Sunday, January 29, 2017

வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டுவரவுள்ள பிரேரணை பக்கச்சார்பானது ஆதாரமற்ற பிரேரணையை அவர் விலக்கிக்கொள்ள வேண்டும்.


வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவரால் கொண்டுவரவுள்ள பிரேரணை பக்கச்சார்பானது
ஆதாரமற்ற பிரேரணையை அவர் விலக்கிக்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 31.01.2017 நடைபெறவுள்ள 83 வது வடமாகாணசபை அமர்வில் கௌரவ எதிர்க்கட்சித்தலைவரும் ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினருமான சி.தவராசாவினால் - வடமாகாணக் கல்விச் செயலாளரை ஆசிரியர்கள் அவமதித்தமையைக் கண்டித்து வடக்கு மாகாணசபையில் பிரேரணை கொண்டுவரவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். அதில் - வடமாகாண கல்விச் செயலாளரை ஆசிரியர்கள் அவமதித்ததாகவும், கல்வியமைச்சின் செயலாளரின் கொலரைப் பிடித்துள்ளனர் எனவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சித் தலைவர் சுமத்தியுள்ளமை - வடமாகாண கல்வியமைச்சு மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கிய – தவறான பணித்தடையினை நியாயப்படுத்தும் செயற்பாடாகும்.
வடமாகாண கல்வியமைச்சில் நடைபெறும் அநீதிகள், பாரபட்சங்கள், இடமாற்ற முறைகேடுகள், ஆசிரியர்களுக்கு உரித்தான சம்பளஏற்றங்கள் மற்றும் நிலுவைகள் வழங்கப்படாமை தொடர்பான ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் - வடமாகாண கல்வியமைச்சின் சீர்கேடுகள் தொடர்பாகவுமே எதிர்க்கட்சித் தலைவர் பிரேரணை கொண்டுவந்திருக்கவேண்டும். அத்துடன் - 10.01.2017 அன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக – பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சித் தலைவர் - இரண்டு பக்க நியாயங்களையும் அறிந்து செயற்பட்டிருக்கவேண்டும். எனவே – வடமாகாண கல்வியமைச்சின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் , ஆசிரியர்களின் ஜனநாயக உரிமை நசுக்கப்பட்டமை தொடர்பாகவும் எதிர்கட்சித் தலைவர் சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

Thursday, January 26, 2017

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு. ஜனநாயக ரீதியான போராட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும்.



வவுனியாவில் நான்காவது நாளாக - பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான உண்மையைக் கண்டிறியவும், அவர்களின் உறவுகளுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை தெரிவிக்கின்றது.  காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கரிசனை கொள்வதாகவும், அரசியல் கைதிகளை விடுவிப்பதாகவும் கூறி – தமிழ் மக்களின் வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசும் தமிழர்களுக்கு தனது இனவாதமுகத்தையே காட்டி நிற்கின்றது. இத்தகைய கடத்தல்களின் பின்னணியில் கடந்தகால அரசாங்கங்களே இருந்துள்ளன. நல்லாட்சி எனக் கூறி ஆட்சிப்பீடம் ஏறி இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழர்களுக்கான தீர்வில் அக்கறையற்ற இனவாத செயற்பாடுகளையே இன்றைய அரசம் அரங்கேற்றிவருகின்றது. கடந்தகால அரசு இனவாதத்தை வெளிப்படையாகக் காட்டிநின்றது. ஆனால் - இன்று நல்லாட்சி எனக் கூறி ஆட்சிப்பீடம் ஏறிய அரசு ஒரு புறம் நல்லிணக்க முகத்தைக் காட்டுவது போன்று தமிழர்களுக்கு நடித்து - இனவாத சக்திகளுடனேயே செயற்பட்டு வருகின்றது.
காணாமற்போன தமது உறவுகள் தொடர்பாக – நல்லாட்சி அரசாங்கத்தாலும் ஏமாற்றப்பட்ட நிலையில் - உண்ணாவிரதம் இருக்கும் நிலைக்கு அவர்களின் உறவுகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே – பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டத்துக்கு வலுசேர்ப்பதோடு – அவர்களின் உறவுகள் நீதியைப்பெறுவதற்கு சகல மட்டங்களிலும் - ஜனநாயக ரீதியான போராட்டங்கள் விரிவுபடுத்தப்படவேண்டும். இதற்கு – சகல ஒத்துழைப்புக்களையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கத்தயாராக உள்ளது.

Monday, January 23, 2017

முதலமைச்சரின் கோரிக்கையையடுத்து கவனயீர்ப்பு இடைநிறுத்தம்.


இன்று 23.01.2017அன்று வெளிமாவட்டத்தில் பணியாற்றி இடமாற்றம் கோரியிருந்த ஆசிரியர்களுக்கு - பொய்க் குற்றங்கள் சுமத்தி வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோத பணித்தடையை நீக்கக் கோரி குறுகிய கால அழைப்பில் கவனயீர்ப்பு நிகழ்வினை வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பு இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தியிருந்தது. இதில் நூற்றுக்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்பின்னர் – வடமாகாண முதலமைச்சருடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டனர். முதலமைச்சரிடம் வடமாகாண கல்வி திணைக்களத்தின் பக்கச்சார்ப்பான இடமாற்ற செயற்பாடுகள் தொடர்பாகவும், ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகவும் - ஆசிரியர்கள் இடமாற்றக் கோரிக்கையை முன்னிறுத்தி 10.01.2017 அன்று தாம் பாதிக்கப்பட்டதாகக் கருதி இடமாற்றம் கோரிய காரணங்களையும் - அதிகாரிகளின் பொறுப்புக்கூறாத தன்மைகளையும் - ஆசிரியர்களின் நீதிக்கான குரலை நசுக்குவதற்கான செயற்பாடாகவே – பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட பணித்தடை உத்தரவு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆயினும் - ஒரு தரப்பின் கருத்துக்களையே தாம் இப்போது விளங்கிக் கொண்டுள்ளதாகவும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் கருத்தையும் கேட்டே முடிவெடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார். வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் - எதிர்வரும் திங்கட்கிழமை வரவுள்ளதாகவும் - அதன்பின் தான் முடிவெடுக்க ஒருவாரம் வழங்குமாறும் வடமாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க - இப்போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆயினும் - இம் மூன்று ஆசிரியர்களினதும் ஜனநாயக விரோத பணிநீக்கம் நீக்கப்படாதுவிட்டால் - சகல தரப்பினருடனும் ஆதரவு பெற்று - மீண்டும் பாரிய அளவில் தொழிற்சங்க நடவடிக்கை நீதிகிடைக்கும் வரை மேற்கொள்ளப்படும் எனவும் - அனைத்து ஆசிரியர்களும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Saturday, January 21, 2017

23.01.2017 முதலமைச்சர் செயலகம் முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்பு


கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வில் பங்குபற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு  - வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் வழங்கபட்ட ஜனநாயக விரோத “பணித்தடை” உத்தரவை விலக்கி - ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதற்கு - நாளை திங்கட்கிழமை (23.01.2017) காலை 9.00 மணிக்கு - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறும். அத்துடன் இக்கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியான இப்போராட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ளது. இப்போராட்டத்தில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, சிவில் சமூக அமைப்பு, ஆகியவையும் ஆசிரியர்களின் பணித்தடை நீக்கும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Wednesday, January 18, 2017

ஆசிரியர்களின் ‘பணித்தடை’ உத்தரவை விலக்கிக் கொள்ள வேண்டும் - வடமாகாண தொழிற்சங்கங்கள் பொதுஅமைப்புக்கள் கோரிக்கை


ஆசிரியர்களின் பணித்தடை உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனாநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்இ யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம்இ தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள்இ சமூகநீதிக்கான வெகுஜன அமைப்புஇ யாழ்.பிரஜைகள் குழு என்பன கூட்டாகக் கையெழுத்திட்டு வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.



அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது --

கடந்த 10.01.2017 அன்று வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் இடமாற்றம் கோரி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வில் பங்குபற்றிய இரு ஆசிரியர்களுக்கு – வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் வழங்கபட்ட “பணித்தடை” உத்தரவு ஜனநாயக செயற்பாடுகளை நசுக்கும் செயற்பாடாக அமைந்துள்ளமையை – வடமாகாண தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கம் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகின்றது.
வடமாகாண கல்வித்திணைக்களத்தால் - இடமாற்றங்கள் பாரபட்சமாகவே தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்றுவரை  2017 இற்குரிய வருடாந்த இடமாற்றமும் நீதியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை. 2017 வருடாந்த இடமாற்றத்தில் - வெளிமாவட்டத்தில் சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்திசெய்து பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு - தொழிற்சங்கங்களுடன் இணைந்து எட்டப்பட்ட தீர்மானத்துக்கமையவே இடமாற்றங்கள் வழங்கப்பட்டன என தெரிவிக்கும் அதிகாரிகள் -  வெளிமாவட்ட பாடசாலைகளுக்கு – ஆசிரிய ஆளணி வழங்க - இலங்கை ஆசிரியர் சங்கம் இடமாற்றச் சபையில் விதித்த நிபந்தனைகளுக்கு இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. (இதற்கு ஆதாரமாக – வடமாகாண கல்வித்திணைக்களத்திலுள்ள 2017 வருடாந்த இடமாற்றத்துக்குரிய - இடமாற்றச் சபை உறுப்பினர்களால் கையொப்பம் இடப்பட்ட  அறிக்கையை ஆதாரமாகக் கொள்ளலாம்.) பாரபட்சங்களும்இ நீதியற்ற நடைமுறைகளுமே பின்பற்றப்பட்டுவருகின்றன என்பதையும் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.  
இவ்வாறான சூழலில் - தமது சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் - வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அலுவலகம் முன்பாக தமது சொந்தவலயத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி 10.01.2017 அன்று – காலை முதல் மாலை வரை செயலாளர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகளின் முடிவுகளில் திருப்தியுறாத நிலையில் - அவர்களின் கோரிக்கைகளை சிறுமைப்படுத்தும் விதமாக கல்வியமைச்சின் செயலாளரின் வாகனம் செல்ல முற்பட்டவேளை – ஆசிரியர்கள் வாகனத்தை வழிமறித்திருந்தனர். இதன்போது சிலர் காயமடைந்தனர். அத்துடன் செயலாளரின் வாகன சாரதியும் ஆசிரியர்களை தாக்க முயன்றுள்ளார்.  இந்த நிலையில் - செயலாளர் – பூட்டப்பட்டிருந்த முன்கதவை ஏறிப் பாய்ந்து வேறொரு வாகனத்தில் சென்றிருந்தார். இதனையறிந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சம்பவஇடத்துக்குச் சென்றிருந்தோம் – காயப்பட்ட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை – கல்வியமைச்சின் செயலாளராலும் ஆசிரியர் ஒருவர் தன்னை தாக்க வந்ததாக பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டதாக அறியமுடிந்தது. ஆனால்- ஆசிரியர்கள் காயமடைந்த நிலையில் செயலாளர் தற்காப்பு முயற்சியாகவே முறைப்பாடு செய்துள்ளதாக அறியமுடிகிறது.
இவ்வாறான சூழலில் - இரு ஆசிரியர்களுக்கு விசாரணைக்கான பணித்தடை உத்தரவு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இது ஜனநாயக உரிமையை நசுக்கும் செயற்பாடாகாவே நாம் கருதுகின்றோம்.
வடமாகாண கல்வித் திணைக்களம் மேற்கொள்ளும் பாரபட்சங்களின் உச்சத்தில் - தாம் இழைக்கும் அநீதிகளை நியாயப்படுத்தியும் - ஜனநாயக உரிமையை நசுக்கியும் செயற்பட முன்வந்தமையை ஏற்றுக்கொள்ளமுடியாது. தமது இடமாற்றங்களைக் கோரி கவனயீர்ப்பு செய்தமை ஆசிரியர்களின் ஜனநாயக ரீதியான உரிமையாகும். இதனை சிறுமைப்படுத்த முயற்சித்தவேளையிலேயே அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதாக கருதுகின்றோம். ஆயினும் வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் தாபன விதிக்கோவையில் அதிகாரிகளை மதிக்காமை போன்ற காரணங்களைக் காட்டி ஜனநாயக உரிமையை நசுக்கமுடியாது. தாபன விதிக்கோவைகளை விட உயர்வானது இலங்கையின் அரசியல் யாப்பாகும்.
இதற்கு எடுத்துக்காட்டாக –கொழும்பின் பிரபல பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் – தான் பணிபுரியும் பாடசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமைக்காக – தாபன விதிக்கோவைக்கமைவாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து - அதிபர் உட்பட அதிகாரிகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஆசிரியை உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னை பணிநீக்கம் செய்தமை சட்டவிரோதமானது என அறிவிக்கும்படி கோரியிருந்தார். இந்தநிலையில் - கடந்த 2016 செப்ரெம்பர் 28 ஆம் திகதி இப் பணிநீக்கம் காரணமாக – குறித்த ஆசிரியையின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும்இ எனவே பிரதிவாதிகள் இருவரும் ஒரு லட்சம் ரூபாய் நட்ட ஈட்டை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
குறித்த ஆசிரியர்களின் பணிநீக்க விடயம் - பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாய நிலையைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாசிரியர்களுக்கு – வழங்கப்பட்ட பணித்தடை உத்தரவை உடனடியாக விலக்கி ஜனநாயக உரிமையை நிலைநாட்ட தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Monday, January 16, 2017

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் 40 புள்ளிக்குரிய தாமதங்களே பரீட்சை பெறுபேறு வெளியிடமுடியாமைக்கான காரணம் --- பரீட்சை ஆணையாளர் ஜோசப் ஸ்ராலினிடம் தெரிவிப்பு


ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் பயின்ற மாணவர்களின் பெறுபேறுகள் தாமதமாவது தொடர்பாக –இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் பரீட்சை ஆணையாளருடன் தொடர்புகொண்டு - 2016 மார்ச் மாதம் பரீட்சை நடைபெற்ற நிலையில் இனியும் தாமதிக்காமல் பெறுபேற்றினை வெளியிடுவதற்கு உடனடிநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதன்போது – பரீட்சைத் திணைக்களத்தினால் 60 புள்ளிக்குரிய செயற்பாடே மேற்கொள்ளப்பட்டது எனவும், மிகுதி 40 புள்ளிகளுக்குரிய செயற்பாடுகள் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளாலேயே அனுப்பப்படவேண்டும் எனவும் - அவ்வாறு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதங்களுடன் - சில ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலிருந்து அனுப்பப்பட்ட பெறுபேற்று தரவுகளிலும் தவறுகள் காணப்பட்டமையினால் மீண்டும் திருப்பி அனுப்பி பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டன எனவும் - அவை சீர்செய்யப்பட்டு வருகின்றன எனவும், இவ்வாறான தாமதங்களே பெறுபேற்றை வெளியிடுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் - தற்போது இவை சீர்செய்யப்பட்டு வருவதால் விரைவில் இப்பெறுபேற்றினை வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார் எனவும் - இது தொடர்பாக கல்வியமைச்சின் செயலாளருக்கும் முறையிட்டுள்ளதாக ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Friday, January 13, 2017

வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட பணித்தடை உடடியாக விலக்கிக்கொள்ளப்படவேண்டும். இல்லையேல் பாரிய போராட்டமாக முன்னெடுக்கப்படும்.


கடந்த 10.01.2017 அன்று வெளிமாவட்டத்தில் தமது சேவை நிபந்தனைக் காலத்தைப் பூர்த்தி செய்த ஆசிரியர்கள் - வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அலுவலகம் முன்பாக தமது சொந்தவலயத்துக்கு இடமாற்றம் வழங்குமாறு கோரி – செயலாளர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் மறியலினை மீறி கல்வியமைச்சின் செயலாளரின் வாகனம் செல்ல முற்பட்டவேளை – ஆசிரியர்கள் சிலர் காயமடைந்தனர். இந்த நிலையில் - செயலாளர் – பூட்டப்பட்டிருந்த முன்கதவை ஏறிப் பாய்ந்து வேறொரு வாகனத்தில் சென்றிருந்தார். இதனையறிந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சம்பவஇடத்துக்குச் சென்றபோது – அப்போது காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரும் உறுதிப்படுத்தினர். இந்த நிலையில் - காயப்பட்ட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை – கல்வியமைச்சின் செயலாளராலும் ஆசிரியர் ஒருவர் தன்னை தாக்க வந்ததாக பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டதாக பின்னர் அறிந்தோம். ஆனால்- தாம் காயமடைந்த நிலையில்-  செயலாளர் தன்னைப்பாதுகாப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு என ஆசிரியர்களால் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் - சில ஆசிரியர்களுக்கு விசாரணைக்கான பணித்தடை உத்தரவு சில வலயக் கல்விப் பணிமனைக்கு வடமாகாண கல்விப் பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ளது. இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஊழியர்கள் தாம் பாதிக்கப்படும் போது – தமது கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்வது ஜனநாயக ரீதியான உரிமையாகும். இது தொடர்பாக – வடமாகாண கல்விப் பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம். அதற்கு – தாபன விதிக்கோவையில் அதிகாரிகளை மதிக்காமைக்கு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். ஆயினும் நாம் - தாபன விதிக்கோவைகளை விட உயர்வானது இலங்கையின் அரசியல் யாப்பு எனவும் - அதில் ஜனநாயக நாட்டில் பேசும் சுதந்ததிரம், ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் - இது அடிப்படை உரிமை எனவும் தெரிவித்திருக்கின்றோம்.

இவ்வாசிரியர்களுக்கு – வழங்கப்பட்ட பணித்தடை உத்தரவு ஜனநாயக உரிமையை நசுக்கும் செயற்பாடாகும். எனவே பணித்தடை உத்தரவு உடனடியாக இரத்துச் செயப்பட்டு இலங்கை அரசியல் யாப்புக்கமைய அடிப்படை உரிமை நிலைநாட்டப்படவேண்டும்.  இல்லையேல் - ஜனநாயக உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் - அடிப்படை மனித சுதந்திரத்தை நிலைநாட்டும் போராட்டமாக – அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து போராட்டமாக கொண்டுசெல்வோம் என்பதை எச்சரிக்;கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.