளதை ஏற்றுக்கொண்ட அமைச்சரவை உபகுழு, அதனை நிவர்த்தி செய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை நியமிப்பதற்கும் தீர்மானித்துள்ளது. 
நாளை செவ்வாய்க்கிழமை இணைந்த சேவை <Closed Service > யாக்குதல் மற்றும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பான ஆணைக்குழு நியமிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் நிறைவேற்றப்படும் எனவும் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த அனைத்து அமைச்சரவை உபகுழு அமைச்சர்களினதும் கையொப்பத்துடனான உறுதிமொழியும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Thursday, September 26, 2019

இன்று 27ம் திகதியும் அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம் தொடரும்

இன்று 27ம் திகதியும் அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம் தொடரும்.ஜனாதிபதி செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு பொருத்தமான எவரும் சமூகமளித்திருக்கவில்லை.
இதனால் - தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இன்றும் திட்டமிட்டவாறு அதிபர் ஆசிரியர்களின் சுகவீன லீவு போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை 27ம் திகதியும் போராட்டம் தொடரும்; ஜனாதிபதி செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு பொருத்தமான எவரும் சமூகமளிக்கவில்லை!


இன்று 26 ஆம் திகதி - கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையம் முன்பாக திரண்ட பல்லாயிரக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் - லோட்டஸ் வீதியில் பேரணியாக வந்தபோது - ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் - பொலிஸாரின் நீர்பாய்ச்சும் வாகனம் சகிதம் கலகமடக்கும் பொலிஸாரால் பேரணி இடைமறிக்கப்பட்டது.

பின்னர் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் உள்ளிட்ட ஐவர் ஜனாதிபதி செயலகத்துக்கு பேச்சுவார்த்தையென அழைக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் - ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பாக பதில் வழங்கக்கூடிய எவரும் காணப்படவில்லை. இதனால் பதிலளிக்கக்கூடியவருடனேயே பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி செயலக உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பானவர் எவரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாதிருந்த நிலையில் -அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பில் இணக்கப்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் - நாளை 27 ஆம் திகதியும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன லீவு போராட்டத்தை ஏற்கனவே அறிவித்தவாறே தொடர்வர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

சில பாடசாலை அதிபர்களுக்கு சிலரால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் - அதனால் - ஆசிரியர்களை பாடசாலை வருமாறு அதிபர்கள் ஒரு சிலர் அழைப்பதாகவும் தகவல்கள் எமக்கு கிடைக்கின்றன.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அதிபர், ஆசிரியர்கள் பயப்படதேவையில்லை. இத்தகைய அச்சுறுத்தல் அனைத்தையும் - ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு - இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்பெடுக்கும் என மீண்டும் தெரிவிக்கின்றோம்.

27 ஆம் திகதி நாளையும் பணியை புறக்கணித்து - போராட்டத்தை இன்றுபோல் வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Wednesday, September 25, 2019

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன் பல்லாயிரமாக திரண்டனர் அதிபர், ஆசிரியர்கள்!






ஆறு கோரிக்கைகளை முன்வைத்து முப்பது ஆசிரியர் தொழிற்சங்கங்கள்  இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன.

சம்பளம் முரண்பாடு , சம்பள உயர்வு உட்பட ஆறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்களும் அதிபர்களும் சுகவீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப்  ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிபர்களிதும் ஆசிரியர்களினதும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதாக கல்வி அமைச்சு பலமுறை எமக்கு உறுதி மொழி வழங்கிய போதிலும் அது நிறைவேற்றப்பட வில்லை. இது தொடர்பாக  பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

நாம் 26 ஆம் திகதி இன்று ஆரம்பித்துள்ள சுகவீன லீவு போராட்டத்திலும் - பேரணிகளிலும் - அதிபர்கள் ஆசிரியர்கள் அச்சம் இல்லாமல் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இன்று காலை 11 மணியளவில் கோட்டை ரயில் நிலையத்தின் முன்னர் சகல ஆசிரியர் தொழிற் சங்கங்களும் இணைந்து மாபெரும் ஆர்பாட்மொன்றை நடத்தினோம். இலங்கையின் சகல மாவட்டங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர் என்றும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Tuesday, September 24, 2019

26,27 திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்; வதந்திகளை நம்பவேண்டாம்!

26,27 ஆம் திகதிகளில் அதிபர், ஆசிரியர்களின் சுகயீன லீவு போராட்டம்  திட்டமிட்டபடி நடைபெறும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை-

26,27ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள அதிபர்கள் ஆசிரியர்களின் சுகவீன லீவு  போரட்டத்திற்கு வடமாகாண புதிய அதிபர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சிலர் 'நடைபெறாது' என பொய்யான செய்திகளை பரப்பவும் - போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்படவும் முயல்வதாக தகவல் கிடைத்துள்ளன. 

குறித்த சங்கமொன்றை - போராட்டத்தில் இணையுமாறு எமது சங்க உறுப்பினர்கள் வாயிலாகவும் கோரிக்கை அவர்களுக்கு விடுத்திருந்தோம் - எவ்வித பதிலும் எமக்கு வழங்காமல் - தம்முடன் கலந்துரையாடப்படவில்லை என்ற பொய்யான செய்திகளை கூறி வடக்கு கிழக்கில் அதிபர் ஆசிரியர்களை குழப்ப முயல்கின்றது.

இலங்கையின் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அதிபர், ஆசிரியர்களின் உரிமைகளுக்காக போராட தயாராக உள்ள நிலையில் - 
வடக்கு கிழக்கு கல்வியமைச்சு தவிர்ந்த எந்த வாசற்படியையும் மிதிக்காத இவர்கள் - வடக்கு கிழக்கில் கூட ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத இவர்கள் - தேசிய பாடசாலைகளுக்கான இடமாற்ற சபையில் கூட பங்குகொள்ள தகுதியற்ற இவர்கள் - மத்திய கல்வியமைச்சுக்கும் அரசுக்கும் அழுத்தம் கொடுக்கத் தகுதியுள்ளவர்களா? அவர்கள் தீர்வைப் பெற்றுத்தருவார்களா? என ஆசிரியர் அதிபர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

அவ்வாறான போலித்தனமானவர்களின் செய்திகளை நம்பவேண்டாம். எனவும் 26,27 ஆம் திகதிகளில் நடபெறவுள்ள சுகயீன லீவுப் போராட்டத்தில் அதிபர் ஆசிரியர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுமாறும் இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்புவிடுக்கின்றது.



Saturday, September 21, 2019

26,27 அதிபர், ஆசிரியர் சுகயீன லீவு போராட்டம்; பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும்!


இலங்கையில் நாடளாவிய ரீதியாக எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் அதிபர் ஆசிரியர்கள் - சுகயீன லீவுப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்விரு நாட்களும் அதிபர் ஆசிரியர்கள்    சுகயீன லீவை அறிவித்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் - ஒன்றுபட்டு தமது உரிமைக்காக செயற்படவுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சுகயீன லீவை - சுகயீன லீவை எடுக்கும் நடைமுறையை பின்பற்றி திணைக்கள தலைவருக்கு  கட்டாயம் அறிவித்தால் போதுமானது. 

இந்த இரண்டு தினங்களிலும் - எவ்வித காரணங்களுக்காகவும் ஆசிரியர்களோ அதிபர்களோ எந்தவொரு அதிகாரிகளின் கட்டளைக்குப் பயந்தும், பணிந்தும் பாடசாலைக்கு செல்லவேண்டிய அவசியமில்லை. 

இச் செயற்பாட்டின் முழுப்பொறுப்பையும் போராட்டத்தில் பங்கு கொள்ளும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் - 
இரண்டு நாட்களும் பாடசாலை செயற்பாடுகளில் தடங்கல் ஏற்படுவதற்கு - தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பெடுக்கவேண்டும். எமது நியாயமான தொழிற்சங்கப் போராட்டத்தைப் புரிந்து கொண்டு பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீண்டகாலமாக நிலவிவரும் அதிபர் , ஆசிரியர்களின்  சம்பள முரண்பாட்டை தீர்த்து சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் - போலியான வாக்குறுதிகளை வழங்கி அரசு தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளது.

அரசியல் ரீதியாக நியமனங்களை வழங்கி கல்வித்துறையை சீரழித்து வருகின்றது.

ஆசிரியர் அதிபர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்த முயற்சிக்கிறது.

பிரிவெனா மற்றும் நன்கொடை பெறும் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தை வழங்கப் பின்னடிக்கிறது.

ஆசிரியர்களுக்கு தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது.

தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% வீதத்தை ஒதுக்காமல் பெற்றோரிடம் பணம் அறவிட்டு வருகின்றது.

இவற்றிற்கு நாம் தீர்வுகாணவேண்டும்.
வெட்கக்கேடான வேதனத்தைப் பெற்றுவரும் அதிபர் ஆசிரியர்களாகிய நாம் - எமது உரிமைகளுடன் சேர்த்து இலங்கையில் தரமான கல்விக்கட்டமைப்பை உருவாக்கவும் -இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். 

இந்த வகையில் -
அனைவரும் இணைந்து போராட்டம் வெற்றிபெற பலம்சேர்க்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Wednesday, September 11, 2019

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று சந்திப்பு


வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் - இன்று 11.09.2019 புதன் கிழமை மாலை 2.15 மணியளவில் சந்திப்பொன்று நடைபெற்றது.
கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், உதவி செயலாளர், வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். 

வடமாகாணத்தின் சில பாடசாலைகளில் நிகழும் அதிபர்களின் முறையற்றசெயற்பாடுகள் தொடர்பில் முதலில் கலந்துரையாடப்பட்டது. அவற்றுக்கு இருவார காலத்தில் நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

பாடசாலைகளில் மாணவர் அனுமதிகளுக்காக - சில அதிபர்கள் முறைகேடாக பணம் அறவிடுவது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆளுநர், மாணவர் அனுமதிக்காக பணம் பெற்றுக்கொண்ட சகல அதிபர்கள் தொடர்பாகவும் தான் விபரம் கோரியுள்ளதாகவும் - தெரிவித்தார்.

பாடசாலைகளில் அபிவிருத்திச் சங்க செயற்பாடுகளில் அதிபர் சிலரின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடியவேளை - குறித்த ஒரு பிரபல பாடசாலையில் 4 வருடங்களுக்கு மேல் நிர்வாகம் புதிப்பிக்கப்படாமல் இயங்குவது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு துரிதமாக  விசாரணை நடவடிக்கைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

மேலும் - முறையற்ற இடமாற்றங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு ஒருமாத காலத்துள் தீர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

போர்கால சூழலில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக - நாட்டைவிட்டு வெளியேறி மீண்டும் நியமனம் பெற்றுக்கொண்ட ஆசிரியர்களுக்கு - நீக்கப்பட்ட காலத்துக்குரிய சம்பள ஏற்றங்களை சாதகமாக பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை சங்கத்தால் முன்வைக்கப்பட்டது. ஆயினும் - இவை வழங்குவதற்குரிய நடைமுறைகளில் சட்ட சிக்கல்கள் காணப்படுவதால் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்துக்கு சாதகமான காலப்பகுதியாக கணிப்பிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் - அவ்வாறு ஓய்வூதிய சலுகை பெறாத ஆசிரியர்களளின் விபரம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

அதிபர் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பாகவும், தரம் 3 அதிபர்களை பொருத்தமான  பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது..

ஆசிரியர்களின் வழங்கப்படாத சம்பள நிலுவைகளை வழங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் - பிற விடயங்கள் தொடர்பாகவும் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த ஒரு கல்வி வலயத்தில் நடந்துள்ள இரண்டு முறையற்ற நியமனங்கள் தொடர்பாக - வடமாகாண கல்விப்பணிப்பாளருக்கும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

ஒரு மணி நேரம் நடந்த இச்சந்திப்பில் - ஆக்கபூர்வமான சந்திப்புகளூடாக வடமாகாண கல்வி செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக கலந்துரையாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
 

Friday, August 30, 2019

மோசடிகளுக்கு வடமாகாண ஆளுநரும் துணைபோகின்றாரா? ஜோசப் ஸ்ராலின் கேள்வி!



வடமாகாணக் கல்வியில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள்  தொடர்பாக – வடமாகாண - ஆளுநர் சுரேன் இராகவனிடம் - இலங்கை ஆசிரியர் சங்கம் முறையிட்டிருந்தும் கூட - இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் - அவற்றுக்கு நடவடிக்கை எடுக்கத் தவறிய ஆளுநரின் செயற்பாட்டால் ஆளுநரும் முறைகேட்டாளர்களைப் பாதுகாத்து வருகின்றார். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் -

வடமாகாண - ஆளுநர்  -ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களுக்கும் - இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் முறைகேடுகளை விசாரிக்க முறையான விசாரணைக்குழு கூட அமைக்காத அவரது செயற்பாட்டுக்குமிடையே காணப்படும் இரண்டை தன்மைகள் கவலைக்குரியது.

இலங்கை ஆசிரியர் சங்கம் சகல குற்றச்சாட்டுக்களையும் ஆதாரபூர்வமாக நிரூபிப்பதாகவே  சமர்ப்பித்திருந்தது. அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நீதியான விசாரணைகளையும் கோரியிருந்தது. ஆனால் - விசாரணைக் குழுவை நியமிக்காத காலதாமதத்தால் - குறித்த பாடசாலையொன்றில் மிக அவசரமாக போலியான பற்றுச்சீட்டுக்கள் போடப்பட்டு வருவதாக – ஆளுநர் செயலகத்தினருக்கும் தெரிவித்திருந்தோம் .

நாம் குறிப்பிட்ட - எம்மிடமுள்ள ஆதாரங்கள் நிறைந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக – எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால் - குறித்த அதிபரொருவர் தொடர்பான தமது ஆரம்பகட்ட விசாரணையில் குற்றமற்றவராக நிரூபிக்கப்பட்டுள்ளதாக – வடமாகாண கல்வியமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டதாக ஊடகமொன்றில் வெளியான செய்தி கல்வி யை நேசிக்கும்  சமூகத்தின் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் - சில ஆதாரங்களை வடமாகாண ஆளுநரின் மின்னஞ்சல் முகவரிக்கும் கூட அனுப்பிவைத்திருந்தோம். சாட்சியங்களையும், சாட்சியாளர்களையும் விசாரணைக்குழுவில் முன்னிலைப்படுத்துவோம் எனவும் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் -

வடமாகாண கல்வியில் நிகழும் பாரிய நிதிமோசடிகளையும், முறைகேடுகளையும் மறைக்கும் விதமாக
வடமாகாண கல்வியதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணை நடந்துள்ளனவா?
விசாரணை நடைபெற்றதாயின் முறைப்பாட்டை மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தினரிடமிருந்து தகவல்களை ஏன் கோரவில்லை?
வடமாகாண ஆளுநரின் செயலணியொன்று – குறித்த பாடசாலைக்கு சென்றதாகவும், அப்பாடசாலைகளில் நிதிமுறைகேடுகள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டதாகவும் கூட ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்த நிலையில் வடமாகாண ஆளுநர் ஏன் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை?
இந்த மோசடிகளுக்கும் முறைகேடுகளுக்கும் வடமாகாண ஆளுநரும் துணைபுரிகின்றாரா?
போன்ற விடயங்களை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் வெளிப்படுத்தவேண்டும்.

வடமாகாணத்திலுள்ள தேசிய மற்றும் வடமாகாண பாடசாலைகளில் - பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதிக்கென – பெருந்தொகையான பணத்தினைப் பெற்றோரிடமிருந்து சில அதிபர்கள் முறைகேடாகப் பெற்றுவருகின்றனர். அவற்றில் ஒரு பகுதியினை தமது தனிப்பட்ட கணக்குகளிலும் வைப்பிலிட்டு – முறைகேடாக சொத்துக்கள் குவித்துள்ளமை தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஊடகங்களிலும் வெளிவருகின்றன.

யாழ்ப்பாணப் பிரபல கல்லூரியொன்றின் அதிபர் – தாம் அடைக்கவேண்டிய தனிப்பட்ட கடனை அடுத்த வருட மாணவர் அனுமதியின் போது திருப்பி தந்துவிடுவதாகக் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இதுபோன்ற முறையற்ற செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் - முறைகேடுகளை நிறுத்துவதற்கு ஆரம்பப் புள்ளியைக் கூட உருவாக்க முயலாமல்  இருக்கும் வடமாகாண ஆளுநரின் செயற்பாடு கவலையளிக்கிறது.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்காமல் - வடமாகாணத்தினை நேர்மனப்பான்மைகொண்ட - முன்னுதாரணமான கல்வி நிலைக்கு கொண்டு வருவதென்பது ஒருபோதும் சாத்தியப்படப்போவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வடமாகாண ஆளுநர் – எம்மால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக - இரண்டுமாதங்கள் கடந்த நிலையிலும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளார். இனிவரும் காலங்களிலும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு செல்வது தவிர்க்கமுடியாதது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.



Thursday, August 8, 2019

மூத்த தொழிற்சங்கவாதி தியாகலிங்கம் மறைவு; இறுதிக் கிரியைகள் நாளை!



மூத்த தொழிற்சங்கவாதியும் மிக இக்கட்டான காலகட்டங்களில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளராக இருந்து குரல்கொடுத்தவருமான தோழர் ச.தியாகலிங்கம் நேற்று 07.08.2019 இயற்கையெய்தினார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 09.08.2019 மாலை 2.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்துக்கு அருகிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.


தோழர் தியாகலிங்கத்தின் மறைவிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அஞ்சலியை செலுத்துவதுடன் - அவரது குடும்பத்தினருக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தோழர்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றனர்,

பரீட்சைக் கொடுப்பனவு இணைந்த படிகளுடன் சேர்த்து வழங்கப்படும்; பரீட்சை ஆணையாளர் - ஜோசப் ஸ்ராலின் சந்திப்பில் இணக்கம்!



இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வழங்கும் தற்போதைய கொடுப்பனவுகளின் முரண்பாடுகள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கம் பரீட்சைத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

தரம் 5 மற்றும் உயர்தர பரீட்சைக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக இணைப்பாளருக்கு 600/- ரூபாவும் துணை இணைப்பாளருக்கு 300/- ரூபாவும் மேற்பார்வையாளர்களுக்கு 300/- ரூபாவுமாக 1500/- ரூபாவுக்கு மேலதிகமாக வழங்கும் 2019/27 தற்போதைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் 2018 ஆம் ஆண்டு க.பொ.த சா/தர பரீட்சை வரை இணைந்த கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் இணைந்த கொடுப்பனவை நீக்கியே இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

2018.08.21ம் திகதி வெளியிடப்பட்ட 20/2018 நிர்வாக சுற்றறிக்கையில் இணைந்தகொடுப்பனவு அதிகரிக்கப்பட்டதுடன்- 24 மணிநேரம் கடமையாற்றுவோருக்கு 50வீதம் மேலதிக கொடுப்பனவாகவும் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை அமுல்படுத்தாமல் - இணைந்த கொடுப்பனவையும் வழங்காமலே - மேலதிக கொடுப்பனவாக மட்டும் வழங்க முயற்சிக்கிறார்கள்.

இந் விடயம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கும் பரீட்சை ஆணையாளருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இணைந்த கொடுப்பனவை வழங்க பரீட்சை ஆணையாளர் தற்போது இணங்கியுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இவ்விடயங்களை உயர்தர பரீட்சை  முடிவதற்குள் சுற்றறிக்கையாக வெளியிடுமாறும் - இனிமேல் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது தவிர்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியதாகவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Tuesday, August 6, 2019

வடமாகாணத்தில் பரீட்சை வேளைகளில் மின்தடை - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்


நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் - வடமாகாணத்தின் பல பாகங்களில் அடிக்கடி இரவு வேளைகளில் மின்சாரம் தடைப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக – மன்னார் மாவட்டத்தில் நேற்றைதினம் (05.08.2019) அன்று இரவு முழுவதும் மின்சாரம் தடைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் பல வருடங்களாக தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பரீட்சை வேளைகளில் நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தும் வேளைகளிலும், பரீட்சை நடைபெறும் நாட்களிலும் கல்விச் செயற்பாடுகளைக் குழப்பும் விதமாக நடைபெறும் இத்தகைய செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இலங்கை மின்சாரசபை மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறையாக செயற்படவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Monday, July 8, 2019

சுற்றுநிருபங்களை மீறிய ஆளுநரின் செயற்பாடு: பாடசாலை நடவடிக்கைகளுக்கு அதிபரே பொறுப்புக்கூற வேண்டும்!


பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக பாடசாலை அதிபர் இருக்க முடியாது என தெரிவித்து புதிய சுற்றுநிருபத்தினை வெளியிடுமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டதாக தெரிவித்து கடந்த வாரம் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக -  இலங்கை ஆசிரியர் சங்கத்தால் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - 

மத்திய கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளை மீறும் வகையில் - கௌரவ ஆளுநராகிய தாங்கள் இவ்வாறு உத்தரவிட்டிருந்தீர்கள் ஆயின் - இச்செயற்பாடானது- தற்போதுள்ள நிலையை விட மேலும் மோசமாக்கிவிடும் என்பதை தங்களின் கவனத்துக்கு முன்வைக்கின்றோம். பாடசாலையின் அனைத்து விடயங்களுக்கும் பாடசாலை அதிபரே பொறுப்புக்கூறவேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதியாயினும், பழையமாணவர் சங்க நிதியாயினும் - அவையாவற்றுக்கும் பாடசாலை அதிபரே பொறுப்புக்கூறவேண்டும்.

பழைய மாணவர் போன்ற வெளிநபர்களால் பேணப்படும் நிதியை கட்டுப்படுத்தும் அதிகாரம் கல்வியமைச்சுக்கு இல்லை. முறைகேடுகள் மற்றும் நிதிமோசடிகள் நடைபெறும் பட்சத்தில் எவ்வித கட்டுப்பாடுகளையும் கல்வியமைச்சால் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனால் - முரண்பாடுகள் வலுவடைந்து, கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் நிலையேற்படும். 

இதனாலேயே – பாடசாலையின் அதிபரே பாடசாலை சார்ந்த சகல அமைப்புக்களிலும் தலைவராக செயற்படவேண்டும் என மத்திய கல்வியமைச்சின் சுற்றறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
1982 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நடைமுறைகள் - பாடசாலை நிதிகள் தொடர்பான மத்திய கல்வியமைச்சின் 26/2018 இலக்க சுற்றறிக்கையால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


பழைய மாணவர் சங்கம் உட்பட ஏனைய சங்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கல்வியமைச்சின் 2008/41  சுற்றறிக்கைக்கமைவாக பாடசாலை அதிபரே தலைவராக இருக்க முடியும் என்பதனை -  2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ED/01/06/01/01 இலக்க கடிதத்தின் மூலமும் கல்வியமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பாடசாலைகளின் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி நடவடிக்கைகளை - கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே பாடசாலை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் அதிபரே பொறுப்பாக்கப்பட்டுள்ளார். இத்தகைய செயற்பாடுகளில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இடம்பெறுமாயின் - இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தாபனவிதிக்கோவையின் தொகுதி -2 இன் கீழ் - பாடசாலை அதிபரை விசாரணைக்குட்படுத்தி தண்டனைகளை வழங்க முடியும். மோசடி செய்யப்பட்டிருந்தால் பணத்தினையும் மீளளிப்பு செய்யும் பொறிமுறையை உருவாக்க முடியும்.

 (இத்தகைய விடயங்கள் – பாடசாலைகளில் முறையற்ற வகையில் நிதி சேகரித்தல் தொடர்பான- மத்திய கல்வியமைச்சின் 05/2015 சுற்றறிக்கையின் 8ம் பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.)  


வெளிநபர்களிடம் இவ்வாறான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்படும் என்பதை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

பாடசாலைக் கட்டமைப்புக்களில் பாடசாலை அதிபர்கள் பொறுப்புக்கூறுபவர்களாக உள்ள இன்றைய நிலையிலேயே – வடமாகாணத்தில் சில அதிபர்கள் மோசடிகளில் திளைத்திருக்கிறார்கள். இவ்வாறானவர்கள் பலர் பல்வேறு காலகட்டங்களிலும் இனங்காணப்பட்டிருந்தனர். இதனை கல்வி அதிகாரிகளும் நன்கு அறிந்திருந்தனர். தாபனவிதிக்கோவையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடிய வழிவகை இருந்த போதிலும் - வடமாகாண கல்வி அதிகாரிகள் மோசடிக்காரர்களை காப்பற்றவே இதுவரை காலமும் துணைபோகின்றனர்.

இந்தவகையில் - பாடசாலை அதிபர் தவிர்ந்த வேறொருவருக்கு வழங்கப்படும் தலைமைப்பதவி தாபனவிதிக்கோவையால் கட்டுப்படுத்த முடியாத நிலையையே ஏற்படுத்தும். பாடசாலை நிதி விடயங்களில் முறைகேடுகள் நடைபெறும்போது – அதற்கு முறையான நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவில்லை. இதனால் உருவாக்கப்பட்ட- அச்சமற்ற நிலையே இன்றைய முறைகேடுகள் உச்சம் தொட்டுள்ளமைக்கு பிரதான காரணிகளாகும். இவர்களின் தவறை சீர்செய்வதற்கே தாங்கள் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாங்கள் மத்திய கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு மாறாக – புதிய சுற்றறிக்கை வெளியிடும் அவசியமற்ற செயற்பாட்டை நிறுத்தி –  பாடசாலைகளில் முறைகேடுகளை நிறுத்துவதற்கு முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Monday, June 17, 2019

வடமாகாண கல்வியமைச்சின் முறைகேடுகளுக்கு விசாரணை கோருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்



நாளுக்குநாள் அதிகரித்துச் செல்லும் வடமாகாண கல்வியமைச் சின் செயற்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என இலங்கை ஆசிரிய சங்கம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம் கடிதம் மூலமும் மின்னஞ்சல்  மூலமும் கோரிக்கை விடுத்துள்ளனர்

அண்மையில் ஆளுநர்  பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட நிகழ்வொன்றில் - கடந்த கால கல்வி தொடர்பான செயற்பாடுகளில் முன்னாள் வடமாகாண சபையின் அரசியல்வாதிகளை தொடர்புபடுத்தியிருந்ததை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன என்றும் இந்நிலையில் - இன்றைய வடமாகாண கல்வியமைச் சின்   முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்களிலிருந்து வடமாகாண கல்வியை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கச்சார்பற்ற விசாரணைப்பொறிமுறை உருவாக்கப்படும் பட்சத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சகல ஆதாரங்களுடனும் -சாட்சியாளர்களுடனும் சாட்சியங்களை வழங்கத் தயாராக வுள்ளோம் என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் அனுப்பிய முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

வடமாகாணத்தில் கல்வியமைச்சின் செயற்பாடுகள் - முறைகேடுகள் - பக்கச்சார்புகள் என நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றது.  ஊழல்வாதிகளுக்குத் துணைபோகும் செயற்பாடு களும்முறைகேடுகளை வெளிக்கொணர்ந்தவர்களை பழிவாங்கும் போக்கும் - குற்ற உணர்வு சிறிதுமற்று செயற்படும் வடமாகாணக் கல்வியமைச்சின்செயற்பாடுகள் மிகுந்த கண்டனத்துக்குரியது.

நாகரிகமான சமூகமாக - நெறிமுறையுடன் வளர்க்கப்படவேண்டிய கல்வித் துறையினை – நாசமாக்கும் விதத்தில் செயற்படுகின்றமை தொடர்பாக பொறுப்புக்கூறல் அவசியமானதாகும். இவ்விடயங்கள் தொடர்பாக அதிககவனம் எடுத்து விசாரணைக் குழு ஒன்றை நியமித்து - வடமாகாணகல்வியமைச்சின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நட வடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

பக்கச்சார்பற்ற விசாரணைப்பொறிமுறை உருவாக்கப்படும் பட்சத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் சகல ஆதாரங் களுடனும்,சாட்சியாளர்களுடனும் சாட்சியங்களை வழங்கத் தயா ராகவுள்ளோம் என்பதையும் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

வடமாகாணகல்வியமைச்சின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்னிலைப் படுத்துகின்றோம்.

1.   வவுனியா விபுலானந்தா ம.வி.யில் அதிபராக இருந்தபோது திரு.க. தனபாலசிங்கம் என்பவர் பல லட்சம் மோசடிசெய்திருந்தமை விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருந்தது. தண்டப் பணத்துடன் அவருக்கு 55 வயதுடன் கட்டாயஓய்வில் செல்ல விசாரணைக்குழு பரிந்துரைத்திருந்தது. அதனடிப்படையில் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டிருந்தார். ஆயினும் - வடக்கு மாகாணபொதுச்சேவை ஆணைக்குழுவிடம் குறித்த அதிபர் மேற்முறையீடு செய்திருந்தநிலையில் - குறித்த கட்டுப்பாட்டு நிபந்தனைகளை விதித்து அவருக்கு வவுனியா தெற்கு வலயத்துக்கு அப்பால் பணியாற்ற நிபந்தனைகளுடன் அனுமதித்திருந்தது. இவருக்கு எதிராக சுமத்தப்பட்டி ருந்த 12 குற்றச்சாட்டுக்களில் 11 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டிருந்த நிலையில் - வடமாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவும் ஊழல்வாதிக்கு சலுகை காண்பித்தமையும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதற்கும் அப்போது நாம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தோம். அதன் பின் வவு/ஓமந்தை மகா வித்தி யாலயத்தில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்டபோது–தகுதியானவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையிலும் ஊழல்வாதியாக நிரூபிக்கப்பட்டி ருந்த  திரு.தனபாலசிங்கத்துக்கே வடமாகாணகல்வியமைச்சால் அதிபர் நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனம் தவறானது என நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த நிலையி லும்இந்தமுறைகேடு நடந்தது. இதனால் இந்த அதிபர் நியமனம் முறைகேடானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் வவுனியா பிராந்திய காரியாலத்தில் பாதிக்கப்பட்ட அதிபர் ஒருவர் சார்பாக முறைப்பாடு செய்யப்பட்டது. (முறைப்பாட்டு இலக்கம் HRC/V/045/2018/(V). பலகட்டவிசாரணைகளின் அடிபடையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 18.02.2019 ம் திகதிய தனது பரிந்துரையில் வவு/ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபராக திரு.க.தனபாலசிங்கத்துக்கு வழங்கப்பட்ட நியமனம் தவறானது எனத் தெரிவித்து வடமாகாண கல்வியமைச்சுக்கு அறிவித்திருந்தது. இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தது. இன்று வரை வடமாகாண கல்வியமைச்சால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதே அதிபர்தான் - ஓமந்தை மத்திய கல்லூரிக்கு அருகில் - மதுபான நிலையம் அமைப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனகடிதம் வழங்கி– பாடசாலையின் அருகில் மதுபானநிலையம் அமைவதற்கும் காரணமானவராவார். இதற்கெதிராக அப்பிரதேச சமூகத்தால் எதிர்ப்பும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் - பிரதிஅதிபரை அச்சுறுத்திய நிலையில் அவர் மயக்கமடைந்ததாகவும் அண்மையில் ஊடகங்களில்வெளிவந்தசெய்தியும் இவர் தொடர்பானதேயாகும். இவரையே வடமாகாணகல்வியமைச்சு சட்டத்தையும் உதாசீனம் செய்துகாப்பாற்றிவருகின்றது.

2.   இடமாற்றச்சபை தீர்மானத்தின் அடிப்படையில் - தொடர்ச்சியாக ஒரேபாடசாலையில் 7 வருடங்கள் பணியாற்றியோருக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும் - குறித்த ஒரு ஆசிரியைக்கு மட்டும் சில மாத காலத்திலேயே மீண்டும் அவர் ஏற்கனவே பணியாற்றியிருந்த யா/கொக்குவில் இந்துக் கல்லூரிக்கே முறையற்ற இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந்த இடமாற்றகடிதம் அப்போதய வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரினாலேயே வழங்கப்பட்டிருந்தது. வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கடித்துடன் வழங்கப்பட்ட இடமாற்றம் முறைகேடானது எனவும்-அவர் ஒரு திணைக்களத்தலைவர் அல்ல என்பதையும் பலதடவைகள் வடமாகாண கல்வியமைச்சுக்கு வலியுறுத்தியிருந்த நிலையிலும் - வடமாகாண கல்வியமைச்சும் தொடர்ச்சியாக முறைகேட்டை ஆதரித்துவந்தது. இந்நிலையில் - இந்த முறைகேடான இடமாற்றத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுசெய்யப்பட்டது. (முறைப்பாட்டிலக்கம் -HRC/JA/069/2018விசாரணைகளின் போது - இந்தமுறைகேட்டை நிவர்த்தி செய்வதாகத் தெரிவித்து – குறித்த ஆசிரியையை யா/கோண்டாவில் இராமகிருஸ்ணா பாடசாலைக்கு இடமாற்றுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் கல்வியமைச்சு கடிதம் அனுப்பியிருந்தனர். ஆயினும் - அதன் பின்னரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கிய உறுதி மொழியும் உதாசீனம் செய்யப்பட்டு இன்றுவரை குறித்த ஆசிரியை கொக்குவில் இந்துக் கல்லூரியிலேயே பணியாற்றிவருகின்றார். இதற்காக போலியான இழுத்தடிப்புக் களைச் செய்து வடமாகாணகல்வியமைச்சு அனுமதித்துள்ளது. குறித்த ஆசிரியை சார்பான முறைகேடுகளுக்கு துணைபோகும் வடமாகாண கல்வியமைச்சு ஏனைய ஆசிரியர்களுக்கு 7 வருடங்கள் ஒரே பாடசாலையில் பணியாற்றியிருந்தால் - கட்டாயம் இடமாற்ற விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும் என்ற புதிய நிபந்தனையையும் விதித்துள்ளமை வடமாகாண கல்வியமைச்சில் நிலவும் பார பட்சங்களினையும் தெளிவுபடுத்துகின்றது.

3.   யா/கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலய அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட தவறான நிதிநடவடிக்கைகள்அரச சுற்றுநிருபங்களை முறையாகப் பின்பற்றாமல் நிதி அறவிட்டமைபற்றுச்சீட்டுவழங்காமைதவறான காசோலைப் பயன்பாடு,நிதிகணக்கில் வைப்பிலிடாதமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன. (குற்றப்பத்திர இல. NP/3/2/GA/6/jaf/01/03)இதற்கமைய தண்டப்பணமும் கட்டிய இந்த அதிபரை மீண்டும் அதே பாடசாலைக்கே வடமாகாண கல்வியமைச்சு நிலைப்படுத்தியுள்ளமை தவறானதாகும். அதேவேளை– குறித்த அதிபரின் மோசடிகளை வெளிக் கொணர்ந்திருந்த பாடசாலையின் பிரதிஅதிபரும்ஆசிரியர் ஒருவரும் வேறுபாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுள்ளனர். குற்றப்பத்திரத்தின் அடிப்படையில் பலகுற்றங்கள் அதிபரில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில்- அதே பாடசாலைக்கே அதிபராக மீண்டும் நிலைப்படுத்துவதும்,முறைகேடுகளை வெளிக் கொணர்ந்தவர்களை தண்டிப்பது போன்ற செயற்பாடுகளும் வடமாகாண கல்வியமைச்சு முறைகேடுகளிற்கே ஆழமாகத் துணைபுரிந்து வருவதை வெளிப்படுத்துகின்றது.

4. யாழ்........ ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரின் முறை கேடுகளுக்கு துணைபுரிந்திராத அந்தப் பாடசாலையின் பிரதி அதிபரை இடமாற்றம் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் -26.02.2019 திகதிய கடிதம் மூலம் கௌரவ ஆளுநராகிய தங்களுக்கு குறித்த அதிபரால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் நீதியான விசாரணையை நாம் கோரியிருந்தோம். இதனடிப்படையில் - வடமாகாண கல்வி யமைச்சால் ஆரம்ப கட்ட விசாரணை மட்டுமே நடை பெற்றுள்ளது. 4 மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் வடமாகாணகல்வியமைச்சால் எவ்விதநடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை. இதனையும் வடமாகாணகல்வியமைச்சு மூடிமறைத்து முறைகேடுகளுக்கு துணைபோகும் தன்மைகள் எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளன.

5.   தமது பாடசாலை அதிபரால் மேற்கொள்ளப்படும் முறையற்ற மாணவர் அனுமதி தொடர்பாகவும்பாடசாலை மாணவர்களின் அனுமதிக்குஅதிபரால் பெருந்தொகைப் பணம் அறவிட்டமை தொடர்பாகவும்அறவிடப்படும் முழுத்தொகைக்கும் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதில்லை என்பதையும் குறிப்பிட்டு - அப்பாடசாலையின் பிரதி மற்றும் உதவிஅதிபர்கள் தங்களிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இவ்விடயம் தொடர்பாக தங்களின் உதவிச்செயலாளரின் 25.03.2019 திகதியிடப்பட்ட G/NPC/A7/Edu/Sc/Matt/2019/015  இலக்ககடிதம் மூலம் வடமாகாணகல்வியமைச்சின் செயலாளருக்கு முகவரியிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் ¬இவ்விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை மேற்கொண்டு அதுபற்றி அறியத்தருமாறு கேட்கப்பட்டது. ஆயினும் - வடக்கு மாகாணகல்வியமைச்சினால் இன்றுவரை ஆரம்ப கட்டவிசாரணை கூட நடைபெறவில்லை என்பதும் குறிப்பி டத்தக்கது.

6.   விசேட கல்விக்கான மாகாணஉதவிக் கல்விப் பணி;ப்பாளர் நியமனத்தில் நிகழ்ந்த பாரபட்சம் தொடர்பாகவும் – இலங்கை கல்வி நிர்வாகசேவை பிரமாணக் குறிப்பின் பிரகாரம் நடாத்தப்படாதமை தொடர்பாக ஆராயுமாறும் வடமாகாண கல்வியமைச்சிடம் கேட்டிருந்தோம். ஆயினும் -  தம்மால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவர்களை நியமிக்கத் துடிக்கும் வடமாகாண கல்வியமைச்சின் பாரபட்சமான எண்ணத்தினாலும்-அதற் கேற்றாற்போல் - ஒவ்வொரு நேர்முக தேர்வு சந்தர்ப்பங்களிலும் தமது இலக்கு நோக்கிய வேறுப்பட்ட நிபந்தனைகளை விதித்து தமக்கேற்றாற்போல் செயற்படும் தன்மையாலும் - நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டிராத நிலையிலேயே– பாதிக்கப்பட்டவர் நீதிமன்றம் சென்றுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. 

வடமாகாண கல்வியமைச்சில் நீதியை போராடித்தான் பெறவேண்டும் என்ற மனநிலையில் ஒரு சிலர் மட்டும் செயற்பட - ஏனையவர்கள் தமக்கு முன்னால் நடக்கும் முறைகேடுகளை விரக்தியுடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளமை வடமாகாண கல்விபுலத்தின் சாபக்கேடாக மாறியுள்ளமை துரதிஸ்டவசமான தாகும்.

அண்மையில் தாங்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்வொன்றில் - கடந்தகால கல்வி தொடர்பான செயற்பாடுகளில் முன்னாள் வடமாகாண சபையின் அரசியல்வாதிகளை தொடர்புபடுத்தியிருந்ததை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் - இன்றைய வடமாகாண கல்விய மைச்சின்  முறைகேடுகள் மற்றும் பாரபட்சங்களிலிருந்து வடமாகாணகல்வியை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு  வேண்டிநிற்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






Friday, June 14, 2019

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபரின் ஊழல் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விசாரணைக்கு வலியுறுத்து!

இரத்மலானை இந்துக் கல்லூரி அதிபரின் ஊழல் தொடர்பில் ;- உரிய நடடிவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேல்மாகாண ஆளுநர் முசாமிலிடம் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை 12.06.2019 அன்று மேல் மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்துக்கும் இடையேயான சந்திப்பின்போது மேல்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விஜயபந்து, மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் சிறிலால் நோனிஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இரத்மலானை இந்துக் கல்லூரியில் விளையாட்டுக்கான பயிற்சி பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதில் 35 பேரே பயிற்சி பெறுகின்றனர். இரத்மலானை இந்துக் கல்லூரியின் விடுதியில் 86 பிள்ளைகள் உள்ளனர். இவர்களிடம் மாதாந்தம் 5000 ரூபா பணமும் அறவிடப்பட்டுள்ளது.

2018 இல் மட்டும்  விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்காக ரூபா 15 லட்சம் வீதம் 3 தடவைகள் காசோலை மூலம் ரூபா 45 லட்சம் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இக்கொடுப்பனவில் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கான சத்துணவுக்காகவும் வழங்கப்பட்டது. பயிற்சிபெறும் மாணவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கக் கூடியதான – தினமும் வழங்கப்படவேண்டிய சத்துணவு தொடர்பான அட்டவணைபடியே வழங்கப்படவேண்டும்.
ஆனால் - அதிபரால் மிகத் தரம் குறைந்த உணவுகளே விடுதி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் - அந்த உணவையே விளையாட்டுப் பயிற்சி மாணவர்களுக்கும் வழங்கியுள்ளார். அத்துடன் வழங்கப்பட்ட பருப்பு கறியிலும் புழுக்கள் இருந்துள்ளமை பரிசோதகர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மதியம் சமைத்த உணவுகளே பல தடவைகள் மாணவர்களுக்கு இரவு உணவாகவும் வழங்கப்பட்டிருந்தது. விடுதி மாணவர்களிடம் அறவிடப்படும் தொகைகள் தொடர்பாகவும் எவ்வித கணக்கும் காட்டப்பட்டிருக்கவில்லை. பணத்தினை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கே அதிபர் வைப்பிலிட்டுள்ளார். பொருட்கள் கொள்வனவு செய்யும்போது - கூறுவிலைகோரப்பட்டிருக்கவில்லை.
விளையாட்டுப் பயிற்சிகளுக்கு தரமான பயிற்றுவிப்பாளர்களை வழங்காமல் சந்தர்ப்பத்துக்கேற்ப ஆட்களை நியமித்து செயற்பட்டுள்ளார். இவை அனைத்தின் மூலம் பெருந்தொகையான ஊழல் மோசடியில் குறித்த அதிபர் ஈடுபட்டிருந்தமை பிலியந்தல கல்வி வலயத்தினால் 31.10.2018 திகதிய விசாரணையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. ரூபா 1500 க்கு மேற்பட்ட கொடுப்பனவுகள் அனைத்தும் காசோலை மூலமே வழங்கப்படவேண்டும். ஆனால் - அனைத்துக் கொடுப்பனவுகளும் பணமாகவே வழங்கப்பட்டுள்ளன. விடுதி மாணவர்களிடமிருந்து 2016 -2018 ஆம் ஆண்டு வரை அறவிடப்பட்ட பல லட்சம் ரூபா பணம் தொடர்பாக பற்றுச்சீட்டுக்கள் எவையும் இல்லை. அப்பணம் எங்கே என்னும் விடயமும் தெரியாதுள்ளது.
அத்துடன் - தமிழ் மாணவர்களை காரணம் காட்டி புலம்பெயர் மக்களின் உதவிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த நிதி தொடர்பாகவும் கணக்குகள் இல்லை.
மாணவர்களின் உணவுத் தேவைகளுக்காக “ஓசானிக்” எனும் பெயருடைய கம்பனியொன்று அரிசியை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதிலும் பாரிய முறைகேடுகள் நடந்துள்ளது.
இது தமிழ் மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதுடன் - பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரோகத்தனமான செயற்பாடுமாகும்.  குறித்த பாடசாலை ஆசிரியர்களும் அதிபரால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அத்துடன் - மேல் மாகாண தமிழ் உதவிக் கல்விப் பணிப்பாளரும் இந்த அதிபரின் மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Sunday, May 5, 2019

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கைது நடவடிக்கைக்கு பொது அமைப்புக்கள் கூட்டாகக் கண்டனம்.


யாழ். பல்கலைகழகத்தில் கடந்த 03.05.2019 அன்று நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது – இராணுவத்தினராலும் பொலிசாராலும் கைதுசெய்யப்பட்ட இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனரின் அவசியமற்ற கைதைக் கண்டித்தும் - மூவரையும் உனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்கான மக்கள் இயக்கம், பூந்தளிர் மாவட்ட பெண்கள் அமைப்பு, புதிய அதிபர்கள் சங்கம், மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம், காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு, வடமாகாண அபிவிருத்தி உத்யோகத்தர் சங்கம் ஆகிய 10 பொது அமைப்புக்கள்  கூட்டாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் அனுப்பிய செய்திக் குறிப்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது  -

அண்மையில் நாட்டின் தலைநகர் மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களை காரணம் காட்டி - நாட்டின் அனைத்து பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி உள்ளது.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது - அப்பாவி மக்களின் நலன்களையோ அன்றாட நடவடிக்கைகளையோ பாதிக்காத வகையில் பாதுகாத்துக்கொள்ள வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்;

நாட்டின் பாதுகாப்பையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் 06.05.2019 முதல் பாடசாலைகளை இயங்குவதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சோதனை நடவடிக்கைகள் நடைபெற்றன. இதேபோன்று கடந்த 03.05.2019 அன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது –அவசியமற்ற காரணங்களை முன்வைத்து இரண்டு மாணவர் தலைவர்களும்  பல்கலைக்கழக சிற்றூண்டிச்சாலை நடத்துனரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது  தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் - அரச தரப்பின்மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த சோதனை நடவடிக்கையானது பல்கலைக்கழக நிர்வாகத்தின் அழைப்பின் பெரிலேயே இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் மாணவர்களை பாதுகாக்கும் பொறுப்புடைய  நிர்வாகம் பொறுப்பற்ற வகையில் நடந்துள்ளதாகவே கருதுகின்றோம். யாழ்.பல்கலைகழக வரலாற்றில் முதல் தடவையாக படைத்தரப்பை அழைத்தவர்கள் மாணவர்களினதும்  ஏனைய ஊழியர்களினதும்; பாதுகாப்புத்; தொடர்பாகவும் முற்கூட்டியே சிந்தித்துச் செயற்பட்டிருக்க வேண்டும்.

அத்துடன்- மாணவர்கள் கைதுசெய்யப்பட்டவுடன் பொருத்தமான நடவடிக்கை முயற்சிகளை பல்கலைக்கழக உயர் நிர்வாகத்தினர் மேற்கொள்ளவில்லை.  பொலிஸ் நிலையம் சென்று பார்வையிடவும் இல்லை. அவர்களின் நலன்கள் பாதுகாப்புத் தொடர்பாகவும் எந்த ஒரு நடவடிக்கைகளையயும் அன்றைய தினம் மேற்கொண்டிருக்கவில்லை. இச்செயற்பாடுகள் மிகவும் வேதனையளிக்கும் விடயமாக உள்ளதுடன் - இவர்களின் இத்தகைய செயற்பாடுகள் எமக்கு சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்துகின்றது.

சாதாரண ஒரு சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரியுள்ளமை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இச்செயலை பொது அமைப்புக்களாகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மறுபக்கத்தில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கென்று பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றி – நிறைவேற்ற வேண்டிய கடமையைத் திசைதிருப்பும் முகமாக - மீண்டும் தமிழ் மக்கள் மத்தியில் திருப்பி அரசாங்கம் செயற்பட விளைவதானது – சிங்கள பௌத்த பேரினவாதத்தின் மனோநிலையிலேயே தமிழ் மக்கள் நோக்கப்படுகின்றார்கள் என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஒரு சாதாரண நடவடிக்கையின் நிமித்தம் அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பது எமக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

மறுபக்கத்தில் மாணவர்களின் கைதுக்கு பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் கூறப்படும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இதற்கு கைதுசெய்யப்பட்ட மாணவர்களோ,   சிற்றூண்டிச்சாலை நடத்துனரோ காரணம் என்றும் கூறிவிட முடியாது.

ஏனெனில் கைதுக்கு காரணமென்று கூறப்படும் அடையாளங்கள் 10 வருடங்களுக்கு மேலாக இருந்துள்ளது என்பது தெரியவருகின்றது. அவ்வாறாயின் - வளாக நிர்வாகத்தின் அசமந்த போக்கா? அல்லது திட்டமிட்ட சதியா? என்ற கேள்வியும் இயல்பாகவே எமக்கு எழுகின்றது.

இத்தகைய அவசியமற்ற கைதுகள் - தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கும் செயற்பாடுகளாக மாறிவிடக்கூடாது என்பதை சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வேண்டுகோளாக முன்வைக்கின்றோம்.

எனவே - இந்த நிலமைகளைக் கவனத்தில் எடுத்து -  கைதுசெய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களையும்இ சிற்றுண்டிச்சாலை நடத்துனரையும் உடன் விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

பல்கலைக்கழக நிர்வாகம் இந்த மூவரினதும் விடுதலை தொடர்பாக பொறுப்போடு செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் அதே வேளையில் - அரசியல் தலைவர்களும் மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் நடவடிக்கைகள் அச்சமின்றி சுமூகமாக தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

அரசாங்கத்தின் பங்காளிகளாகச் செயற்படும் தமிழ் தலைமைகள் இவ் விடயத்தில் விரைந்து செயற்பட்டிருந்தால் - கைது இடம்பெறாமலேயே  தடுத்திருக்க  முடியும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விடயமாகும்.

இதனால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில்; கல்வி நடவடிக்கைகளை தொடர்வதில் ஏற்படக்கூடிய அச்சம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினராலும் விரைந்து தீர்க்கப்பட்டவேண்டும். இல்லையேல் - தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு திருப்பிவிடப்பட்ட இந்த மோசமான நடவடிக்கைகள் இயல்புநிலையை குழப்பமடைய வைக்கும் செயற்பாடாகிவிடும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.