Wednesday, June 29, 2016

புதிய அதிபர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து இசுறுபாய கல்வியமைச்சின் முன்னால் ஆர்பாட்டம்

புதிய அதிபர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கு ஏற்படும் தாமதத்தைக் கண்டித்தும், உடனடியாக அவர்களுக்கு பாடசாலைகளை வழங்கக்கோரியும் இன்று 29.06.2016 புதன்கிழமை இசுறுபாய கல்வியமைச்சின் முன்னால் ஆர்பாட்டம் ஒன்று காலை 10.30 மணியளவில் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் நடத்தப்பட்டது. இதில் 200 க்கும் அதிகமான புதிய அதிபர்கள் கலந்துகொண்டனர். 


இது தொடர்பாக இ.ஆ.சங்கத்தின்பொதுச்செயலாளரிடம்கேட்டபோது-
அமைச்சரவையில் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுவுள்ளதாகவும், இதற்காக உபகுழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். அதன் உப குறிப்பில் இரண்டுவாரங்களுக்குள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளதால் - இரு வாரங்களுக்குள் இவர்களுக்கான பாடசாலைகள் வழங்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உறுதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.




Friday, June 24, 2016

வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் - பரீட்சைக்கு முன்னரே வினாத்தாள் பொதி உடைக்கப்பட்டது.

வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் - நடத்தப்படுகின்ற தரம் 4 முன்னோடிப்பரீட்சை நாளை 25.06.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் - வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் இன்றே (24.06.2016 – வெள்ளிக்கிழமை) பரீட்சை வினாத்தாள்கள் உடைக்கப்பட்டு – வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பிக்கும் அப்பாடசாலையின் ஆசிரியர் ஒருவரிடம் அப்பாடசாலையின் கீழ்ப்பிரிவுப் பகுதித்தலைவரால் வழங்கப்பட்டுள்ளது. பரீட்சை நேரத்துக்கு முன்னர் வினாப்பொதி உடைக்கப்பட்டமை முறையற்ற செயற்பாடாகும். அத்துடன் - இச்செயற்பாடுகள் - தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லாத மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி எனவும் - வடமாகாணம் சார்ந்த பரீட்சை என்பதால் - ஏனைய வலயங்களுக்கு இடையிலான மாணவர்களிடையேயான பெறுபேற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே - இவ்விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் - வடமாகாண கல்விப் பணிப்பாளரும் உரியமுறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, June 21, 2016

சித்தியடைந்தவர்களைக் கொண்டே அதிபர் வெற்றிடங்கள் நிரப்ப வடமாகாண முதலமைச்சர் பரிந்துரை – வரவேற்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்


வடக்கு மாகாணத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு போட்டிப்பரீட்சையில் தெரிவானவர்களைக் கொண்டே நிரப்பவேண்டும் என்று வடக்கு மாகாணக் கல்வியமைச்சுக்கு - கௌரவ முதலமைச்சர் பரிந்துரை செய்துள்ளதாக அறிகின்றோம். முதலமைச்சரின் இந்த நியாயமான அணுகுமுறையை இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது. கடந்த 15.06.2016 அன்று கௌரவ முதலமைச்சருடனான சந்திப்பின்போது – போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவருக்கே அதிபர் நியமனம் வழங்கப்படவேண்டும் எனும் சட்டரீதியான ஆவணங்களையும் நியாயப்பாடுகளையும் தெளிவுபடுத்தியிருந்தோம். இதனைப் பரிசீலித்து - முதலமைச்சர் மேற்கொண்ட தெளிவான முடிவினையே வடமாகாணக் கல்வியமைச்சு நடைமுறைப்படுத்தவேண்டும்.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பினை மீறி - கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு - ஒருபோதும் இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப்போவதில்லை. எனவே – முதலமைச்சரினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளையே வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தெரிவிப்பதுடன் - பொறுப்புள்ள வடமாகாணசபையும் இதனை வலியுறுத்தவேண்டும்.
கௌரவ முதலமைச்சரின் பரிந்துரைகளையும் மீறி நியமனம் வழங்கப்படும் பட்சத்தில் நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளுடன், சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்பதை தெரிவிக்கின்றோம். என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குறிப்பிட்டுள்ளார்.

Sunday, June 19, 2016

தரப் போட்டிப்பரீட்சையில் சித்தியெய்திய அதிபர்களின் நியமனம் தாமதமாவதைக் கண்டித்து 29.06.2016 புதன்கிழமை இசுறுபாய கல்வியமைச்சின் முன் கவனயீர்ப்பு போராட்டம்

அதிபர் தரம் - 3 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து – சேவை முன்பயிற்சிகளையும் நிறைவுசெய்து 3859 அதிபர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 17.06.2016 அன்று கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க பாடசாலையில் வைத்து கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் தற்காலிக நியமனக் கடிதமே வழங்கப்பட்டது.
இதுவரை - இவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாடசாலைகள் திட்டமிடப்படவில்லை.

அதேவேளை - அதிபர் சேவை பிரமாணக்குறிப்புக்கு மாறாக – போட்டிப்பரீட்சையில் சித்தியடையாதவர்களை அதிபர்களாகவும் தரம்பெற்றவர்களை தரம் குறைந்த பதவிகளிலும் அமர்த்துவதை இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப்போவதில்லை.
இத்தகைய நிலையில் - தேவையற்ற தலையீடுகளை நிறுத்தி -  தரம் பெற்ற அதிபர்களுக்கு அதிபர் வெற்றிடமுள்ள பாடசாலைகளை உடனடியாக வழங்கவேண்டும் என வலியுறுத்தி - எதிர்வரும் 29.06.2016 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் இசுறுபாயவில் உள்ள கல்வியமைச்சின் முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் ஈடுபடவுள்ளது. அதிபர் தரம் - 3 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து பொருத்தமான பாடசாலைகள் கிடைக்கப்பெறாதவர்களை இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.

Saturday, June 18, 2016

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கே வடமாகாணத்தில் அதிபர் பதவிகள் வழங்கப்படும் - உறுதியளித்தார் வடமாகாண முதலமைச்சர்

அதிபர் தரப் போட்டிப்பரீட்சையில் சித்தியெய்திய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு - தற்போது பதில் கடமையில் அதிபர்களாக உள்ளவர்களின் பாடசாலைகளை வழங்குவது என - முதலமைச்சருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான 15.06.2016 புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது முதலமைச்சர் உறுதியளித்தார்.

வடமாகாணத்தில் - கடமைநிறைவேற்று அதிபர்களால் இதுவரை நிர்வகித்து வரப்பட்ட பாடசாலைகளுக்கு அதிபர் தரப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களை நியமிக்காது – அவர்களை உப அதிபர்களாகவும் பிரதிஅதிபர்களாகவும் நியமித்து – கடமைநிறைவேற்று அதிபர்களை தொடர்ந்து அப்பாடசாலைகளிலேயே அதிபர்களாக அனுமதிக்கும் வகையில் வடமாகாண கல்வியமைச்சு செயற்பட்டு வந்த நிலையில் - அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்புக்கு மாறான இந்தச் செயற்பாட்டுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்புக்கு மாறாக -  எந்தவொரு அதிபர் நியமனமும் வழங்கபடக்கூடாது எனவும் - வடமாகாணத்தில் ஏற்பட்ட ஆளணி வெற்றிடத்துக்கமைவாகவே புதிய அதிபர்கள் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சிவழங்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் - 26.05.2016 அன்று வடமாகாண சபை உறுப்பினர் திரு.அரியரட்ணம் பசுபதி அவர்களால் கடமைநிறைவேற்று அதிபர்களை பாதிக்காது - பாடசாலைகளை புதிய அதிபர்களுக்கு வழங்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக உள்ளக தகவல்கள் கசிந்த நிலையில் - வடமாகாண பாடசாலைகளின் அதிபர் தரத்தினைப் பெற்ற புதிய அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்படவேண்டும் எனவும் - அதற்கான சட்டரீதியான ஆதாரங்களை முன்வைத்தும் - வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் விளக்கக் கடிதம் அனுப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக – 15.06.2016 அன்று மாலை 4.30 மணியளவில் முதலமைச்சருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பு கைதடியிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது – சங்கப் பிரதிநிதிகளால் - சட்டரீதியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு – வடமாகாண சபையில் வடமாகாண உறுப்பினர் திரு.அரியரட்ணம் பசுபதியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தவறானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது - தன்னிடமுள்ள வடமாகாண அமர்வின் அறிக்கையின் அடிப்படையில் - அவ்விடயம் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டவில்லை எனவும் - வடமாகாண சபை உறுப்பினர் திரு. ரவிகரனால் அன்று இரண்டு பிரேரணைகள் முன்வைக்கப்படவிருந்த நிலையில் - அதற்குள் இரண்டு நிமிடம் பேசுவதற்கு அனுமதி தருமாறு கோரியே - இவ்விடயத்தை உறுப்பினர் திரு.அரியரட்ணம் பசுபதி கோரிக்கையாக மட்டுமே விடுத்திருந்தார் எனவும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் –அதிபர் தர போட்டிப்பரீட்சையில் தோற்றாத அல்லது சித்தியடையாத கடமைநிறைவேற்று அதிபர்களை அகற்றி - அதிபர் தரப் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கே பொருத்தமான பாடசாலைகள் வழங்குவது எனவும் - கடமைநிறைவேற்று அதிபர்களில் 50 வயதைத்தாண்டியவர்களுக்கு அதிபர் தர போட்டிப்பரீட்சையில் தோற்ற சந்தர்ப்பம் வழங்கப்படாமையால் - அவர்களுக்கு மட்டும் - அவர்களது எஞ்சிய சேவை காலத்தில் ஏதாவதொரு பாடசாலையில் உபஅதிபராக கடமையாற்ற அனுமதிப்பது எனவும் தீர்மானம் எட்டப்பட்டது.

திட்டமிடல்,ஒழுங்மைப்பில் குறைகளைச் சுட்டியவர்களை கலகக்காரர்கள் என்று பெயரிட்ட மாண்புமிகு மாநாடு இந்த ஆசிரியர் மாநாடு --------------தந்தி அறுந்த தம்புராவில் சுருதி மீட்ட முனையும் நாரதர்கள்

ஆய்வரங்குகள், பேருரைகள், கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என வலயங்கள் தோறும் ஆரவாரங்கள் ஒருபுறம்,ஆசிரியர் மாநாட்டிற்கு கலந்து கொள்ளாதவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் என அட்டகாசம் ஒருபுறம் . தொழில்சார் வாண்மை , தொழில் சார் ஊக்கம், நவீன கற்பித்தற் சாதனங்களின் மூலம் கற்பித்தல், கற்பித்தல் அனுபவம் என முழக்கங்கள் ஒருபுறம். இந்த மாதிரி மாநாடுகள் தவறானவையா? சரியானவையா? என்பதை விவாதிப்பதற்கு முன் இது தொடர்பில் சில விடயங்களைத் தெளிவுபடுத்துவதே எனது நோக்கம்.
பாடசாலைகளில் நடைபெறும் கற்றல், கற்பித்தற் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத தேவைகளாக பௌதிக மற்றும் மனித வளங்கள் உணரப்பட்டாலும், அவற்றின் பிரயோக முறையானது நகரங்கள், கிராமங்கள் சார்பில் பெரிதும் வேறுபடுகின்றது. இவை சார்ந்து, மாணவர் மையத்தில் இருந்து ஆசிரியர் மாநாடுகள் நடாத்தப்பட்டனவா? ஆசிரியர்கள் சார்ந்த வாண்மை விருத்தி மற்றும் குறைந்தபட்சமாவது பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இம்மாநாடுகள் வளர்க்கப்பட்டனவா ? ஆசிரியர் மாநாட்டின் நோக்கம் என்பது ஏதேனும் வரையறைகளுக்கு உட்பட்டதா? இல்லையேல் ஒதுக்கப்பட்ட பணத்தை முற்றுமுழுதாகச் செலவிட்டுக் காட்டவேண்டிய கட்டாயத்தில் நிகழ்த்தப்பட்டதா? என்ற பெரும் கேள்விகளைக் கண்முன்னே நிறுத்திச்சென்றிருக்கிறது அண்மையில் நடைபெற்று முடிந்த வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு.
பெரும் தொகையானதும் ,அருமையானதும், தொடர் பயன்பாடுகள் உடையதுமான வளங்களை(மனித, பௌதிக, நிதி ,நேரம்) ஈடுபடுத்தி ஆசிரியர் மாநாடு என்ற போர்வையில் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல்களின் வெளியீடு யாது? ஏற்கனவே மிகவும் கஷ்ட வலயமான இவ்வலயத்தில் ஆசிரியர்கள், பெரும் சிரமத்தின் மத்தியிலேயே பணியாற்று கின்றனர்,போக்குவரத்து,தங்குமிடம்,உணவு,நிதி போதாமை, என அல்லல்படும் இவர்கள் வசதியாக தமது அன்றாட வாழ்கையை வாழ வில்லை.இவர்கள் கடும் உள நெருக்கடிகளுக்கும், உளப்போராட்டங்களுக்கும் இடையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.
இவர்களின் மீதும் பெருஞ்சுமையை இலகுவாக யாரோ சிலர் திணித்து விட்டிருக்கின்றார்கள்.
ஆசிரியர் மாநாட்டிற்கான தயார்ப்படுத்தல்கள், ஒத்திகை பார்த்தல் என மொத்தமாக 4-6 வேலை நாட்கள் விடுக்கப்பட்டன.வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இயங்கு நிலையில் உள்ள 76 பாடசாலைகளில் 26 இடைநிலைப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள், மாணவர்களின் கற்றற் செயற்பாட்டிற்கு மிகக் குறைந்த வளங்களும், வசதிகளுமே உள்ள நிலையிலேயே இயங்குகின்றன. ஒதுக்கப்பட்ட நிதியை வலயங்கள் சார்ந்த மிகவும் அத்தியாவசியமான தேவைகளைப் பூர்த்தி செய்யப்யன்படுத்தி இருக்கலாம்.இல்லாது போயின் பற்றாக்குறை ஆசிரிய ஆளணியின் சம்பளத் தேவைக்காகப் பயன்படுத்தியிருக்கலாம்.
ஆடம்பரமான வரவேற்புடன் குறித்த நேரத்திற்கு ஆரம்பிக்கப்படாது தொடங்கிய இம்மாநாட்டிற்கு, ஆசிரியர்களின் பங்குபற்றுதல் தொடர்பான அழைப்பில் சிறப்புக்கோடிட்டுக் காணப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பதத்தின் பிரதிபலிப்போ என்னவோ, ஆரம்பத்தில் இருந்தே மண்டபம் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. ஆண், பெண் ஆசிரியர்கள் ஆங்காங்கே காணப்பட்ட மரங்களின் கீழாகவும், கட்டட ஓரங்களிலும் வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார்கள். சுமார் 750 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்வுக்கான இருக்கை வசதிகளோ,காட்சிகாண் கூடங்களோ திட்டமிட்டு அமைக்கப்படவில்லை. போதாக்குறைக்கு கண்காட்சிக்கூடங்களிற்குள் சென்றால் அவை வெறும் பார்வைக்கு கூட விருந்தாகத்தெரிய வில்லை.பிறகு எப்படி மனதில் நிறுத்தி செயற்படுத்த முடியும்.ஆனால் சித்திரம்,சங்கீதம்,நடனம்,ஆரம்பக்கல்விக் கூடங்கள் ஓரளவு சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இருந்ததை இங்கு மறைக்கவும் முடியாது. கண்காட்சிக்கூடங்கள் ஏனோ தானோ என்ற மனப்பாங்கில் ஒழுங்கமைக்கப்பட்டு இருந்தமை பரிதாபமாகவும், அதே நேரம் இவ் வலய ஆசிரியர்களின் வாண்மைத்துவம்,தேடல்,கற்பித்தல் சார்பில் ஐயப்பாடுகளையும் தோற்றுவித்தது உண்மையே.
இது சார்ந்து கேள்வி எழுப்பப்படும் போது, இவ்வலயம் மூன்று மாவட்டங்களின் எல்லையைத் தொடும் பரந்த சனத்தொகை குறைந்த பிரதேசமாகும், பெரும்பாலும் போக்குவரத்து வசதிகள் இன்றும் அற்றவையே, அவ்விடங்களில் இருந்து பொருட்களை ஓரிடத்தில் குவியப்படுத்துதல் சவாலான விடயமே, வாகன வசதிகள்
செய்யப்பட்டிருந்தாலும் அதன் பிரயோகத் தன்மை வீச்சு உள்ளதாக அமையவில்லை என்பது குற்றச்சாட்டு.
தொடர்ந்து பிரயாணக்களைப்புடன் வெயிலில் காய்து கொண்டிருந்த ஆசிரியர்கள் மதிய உணவுக்காக சென்றடைந்த போது அங்கு போதியளவான உணவு, இருக்கை வசதிகள் செய்யப்பட வில்லை. ஆங்காங்கே மரநிழல்களிலும், நின்ற நிலையிலும் ,அடிக்கும் காற்றினால் ஏற்பட்ட புழுதியையும் சேர்த்து உண்டுகொண்டிருந்தமை பெரும் பரிதாபத்துக்கு உரியதாக இருக்க ,உணவு தரம் குன்றியதாகவும், அனைத்து ஆசிரியர்களுக்கும் போதுமானதாகவும் இல்லாமல் இருந்தமை அதை விட மோசமான ஒன்றாகும். இதைவிட சரியான குடிநீர், குப்பை போடும் தொட்டிகள் ஏற்படுத்தாமல், பெரும் களேபரச்சந்தையாக காணப்பட்டமையும் குறிப்பிடப்படவேண்டியதே.
தொடர்ச்சியாக ஏற்பட்டுக் கொண்டிருந்த அசௌகரியங்களால் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளை நோக்கி கலைந்து சென்று கொண்டிருந்தனர் .ஆனால் இடைவிடாது
நடைபெற்றுக் கொண்டிருந்தது ஆய்வுக் கருத்தாக்கங்கள் .இவை கூட வெறும் மரபு வழி சார்ந்த விளைதிறனை அடிப்படையாகக் கொண்ட, நடைமுறைச் சாத்தியம் அற்ற, பட்டங்களைப் பெறுவதற்கு மட்டும் பயன்படும் ஆய்வுப் பிரதிகளாகவே அமைந்திருந்ததோடு வவுனியா வடக்கு மாணவர்களதோ, ஆசிரியர்களதோ கல்வி வளர்ச்சிக்கும், வாண்மை உயர்ச்சிக்கும், பொருத்தமில்லாது வாசிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. வாசிக்கப்பட்ட ஆய்வு அறிக்கைகள் வெறும் தரவு வெளியீடாக மட்டுமே இருந்தது என்பதை ஆசிரியோதயம் என்ற மாநாட்டை முன்வைத்து வெளியிடப்பட்ட பிரதியின் ஊடாக தெரிந்து கொள்ளலாம்.
காத்திரமான பாடவிதானங்கள், மாணவர்களின் புறச்சூழல் தாக்கம், என்பன சார்ந்து ஆய்வு அரங்குகள் ஏற்படுத்தாமை விசனத்திற்கு உரியதாகவும் நேரத்தை வீணடித்த செயற்பாடாகவுமே எண்ணப்பட்டது.
இரண்டாம் நாள் அமர்வில் குறைவான ஆசிரியர்களே கலந்து கொண்டாலும், கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் பின்னி எடுத்து இருந்தார்கள்.தங்களுடைய ஆளுமைகள், திறமைகளை, மாணவர்- ஆசிரியர்களின் களப் பிரச்சினைகளை தங்களது ஆற்றுகைகளின் ஊடாக கூறியது சிறப்பாக இருந்தமை வரவேற்புக்குரியதே.குறிப்பாக கர்நாடக சங்கீத ரீமிக்ஸ்நடனம், பலரையும் கைதட்டலுக்கு உட்படுத்தியது.பட்டிமன்றம்,சுழலும் சொற்போர், என ஆற்றுகைகள் தொடங்கிய போது அந்தோ பரிதாபம் ! இது குறித்து கரிசனை கொள்ளக்கூடிய, அமைச்சரோ, கல்விப்பணிப்பாளர்களோ,ஆசிரிய ஆலோசகர்களோ, சபையில் இருக்கவில்லை, சுமார் 600 பேராவது இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 100 பேரிற்கே ஆற்றுகைகள் அளிக்கப்பட்டு இருந்தன.
ஆசிரியர்களின் பணிச்சுமை, பிரயாணத்தூரம், அர்ப்பணிப்பு, என்பன இங்கு கவனத்தில் கொள்ளப்படாமல் இருந்தமை மேலதிகாரிகளின் விஷமப் போக்கையும், பணியைத் தட்டிக்கழிக்கும், பொறுப்புணர்வு அற்ற தன்மையையும், பெரும் தொகையாக ஒதுக்கப்பட்ட பணத்தை மோசடிகள் செய்வதற்கான வழிவகைகளையும் உருவாக்கி இருந்தமை தூரநோக்கற்ற மாநாடு என்பதற்கு வரைவிலக்கணம் கொடுக்க முனைந்தவருக்கு வெளிச்சமாக இருக்கவில்லை.ஆசிரியோதயம் என்ற நூல் வெறுமனே இயங்குநிலை பாடசாலைகளின் ஆசிரியர்குழுக்களின் படங்களை மட்டுமே தாங்கி வெளிவந்து இருந்ததையும்,ஏற்கனவே குறிப்பிட்ட பொருத்தமற்ற ஆய்வுக் கருத்துக்களையும், 18 வாழ்த்துச் செய்திகளையும் தாங்கிய விலையுயர்ந்த காகிதக் குப்பையாகவே இருந்தது வெளிப்படை. மட்டுப்படுத்தப்பட்ட பிரதிகள் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே மண்டபத்தில் தேடித்தேடி வழங்கப்பட்டமை விசனத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை.
சாதாரண ஒரு நிகழ்வையே காத்திரமாக ஒழுங்கமைத்து நடத்தத் தெரியாதவர்களின் கைகளில் மிக பெறுமதிவாய்ந்த எதிர்காலம் உடைய மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளமை எமது கல்வி தரத்திற்கு விடப்பட்டுள்ள சாபமே.
மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பாளர்களை எப்படி, தாம் சார்ந்த பணியில் அர்ப்பணிப்பு, வினைத்திறன் போன்ற சொற்களின் பெறுமதியை அறிந்தவர்களாகக் கொள்ள முடியும்?
வடமாகாணக் கல்வி நிலையின் மோசமான நிலைமைக்கு கல்வி அதிகாரிகளின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகளே காரணம் என்பது ஆசிரியர்கள் மாநாட்டின் பெறுபேறுகளின் மூலமாக தெரிந்துகொள்ளமுடிந்தமை மாநாட்டின் மூலமான ஒருவகை வெற்றியே....!
சிறந்த நிர்வாகத்திறன், பிரச்சினைகளை இனங்காணும் தன்மை,பிரதேசம் சார்ந்த அறிவு,சமூகப் பொறுப்பு, அர்ப்பணிப்பு உள்ள சேவையாளர்களே இப்போதைய கல்விப் புலத்தின் எழுச்சிக்கு மிகவும் தேவையே தவிர வெறுமனே ஆசிரியர்கள் மீதும், பெற்றோர்களின் மீதும் குற்றச்சாட்டுக்களை வீசி எறிபவர்கள் அல்லர்.யதார்த்தத்தில் உள்ள அடிப்படை முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை, ஆசிரியர்கள் சுதந்திரமாகக் கலந்துரையாடல் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படல், அடிப்படைக் கற்றல் கற்பித்தல் செயல்பாட்டில் உள்ள குறைந்த பட்சப் பிரச்சினைகளையாவது வலய மட்ட அளவில் தீர்வுகாணல், இவை கூட கவனத்தில் கொள்ளப்படாத மாநாடு எதற்கு?கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான காத்திரமான வேலைத்திட்டங்கள் பிரதேசங்கள் சார்ந்தே அணுகப்படவேண்டும். அதுவரை வவுனியா வடக்கு வலயத்தில் ஆசிரியர் மாநாட்டிற்கான தேவைகள் ஏற்படப்போவதில்லை.
2008 ஆண்டு வவுனியா வடக்கு வலயத்தில் செய்யப்பட்ட காத்திரமான ஆய்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்து செயற்படுத்தியிருந்தாலே பல குறைகளிற்கு நிறை கண்டிருக்க முடியும்.
ஆசிரியர் மாநாடுகளின் மூலமாக பெற்றுக்கொள்ளப்படும் விளைவு என்ன என்பது இப்போது வரை புரியாத புதிராகவே உள்ளது....
ஆனால் நாரதரின் அபிப்பிராயத்தில்
"ஆசிரியர்களின் பணிச்சுமையைக்கூட்டி, நிர்வாக அதிகாரிகளின் மிரட்டல்,அதிகாரத் துஷ்பிரயோகம்,மோசடி நடவடிக்கைகளின் வீரியத்தை அதிகரித்து, மாணவர்களின் தொடர்ச்சியான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைக் குழப்பி, பிழையான முன்னுதாரணங்களான அரசியல்வாதிகளை அழைத்து கௌரவித்ததுடன், திட்டமிடல்,ஒழுங்மைப்பில் குறைகளைச் சுட்டியவர்களை கலகக்காரர்கள் என்று பெயரிட்ட மாண்புமிகு மாநாடு இந்த ஆசிரியர் மாநாடு.
‪#‎தர்ஷன்‬ அருளானந்தன் #

Friday, June 10, 2016

புதிதாக நியமனம் பெறவிருக்கும் தரம் - 3 அதிபர்களை - முட்டாள்களாக்கவிருக்கும் வடமாகாண கல்வி அமைச்சு


தற்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தரம் -3 அதிபர்களிற்கு எதிர்வரும் 17 ஆம் திகதியுடன் பயிற்சி நிறைவடைந்து – அதிபர் நியமனம் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் - கடமைநிறைவேற்று அதிபர்களாக ஆசிரியர் தரத்துடன் இருப்பவர்களை – அதே பாடசாலைகளில் வைத்துக்கொண்டு – தகுதியான அதிபர்களை 1ஏபி 1 சி பாடசாலைகளில் உப அதிபர்களாகவும் பிரதி அதிபர்களாகவும் - சில செல்வாக்கு மிகுந்தவர்களுக்கு அதிபர்களாகவும் நியமனம் வழங்கப்படவுள்ளது. இதற்காக – சில வலயங்களில் புதிய நியமனம் பெறவுள்ள சில அதிபர்களுக்கு வதிவிடத்துக்கு அண்மையிலும் பாடசாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இத்தகைய செயற்பாடுகள் வடமாகாணத்தின் முழுக் கல்வியையும் பாதிக்கும் என அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையிலும் - 26.05.2016 வடமாகாண சபையில் கடமைநிறைவேற்று அதிபர் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முறையற்ற பிரேரணையை செயற்படுத்துவதற்காகவும் - புதிய அதிபர்களினால் தமக்கு சட்டச்சிக்கல்  ஏற்படக்கூடும் என்னும் அச்சத்தினாலும் - சூழ்ச்சியான செயற்பாட்டில் -  இவ்வாறு சாதகமாக பாடசாலைகளை வழங்குவது போன்று வடமாகாண கல்வியமைச்சு காட்டப்போகின்றது.
ஆனால் - இது தற்காலிகமாகவே வழங்கப்படவுள்ளது என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.

இனிவரும் காலங்களிலும் - கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கப்போவதில்லை. இதற்கு 22.10.2014 ஆம் திகதிகொண்ட 1885-31 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை அதிபர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பு - ஒருபோதும் அரசியல் மயப்படுத்தப்படும் கடமைநிறைவேற்று அதிபர் பிரச்சினைக்கு சட்ட அங்கீகாரத்தைக் கொடுக்கப்போவதில்லை -  என்பதையும் வடமாகாணக் கல்வியமைச்சு  நன்கு அறியும்.

இந்தநிலையிலும் – தற்போது போலியான சேவை நிலையங்களை வழங்கி – மீண்டும்; பல முறைகேடுகளுடாகவே சேவைநிலையங்களை - புதிய அதிபர்களுக்கு பகிரப்படுகின்ற ஆபத்தான நிலையுள்ளது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்புடன் தெரிவிக்கின்றது.

தரம்பெற்ற அதிபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்க - இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் வாரமளவில் சட்டநடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. தற்போது கிடைத்துள்ள சேவைநிலையத்தை மட்டும் சாதகமாக கொள்ளாது. இனிவரும் காலங்களில் நிகழவிருக்கும் சூழ்ச்சிகளுக்கு உட்படாமல் அதிபர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – வடமாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற தரம் - 3 அதிபர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் ஆலோசனை பெறமுடியும் என பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
தொடர்புகளுக்கு – 0777246222  -  0776622082

Thursday, June 9, 2016

அதிகாரிகளின் பொக்கட்டுக்களை நிரப்பிவரும் ஆசிரியர் மகாநாடு : ஆசிரியர்கள் விசனம்

வடமாகாண கல்வியமைச்சினால் பலநூறு மில்லியன்கள் வடமாகாணத்திலுள்ள 12 கல்விவலயங்களுக்குமாகப் பகிரப்பட்டு – வினைத்திறனற்ற முறையில் வீணடிக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக பல தரப்பாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவைதவிர - இதுவரை ஆசிரியர் மகாநாடு நடைபெற்ற கல்வி வலயங்களில் - நடத்தப்பட்ட கண்காட்சிகளிற்காக ஆசிரியர்களால் செலவு செய்யப்பட்ட பணம் இன்னும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 வலிகாமம் கல்வி வலயத்துக்கு மட்டும் 4.3 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையிலும் - அங்கு தயாரிக்கப்பட்ட முகப்புவளைவுக்காக ஒரு லட்சம் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளதாகவும் - இது மிக அதிகமான தொகையெனவும் - இது முறையற்ற கணக்குவிபரம் எனவும் வலிகாமம் வலய ஆசிரியர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் - ஆசிரியர் மகாநாட்டில் பங்குபற்றிய ஆசிரியர்களுக்கு போதிய இருக்கை வசதிகள் வலிகாமம் வலயத்தில் செய்துகொடுக்கப்படவில்லை எனவும் - பலர் நின்ற நிலையிலேயே நிகழ்வுகளில் கலந்துகொண்டனர் எனவும் - பல ஆசிரியர்களுக்கு மதிய உணவு கிடைக்கவில்லை எனவும் - கிடைத்த உணவும் தரக்குறைவானதாகவே வழங்கப்பட்டதாகயவும் ஆசிரியர்கள் விசனம் தெரிவித்தனர் . இதேவேளை – பல வலயங்களில் ஆசிரியர் மகாநாட்டை சாட்டாக வைத்து ஒழுக்காற்று நடவடிக்கை என்னும் பெயரில் ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை வெள்ளிக்கிழமையும் - நாளை மறுதினமும் தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரியர் மகாநாடு நடைபெறவுள்ளது. ஆனால் - இரண்டு நாட்களுக்கு முன்னரே பாடசாலைகளுக்கு வரவுச் சான்றிதழை அனுப்பி - தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையினரால் ஆசிரியர்களிடம் கைகொப்பம் பெறப்பட்டுள்ளது. இத்தகைய செயற்பாடுகள் அதிகாரிகள் தங்கள் பொக்கட்டுக்களை நிரப்புவதற்காக மேற்கொள்ளும் முறைகேடான செயற்பாடுகள் என தென்மராட்சி வலய ஆசிரியர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இரண்டு கல்வி வலயங்களாக பிரிக்கப்படுகின்றது வலிகாமம்: செப்டெம்பர் முதல் நடைமுறைப்படுத்தத் திட்டம்

யாழ்.மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மாணவர்களையும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் கொண்ட மிகப் பெரிய கல்வி வலயமான, வலிகாமம் கல்வி வலயம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் இரண்டு கல்வி வலயங்களாகப் பிரிக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாண கல்வித் திணைக்களத் தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மாவட்டத்தில் உள்ள ஏனைய கல்வி வலயங்களுடன் ஒப்பிடுகையில், மிக அதிகளவான மாணவர்களையும் ஆசிரியர்களையம் கொண்ட வலயமாக வலிகாமம் கல்வி வலயம் காணப்படுகின்றது.
அதனால் வலிகாமம் கல்வி வலயத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது எனச் சில வருடங்களாக கல்விச் சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வலிகாமம் கல்வி வலயம் இப்போது இரண்டாகப் பிரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள 4 கோட்டக் கல்வி அலுவலகங்களில், சங்கானை, சண்டிலிப்பாய் கல்விக் கோட்டங்களையும் தீவகக் கல்வி வலயத்திற்குட்பட்ட காரைநகர் கல்விக் கோட்டத்தையும் உள்ளடக்கியதாக ஒரு கல்வி வலயம் உருவாக்கப்படவுள்ளது.
வலிகாமம் கல்வி வலயத்திலுள்ள உடுவில், தெல்லிப்பழைக் கோட்டங்களையும், யாழ். கல்வி வலயத்தின் கோப்பாய்க் கல்வி கோட்டத்தையும் உள்ளடக்கியதாக மற்றைய கல்வி வலயம் உருவாக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் பகுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வலிகாமம் கல்வி வலய ஆசிரியர் மாநாட்டில் விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆய்வுரை மேற்கொண்டிருந்த பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளையும் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பகுப்பானது இந்தப் பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தியைத் துரிதமாக முன்னெடுக்கப் பெரிதும் உதவியாக இருக்கும் எனவும், நிர்வாகம் இலகுபடுத்தப்பட்டதாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Monday, June 6, 2016

அரசியல் வாதிகளின் கைகளில் சிக்கித் தவிக்கும் வடமாகாணக் கல்வி




இலங்கை முழுவதும் உள்ள அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக போட்டிப்பரீட்சையினூடாக அதிபர் தரம் - 3 க்கு 4079 பேர் தெரிவுசெய்யப்பட்டு 3859 பேர்களுக்கு தற்போது பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. நாடுமுழுவதுமாக 4891 பாடசாலைகளுக்கு 3 ஆம் தரத்தையுடைய அதிபர்கள் தேவை எனக் கணிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் - வடமாகாண பாடசாலைகளிலும் அதிபர் தரம் 3 பயிற்சியளிக்கப்பட்டு வருகின்ற அதிபர்களை நியமிப்பதற்குரிய பல பாடசாலைகள் காணப்படும் நிலையில் - கடமைநிறைவேற்று அதிபர்களை பாதுகாப்பதற்கான செயற்திட்டத்தில் வடமாகாண கல்வியமைச்சு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. பரீட்சையில் சித்தியடைந்தோரை பெரிய பாடசாலைகளில் பிரதி அதிபர்களாக ஒன் றுக்கு மேற்பட்ட பலரையும் நியமித்து – வடமாகாண கல்விப் புலத்தை சீரழிக்கும் வகையில் சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.
அதிபர் தரம் 3 ற்கு வடமாகாணத்தில் தேவையான அதிபர்களின் எண்ணிக்கை 400 ஆகும். இவ்வெண்ணிக்கை மத்திய கல்வியமைச்சுக்கு வழங்கப்பட்டதன் அடிப்படையிலேயே 396 பேர் அதிபர்களாக போட்டிப்பரீட்சையின் மூலம் நியமிக்கப்பட்டு - சிறப்பான பயிற்சி வழங்கப்படுகின்றது. இவர்களது தரமான சேவைகளை வடமாகாணப் பாடசாலைகள் பெற்றுக்கொள்வதற்கு மாறாக – குறுக்குவழியால் வந்தவர்களின் கைகளில் சிக்கி வடமாகாணக் கல்வி பாழடையப்போகின்றது.
இத்தகைய செயற்பாடுகளின் விளைவுகளால் வடமாகாணக் கல்வியில் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாக – புதிய அதிபர்களின் பயிற்சி நிலையங்களுக்கு தரிசிப்புக்குச் சென்ற வடக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர் ஒருவருக்கு புதிய பயிற்சிபெறும் அதிபர்கள் தெளிவுபடுத்தியபோது - இத்தகைய நிலைமையின் பாரதூரமான தன்மையை வடமாகாண கல்வித்திணைக்களம் அறியும் எனவும்;. - ஆயினும் வடமாகாணக் கல்வி - அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கித் தவிக்கிறது எனவும் - ஆயினும் இதுதொடர்பான உங்கள் கருத்துக்களை உயரதிகாரிகளுக்கு தெளிவுபடுத்துவதாகவும் குறிப்பிட்டுச் சென்றார் என யாழ்ப்பாணத்தில் அதிபர் பயிற்சியை மேற்கொள்ளும் அதிபர்கள் தெரிவித்தனர்


Sunday, June 5, 2016

தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் முறைகேடுகள் - வடக்கு கல்வியமைச்சு அசமந்தப்போக்கு - விசாரணைகள் தாமதம் - கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவகாசம் வழங்கி இ.ஆ.சங்கம் கடிதம்

செயலாளர்  01.06.2016
கல்வி பண்பாட்டலுவல்கள்- விளையாட்டுத்துறை அமைச்சு
வட மாகாணம்.
யாழ்ப்பாணம்.
அவர்களுக்கு

தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தின் முறைகேடுகள்
தொண்டமானாறு வெளிக்கள நிலையமானது - 1968 ஆம் ஆண்டு – பாடசாலை மாணவர்களிடையே களக் கற்கைநெறிகளை ஊக்குவிக்கும் - ஏனைய கல்விசார் இலக்குகளுடனும்; தொலைநோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 40 வருடங்களாக இந்நிலையம் வடமாகாணத்தின் கல்வித்துறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளது. மிகவும் வெளிப்படையான – ஜனநாயகத் தன்மையுடன் செயற்படவேண்டி 01.01.1978 இல் இந் நிலையத்துக்கான யாப்பு மீளமைக்கப்பட்டது. (யாப்பின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)
ஆனால் - இன்று இந்நிலையத்தின் செயற்பாடுகள் - சட்டவிரோதமான முறையில் செயற்படுவதை தாங்கள் அறிந்தும் - அதற்கான நடவடிக்கைகளை இதுவரை மேற்கொள்ளாமல் உள்ளமை வடமாகாணக் கல்வியில் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். 
வடமாகாணத்தின் அனைத்து பரீட்சைத் துறைகளிலும் செல்வாக்குச் செலுத்தும் இந்த நிலையத்தில் நிலவிவரும் முறைகேடுகள் தொடர்பாக - இந்நிலையத்தி;ல் கரிசனை கொண்ட குழுவினால் 14.12.2015 அன்று தங்களை நேரில் சந்தித்து தௌவுபடுத்தப்பட்டு – நீங்கள் அறிவுறுத்தியதற்கிணங்க 18.12.2015 திகதியிடப்பட்ட எழுத்துமூல ஆவணம் ஒன்று அக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 
அத்துடன் - புதிய நிர்வாகத்தெரிவானது - இந்நிலையத்தின் யாப்பினடிப்படையில் தை மாதம்; இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை இடம்பெறவில்லை. ஆறுமாதம் கடந்த நிலையிலும் - வடமாகாணக் கல்வியில் பெரும் பங்காற்றும் ஒரு நிலையத்தை - தனிப்பட்ட ஒருவரின் கையில் சட்டவிரோதமான முறையில் செயற்படுத்த அனுமதித்தமை மிகத் தவறானதாகும்.
இந்நிலையத்தின் யாப்புக்கமைவாக – பரீட்சைக்குழுக் கட்டமைப்பு ஒன்று இருந்துள்ளது. ஆனால் இன்று தனிப்பட்ட ஒருவரிடம் மட்டும் வடமாகாணத்தின் பரீட்சைகளை அடகுவைத்து பொறுப்பற்ற செயற்பாடுகளை – வடமாகாணக் கல்வியமைச்சு மேற்கொள்வதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். 
எனவே – தொண்டமானாறு வெளிக்கள நிலையத்தில் நிலவும் முறைகேடுகள் உடனடியாகக் களையப்பட்டு – புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறவேண்டும். அத்துடன் - நிலையத்தின் யாப்புக்கமைய ஏனைய செயற்பாடுகளும் ஜனநாயகத் தன்மையுடன் செயற்படுத்தப்பட ஆவன செய்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். 
அடுத்துவரும் - ஒருமாத காலத்துக்குள் இச்சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து – வடமாகாணக் கல்வியை பாதுகாக்கும் நோக்கில் - பொறுப்புள்ள ஆசிரியர் தொழிற்சங்கம் என்னும் வகையில் - தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியேற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.  


செயலாளர் 
யாழ்.மாவட்டம்  

படிகள்:
1. கௌரவ முதலமைச்சர் – வடமாகாணம் 
2.கௌரவ கல்வியமைச்சர் – வடமாகாணம் 

புதிய அதிபர்களுக்கு பாடசாலை வழங்க தடையேற்படுத்தும் வடமாகாணசபை பிரேரணை இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு முதலமைச்சர் உள்ளிட்ட சகலருக்கும் கடிதம்

வடக்கில் புதிதாக நியமனம் பெறவுள்ள அதிபர்களுக்குப் பொறுப்பாகப் பாடசாலைகளை வழங்குவதைத் தடுக்கும் வகையிலும் - பாடசாலைகளில் கடமைநிறைவேற்ற அனுமதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அத்துடன் வடமாகாண சபையின் இந்த நடவடிக்கை தவறானது என வடமாகாணசபையின் முதலமைச்சர் - அமைச்சர்கள்- உறுப்பினர்கள் ஆகியோருக்கும் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  
26.05.2016 அன்று - தற்போது கடமை நிறைவேற்று அதிபர்களாகக் கடமையாற்றுபவர்களை அகற்றாது – புதிய நியமனம் பெறவுள்ள அதிபர்களை நியமிப்பது தொடர்பாக - உங்கள் மாகாண சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பாக – பின்வரும் காரணங்களை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு - இதுவொரு மிகத் தவறான முன்னுதாரணமாகும் என்பதையூம் தெரிவித்துக்கொள்கின்றௌம்.
01.    06ஃ2006 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கையின் படி - இலங்கையில் உள்ள சகல அரசாங்க சேவைகளுக்கும் ஆட்சேர்ப்பு உட்பட சகல விடயங்களையூம் உள்ளடக்கிய சட்டமாக்கப்பட்ட பிரமாணக்குறிப்பு உள்ளது.
02.    இலங்கையிலுள்ள அரச சேவைகளில் ஒன்றான - இலங்கை அதிபH சேவைக்கும் 1985.01.01 தொடக்கம் சட்டமாக்கப்பட்ட பிரமாணக்குறிப்பு உள்ளது. இது 1086ஃ26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் 1997.01.01 தொடக்கம் மறுசீரமைக்கப்பட்டது.  06/2006 ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கை விதிகளின் படி மீண்டும் 2014.10.23 ஆம் திகதிகொண்ட 1885ஃ31 இலக்க அதிவிசேட வHத்தமானி மூலம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையிலுள்ள 4891 பாடசாலைகளுக்கு 3 ஆம் வகுப்பு அதிபர்களை நியமிக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
03.    2014.10.22 அன்று விசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்ட 2008.07.01 திகதி முதல் செயற்படும் - இலங்கை அதிபர் சேவையின் பிரமாணக் குறிப்பின் படி - 07 ஆம் பிரிவின் கீழே இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேHப்பு என்னும் தலைப்பின் கீழ் - குறிக்கப்பட்ட கல்வி - தொழில் தகைமைகளுடன் சேவையின் 3ஆம் வகுப்புக்கு மட்டும் - போட்டிப் பரீட்சையின் மூலம் எவ்வாறு ஆட்சேர்ப்பு செய்வது என்று தௌpவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
04.  இதன்படி 10 வருடங்களுக்குப் பின்னர் 2015.04.10 திகதிய வர்த்தமானியில் விண்ணப்பம்கோரி  2015.11.21 அன்று போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. சுமாH 19000 பரீட்சார்த்திகள் தோற்றிய இந்தப் பரீட்சையில் 4079 பேர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டு – முறையான நேர்முகப் பரீட்சையில் 3859 பேர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகின்றது.
05.   இலங்கை அதிர் சேவை பிரமாணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதன்படி - இவர்களுக்கு முறையாக 74 பயிற்சி நிலையங்களில் சேவைக்காலப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. முதல்முறையாக  இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவூள்ளவர்களுக்கு உயர்ந்த தரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்.
06.    வடமாகாணத்தைச் சேர்ந்த சுமார் 4000க்கு மேற்பட்டோர் இந்த அதிபH சேவை போட்டிப்பரீட்சைக்குத் தோற்றினர். இவர்களில் இப்போது கடமைநிறைவேற்று அதிபர்களாக இருக்கும் ஏறத்தாள 300 பேர்களும் உள்ளடங்குவர். மொத்தமாக – வடமாகாணத்தில் இருந்து சித்திபெற்ற 396 பேர்கள் இந்தப் பயிற்சியைப் பெற்றுவருகின்றனர்
07.    இந்தப் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய கடமைநிறைவேற்று அதிபர்களில் மிகக் குறைந்த வீதத்தினரே சித்தியடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
08.    2011.02.05 அன்று மேற்கொள்ளப்பட்ட 2011ஃநுனுஃநுஃ14 இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் படி – அப்போது யுத்தகாலத்தில் கடமைநிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றிய தகைமையூள்ளவர்களுக்கு அதிபர் நியமனம் வழங்கப்பட்டுவிட்டது என்பதை உங்கள் சகலரது கவனத்துக்கும் கொண்டுவருகின்றௌம்.
09.    பாடசாலை அதிபர் ஒருவர் இடமாற்றம் பெறும்போது அல்லது ஓய்வூபெறும்போது – அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவர் இல்லாத பட்சத்தில் பாடசாலையில் கடமையாற்றும் சிரேஸ்ட ஆசிரியருக்கு புதிய அதிபர் நியமிக்கப்படும்வரை பாடசாலைப் பொறுப்புக்களை ஒப்படைப்பதே வழக்கமாகும்.
10.    இன்று வடமாகாணத்தில் மட்டுமல்ல - இலங்கையில் உள்ள சகல மாகாணங்களிலும் கடமைநிறைவேற்றும் அதிபர்களாக உள்ளவர்கள் அப்படி முறைப்படி கடமைப்பொறுப்பை எடுத்தவர்கள் அல்ல. அரசியல்வாதிகளின் - அதிகாரிகளின் செல்வாக்கின்படி பாடசாலைகளில் கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமைபார்த்து வருபவர்களாவர். பெரும்பாலானவர்கள் போட்டிப் பரீட்சைகளிலும் சித்தியடையாதவர்களாவர்.
11.    இப்படியான சூழ்நிலையில் - சட்டப+ர்வமான பிரமாணக்குறிப்பு இருக்கும் போது – கடமைநிறைவேற்று அதிபர்களை நிரந்தரமாக்கத்தக்க வகையில் - பொறுப்புள்ள மாகாணசபையொன்று தீர்மானம் எடுப்பது அரசியலமைப்புக்கு முரணான நடவடிக்கையாகும்.
12.    இந்த சட்டத்திற்கு முரணான – தவறான தீர்மானத்தை ஏனைய மாகாண சபைகளும் பின்பற்றினால் கல்வியில் மிகப்பெரிய பாதிப்பும் முரண்பாடும் உண்டாகும்.
13.    இலங்கை அதிபர்சேவை போன்ற - நாடளாவிய சேவையொன்றை நியமிக்கும் அதிகாரம் - அரசசேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன்- கல்வியமைச்சின் செயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. அதனை மீறி – மாகாணசபையொன்று இத்தகைய தீர்மானத்தை எடுப்பது எந்தவகையில் நியாயமானதாகும்.
14.    வடமாகாண சபையானது - மாணவர்களின் பண்புசார் தன்மையை விருத்திசெய்யும் வகையில் பயிற்சியளிக்கப்பட்டு - உரிய தகைமையுடன் அதிபர்களாக நியமனம் பெற்றவர்களிடம் பாடசாலைகளை ஒப்படைக்காது – கடமை பார்த்தவர்களுக்கு பாதிப்பு உண்டாகாத வகையில் நியமனம் வழங்க தீர்மானம் எடுத்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
15.    2011.02.05 திகதி மேற்கொள்ளப்பட்ட 2011ஃநுனுஃநுஃ14 இலக்க அமைச்சரவைத் பத்திரத்தின் தீர்மானத்தின்படி 2010.12.31 வரை கடமைபார்த்த – அத்திகதிவரை 3 வருடங்களை நிறைவூ செய்த சகலருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதோடு - இனிமேல் இப்படியான நியமனம் வழங்கப்படமாட்டாது என்பதும் அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
16.    வடமாகாண சபை தமிழ் மக்கள் சார்பாக - பொதுவாக எடுக்கும் தீHமானங்களுக்கு எமது சங்கம் எதிரானதல்ல என்பதை இங்கு குறிப்பிடவிரும்புவதோடு – பிரமாணக் குறிப்பின்படி போட்டிப்பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கு உரிய இடம் வழங்காது – போட்டிப்பரீட்சைகளில் சித்தியடையாத - கடமை பார்ப்பவர்களை பாதுகாக்க எடுக்கப்படும் இப்படியான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.

17.    அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் கல்வியமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்ட நியமனதாரிகளுக்கு உரிய இடம் வழங்குவதை தடைசெய்யும் இத்தகைய முயற்சிகளுக்கு எதிராக - சட்டநடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதோடு தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டியேற்படும் என்பதையும் கவலையுடன் தெரிவிக்கின்றோம்.  

Saturday, June 4, 2016

வடமாகாணக் கல்வியை அழிக்கும் கண்ணுக்குப் புலப்படாத யுத்தம்


வடமாகாணக் கல்வியை அழிக்கும் கண்ணுக்குப் புலப்படாத யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர்களே - தமது திட்டமிடப்படாத - தூரநோக்கற்ற சிந்தனையின் மூலமும், தமது அரசியல் எதிர்காலத்திற்காகவும், தமக்கு தெரிந்தவர்களை வாழவைப்பதற்கான இடமாகவும் வடமாகாண கல்வியமைச்சை மாற்றியுள்ளமையாகும். ஊழல்கள் புரையோடிப்போன - விமர்சனங்களுக்கும் சுரணையற்று இருக்கும் வடமாகாண கல்வியமைச்சு - கல்வியில் எதனை சாதிக்கத் துடிக்கிறது?
இவை ஒருபுறமிருக்க....
பாடவேளையோ 40 நிமிடம் - பதிவுகள் பல. இதனால் மாணவர்களுக்கு போதிக்க வேண்டிய விழுமியப்பண்புகள் இன்றைய கல்வியினூடு புகுத்தப்படுவதில்லை. புகுத்துவதற்கு ஆசிரியனுக்கு நேரமும் இல்லை என்பதே உண்மை. 
இந்தநிலையில் - மாணவர்களின் ஒழுக்கத்தில் பாடசாலைகளின் பங்கு பற்றிக் கதைப்பதற்கு வடமாகாண கல்வியமைச்சுக்கு எந்த அருகதையும் இல்லை.

வடமாகாண கல்வியமைச்சால் மட்டும் அவசியமற்றுத் திணிக்கப்பட்ட நீல மட்டை புத்தகப் பதிவும் இதில் உள்ளடக்கம். சென்ற வருடம் 2015 கல்வியமைச்சின் நிதி திரும்பப் போகிறது என்பதால் - அவசரமாக வடமாகாண சிந்தனை சிற்பிகளாக தம்மைத்தாமே கருதுபவர்களால் இத்திட்டம் ஆமோதிக்கப்பட்டது. இவர்களுள் பலர் வெளிநாடுகளில் கல்வி கற்றவர்கள். இலங்கையின் கலைத்திட்டம் பற்றியே அறியாதவர்கள். போரின்பின் இங்குவந்து - தமது இறுதிக்காலத்தை இங்கே கழிக்க வந்தவர்கள். நிதிபலம் அவர்களிடம் உண்டு என்பதற்காக வடமாகாண கல்வி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நீல மட்டை புத்தகத்தில் ஆசிரியர்கள் கற்பித்ததைப் பாடப்பதிவு புத்தகத்தில் உள்ளவாறு பதியவேண்டும். மேற்பார்வைக்கு வருபவர்கள், பாடப்பதிவு புத்தகத்தில் பதியப்பட்டது கற்பிக்கப்பட்டுள்ளதா எனப் பார்ப்பதற்கு தான் இத்திட்டமாம். இது கணக்காய்வுக்கும் உட்படுத்தப்படுமாம்.
பல நிதி முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வடமாகாண கல்வியமைச்சு - ஆசிரியர்களின் பதிவிற்கு கணக்காய்வு செய்வதென்பதுதான் வேடிக்கையான விடயம்.
''இளகின இரும்பைக் கண்டால் -கொல்லன் தூக்கி தூக்கி அடிப்பானாம்'' என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.



பாடப்பதிவில் உள்ளதை - நீலமட்டை புத்தகத்தில் பதிவதை கல்வியமைச்சு சட்டமாக எதிர்பார்த்தால் - சட்டத்தின் பிடியில் சிக்காமல் ஆசிரியனால் தன்னை வெறும் பதிவுகளினூடே பாதுகாத்துக்கொள்ள முடியும். 
ஆனால் -
இங்கே தான் கற்பித்தல் தொடர்பான முரண்பாடு ஏற்படுகிறது.

கற்பித்தல் என்பது ..
மாறுபடும் மாணவர்களின் திறன்களுக்கேற்ற கற்பித்தலாக அமைய வேண்டுமா?
அல்லது
பாடப்பதிவுக்கு ஏற்ற கற்பித்தலாக அமைய வேண்டுமா?

"யாரொடு நோகேன்"....



அறிவுடையோர் பண்புடையோராக இல்லாததால்.....
மற்றவர்களை மதிக்காததால்....
அறிவை மற்றவருக்கு பகிர்ந்தளிப்பதற்கு பதிலாக..
ஆணவத்தை பகிர்ந்து பணத்தை கொள்ளையடித்ததுடன்
மற்றவர்களையும் கொள்ளையர்களாக மாற்றியதும்...
இதனால் வெகுண்டெழுந்த பாதிக்கப்பட்ட சமூகம் நீதிகேட்டு போராடியதும்...
அதனால்தான் பதவி பறிபோனதும்..
நடந்து முடிந்த வரலாறு....!
இருந்தும் இதுநாள்வரை அப் பதவி வெற்றிடத்தை நிரப்பவே முடியாத திட்டமிடமுடியாத பதவிநிலை அறிவற்றோரையே இந்தமாகாணத்தில் தக்கவைத்துள்ளோம் என்பதை நினைக்கும் போது எம் இனத்தின் எம் சமுதாயத்தின் மொழிசார் விடிவுகாலம் தெட்டத்தெளிவாக புரிகின்றது...!

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி


கிராமியபாடசாலைகள் மேம்பாடு என்பது எல்லாக் கிராமங்களிற்கும் அவசியமானதா?
எப்படியான யதார்த்தப் போக்குடைய கிராமப் பாடசாலைகளின் மேம்பாடுத் தன்மை உணரப்பட வேண்டும்?
என்ற வினாக்களின் பின்னணியில் கிராமங்களை நான்கு பிரிவுக்குள் உள்வாங்கி அதற்கு விடைகாண முடியும்

1)வளர்ந்த கிராமங்கள்-இது நகரப்போக்குடையது
2)வளர்ந்து வரும் கிராமங்கள்
3)குடியேற்றக் கிராமங்கள்
4)வளர்க்கப்படவேண்டிய கிராமங்கள்

மேற்குறிப்பிட்ட கிராமங்களின் வகைப்படுத்தலில் இறுதியான மூன்று வகைக் கிராமங்களிலும் முழுமையான உருமாற்றத்தைப் பெறமுடியாமல் செல்லரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளாக வறுமை, தேக்க நிலைகளைக் குறிப்பிடலாம். இக்கிராமிய மக்களின் மேம்பாட்டிற்குத் தடையாக உள்ள சமூகப் பிரச்சினைகள் 'தனிமனித-வறுமை' என்ற ஒற்றைச் சொல்லாடலில் , தேக்க நிலையை அடைந்தாலும் அது பல சமூகப் பிரச்சினைகளுக்குத் தேசிய ரீதியில் தூண்டுதலாக அமைந்து ஒரு சமூகச் சிக்கலாக மாறி மொத்தக் கிராமத்தினதும் எதிர்கால இளைய சந்ததியினரின் கல்வி,நடத்தை முன்னேற்றங்களிற்கு பெரும் தடையாக அமைந்துவிடுகின்றது. இப்பிரதேச மாணவர்களின் கற்றல் இடர்பாட்டிற்கு காரணமாகும் இடர்களை யதார்த்த பூர்வமாக அணுகத் தலைப்படாமல் இருக்கும் திட்டமிடலாளர்களும், அரசியல்வாதிகளும் தாம் சார்ந்த பணிகளைப் பிரக்ஞை பூர்வமான மறுவாசிப்புக்கு உட்படுத்தவேண்டிய அவசியம் பரவலாகத் தற்போதைய கல்விப் பின்னடைவுகளின் பின்னர் உணரப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தி இருக்கின்றது.

இன்று பல கிராமிய மேம்பாட்டுச் சிந்தனைகள் வறுமை நிலையை ஒழித்தல் என்பதற்கு மேலாக கிராமங்களில் நகரமயமாக்கத்தையும், நவீனமாக்கத்தையும் கட்டியெழுப்பும் தூரநோக்கத்தைக் கொண்டு நகரப்புறங்களிற்கு பொருத்தமான கல்வி முறையையும், சமூக முன்னேற்ற செயற்றிட்டங்களையும் நேரடியாகக் கிராமப்புறங்களில் பிரயோகிக்க முற்பட்டதன் விளைவாக இன்று இப் பிரதேசங்கள் சார்ந்த பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கிராமியப் பாடசாலை மாணவர்கள் கல்வி, நடத்தை சார் முன்னேற்றங்களிற்கு சவால் விடும் காரணிகளாக பின்வருவனவற்றைக் கொள்ள முடியும்.

1)பிரதேச புவியியல் அமைவும்,சமூக அசைவியக்கமும்,சனத்தொகைச் செறிவு இன்மையும்
2)மீள்குடியேற்றமும், உயர் வளர்ச்சிக்கான உள்ளார்ந்த வளப்பயன்பாடு இன்மையும்
3)கற்றலுக்கான வீட்டுச் சூழலின்மையும், அடைவுமட்டப் பின்னடைவுகளும்
4)வாழ்க்கைத்தர வீழ்ச்சியும், புதிய வாய்ப்புக்களுக்கான வழிகளின்மையும் 
5)எழுத்தறிவு வீதமும், மக்களின் மனோபாவமும்
6)போர்,இடப்பெயர்வு தந்த சமூகப் பின்னடைவுகள்
7)பொருளாதாரமும்,கல்வியும்
8)பாடசாலை-சமூக உறவில் விரிசல்
9)நகர் உருவாக்கங்களின்மை
10)சுகாதார, வைத்திய சேவைகளின் போதாமை

ஒவ்வொரு கிராமங்களிலும் காணப்படுகின்ற இயங்கியல் யதார்த்த, சமூகப் பிரச்சினைகளை ஒருபோதும் வேறு ஒரு பிரதேச மக்களோடு ஒப்பீடு செய்து தீர்வுகளை நேரிடையாகப் பிரயோகிக்கப்பட முடியாது. உலக உணவுத்திட்டத்தால் வழங்கப்படும் மதிய உணவைப் பெற்றுக்கொள்வதற்காகவே பாடசாலைக்கு வருகை தரும் நூற்றுக்கணக்கான மாணவர்களை இன்று இப்பிரதேசத்தில் சர்வசாதாரணமாகக் காணமுடியும் என்பது இவ் உணவைக் குப்பை தொட்டியில் வீசும் நகர் சார்ந்த கிராமப்புற மாணவர்களோ, ஆசிரியர்களோ, அதிபர்களோ , நிர்வாக அதிகாரிகளோ, பெற்றோர்களோ அறிந்திருக்கவில்லை என்பதே இங்கு வேதனை தரும் விடயமாக உள்ளது. அடிப்படையில் உண்மையான வறுமை நிலையை வெளித்தெரியாமல் இருட்டடிப்புச் செய்து கொண்டிருக்கும் பல் நிலை ஊடகங்கள் வெறும் சதைகளையும், அரசியல் கொந்தளிப்புக்களையும் மூன்றாம் தர வாசகர்களைக் குறிவைத்து விற்பனையைப் பெருக்கி சமூக அக்கறை இன்றி செயல்படுவதும் வெள்ளிடை மலை.
இன்று கல்வி பற்றிய எமது ஈழச்சமூகத்தின் பார்வை ஆதிக்கம் உள்ளதாகவும் ஒரு குழுமத்தின் இருத்தலுக்கான போராட்டமாகவும் போட்டியை மையப்படுத்திய பணம் சிந்தும் வேடிக்கை மையங்களாகவும் மாற்றம் பெற்று வருகின்றமை பல் அவதானங்களூடாகப் பெற முடியும் . பாட சாலைகள் இலகுவில் சாமானியர்களது அன்றாட வாழ்க்கையை அச்சுறுத்துவனவாகவும் உள்ளன. இன்றைய அடையாளங்கள் கடந்த காலத்தின் மீது செலுத்தும் நியாயம் அற்ற கரிசனை வரலாற்றுப் பூர்வமான ஆதிக்கத்தை மாற்றி இருந்தாலும் இவ் வடிவங்கள் ஏன் மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றன? இங்கு வடிவங்களாகக் கொள்ளப்படும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் இடங்களாக பின்வரும் காரணிகளைக் கொள்ள முடியம்...

1)ஆசிரியர்களுக்குக் கலையார்வம் இல்லாதிருத்தல்
2)வசதிப்படுத்தல் சார்ந்த மேற்பார்வை இன்மை
3) ஆசிரியர்களுக்கான புறக்கற்றலுக்கான சந்தர்ப்பமின்மை
4)ஆசிரியர்களின் மனப்பாங்கு
5)வதிவிட வசதிகளை ஏற்படுத்தாமை/போக்குவரத்து
6)போதிய வருமானம் இன்மை-மேற்படிப்புக்களிற்கான தேவை
7)அதிகாரத்தைத் திணிக்கும்-பரந்துபட்ட நோக்கமும்-வசதிப்படுத்தும் செயன்முறையும் அற்ற உள்ளக-வலய-மாகாண மேற்பார்வைகள்
8)மாணவர் சார் உளவியலை விளங்கிக் கொள்ளல் தொடர்பான சேவை முன் பயிற்சிகள் இன்மை.
9)தீர்மான இணைப்பாட விதானச் செயற்பாடுகளும் மாணவர் தொகையும். 
10) பரந்து பட்ட வாசிப்பு ஆசிரியர்கள் மத்தியில் இன்மை/மாற்றங்களை எதிர் கொள்ளத் தயங்குதல்

அடிப்படைச் சுகாதார வசதிகளைக் கூட பெற்றுக் கொள்ளத் தவறிய முப்பது மாணவர்களின் குடும்பப்பின்னணியில் காணப்படுகின்ற முரண் நிலைகளை வெறும் 40 நிமிடம் பாடம் எடுக்கும் ஆசிரியரால் பூர்த்தி செய்து தீர்வு காணப்பட்டு, கட்டுருவாக்கம் செய்து விட முடியும் என்பதில் நம்பிக்கை கொண்ட கல்வி முறைமை இன்றைய புலத்தின் கேள்விக்குறியே! மொத்தத்தில் இவ்வாறான சமூக அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து தனியே மாணவர்களது கல்வி, ஒழுக்க வளர்ச்சியில் அக்கறைகாட்டும் தன்மை இப் பிரதேசங்களில் பணிபுரியும் அதிபர், ஆசிரியர்களுக்கு மேலதிகமான ஒரு பணிச்சுமையே! தொடர்ச்சியான அழுத்த நிலை இவர்களை இயக்கம் அற்றவர்களாக்கி வெறும் கஷ்ட,அதி கஷ்ட பிரதேச சேவையை முடித்தால் என்ற வரையறைக்குள் தள்ளிவிட்டுவிடுகின்றது.
எனவே வட மாகாண கல்வி அமைச்சர், திட்டமிடல் அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள், கல்வி சார்ந்த பேராசிரியர் களின் நடைமுறை யதார்த்தம் சார்ந்த பணிக்கூறுகள் என்ன? என்பது மீண்டும் பெரும் கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றது.
பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலே பாடசாலை,பெற்றோர்,சமூகம் என்பன அக்கறைகாட்டாது விட்டால் சமூக வளர்ச்சி பின்தள்ளப்படும் இதற்கான வழிமுறைகளாக "பிரதேச பெற்றோர்களை பாடசாலைக்கு அழைத்து கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்கள், ஆலோசனைகளை வழங்கலாம்"என்று விதப்புரை கூறுபவர்களை தளத்தில் தொடர்ச்சியான பணியாற்றலுக்கு உட்படுத்தவேண்டும்.அன்றாடம் காய்ச்சிகளான அவர்களை அழைக்கும் போதுள்ள நடைமுறைச் சிக்கல்களைத் திட்டமிடலாளர்கள் உணரத் தயாராக இல்லை உணர்ந்தாலும் கடமை முடிந்தது போலச் செய்வர். சாதாரண படித்த மக்களுள்ள நகரப்புறங்களிலேயே பெரும் சாத்தியங்களைக் கண்டிராத திட்டங்களை நேரிடையாக ,குறிக்கோள் கிராமத்திற்குப் பிரயோகித்தலை தவிர்த்து, அப் பிரதேசம் சார்ந்து தொடர்ந்து செயற்படும் முற்போக்கான, வினைத்திறனான ஒரு குழுவை அமைத்து களப்பணியாற்றல் குறித்து சிந்திக்கப்பட்டுள்ளதா? வெறுமனே கண்காட்சி ஆற்றுகைகளை நம்பிய ஆசிரியர் மாநாட்டிற்கு கொட்டி தீர்க்கப்படும் பணத்தைக் கொண்டு ஒரு கிராம மாதிரிப்பாடசாலையை உருவாக்கி காட்டி இருக்க முடியாதா?

மேற்குறித்த பணிகளை நிறைவேற்றுவது என்பது அறிவு,நுட்பத்திறன்கள்,ஆழமான சமூகப்பற்றுக் கொண்ட மனிதவளத்தை உருவாக்க கூடிய கல்வி முறையினாலேயே சாத்தியமாக இருந்த போதிலும் இன்றைய நிலையில் கிராமப்புறங்களில் பாடசாலை மாணவர்களிடையே அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் முன்னேற்றங்களை பெறமுடியாதவாறு,சமூக,பொருளாதார,அரசியல்,கலாசார, உளவியல்,உடலியல் ரீதியான பெரும் தடைகள் பல நடைமுறையில் உள்ளமையையும் நாம் "மேம்பாடு" பற்றி சிந்திக்கும் போது கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
‪#‎தர்ஷன்‬ அருளானந்தன் #