Wednesday, April 17, 2019

வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் விசேட விடுமுறைகள்; தேசிய பாடசாலைகளுக்கு கிடைப்பதில்லை!


தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் அடிக்கடி விசேட விடுமுறைகள் மாகாண கல்வி அமைச்சுகளால் திடீரென அறிவிக்கப்படுவது வழக்கமாகி வருகின்றது.  பதில் பாடசாலைகளும் பிறிதொரு விடுமுறை தினங்களில் அறிவிக்கப்படுகிறது.
கல்வியமைச்சின் அட்டவணையின் பிரகாரம் முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் 17.04.2019 இரண்டாம் தவணைக்கு ஆரம்பமாகுவதாக உள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு 17,18 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டு 22.04.2019 திகதியே பாடசாலை ஆரம்பிப்பதாக கிழக்கு மாகாண கல்வியமைச்சால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் பாடசாலை நாட்களாக ஏப்ரல் 24, மே 4 ஆம் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் - கிழக்கு மாகாணத்தின் தேசிய பாடசாலைகளுக்கு இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை.
அத்துடன் ஏனைய மாகாண முஸ்லிம் பாடசாலைகளும் 17.04.2019 திகதியே ஆரம்பமாகியுள்ளது.
மாகாணங்கள் தமக்குரிய அதிகாரத்தை  பயன்படுத்தவேண்டும் என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் - இத்தகைய அதிகாரத்தை தேசிய பாடசாலைகள் விடயத்தில் கலந்துரையாடப்படாமல் எடுப்பது பெற்றோர் மத்தியிலும் மாணவர் மத்தியிலும் இடர்பாடுகளை ஏற்படுத்துகின்றது.

ஒரே குடும்பத்தில் தேசிய பாடசாலையில் ஒருவரும் மாகாண பாடசாலையில் இன்னொருவருமாக பிள்ளைகள் கற்பாராயின் -  கடமைக்கு செல்லும் பெற்றோர் இந்த விசேட விடுமுறையால் பல வித இடர்களை எதிர்நோக்குகின்றனர்.
மாகாண பாடசாலை விசேட விடுமுறை நாட்களில் ஒரு பிள்ளையை தனியே விட்டுச்செல்வது தொடர்பாக பாதுகாப்பு பிரச்சினை எழுகின்றது.
அதேவேளை - பாடசாலைகளுக்கு கொண்டு சென்று விடும் பெற்றோர்களுக்கும் இரண்டு விதமான பாடசாலை நாட்களிலும் பிள்ளைகளை தனித்தனியாக ஏற்றி இறக்குவதில் சுமை அதிகரிக்கின்றது.
பிள்ளைகள் தேசிய பாடசாலையிலும் பெற்றோர் மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களாகவும் இருப்பார்களானால் - பதில் பாடசாலை நாட்களில் பிள்ளைகளை யாருடன் விட்டுச்செல்வது என்ற பிரச்சினை எழுகின்றது. பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் பெற்றோர் விடுகை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதனால் நிர்வாக ரீதியாக அதிபர்களுடன் முரண்பாடு ஏற்படவும் சந்தர்பமுண்டு.
எனவே - விசேட விடுமுறைகளை மாகாண மட்டத்தில் தீர்மானிக்கும் அதிகாரிகள் - குறித்த மாகாணத்திற்குட்பட்ட தேசிய பாடசாலைகளுக்கும் விடுமுறை பெற்று வழங்கக்கூடியதாக கல்வியமைச்சுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும். மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பொது முடிவாக நடவடிக்கை எடுப்பதே சிறந்த தீர்வாக அமையுமென என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.