Monday, July 8, 2019

சுற்றுநிருபங்களை மீறிய ஆளுநரின் செயற்பாடு: பாடசாலை நடவடிக்கைகளுக்கு அதிபரே பொறுப்புக்கூற வேண்டும்!


பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக பாடசாலை அதிபர் இருக்க முடியாது என தெரிவித்து புதிய சுற்றுநிருபத்தினை வெளியிடுமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டதாக தெரிவித்து கடந்த வாரம் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக -  இலங்கை ஆசிரியர் சங்கத்தால் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - 

மத்திய கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளை மீறும் வகையில் - கௌரவ ஆளுநராகிய தாங்கள் இவ்வாறு உத்தரவிட்டிருந்தீர்கள் ஆயின் - இச்செயற்பாடானது- தற்போதுள்ள நிலையை விட மேலும் மோசமாக்கிவிடும் என்பதை தங்களின் கவனத்துக்கு முன்வைக்கின்றோம். பாடசாலையின் அனைத்து விடயங்களுக்கும் பாடசாலை அதிபரே பொறுப்புக்கூறவேண்டும். பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதியாயினும், பழையமாணவர் சங்க நிதியாயினும் - அவையாவற்றுக்கும் பாடசாலை அதிபரே பொறுப்புக்கூறவேண்டும்.

பழைய மாணவர் போன்ற வெளிநபர்களால் பேணப்படும் நிதியை கட்டுப்படுத்தும் அதிகாரம் கல்வியமைச்சுக்கு இல்லை. முறைகேடுகள் மற்றும் நிதிமோசடிகள் நடைபெறும் பட்சத்தில் எவ்வித கட்டுப்பாடுகளையும் கல்வியமைச்சால் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இதனால் - முரண்பாடுகள் வலுவடைந்து, கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் நிலையேற்படும். 

இதனாலேயே – பாடசாலையின் அதிபரே பாடசாலை சார்ந்த சகல அமைப்புக்களிலும் தலைவராக செயற்படவேண்டும் என மத்திய கல்வியமைச்சின் சுற்றறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
1982 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க நடைமுறைகள் - பாடசாலை நிதிகள் தொடர்பான மத்திய கல்வியமைச்சின் 26/2018 இலக்க சுற்றறிக்கையால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


பழைய மாணவர் சங்கம் உட்பட ஏனைய சங்கங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கல்வியமைச்சின் 2008/41  சுற்றறிக்கைக்கமைவாக பாடசாலை அதிபரே தலைவராக இருக்க முடியும் என்பதனை -  2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ED/01/06/01/01 இலக்க கடிதத்தின் மூலமும் கல்வியமைச்சு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

பாடசாலைகளின் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி நடவடிக்கைகளை - கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே பாடசாலை சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் அதிபரே பொறுப்பாக்கப்பட்டுள்ளார். இத்தகைய செயற்பாடுகளில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இடம்பெறுமாயின் - இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தாபனவிதிக்கோவையின் தொகுதி -2 இன் கீழ் - பாடசாலை அதிபரை விசாரணைக்குட்படுத்தி தண்டனைகளை வழங்க முடியும். மோசடி செய்யப்பட்டிருந்தால் பணத்தினையும் மீளளிப்பு செய்யும் பொறிமுறையை உருவாக்க முடியும்.

 (இத்தகைய விடயங்கள் – பாடசாலைகளில் முறையற்ற வகையில் நிதி சேகரித்தல் தொடர்பான- மத்திய கல்வியமைச்சின் 05/2015 சுற்றறிக்கையின் 8ம் பிரிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.)  


வெளிநபர்களிடம் இவ்வாறான சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்படும் என்பதை தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

பாடசாலைக் கட்டமைப்புக்களில் பாடசாலை அதிபர்கள் பொறுப்புக்கூறுபவர்களாக உள்ள இன்றைய நிலையிலேயே – வடமாகாணத்தில் சில அதிபர்கள் மோசடிகளில் திளைத்திருக்கிறார்கள். இவ்வாறானவர்கள் பலர் பல்வேறு காலகட்டங்களிலும் இனங்காணப்பட்டிருந்தனர். இதனை கல்வி அதிகாரிகளும் நன்கு அறிந்திருந்தனர். தாபனவிதிக்கோவையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடிய வழிவகை இருந்த போதிலும் - வடமாகாண கல்வி அதிகாரிகள் மோசடிக்காரர்களை காப்பற்றவே இதுவரை காலமும் துணைபோகின்றனர்.

இந்தவகையில் - பாடசாலை அதிபர் தவிர்ந்த வேறொருவருக்கு வழங்கப்படும் தலைமைப்பதவி தாபனவிதிக்கோவையால் கட்டுப்படுத்த முடியாத நிலையையே ஏற்படுத்தும். பாடசாலை நிதி விடயங்களில் முறைகேடுகள் நடைபெறும்போது – அதற்கு முறையான நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவில்லை. இதனால் உருவாக்கப்பட்ட- அச்சமற்ற நிலையே இன்றைய முறைகேடுகள் உச்சம் தொட்டுள்ளமைக்கு பிரதான காரணிகளாகும். இவர்களின் தவறை சீர்செய்வதற்கே தாங்கள் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாங்கள் மத்திய கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளுக்கு மாறாக – புதிய சுற்றறிக்கை வெளியிடும் அவசியமற்ற செயற்பாட்டை நிறுத்தி –  பாடசாலைகளில் முறைகேடுகளை நிறுத்துவதற்கு முறையான பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.