Thursday, December 22, 2016

பரீட்சையில் சித்தியடையாத கடமை நிறைவேற்று அதிபர்களை பாதுகாக்க வடமாகாணசபையில் ஆர்ப்பாட்டத்தை செய்யுமாறு தூண்டிய கல்வியமைச்சர் - இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வழிகாட்டலில் தரம்பெற்ற புதிய அதிபர்களின் பல போராட்டங்களிற்குப் பின்னர் - மத்தியகல்வியமைச்சின் அமைச்சரவைத் தீர்மானத்துக்கமைய – நேர்மையாக நடைபெறவிருந்த வடமாகாண புதிய தரம்பெற்ற அதிபர் நியமனத்தை தனது வரட்டு செயற்பாடுகளால் - தகுதியற்ற கடமைநிறைவேற்று அதிபர்களைத் தொடர்ந்தும்  பாதுகாக்க மேற்கொண்டுவரும் வடமாகாண கல்வியமைச்சரின் குள்ளத்தனமான செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எமக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் - இன்று (22.12.2016) வியாழக்கிழமை – கடமைநிறைவேற்று அதிபர்களை – வடமாகாண சபை அமர்வில் கல்வி விவாதம் நடைபெறமுன்பு ஆர்ப்பாட்டம் செய்யுமாறு தூண்டி – அவர்கள் போராட்டம் செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி அவர்களைத் தொடர்ந்தும் பாதுகாக்க முனைந்தமை – தனது அரசியல் சுயநலத்துக்காக வடமாகாணக் கல்வியை தரம்தாழ்த்தச் செய்யும் மோசமான செயற்பாடாகும்.
கடமைநிறைவேற்று அதிபர்கள் - முறையாக அதிபரொருவர் குறித்த பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை செயற்படுத்தப்படும் தற்காலிக ஏற்பாடாகும். இது தொடர்பான மத்திய கல்வியமைச்சின் சுற்றுநிருபங்களும் உள்ளன. பரீட்சையில் தோற்றிய கடமைநிறைவேற்று அதிபர்கள் போட்டிப்பரீட்சையில் சித்தியடையாமல் – மீண்டும் தமது தகுதியற்ற நிலையில் அதிபர்களாக செயற்பட முனைவதை வடமாகாணக் கல்வியமைச்சர் ஊக்குவிப்பது மிகமோசமான செயற்பாடாகும். அதேவேளை –முறையாக தெரிவு செய்யப்படாமல் அதிகாரிகளினதும் அரசியல் வாதிகளினதும் செல்வாக்கால் முறையற்ற விதமாக தெரிவுசெய்யப்பட்ட கடமைநிறைவேற்று அதிபர்களைக் காப்பாற்றுவதற்காக முனையும் - வடமாகாண கல்வி தொடர்பாக – சற்றும் அக்கறையற்ற வடமாகாண கல்வியமைச்சரின் செயற்பாட்டை மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தரம்பெற்ற அதிபர்களுக்கு அவர்களுக்குரிய தகுதியான பாடசாலை வழங்கப்படவேண்டும். வடமாகாண முதலமைச்சர் தரம்பெற்ற அதிபர்களின் நியமனங்கள் தொடர்பாக வழங்கிய உறுதிமொழிக்கிணங்கவும் - உத்தரவுக்கமையவும் புதிய அதிபர் நியமனங்கள் நடைபெறவேண்டும். இதனை வடமாகாண முதலமைச்சர் உறுதிப்படுத்தவேண்டும்.  இல்லையேல் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் தரம் பெற்ற அதிபர்களை ஒன்றிணைத்து பாரிய செயற்பாட்டை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்

Wednesday, December 14, 2016

வடமாகாணத்தில் புதிய நியமனம் பெற்ற அதிபர்களுடன் ஜோசப் ஸ்ராலின் 19.12.2016 சந்திப்பு


அதிபர் தரம் 111 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து பயிற்சிபெற்ற அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் இன்னும் வடமாகாணத்தில் வழங்கப்படாமை தொடர்பாகவும், புதிய அதிபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் - புதிய அதிபர்களுடன் 19.12.2016 மாலை 3.30 மணிக்கு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி வீதியிலுள்ள நாவலர் கல்வி நிலையத்தில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தரம்பெற்ற புதிய அதிபர்கள் கலந்துகொள்ளவும்.

வடமாகாண இடமாற்றங்களில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் ஜோசப் ஸ்ராலின் 19.12.2016 சந்திப்பு


வடமாகாணத்தில் எதிர்வரும் 2017 இல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாகவும், அதில் ஏற்பட்டுள்ள – ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாகவும் பரிசீலிப்பதற்கும், வெளிமாவட்டங்களில் இருந்து தகுதியான சேவைக்காலம் நிறைவேற்றிய நிலையிலும் - மேன்முறையீட்டுச்சபை நடைபெறாமல் பிற்போடப்பட்டு வரும் நிலையில் - அதனால் ஆசிரியர்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பாகவும்,   கலந்துரையாடி தீர்மானங்கள் எடுப்பதற்காக - எதிர்வரும் 19.12.2016 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி வீதியிலுள்ள நாவலர் கல்வி நிலையத்தில் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தலைமையில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இடமாற்றத்தில் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளவும்.

Sunday, December 11, 2016

இடமாற்றங்கள் ஜனவரி மாதம் அமுல்படுத்தப்படவேண்டும். இல்லையேல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை


வடமாகாணத்தில் எதிர்வரும் 2017 ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவிருந்த இடமாற்றங்களை ஏப்ரல் மாதம் வரை தள்ளிப்போடுவதற்கு வடமாகாண கல்வியமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதலே இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் இல்லையேல் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை - ஆசிரியர்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது -

வடமாகாணத்தில் எதிர்வரும் 2017 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் வடமாகாண கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு வன்மையான கண்டணத்தைத் தெரிவிக்கின்றோம்.
வருடாந்த இடமாற்றம் என்பது – ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவருகின்றபோதிலும் - அவ்விடமாற்றங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடாமல் வடமாகாணக் கல்வியமைச்சு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது.
வெளிமாவட்டங்களிலிருந்து சொந்த வலயங்களுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் பெறும்போது அவர்களுக்கு – பதிலீடு வழங்குவது முக்கியமான விடயமாகும். ஆனால் - வடமாகாண கல்வி அதிகாரிகள் – பதிலீடு வழங்குவது தொடர்பாக நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், அவர்களின் உறவுகளைப் பாதுகாப்பதற்குமாக – பதிலீடு வழங்கக்கூடிய நிலை வடமாகாணத்தில் இருந்தும் - அதற்கு பொருத்தமான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. இவ்வாறான சூழல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் - இரு மாதங்களுக்கு முன்னரேயே - 2016 இடமாற்றச்சபைக் கூட்டத்திலேயே இலங்கை ஆசிரியர் சங்கம் இதனைச் சுட்டிக்காட்டி – பதிலீடு வழங்கும் முறையினையும் தெரிவித்திருந்தது. அதற்குரிய – எவ்விதமான ஆக்கபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி - கடந்த 06.11.2016 அன்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரால் கடிதம் வாயிலாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவித்து – அதன்பிரதி – வடமாகாணக் கல்வியமைச்சுக்கும், முதலமைச்சருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில் - ஒரு தொகுதி ஆசிரியர்களுக்கு கடந்தமாதம் இடமாற்றக்கடிதம் வழங்கப்பட்ட நிலையில் – ஜனவரிமுதல் புதிய பாடசாலையில் பொறுப்பேற்கும் முகமாக - அவர்கள் பணியாற்றிய சேவைநிலையங்களில் இருந்து விடுப்புப் பெற்றுள்ளனர். – பல ஆசிரியர்கள் வாடகை செலுத்தி தங்கியிருந்து கற்பித்த இடங்களை விட்டுவிட்டு வந்துள்ளனர். – ஒரு சிலர் தமது பிள்ளைகளையும் தாம் இடமாற்றம் பெற்ற வலயத்தில் பாடசாலைகளுக்கு சேர்த்துள்ளனர். இந்தகைய நிலையில் - இடமாற்றங்களை சித்திரைமாதம் வரை பிற்போடுவதாக வடமாகாணக் கல்வியமைச்சு எடுத்துள்ள தீர்மானம் - வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின்  பிரச்சினைகள் மட்டில் துளியேனும் அக்கறையற்ற செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.
 இந்தகைய தீர்மானம் – இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் எவ்விதமான ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளமாலேயே எடுக்கப்பட்டுள்ளது. இடமாற்றங்கள் யாவும் நியாயமாக – பக்கச்சார்பில்லாமல் நடைபெறவேண்டும். பதிலீடு வழங்கும் முறையை நாம் தெரிவித்திருந்தும் கூட – இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் கருத்துபெறாமல் வடமாகாணக் கல்வியமைச்சு தன்னிச்சையாகத் தீர்மானித்துள்ளமையானது – குறித்த ஒரு தொகுதியினரை பாதுகாக்கும் நோக்கில் - வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை மட்டும் தொடர்ந்தும் துன்பப்படுத்தும் நடவடிக்கையாகும்.
வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக -  வடமாகாண கல்வித் திணைக்களத்தின் செயற்திறனற்ற தன்மைக்கு வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை பலிக்கடாவாக்க இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப்போவதில்லை. இது தொடர்பாக – பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.