Tuesday, February 20, 2018

வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து


வடமாகாணத்தில் - வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் - 2018 அமுல்படுத்துவது தொடர்பான – வடமாகாணக் கல்வியமைச்சின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக அமையவில்லை என்றும், அதனை விரைந்து முறையாக நடவடிக்கை எடுக்குமாறும் கோரி - இலங்கை ஆசிரியர் சங்கம் - வடமாகாணக் கல்வியமைச்சர் மற்றும் வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

2018 ஆம் ஆண்டு அழுல்படுத்தப்படவேண்டிய – ஆசிரியர் வருடாந்த இடமாற்றச் செயற்பாடானது – மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றது. நடைபெற்று முடிந்த உள்ளுராட்சித் தேர்தலின் காரணத்தைக் காட்டி - இடமாற்றம் பிற்போடப்பட்டிந்தது. ஆயினும் - உள்ளுராட்சித் தேர்தல் முடிந்த பின்னரும் கூட - இடமாற்றம் பெறத் தகுதியானவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் கூட வெளியிடாமல், இடமாற்றச்சபையின் அங்கீகாரம் இதுவரை பெறப்படாமல் - வடமாகாணக் கல்வியமைச்சு செயற்படுவது – வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மட்டில் பாரிய மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஓவ்வொரு வருடமும் பல்வேறு இழுத்தடிப்புக்களுக்கு மத்தியிலேயே ஆசிரியர் இடமாற்றங்கள் நடைபெற்றுவந்திருக்கின்றன. ஆசிரியர்களின் நலன்கள் தொட்ர்பாக வடமாகாணக் கல்வியமைச்சு தொடர்ச்சியாக இதேவிதமான அசமந்தப்போக்குகளையே கடைப்பிடித்துவருவது கண்டனத்துக்குரியது.

இடமாற்றம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு – தமது மேனமுறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும். அவர்களுள் தகுதியானவர்களுக்கும் உரிமை பாதிக்கப்படாது பாதுகாக்கவேண்டும். இடமாற்றம் தொடர்பான இவ்வித இழுத்தடிப்புக்கள் - மேன்முறையீடு செய்வதற்கான ஆசிரியர்களின் சந்தர்ப்பத்தை இழுத்தடிப்பதற்கான செயற்பாடாக – வடமாகாணக் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்றதோ என்னும் நியாயமான சந்தேகம் ஆசிரியர்கள் மட்டில் எழுந்துள்ளதை தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம்.

எனவே – வருடாந்த இடமாற்றம் - 2018 ல் இடமாற்றம் பெறத் தகுதியான ஆசிரியர்களின் விபரங்கள் உடனடியாக வெளியிடப்பட்டு – மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்பட்டு – முறையாக இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.