Thursday, March 1, 2018

ஆசிரியர்களை அச்சுறுத்தும் சில அதிபர்கள் : தொடருமாயின் தொழிற்சங்க நடவடிக்கை!


வடக்கு மாகாணத்துக்குட்பட்ட சில பாடசாலைகளின் அதிபர்கள் - ஆசிரியர்களை அச்சுறுத்தி - எடுப்பார்கைப்பிள்ளைகள் போன்று ஆசிரியர்களைப் பயன்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன.

ஆசிரியர்களின் சம்பள உயர்வுப் படிவங்களை வேண்டுமென்றே அனுப்பாது வைத்திருப்பதும், ஆசிரியர்களை மரியாதைக்குறைவான வார்த்தைகளால் கையாண்டு அச்சுறுத்துவதும் போன்ற செயற்பாடுகள் அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடுகளாகும்.

பல மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலைக்கு – அதிகாலை முதலே தமது போக்குவரத்தினை ஆரம்பித்து – பல மணிநேரங்கள் போக்குவரத்துக்காக செலவழித்தே கடமைக்குச் செல்கின்றனர். அதேபோல் வீடு திரும்புகின்றனர். காலை 7.30 மணிக்கு பிந்திச் செல்ல முடியாத அளவுக்கு கைரேகை இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் - கடமை நேரமாகிய 7.30 க்கு முன்னரோ 1.30 மணிக்குப் பின்னரோ ஆசிரியர்களை மேலதிக நேரங்கள் பணியாற்ற வேண்டுமென்று எவரும் கோரமுடியாது. தாபன விதிக்கோவையும் அதனையே வலியுறுத்துகின்றது.

பாடசாலை நேரம் என்பது கல்வியமைச்சினால் வரையறுக்கப்பட்டுள்ளது. கைரேகை இயந்திரத்தின் மூலம் வேலை நேரம் கணிப்பிடப்படுகின்றது. ஆனால் – சில பாடசாலைகளின் அதிபர்கள் - காலை 7.30 மணிக்கு கைரேகை இயந்திரத்தை செயலிழக்க வைப்பதும் - மாலை 2.00 மணியின் பின்னரேயே கைரேகை இயந்திரத்தில் பதிவிடமுடியும் என ஆசிரியர்ளை அச்சுறுத்தி செயற்படுவதும் அதிகார துஸ்பிரயோகமாகும் என்பதுடன் வன்மையான கண்டனத்துக்குரியது. இவை தொடர்பாகவும் – பல முறைப்பாடுகள் எமக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகள் தொடருமாயின் சம்பந்தப்பட்ட அதிபர்களுக்கெதிராக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாடசாலை நேரம் தவிர - மேலதிக நேரங்களில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்காமையால் கல்வி பாதிக்கும் என்னும் குதர்க்க நியாயத்தை நாம் நிராகரிக்கின்றோம். வெளிமாவட்ட பல பாடசாலைகளுக்கு போக்குவரத்து வசதிகள் இன்றிய நிலையிலும் கடமைக்குச் சென்று திரும்பும் ஆசிரியர்களிற்கு – அடிப்படை வசதிகள் இன்றும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.

மேலதிக வகுப்புக்கள் என்ற போர்வையிலும் - மேலதிக பரீட்சைகள் என்னும் போர்வையிலும் - கோவில்கள் மற்றும் பொதுநிறுவனங்களின் ஞாபகார்த்தமாகவும், ஊரவர்கள் மற்றும் தனியார்களின் விளம்பரத்துக்காகவும் நடத்தும் பரீட்சைகளுக்கும் போட்டிகளுக்கும் இதே ஆசிரியர்களே பலிகடாவாக்கப்படுகிறார்கள். வடமாகாணக் கல்வியமைச்சும் இவற்றுக்கு அனுமதிவழங்கி – பொது விடுமுறைநாட்களிலும் ஆசிரியர்களை தொடர்ச்சியாக துன்புறுத்தும் செயற்பாட்டுக்குத் துணைபோகின்றது. 

இம் முறைப்பாடுகள் தொடர்பாக – வடமாகாணக் கல்வியமைச்சு அதிகூடிய கவனமெடுக்க வேண்டும் எனக்; கேட்டுக்கொள்கின்றோம். 

ஜோசப் ஸ்ராலின்,
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.