Monday, December 6, 2021

பிள்ளையானின் குண்டர்களால் தாக்குதல் முயற்சி : இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

 கிழக்கு மாகாணத்தின் கல்விப் புலத்தில் இடம் பெறும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தோழர் உதயரூபனுக்கு எதிராக  - அரசாங்கத்தின் பங்காளியான பிள்ளையானின் குண்டர் படையினால் - ‘பாடசாலை சமூகம்’ என்ற பெயரில் ஆர்பாட்டம் செய்து - மாணவர்களை பாடசாலைகளுக்குள் செல்லவிடாது அடாவடியாக தடுத்தும் திருப்பி அனுப்பியுள்ளதுடன் - ஆசிரியர்களையும் பாடசாலைக்குள் நுழைய விடாமல்  - தோழர் உதயரூபனைத் தாக்கவும் முயற்சித்துள்ளனர். 

கோவிற் - 19 தொற்றால் பாடசாலை நாட்கள் பலவற்றை மாணவர்கள் இழந்திருந்த நிலையில்இ இன்றும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலும் - ஆசிரியர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் பிள்ளையானின் குண்டர் குழுவினர் அடாவடியில் ஈடுபட்டிருந்தமை மிக மோசமான செயற்பாடாகும்.

பாடசாலைகளுக்கு கொவிற் தொற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில் கூட - கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் - முறையற்ற விதத்தில் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி - அரசியல்வாதியான பிள்ளையான் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைத் தளங்களில் உலாவந்திருந்தன. இத்தகைய முறைகேடான செயற்பாடுகள் தொடர்பாக உதயரூபன் முன்னின்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் சம்மதம் பெறப்படாமல் ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து - கொவிற் தொற்று தொடர்பான ஜனாதிபதி நிதியத்துக்கு சட்டவிரோதமாக பணம் கழித்தமைக்கு எதிராகவும் - இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றம் சென்று சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் முன்னின்று செயற்பட்டிருந்தார்.  இதுபோன்று - கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராகவும் -  பின்ளையானின் குண்டர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராகவும் - கிழக்கு மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ச்சியாக துணிச்சலுடன் செயற்பட்டு வந்துள்ளது. 

இத்தகைய முறைகேடுகளைத் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்திருந்த -  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதிநிதிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் செயற்பாடுகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டு வந்திருந்தது. அநீதிகளையும் -  அதிகாரதுஸ்பிரயோகங்களையும் வெளிக்கொண்டு வருவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் - ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடான தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள - அரசாங்கத்தின் பங்காளியான பிள்ளையானும் அவரது குண்டர்களும் ஈடுபட்டுள்ளமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. 


தாக்குதல் செயற்பாடுகளில் பிள்ளையானின் குண்டர்கள் ஈடுபட்டமை தொடர்பாகவும் - மாணவர்களின் கற்றல் செயற்பாட்டைத் தடுத்தமை தொடர்பாகவும் - ஆசிரியர்களை கடமைக்கு செல்லவிடாது இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பாகவும் - காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பாடசாலையின் ஆசிரியர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் பொலிஸ்மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரால் தெரியப்படுத்தப்பட்டுமுள்ளது. 

இந்த அடாவடித்தனத்தில் ஈடுபட்ட  பிள்ளையான் குழுக் குண்டர்கள் உடனடியாக சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும். பொலிசார் பக்கச்சார்பாக செயற்பட முற்பட்டால் அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கவிரும்புகின்றது. 

அரசாங்கத்தின் துணையுடன் பங்காளி குண்டர்களை ஏவி -  மேற்கொள்ளப்படும் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வண்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


Friday, August 6, 2021

அதிபர், ஆசிரியர்களின் பேரணிக்கு ஆதரவு வழங்க அழைப்பு!


எதிர்வரும் திங்கட்கிழமை 09 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள அதிபர், ஆசிரியர் பேரணிக்கு, போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட அனைத்து தரப்பினரும் பேரணி வெற்றிபெற ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

24 வருட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இலவச கல்வியில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வை வலியிறுத்தியும், இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண புதிய அதிபர் சங்கம், வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் ஆகியன இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை 09 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபம் முன்பாக ஆரம்பித்து மாவட்ட செயலகம் வரை வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த வாகனப் பேரணியில் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் கலந்து கொண்டு பலம் சேர்க்க வேண்டும் என்பதுடன், எமது போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட அனைத்து தரப்பினரும் பேரணி வெற்றிபெற ஆதரவு வழங்க அழைப்பு விடுக்கின்றோம்.

Sunday, August 1, 2021

ஆசிரியர்கள் அழைப்பு தொடர்பான சுற்றுநிருபத்துக்கு தொழில் சங்கங்கள் மறுப்பு 

 கல்வி அமைச்சின் செயலாளரால் ஆசிரியர்கள் அழைப்பு தொடர்பான சுற்றுநிருபத்துக்கு தொழில் சங்கங்கள் மறுப்பு தெரிவித்து கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் ED /09/12/06/01/02/2021இலக்க கல்வியமைச்சின் கடிதத்தின் படி சமூகமளிக்க மாட்டார்கள் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கூட்டாக கையொப்பம் இட்டு கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை தொடங்காமல் ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பது ஆசிரியர்களின் போராட்டத்தை தடுக்கும் நோக்கம் கொண்ட அரசின் கபட நாடகம் எனவும், அதிபர் ஆசிரியர்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அதிபர், ஆசிரியர் அடிபணியாமல், அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்தில் அனைவரும் கரம் கோர்க்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 14, 2021

நாளை யாழ். பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது.

அரசின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிரான இப்போராட்டத்துக்கு ஆர்வமுடைய அனைவரும் கலந்துகொண்டு இப் போராட்டத்துக்கு வலுசேர்க்குமாறும் அழைப்புவிடுத்துள்ளனர்.

Thursday, July 8, 2021

Online வகுப்புக்களையும் ஆசிரியர்கள் புறக்கணிப்பர்: ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கைதை எதிர்ப்போம்!

கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிராக,  நாடாளுமன்ற சுற்றுவட்டத்தின் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட  குழுவினர் பொலீசாரால் நேற்று 8ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டு, பிற்பகல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

 ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த வேண்டுமென நீதிமன்றத்தின் அனுமதியை பொலீசார் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் பொலிசாரின் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது.

ஆயினும், அதிரடிப்படை, கலகமடக்கும் பிரிவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றுக்கு ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த அரசின் இராணுவமயமாக்கல், அரச அடக்குமுறை, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத சட்ட விரோத ஆட்சி முறை ,  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, ஆசிரியர் சங்க உறுப்பினர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பலவந்தமான கைது என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைத்து ஆசிரியர்களும் தாமாக முன்வந்து கற்பித்து வரும் 'ஒன்லைன்' வகுப்புக்களையும்  இன்று முதல் புறக்கணித்து செயற்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Thursday, July 1, 2021

கல்விக்கான சமவாய்ப்புக்கள் மறுக்கப்படுவது தொடர்பாக ம. உ. ஆணைக்குழுவில் இ. ஆ. சங்கம் முறைப்பாடு

வடக்கு மாகாணத்தைச் சேர்ர்ந்த சகல மாணவர்களினதும் கல்விக்கான சமவாய்ப்புக்கள் மறுக்கப்படும் பாரபட்ச நடைமுறைகளிலிருந்து  சகல மாணவர்களினதும் கல்வி உரிமையினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை ஆசிரியர் சங்கத்தால் இன்று இலங்கை மனித  உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இம் முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, வடமாகாண  கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


கடந்த ஒருவருடத்துக்கும் அதிகமாக கொவிட் 19 இடர்கால சூழ்நிலையில் வடக்கு மாகாண மாணவர்கள் கல்வியில் சமவாய்ப்பினை இழந்துள்ளார்கள். 

இத்தகைய இடர்கால நிலை ஒருவருடத்துக்கும் அதிகமாக காணப்படுகின்ற போதும் மாணவர்களின் சமமான கல்வி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய கல்வியமைச்சும், வடமாகாண கல்வியமைச்சும் திட்டங்கள் எதனையும் உருவாக்கவில்லை. 

பாடசாலை ரீதியாக முன்னெடுக்கப்படும் நிகழ்நிலை online வகுப்புக்களின் மூலம் பெரும்பாலான மாணவர்கள்  கல்வியைப் பெறமுடியாது பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கல்வி கற்கும் உரிமையை பல மாதங்களாக அநேகமான மாணவர்கள் முற்றாக இழந்துள்ளனர். 

கல்விக்கான சமவாய்ப்பினை முற்றாக இழந்த மாணவர்கள் உள ரீதியான பாதிப்புக்களுக்கும், தாழ்வுச் சிக்கல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

 ஆயினும், பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு இழந்த கல்வியை வழங்கும் நடவடிக்கைப் பொறிமுறை எதனையும் உருவாக்கும் நோக்கமற்று மத்திய கல்வியமைச்சும் வடமாகாண கல்வியமைச்சும் பாராமுகமாகவே இதுவரை இருந்து வருகின்றது.  

எனவே சகல மாணவர்களும் சமகல்விவாய்ப்பைப் பெறுவதற்கும் அதற்கான வசதிவாய்ப்புக்களை கல்வியமைச்சு வழங்குவதற்குமான  பரிந்துரைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு    முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Saturday, May 1, 2021

பொலிசாரின் தடைகளையும் மீறி, கோவிட் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மே தின ஊர்வலம்

 கொழும்பு CMU பாலாதம்பு இடத்திலிருந்து ஆரம்பித்து காலிமுக ஆர்ப்பாட்ட திடல் வரை சமூக இடைவெளியையும், கோவிட் 19 பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 12 தொழிற்சங்கங்கள் இன்று மே தின பேரணியை நடத்தியிருந்தனர்.



இதன்போது பொலிஸார் கோவிட் தொற்றை காரணம் காட்டி  பேரணிக்கு தடைவிதிக்க முயன்றதுடன், கைது செய்ய போவதாகவும் அச்சுறுத்தினர். இதனால் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் காரசாரமான விவாதம் ஏற்பட்டிருந்தது.



இதில் அரசாங்கம் கோவிட் தொற்றை காரணம் காட்டி சில நிகழ்வுகளுக்கு மட்டும் பாரபட்சமாக நடக்கிறது எனவும், எமக்கும் சமூக அக்கறை உண்டு, நாமும் கோவிட் அறிவுறுத்தல்களை கடைபிடித்தே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம் எனவும் தொழிற்சங்க தரப்பினர் வாதித்திருந்தனர். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இதுவரை கோவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. இதனை காரணம் காட்டி எமது மே தின நிகழ்வை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டு பொலிஸாரின் எதிர்பையும் மீறி போராட்டம் நடைபெற்றிருந்தது.



இப்பேரணியில் அதிபர், ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கு!, ஆசிரியர், மாணவர்களுக்கும் தரமான கோவிட் தடுப்பூசி வழங்கு!, கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்கு உள்ளிட்ட கோரிக்கை கோசங்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Wednesday, April 21, 2021

போக்குவரத்து சபைக்கு எதிரான ஆசிரியர்கள் போராட்டம் வெற்றி: நாளை தொடக்கம் வழமைபோல் போக்குவரத்து நடைபெறும் என பணிப்பாளர் தெரிவிப்பு

 



நுவரெலியா மாவட்டதின் ஹங்குரன்கெத்த இவலப்பனை ஆகிய கல்வி வலயங்களில் அமைந்துள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலைகளான மாகுடுகல, ஹயிபொரஸ்ட் விவேகானந்த, ஹயிபொரஸ்ட் 3, பிரமிலி, அல்மா கிரமன்ட், சீட்டன்.கோணகலை பாரதி, கோணப்பிட்டிய பிரின்சிஸ் , எலமுல்ல, கபரகல, அருணோதயம்  ஆகிய பாடசாலைகளுக்கு இராகலை, நுவரெலியா, உடுப்புசல்லா ஆகிய நகங்கலிருந்து 100 ரூபா தொடக்கம் 250 ரூபா வரையிலும் ஒரு வழி பயணத்திற்காக செலுவு செய்து 200க்கு  மேற்பட்ட ஆசிரியர்கள் கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த  பல வருடங்களாக இராகலை பிரதேசத்திருந்து 6.45 மணிக்கு புறப்படும் நுவரெலியா (டிப்போ ) பொது போக்குவரத்து பஸ்போக்குவரத்துஇ  கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பல சிரமங்களை எதிர்நோக்கிய  ஆசிரியர்கள்  பல தடவைகள் போக்குவரத்துத்துறை அதிகாரிகளின் கவனதிற்கு  கொண்டுவந்திருந்த போதும் அற்பகாரணங்களை முன்வைத்து, அதிகாரிகள் நடவடிக்கைகள் எதனையும் எடுத்திருக்கவில்லை  . எனவே 2021.04.21 ஆம் திகதி இன்று காலை 7மணி தொடக்கம் 10 மணிவரை கவனயீர்ப்பு போராட்டதினை புரூக்சைட் சந்தியில் ஆசிரியர்கள் முன்னெடுத்திருந்தனர் . 5000 மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதுகாக்குமாறும்இ மக்களின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்துமாறும், கோரிகைகள்  முன்வைக்கப்பட்டன . 

மாதாந்தம் 10000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொண்டு பணியாற்றும் உதவி ஆசிரியர்கள் இ முச்சக்கர வண்டிகளுக்கு 600 ரூபா தொடக்கம் 700 ரூபா வரையில் செலுத்தி தினமும் வீடுசெல்லவேண்டியுள்ளதாக கவலையுடன்  குறிப்பிட்டனர்.  குறித்த போராட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கமும்  பங்குபற்றியதுடன் போக்குவரத்து அமைச்சர் இ நுவரெலியா பயணிகள் போக்கு வரத்து சபை பணிப்பாளார் ஆகியோரின் கவனதிற்காக கடிதங்களையும் இலங்கை ஆசிரியர் சங்கம் அனுப்பியிருந்தது. அத்துடன்  குறித்த ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு  உடனடியாக  நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தொலைபேசி மூலமாக பணிப்பாளாருடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது சபையினை கூட்டி முடிவெடுப்பதாக பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தார்.

சற்றுநேரத்துக்கு முன்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவரை தொலைபேசியில் தொடர்புக்கொண்ட நுவரெலியா பயணிகள் போக்குவரத்து சபையின் பணிப்பாளார்,  நாளை தொடக்கம் வழமை போல் போக்குவரத்து சேவையை மேற்க்கொள்வதற்கு சபை கூட்டத்தில் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

Saturday, January 30, 2021

ஆசிரியர்களின் போராட்ட உரிமையை நசுக்கி சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிட முடியாது. – ஜோசப் ஸ்ராலின் -

2021.01.18ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு அன்றைய நாளை சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிடுமாறு அறிவுறுத்தப்படும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் 2021.01.19 ஆம் திகதிய கடிதம் தொடர்பான நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம், இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள, சுதந்திரமாக செயற்படும் தொழிற்சங்க உரிமையை நசுக்கும் செயற்பாடு எனவும் குறிப்பிட்டு,  2021.01.19 ஆம் திகதிய கடிதம் மீளப்பெறப்படவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- 

2021.01.18ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சம்பளமற்ற விடுமுறையாக கணிப்பிடுமாறு அறிவுறுத்தப்படும் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் 2021.01.19 ஆம் திகதிய கடிதம் சார்பாக இலங்கை ஆசிரியர் சங்கம்  வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

குறித்த ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக எமக்கும் அதிருப்திகள் உண்டு. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தொடர்பாகவும் எமக்கு விமர்சனம் உண்டு. விசேடமாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக செயற்படும் ஜே.வி.பி.யின் தொழிற்சங்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை வழிநடத்தியிருந்தது. 

இடமாற்றச் சபையில் தீர்மானங்களை எடுத்துவிட்டு, ஆசிரியர்களைத் தவறாக வழிநடத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆயினும், ஆர்ப்பாட்டங்களுக்கு வந்தவர்களுடைய உரிமையை அடக்கும் வகையில், வடமாகாண கல்வியமைச்சு செயற்பட கூடாது. வடமாகாண கல்வியமைச்சின் 2021.01.19 திகதிய கடிதம் தொடர்பான செயற்பாட்டை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மீளப்பெறவேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம். 

ஆர்ப்பாட்டம் செய்தமை தொழிற்சங்க உரிமையாகும். தொழிற்சங்க நடவடிக்கைக்காக விடுமுறை அறிவித்தோ, அல்லது விடுமுறை அறிவிக்காமலோ கூட ஆர்ப்பாட்டம் செய்யமுடியும். இதனை இலங்கை அரசியலமைப்பும், சட்டமும் ஏற்றுக்கொண்டுள்ளது. போராட்ட வழிமுறைகளை தொழிற்சங்கங்களே தீர்மானிக்கமுடியுமென சட்டம் ஏற்றுக்கொண்டுள்ளபோது, அவசியமற்ற வகையில் தாபனவிதிக் கோவையைத் தொடர்புபடுத்தி ஆசிரியர்களின் உரிமைகளை நசுக்க முயல்வது அடிப்படை உரிமை மீறலாகும். 

எனவே, தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம் சுதந்திரமாக செயற்படும் உரிமையை, இலங்கையின் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள விடயங்களைக் கவனத்தில்கொண்டு, பொருத்தமற்ற நடைமுறைகளால் உரிமைகளை நசுக்கும் செயற்பாடுகளை வடமாகாண கல்வியமைச்சு உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டுள்ள தொழிற்சங்க உரிமைகளை நசுக்கும் செயற்பாடு வடமாகாண கல்வியமைச்சால் மீளப்பெறப்படவில்லையாயின், இலங்கை ஆசிரியர் சங்கம் உரிமைகளை வென்றெடுப்பதற்காய் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 


  


Sunday, January 10, 2021

நாளைய கதவடைப்புக்கு வடமாகாண தரம் III புதிய அதிபர் சங்கமும் பூரண ஆதரவு


 

நாளைய முழு அடைப்பு போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக அழிக்கப்பட்டமை தமிழ் மக்களின் இதயங்களில் தாங்கமுடியாத வேதனையை உருவாக்கியுள்ளது. இறுதி யுத்தத்தின் போது இறந்த தமது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவாலயமானது பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட பேரினவாத அரசின் துணையுடனேயே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. 

2009 இறுதி யுத்தத்தின்போது மனிதப் பேரவலம் நடைபெற்றதன் அடையாளத்தை மறைக்க முயலும், இந்த இனவாத அரசின் செயற்பாட்டையும், அதற்குத் துணைபோகும் அரச இயந்திரங்களின் செயற்பாடுகளையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் இனத்தின் கலாசாரங்களோடும், உணர்வுகளோடும், தமிழ் மக்களின் பண்பாட்டுத் தனித்துவங்களோடும் பின்னிப்பிணைந்த கல்விக் கூடமாகவே இருந்து வந்துள்ளது. இத்தகைய நிலையில், அங்கிலிருந்த  முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டமையானது உலகெங்கும் உள்ள தமிழர்களின் இதயங்களை நொருக்கியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. 

இனவாத அரசின் மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பைக் காட்டும் வேளையில் தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்றின் அடிப்படைகளை தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ள அரசாங்கம், அதனூடாக மக்களின் ஜனநாயக ரீதியான வெகுஜன எதிர்ப்புக்களையும் அடக்க முயன்று வருகின்றது.

பண்பாட்டு விழுமியங்கள் கொண்ட மக்கள் சமூகங்களை, மிலேச்சத்தனமான இனவாத செயற்பாடுகளினால் துன்புறுத்திவரும் இந்த அரசு, ஜனநாயக ரீதியில்  எதிர்ப்பைத் தெரிவிக்கும் மக்களையும் பொய்யான காரணங்கள் மூலம் அடக்கியாள முற்படுகின்றமை கண்டனத்துக்குரிய விடயமாகும். 

நாளை வடக்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் ஆரம்பநாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாரம்பரிய இனமொன்றின் அடையாளத்தினை இரும்புக் கரம்கொண்டு அடக்க நினைப்பதற்கு எதிர்வினையாற்ற வேண்டியதும், குரல் கொடுக்க வேண்டியதும் கல்விச் சமூகத்தின் பொறுப்பான கடமையாகவும் உள்ளது.

எனவே – பல்கலைக்கழக சமூகத்தினர், பொது அமைப்புக்கள், அரசியல் தரப்புக்கள் இணைந்து ஒற்றுமையாக மேற்கொள்ளவுள்ள அனைத்து போராட்டங்களுக்கும், நாளைய தினம் வடக்கு – கிழக்கில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கும், இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றது. 

நாளைய தினம் நடைபெறவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒத்துழைத்து, போராட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.