Friday, October 12, 2018

இன்று வலிகாமம் கல்வி வலயத்தில் கூடிய சட்டவிரோத இடமாற்றச்சபை: இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்பு!


இன்று வலிகாமம் கல்வி வலயத்தில் - தொலைபேசி அழைப்பு ஒன்றினூடாக - இடமாற்றச் சபை நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் இடமாற்றச்சபை உறுப்பினர் அழைக்கப்பட்ட நிலையில் - அங்கு – தாபன விதிக்கோவையிலும் - இடமாற்றகொள்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளபடி - அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள் அல்லாமல் - இடமாற்றச் சபை கூடப்பட்ட நிலையில் - அந்த இடமாற்றச்சபை சட்டவிரோதமானது என்பதன் அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்பு செய்துள்ளது.
ஏற்கனவே - கூடப்பட்ட இடமாற்ற சபைகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் -இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.  இத்தகைய விடயங்களை ஆராய்ந்து – அதற்குரிய தீர்மானங்களின் பின்னரே புதிய இடமாற்ற நடைமுறைகளை அமுல்படுத்த ஆதரவு வழங்குவது என இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருந்தது. 

இந்நிலையில் -  வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் – தாபனவிதிக்கோவைகளிலும், இடமாற்றக் கொள்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள சட்டபூர்வமான இடமாற்றச்சபை உறுப்பினர்களுக்கு மேலதிகமாக – தனக்கு ஆதரவானவர்களை திரட்டி – முறைகேடாக இடமாற்றங்கள் மேற்கொள்ளவிருந்த நிலையில் - இந்த சட்டவிரோத இடமாற்றச்சபையிலிருந்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளிநடப்புச் செய்துள்ளது. 

உரிய முறையில் - இடமாற்றச்சபை உறுப்பினர்களுக்கு அறிவிப்புக்கள் வழங்காமலும், சட்டபூர்வமான அங்கீகாரமுடைய தொழிற்சங்கத்தின் உறுப்பினரை சவாலுக்கு உட்படுத்தும் நோக்கிலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இவ்வாறான இடமாற்றச்சபைகள் செல்லுபடியற்றதாகும். 

 முறையற்ற இடமாற்றம் தொடர்பாக - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ( HRC/JA/069/2018) வழங்கிய பரிந்துரையில் -
"ஆசிரிய இடமாற்ற செயர்பாடுகள் யாவும் இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதையும் - இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள் இடமாற்ற சபையின் தீர்மானமாக அமைவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் வழங்கவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் - 

இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைவாக - உரியமுறையில் - அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இடமாற்றச்சபை கூடாமல் - வலிகாமம் கல்வி வலயத்தில் இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் - இந்த இடமாற்றங்கள் தொடர்பாக சட்டரீதியாக இலங்கை ஆசிரியர் சங்கம் சவால்களுக்கு உட்படுத்தும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரித்தார்.

Thursday, October 11, 2018

வடக்கு கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரால் வழங்கப்பட்ட முறைகேடான இடமாற்றத்தை உடன் சீர்படுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை!



தொடர்ச்சியாக ஒரே பாடசாலையில் 7 வருடங்கள் பணியாற்றிய ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தின் போது 2017 ஆம் ஆண்டு இடமாற்றச்சபையின் மூலம் இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட்டன.

ஆயினும் - ஆசிரியர் ஒருவர் இவ் இடமாற்ற நடைமுறைகளைப் பின்பற்றியிருக்கவில்லை. இந்த முறையற்ற செயற்பாடுகளுக்கு வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரும் - வடமாகாண கல்விப் பணிப்பாளரும் இடமாற்ற நடைமுறைகளுக்கு மாறாக செயற்பட்டிருந்தனர்.

வடமாகாணத்தில்  எந்தவொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்டிருக்காத முறையில் - குறித்த ஆசிரியைக்கு சார்பாக – பல பாடசாலைகள் மாற்றியமைக்கப்பட்டிருந்தன.  முன்னர் தொடர்ச்சியாகப் பணியாற்றிய யாழ்.வலயத்திலுள்ள குறித்த அந்தப் பாடசாலையிலேயே தன்னை பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

இவ்வாறு வழங்கப்படும் இடமாற்றம் முறையற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னைய வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரனுக்கு தெரியப்படுத்தியமைக்கமைவாக - மீண்டும் பழைய பாடசாலைக்கு வழங்கப்படவிருந்த இடமாற்றம் நிறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் - வடக்கு கல்வியமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் இடமாற்றம் பெற்று சென்ற பின்னர் – வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அ.அனந்தராஜால் - யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளருக்கு – மீண்டும் பழைய பாடசாலையையே ஆசிரியைக்கு வழங்குமாறு கடிதம் அனுப்பப்பட்டது.

ஆயினும்-  யாழ்.வலயக் கல்விப் பணிமனையால் கடிதம் வழங்கப்பட்டிராத நிலையில்- வடமாகாண கல்வியமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கடிதத்துடன் சென்று – பழைய பாடசாலையிலேயே குறித்த ஆசிரியை கடமையை ஆற்றிவருகின்றார்.

இம் முறையற்ற விடயம் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சர்- வடமாகாண முதலமைச்சர் -  வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியிருந்தும். இவ்விடயம் சீர்செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால் - இம்முறைகேடான இடமாற்றம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை விசாரணை செய்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு - இவ்விடமாற்றத்தில் வடமாகாண கல்விப் பணிப்பாளரின் தலையீடு இருந்துள்ளது எனவும் - விசாரணையின் போது - இத்தலையீடு தொடர்பில் விளக்கம் எவையும் தராமல் - இவ்விடமாற்றம் ''யாழ்.வலயத்துக்குட்பட்டதால்  யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விளக்கங்களை பெற முடியும்'' எனக் குறிப்பிட்டமை தொடர்பிலும் கண்டித்துள்ளது.

குறித்த பாடசாலை அதிபரும் நிர்வாக நடைமுறைகளுக்கு அப்பால் - வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளரின் கடிதம் மூலம் செயற்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும்- 

இதனை யாழ்.பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏற்று அங்கீகரித்தமையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்-

இடமாற்ற சபை கூடி எடுக்கப்பட்ட தீர்மானத்தை மாற்றியமையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஆசிரியரது இடமாற்ற விடயத்தில் குறித்த பாடசாலை அதிபர் - யாழ்.வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் - வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோர் ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாக செயற்பட்டமையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானிக்கின்றது எனவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில் -
 குறித்த ஆசிரியைக்கு வேறு பாடசாலைக்கு உடனடியாக இடமாற்றத்தை வழங்க வேண்டும் எனவும் -

ஆசிரிய இடமாற்ற செயர்பாடுகள் யாவும் இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைய செயற்படுவதையும் - இடமாற்றம் தொடர்பான தீர்மானங்கள் இடமாற்ற சபையின் தீர்மானமாக அமைவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் வழங்கவேண்டும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

Monday, October 8, 2018

இடமாற்ற முறைகேடுகள் தீர்க்கப்படும் வரை - இ.ஆ.சங்கம் இடமாற்ற சபைகளை புறக்கணிக்கும்.


வடமாகாணத்தில் இடமாற்றங்களின்போது – ஒரு சிலருக்கு மட்டும் சலுகைகளை வழங்கும் - பாரபட்சங்களையும், அரசியல் தலையீடுகளையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கிறது. அனைவருக்கும் சமத்துவமான நீதி பின்பற்றப்படவேண்டும்.  இதுபோன்ற - கடந்தகால இடமாற்ற முறைகேடுகள் களையப்படும்வரை - இடமாற்றச்சபைகளில் கலந்துகொண்டு – புதிய இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்குவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனையும் மீறி - வலய மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களம் இடமாற்றங்களை நடடுறைப்படுத்துமானால் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் மேலும் தெரிவிக்கையில் -

வடமாகாணத்தில் கடந்த காலங்களில் இடமாற்றங்களில் நடைபெற்ற முறைக்கேடுகள் மற்றும் பாரபட்சங்கள் தொடர்பான பல முறைப்பாடுகள் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் - ஆதாரங்களுடன் பல தரப்பினரிடமும் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆயினும் - அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் பக்கச்சார்ப்பான செயற்பாடுகளினால் - நியாயத்தன்மை பின்பற்றப்படவில்லை. சட்டபூர்வமான இடமாற்றச்சபைகள் ஊடாக தீர்மானிக்கப்பட்ட இடமாற்றங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டன.

கடந்த வருடம் இடம்பெற்ற வருடாந்த இடமாற்றங்களிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் - இடமாற்றத்துக்கு தகுதிபெற்றிருந்த அழகியல் பாட ஆசிரியர்கள் சிலருக்கு இன்னமும் வடமாகாண கல்விப் பணிப்பாளரால் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக- இடமாற்றச் சபையில் பரிசீலிக்கப்படாமல் இடமாற்றங்களில் பாரபட்சங்கள் காட்டப்பட்டுள்ளன.

இவை தொடர்பாக- வடமாகாண கல்வியமைச்சர், வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமமைச்சருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருந்தும் இம்முறைகேடுகள் இன்றுவரை தீர்க்கப்படவில்லை.
இடமாற்றச் சபைகள் கூடுகின்றபோது - இடமாற்றச்சபையின் தீர்மானங்களுக்குரிய அறிக்கைகள் பேணப்படுகின்றன. இந்த நிலையில் - வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் இடமாற்றச்சபை தீர்மானத்தின் அடிப்படையிலேயே இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தியதாக கூறிவருவது ஏற்றுக்கொள்ளமுடியாதது.

இவைதொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கு ஆதாரங்களுடன் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாதமை கவலைக்குரிய விடயமாகும்.

யாழ்.வலயத்தில் - இடமாற்றச்சபைத் தீர்மானத்துக்கமைய நடைமுறைப்படுத்தியிருந்த சில இடமாற்றங்களிலும் - இடமாற்றச்சபையின் தீர்மானத்தை மீறி -  வடமாகாண கல்வியமைச்சால் தன்னிச்சையான முறையில் இடமாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

கடந்த கால முறைகேடுகளை நிவர்த்தி செய்வதற்கு வடமாகாண கல்வியமைச்சுக்கு ஒரு நாள் போதுமானதாகும். முறைகேடுகளை நீக்க கல்வியமைச்சும் வடமாகாண கல்வித்திணைக்களமும் உடனடியாக முன்வரவேண்டும்.

எமது இத்தகைய நிலைப்பாட்டை - வெளிமாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்களுக்கு காரணம் காட்டி - வடமாகாண கல்வித்திணைக்களம் வருடாந்த இடமாற்றத்தை இழுத்தடிக்கவும் நாம் அனுமதிக்கமாட்டோம். முறைகேடுகள் நிவர்த்திசெய்யப்பட்டு உரிய காலத்தில் இடமாற்றச்சபைகள் கூட்டப்படவேண்டும். உரிய காலத்தில் இடமாற்றச்சபை கூட்டப்படாத பட்சத்தில் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களையும் ஒன்றிணைத்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்படுவோம் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

எமது இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து - இடமாற்றங்கள் தொடர்பான நீதியாகச் செயற்படுவதற்கு – வடமாகாணக் கல்வியமைச்சும்இ வடமாகாண கல்வித் திணைக்களமும் தொடர்ந்தும் பின்நிற்குமானால் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படும் எனவும் எச்சரிக்கின்றோம்.

Sunday, October 7, 2018

பல லட்சங்கள் லஞ்சமாகப் பெற்ற கொழும்பு இந்து மகளிர் கல்லூரி அதிபர். லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு.


பாடசாலைகளில் மாணவர்களின் அனுமதிக்கென பல லட்சம் ரூபாய்களை லஞ்சமாகப் பெற்றுக்கொண்ட கொழும்பு இந்து மகளிர் கல்லூரியின் முன்னைநாள் அதிபர் கோதை நகுலராஜா அவர்களுக்கெதிராக இலங்கை ஆசிரியர் சங்கமும், அப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து 04.10.2018 அன்று கொழும்பு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் குறிப்பிடுகையில் -

எமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் எண்பது பேரிடமிருந்து ஐம்பத்தேழு இலட்சம் ரூபா பெற்றுள்ளார். ஆனாலும் அந்த ஐம்பத்தேழு இலட்சம் ரூபா எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பது தொடர்பாக – எவ்வித கணக்கும் காட்டப்படவில்லை. இது தொடர்பாக கல்வியமைச்சுக்கு எம்மால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் பின்னர் கடந்த மாதம் 3ஆம் திகதி இந்தப் பாடசாலை கணக்கு பேணப்படும் மிலாகிரிய இலங்கை வங்கிக் கிளைக்குச் சென்று இருபத்து மூன்று லட்சம் ரூபாவை அதிபர்  வைப்பில் இட்டுள்ளார். இந்த இருபத்து மூன்று லட்சம் ரூபா கட்டிய பற்றுச்சீட்டும் எம்மிடம் ஆதாரமாக உள்ளது. இது 2017 ஆம் ஆண்டு மாணவர் அனுமதிக்காக பெற்றுக்கொண்டது மட்டுமாகும். ஆனால் - ஏனைய காலப்பகுதிகளில் இவ் அதிபர் பெற்றுக்கொண்ட பணம் தொடர்பாக – எவ்விதமான விசாரணைகளும் நடைபெறவில்லை. இவை விசாரிக்கப்படவேண்டும்.

தற்போது - இப்பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி நிதியை கல்வியமைச்சு இடைநிறுத்தியுள்ளது. பாடசாலையின் வாகனத்தைப் பாவிப்பதற்காக – கல்வியமைச்சால் சாரதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் - மேலதிகமாக சாரதியொருவரை முப்பத்தையாயிரம் ரூபாவுக்கு நியமித்திருந்தார். ஆனால் - ஓட்டுநர் அட்டவணை பட்டியல் எதுவும் பேணப்படவில்லை.

பாடசாலையில் கேபிள்ரீவி, குளிரூட்டி போன்ற ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். இவையாவும் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்திலேயே நடைபெற்றுள்ளது. இவையாவும் முறையற்ற செயற்பாடுகளாகும்.
இவை தொடர்பாக – மத்திய கல்வியமைச்சுக்கு முறைப்பாடு செய்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆதலால் - இவர் அதிபராக வந்த காலத்திலிருந்து இதுவரைக்குமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கேட்டுள்ளோம்.

இந்தப் பாடசாலையுடன்; கோயில் ஒன்றுள்ளது. இக்கோயிலில் ஒரே செயற்பாட்டுக்கு பலரிடம் பொய்கூறிப் பணம்பெற்றுள்ளார். 
தற்போது அந்த அதிபர் கல்வியமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் - பாடசாலையின் விடுதியிலேயே இன்னும் தங்கியிருக்கிறார். இங்கிருந்துகொண்டு இரவிரவாக –பாடசாலையின் கோவைகளை எடுத்து செல்வதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே - இந்த அதிபர் உடனடியாக பாடசாலைவிடுதியிலிருந்தும் வெளியேற்றப்பட்டு விசாரணை நடத்தப்படவேண்டும்.
அத்துடன் -   இந்த ஊழல் மோசடியில் ஈடுபட்ட இந்த அதிபரைப் பாதுகாப்பதற்காக – தமிழ் அரசியல் வாதிகளிகள் முயன்று வருகின்றனர். இந்தத் தமிழ் அரசியல் வாதிகளின் இந்தச் செயற்பாடு வெட்கக்கேடானதாகும்.
இந்த நேரத்தில் இத்தகைய தமிழ் அரசியல்வாதிகளிடம்  சரியான இடத்தில் நீங்கள் நில்லுங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றோம். தமது அரசியல் லாபங்களுக்காக இந்தக் களவுகள் செய்த அதிபரைப் பாதுகாப்பதற்கு அவர்கள் முயலக்கூடாது என்தையும் கூறிக்கொள்கின்றோம். இத்தகைய அரசியல் வாதிகள் பெற்றோர், மாணவர்கள், கல்வி சமூகத்தின் நிலைகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஊழல்வாதிகளைக் காப்பாற்ற முயலக்கூடாது என்பதைக் கூறிக்கொள்கின்றோம்.  இவ்விடயம் சம்பந்தமாக முறையான விசாரணையொன்று வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday, October 6, 2018

ஆசிரிய – அதிபர் சம்பள முரண்பாடு பற்றிய கருத்தமர்வு இன்று நடைபெற்றது


ஆசிரியர் தினமான இன்று 06.10.2018 சனிக்கிழமை  அதிபர் ஆசிரியர்களுக்கான தெளிவூட்டல் கருத்தமர்வு ஒன்று இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் யா/வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் நடத்தப்பட்டது.

 அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின்  சம்பள அதிகரிப்பு தொடர்பாக - சம்பள மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பால் வழங்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும், சம்பள முரண்பாடுகள் மற்றும் ஆசிரியர் அதிபர் பதவியுயர்வுகள் தொடர்பாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கருத்தமர்வில் ஆசிரிய – அதிபர் சம்பள முரண்பாடு என்பது என்ன? என்னும் தலைப்பிலான கையேடும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, October 2, 2018

தகுதியற்ற ஒருவரை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு!



கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக திரு.எம்.கே.எம். மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளமையானது – கிழக்கு மாகாண  கல்விப் புலத்துக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாகும்.

முன்னர் -  கல்முனை, அக்கரைப்பற்று, மூதூர் போன்ற கல்வி வலயங்களில் இவர் வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் கடமையாற்றிய அனைத்து வலயங்களிலும் முறைகேடுகளிலும் - அதிகார துஸ்பிரயோகங்களிலும் ஈடுபட்டிருந்தார்.  அத்துடன் - ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கும் இவர் உட்படுத்தப்பட்டமையால் - இரண்டு வருடங்களுக்குரிய வருடாந்த சம்பள ஏற்றமும் நிறுத்தபட்டது.

யுனிசெப் நிதியினை கையாடல் செய்து நிதி முறைகேட்டில் ஈடுபட்டமை தொடர்பாக – நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினாலும் இவருக்கெதிராக சம்மாந்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்படியான முறைகேடுகளிலும் நிதி மோசடிகளிலும் ஈடுபட்ட ஒருவரை மாகாணக் கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமையானது தவறான நியமனமாகும்.

வலயக் கல்விப் பணிப்பாளராகவே இருப்பதற்கு தகுதியற்ற ஒருவரை – கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக நியமித்துள்ளமை கிழக்கு மாகாண கல்வியை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடாகும்.

திரு.எம்.கே.எம். மன்சூருக்கு வழங்கப்பட்டுள்ள தவறான நியமனத்தை - கிழக்கு மாகாண ஆளுநர் உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.