Tuesday, October 31, 2017

பல்கலை மாணவர்களின் போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.


தமிழ் அரசியல் கைதிகளை – அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும் -;  உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் - அதனை  இழுத்தடிப்பின்றி உடனடியாக  நிறைவேற்ற வேண்டும் என்று – அரசையும் - பொறுப்புக்கூறவேண்டிய தமிழ் தரப்பினரையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட - பொதுஅமைப்புக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக - யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவிக்கின்றது.

சமூக நீதிக்கான தேடல் வியாபித்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை - அனைத்துத் தரப்பினரும் கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்க வேண்டியது சமூகக் கடமையாகும். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது – தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு - தமிழ் சமூகம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்பதை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே – மாணவர்களை அச்சுறுத்தல் மூலம் நசுக்கும் செயற்பாட்டை செய்யும் எவராயினும் - தமிழ் மக்களின் சமூகக் கடமையை நிறைவேற்றத் துடிக்கும் மாணவர்களுக்கு இடைஞ்சல் புரிந்தவராகவே வரலாற்றில் இடம்பிடிப்பார். அத்தகைய வரலாற்று அவமானத்தை  எவரும் பெற்றுவிடக்கூடாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டிநிற்கின்றது.

எனவே – அரசியல் கைதிகள் - அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் நிபந்தனையற்ற விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்து - இணைக்கப்பட்ட பொதுஅமைப்புக்களுடன் இணைந்து அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலைக்காக குரல்கொடுப்பவர்கள் என்னும் வகையில் - யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரித்து நிற்கின்றது.

Sunday, October 29, 2017

"இலங்கை ஆசிரியர் சங்கத்தின்" அங்கத்துவம் தொடர்பாக - ஆசிரியர்களின் கவனத்துக்கு …!



ஆசிரியர்கள் தாம் அங்கத்துவராக சேர்ந்துகொள்ளும்போது -  தாம் அங்கத்துவம்பெறும் ஆசிரியர் தொழிற்சங்கள் தொடர்பாக – அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

EDCS (கல்வி ஊழியர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம்)  என்பது ஒரு கூட்டுறவுச் சங்கம் ஆகும். அது ஒரு சுயாதீனமான கூட்டுறவுச் சங்கம் ஆகும். அதில் - எந்தத் தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் பெறுபவர்களும் அல்லது அங்கத்துவம் பெறாத ஆசிரியர்களும் கூட – தனக்கென கணக்கினை ஆரம்பித்து – தமக்குரிய சேவைகளை ஏனைய வங்கிகளைப் போன்றே பெற்றுக்கொள்ள முடியும். –EDCS வங்கியின் சுயாதீன செயற்பாடுகளுக்காக - எந்தவொரு தொழிற்சங்கத்திலும் இணைந்திருப்பது அவசியமில்லை. 
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாட்டில் விளக்கேற்ற காத்திருக்கும் ரில்வின் சில்வா – ஜே.வி.பி.


மாநாட்டு மண்டபத்தில் ரில்வின் சில்வா
ஆனால் -EDCS என்பது தமது சங்கத்தின் வங்கி எனக் கூறியும் - தமது சங்கத்தில் இணைந்தால்தான் - வங்கி வழங்கும் சலுகைகளைப் பெறமுடியும் எனக் கூறியும் - தமது “இலங்கை ஆசிரியர் சேவை” சங்கத்தில் தமிழர் விரோதப் போக்குடைய இனவாத – ஜே.வி.பி. கட்சியினர் - வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு சென்று – தமது வங்கியூடாக கடன்வசதி செய்துதருவதாகவும் - கடன்வசதி பெறுவதற்கு தமது சங்கத்தில் இணைந்திருப்பது அவசியமெனவும் கூறி  -  மோசடியான முறைகளில் - ஆசிரியர்களை இணைத்து வருகின்றனர்.  இத்தகைய செயற்பாடு கண்டனத்துக்குரியதாகும்.

அதுமட்டுமல்லாமல் - சில ஆசிரியர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் “இலங்கை ஆசிரியர் சங்கம்” மும் “இலங்கை ஆசிரியர் சேவை” சங்கமும் ஒன்று எனப் பொய்யான பரப்புரைகளையும் செய்து மடு,  மன்னார் போன்ற மாவட்டங்களில் ஜே.வி.பி.யினர் ஆசிரியர்களை இணைத்துள்ளனர். 

இதே ஜே.வி.பி கட்சியினர் தான் -   வடகிழக்கு மாகாணமாக இருந்த பிரிக்கமுடியாத தமிழர் பிரதேசத்தை வடக்கு – கிழக்கு மாகாணங்களாகப் பிரிப்பதற்கு வழக்குப்போட்டவர்களாவர் என்பதை தமிழ் மக்கள் மறந்துவிடக்கூடாது. 

தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக – முழுமையாக செயற்பட்ட ஜே.வி.பியினர் – தற்போது - தமது கட்சியை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வளர்ப்பதற்காக – EDCS கூட்டுறவு வங்கிக்குச் சொந்தமான வாகனங்களையும், அதன்சாரதிகளையும் மோசடியான முறையில் பயன்படுத்தி இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயற்பாட்டுக்கு பயன்படுத்தி வருவது தொடர்பாகவும் - கூட்டுறவுச் சங்க செயலாளருக்கும் எழுத்துமூலமாக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

EDCS க்கு சொந்தமான வாகனத்தில் சென்று ஆசிரியர்களை தமது சங்கத்தில் இணைக்கும் மோசடி  

இந்த நிலையில் - “இலங்கை ஆசிரியர் சங்கம்” இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்துடன் எவ்விதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பெயரைப் பாவித்து ஜே.வி.பியினரால் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தில் அங்கத்துவம் பெற்ற ஆசிரியர்களுக்கு - இலங்கை ஆசிரியர் சங்கம் எவ்வகையிலும் பொறுப்புக்கூறல் கொண்டிருக்காது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Friday, October 20, 2017

பல்கலைக்கழக மாணவர்களின் விசாரணை துரிதப்படுத்தப்படவேண்டும். இலங்கை ஆசிரியர் சங்கம் - சட்டமா அதிபருக்கு கடிதம்.



பல்கலைக்கழக மாணவர்களின் விசாரணை துரிதப்படுத்தப்படவேண்டும்.
இலங்கை ஆசிரியர் சங்கம் - சட்டமா அதிபருக்கு கடிதம்.

கடந்த 2016.10.20 ஆம் திகதி சுன்னாகத்திலிருந்து வரும்போது கொக்குவில் குழப்பிட்டிச் சந்தியில் வைத்து; சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான நடராஜா கஜன், விஜயகுமார் சுலக்ஸன் ஆகியவர்களின் மரணம் தொடர்பாக - இன்றுடன் ஒருவருடம் கடந்த நிலையிலும் - உயர் நீதிமன்றத்தில் உரியமுறையில் வழக்குத்தாக்கல் செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக – முதலில் விபத்தினாலேயே மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் கூறிய நிலையில் - ஐந்து பொலிஸாரைக் கைது செய்து – அவர்களுக்கும் பிணைவழங்கப்பட்ட நிலையில் - உயர் நீதி மன்றத்தில் இதுவரை வழக்குத் தாக்கல் செய்யப்படாதமையால் மாணவர்களின் மரணம் தொடர்பாக உண்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை..

பெரிய விபத்துக்கள் ஏற்பட்டால் - உதவி பொலிஸ் அத்தியட்சகர் அவ்விடத்திற்குச் சென்று பார்வையிடுவது வழக்கம். அவ்வாறெனில் – உதவி பொலிஸ் அத்தியட்சகர் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றிருப்பாரானால் - அம்மாணவர்கள் சுடப்பட்டு இறந்தார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இவ்விரு மாணவர்களின் மரணத்திற்கு நீதியான விசாரணை கோரி 25.10.2016 அன்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது – இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடைபெறும் என ஆளுநரால் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் - அதற்குரிய நடவடிக்கைகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே – உடனடியாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருமாணவர்களின் மரணம் தொடர்பாக – விசாரணையை துரிதப்படுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் சட்டமா அதிபரிருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளது.  குற்றத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதில் கோரப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.


Tuesday, October 10, 2017

13.10.2017 ஹர்த்தாலுக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவு

வெள்ளிக்கிழமை 13.10.2017 நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவைத் தெரிவிக்கின்றது.   தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது – அவர்களுக்காக குரல் கொடுப்பது என்பது தமிழ் மக்களின் பாரிய பொறுப்பாகும்.

தேசிய பிரச்சினைக்கு உளத்தூய்மையுடன் தீர்வைமுன்வைக்க விரும்பும் அரசாங்கம் - முதலில் அரசியல் கைதிகள் அத்தனை பேரையும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து விடுதலை செய்யவேண்டும்.
இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லை என்றும் -  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தான் இருக்கின்றார்கள் எனவும் - நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஊடாக தான் இவர்களுக்கு தண்டனை கொடுத்து விடுதலை செய்யலாம் என்பதும்  .    அரசின் இனவாத நோக்கிலமைந்த பழிவாங்கல் நிகழ்ச்சிநிரலாகும்.



பயங்கரவாத தடைச்சட்டத்தால் கைதுசெய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் பல ஆண்டுகளாக பெரும் இன்னல்களுக்கு மத்தியிலும் - உளவியல் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நடைப்பிணமாக தமிழ் அரசியல் கைதிகள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் விடுதலை தொடர்பில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்ககப்படவில்லை.   தங்கள் விடுதலைக்காக பல தடவைகள் சாத்வீக ரீதியில் உண்ணாவிரதப் போராட்டங்களை தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்தனர். நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எனக் கூறும் அரசாங்கம் இந்த அரசியல் கைதிகள் விவகாரத்தை பயங்கரவாதத்தோடு தொடர்புபட்ட பிரச்சினையாக மட்டுமே பார்க்கின்றது.   தேசிய இனப்பிரச்சினைக்கு உண்மையான தீர்வு காணப்படவேண்டுமாயின் - தமிழ் இனத்தின் அடக்குமுறைக்கெதிதாக போராடியவர்களை முதலில் அரசியல் ரீதியான தீர்மானம் எடுத்து அனைவரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். கடந்த ஆட்சியில் அரசியல் கைதிகளாக இருந்த 12000 பேரை விடுவிக்க முடிந்ததென்றால் - நல்லிணக்கம் எனவும் நல்லாட்சி எனவும் கூறும் தற்போதைய அரசால் தற்போது அரசியல் கைதிகளாக உள்ள 132 பேர்களை மட்டும் விடுவிக்கமுடியவில்லை என்பது பேரினவாதத்தின் அடக்குமுறையின் பழிவாங்கல் நோக்கமே என்பது தெளிவாகின்றது..

இந்த நிலையில் -

(1) தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து - சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்..
(2) முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் ..


13.10.2017  வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கதவடைப்புக்கு போராட்டத்தில்
பாடசாலைசெயற்பாடுகளும் ஸ்தம்பிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்பிலும் ஆசிரியர்கள் கலந்து தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது. அன்றைய தினம் மாணவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் அக்கறை செலுத்துமாறும் -. மாணவர்களை வீதிகளுக்கு அனுப்பாது பாதுகாப்பாக வீடுகளில் வைத்து பொறுப்பாக செயற்படுமாறும்  இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

13.10.2017 வெள்ளிக்கிழமை கதவடைப்புக்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் பூரண ஆதரவு


 வெள்ளிக்கிழமை 13.10.2017 நடைபெறவுள்ள வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பிற்கு 20 பொதுஅமைப்புக்களுடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தமிழ் மக்களின் அரசியலாகவே நோக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் அபிலாசைகளோடு இணைந்திருந்தவர்களுக்கு அநீதி நடைபெறும் போது – அவர்களுக்காக குரல் கொடுப்பது என்பது தமிழ் மக்களின் பொறுப்பாகும். எனவே – அன்றைய தினம் பாடசாலைகளும் ஸ்தம்பிக்க ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆளுநர் செயலகம் முன்பாக இடம்பெறவுள்ள கவனயீர்ப்பிலும் ஆசிரியர்கள் கலந்து தமது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது. அன்றைய தினம் மாணவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் அக்கறை செலுத்துமாறும் -. மாணவர்களை வீதிகளுக்கு அனுப்பாது பாதுகாப்பாக வீடுகளில் வைத்து பொறுப்பாக செயற்படுமாறும்  இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

இவ்விடயம் தொடர்பாக – பொதுஅமைப்புக்கள் இணைந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

எதிர்வரும் 13.10.2017- வெள்ளிக்கிழமை- வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்ளுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடு
அழைக்கின்றோம். அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி - நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம்.

தமிழ் தேசிய இனத்தின் பிறப்புரிமைகளை உறுதிப்படுத்துவதற்காகத் தங்களது வாழ்வை அர்ப்பணித்துப் போராடியவர்கள் உட்படப் பலர் அரசியற் கைதிகளாகச் சிறைகளில் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருப்பதனைக் கண்டிக்க வேண்டியதும்இ அவர்களது விடுதலையை வலியுறுத்திப் போராட வேண்டியதும் - ஒவ்வொரு தமிழ்மகளதும் - ஒவ்வொரு தமிழ்மகனதும் தார்மீகப் பொறுப்பும் வாழ்வுக் கடமையும் ஆகிவிட்டது.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு என்பது - தற்போது ஒரு சட்ட ரீதியான விடயம் என்பதைக் கடந்துவிட்டது. அதுஇ நியாயத்தின் அடிப்படையில் அணுகப்பட வேண்டிய ஓர் விடயமாக ஆகிவிட்டது. அத்தோடு - ஓர் அரசியல் தீர்மானத்தின் ஊடாகத் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படையான பிரச்சனைகளுள் ஒன்று என்ற பரிமாணத்தையும் அடைந்துவிட்டது.
போரின் இறுதிநாள்வரை ஆயுதங்கள் தாங்கிப் போராடிய பல மூத்த போராளிகள் உட்பட - 12000 முன்னாள் விடுதலைப் புலிகளை- குறுகிய காலத் தடுப்பிற்குப் பிறகு - மீளவும் சமூகத்துடன் இணைய வழிவகை செய்த ஓர் அரச பொறிமுறையானது - வெறும் 132 பேர்களை மட்டும் தொடர்ந்தும் சிறைகளில் அடைத்திருப்பதானது எவ்வித சட்ட அர்த்தமும் இல்லாத ஓர் செயற்பாடு ஆகும். தமிழர்களுடன் தொடர்பில்லாத அரசியற் காரணங்களினாலேயே அவர்கள் தொடர்ந்தும் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையானது.

எமக்கான காரியங்களை ஆற்றுவதற்காக எமது வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகள் - அரசாங்கத்தின் பங்காளிகளாக மாறி - அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்திற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள். நாடாளுமன்றச் செயற்பாடுகள் அனைத்திலும் அரசாங்கத்தை நியாயப்படுத்தி ஆதரிக்கின்றார்கள். தமது ஆதரவுக்கான ஒரு பிரதியீடாகத்தன்னும் - உறுதியான தளம்பலற்ற வார்த்தைகளால் பேசி - சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அவர்களால் முடியும். ஆனால் - எமது உறவுகள் சிறைகளில் வாடினாலும் பரவாயில்லை - தாம் அரசாங்கத்தைச் சங்கடப்படுத்தக்கூடாது என்பதற்காகவும் - அரசாங்கத்துடனான தமது உறவுகள் பாதிப்புறக்கூடாது என்பதற்காகவும் - மென்மையாகப் பேசி எமது பிரதிநிதிகள் காலத்தைக் கடத்தி வருகின்றாhர்கள்.
எமது பிரதிநிதிகளின் இந்த அலட்சியப் போக்கினதும் - உதாசீனத்தினதும் - அக்கறையின்மையினதும் விளைவாக — தான்தோன்றித் தனமாகச் செயற்படும் இந்த நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களம் - தமிழ் பிரதேச நீதிமன்றங்களில் உள்ள எமது அரசியற் கைதிகளின் வழக்குகளை - சிங்களப் பிரதேசங்களுக்கு மாற்றுகின்றது. அவர்களுக்கு எதிரான சாட்சிகளுக்குப் பாதுகாப்புப் பிரச்சனை என்று சினமூட்டும் காரணங்களை அடுக்குகின்றது. அத்தோடு - வழக்குகளைத் துரிதமாக நடத்தி முடிக்காமல் - வேண்டுமென்றே இழுத்தடிக்கின்றது.
இதன் காரணமாக - தமக்கான அடிப்படை நீதியைக் கோரி தமிழ் அரசியற் கைதிகள் மூவர் - கடந்த 16 நாட்களாக உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தங்களது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றுவதுடனஇ; தமது வழக்குகளை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதுவே அவர்களது உடனடிக் கோரிக்கையாக உள்ளது.
அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி - எமது அதிகூடிய வல்லமைக்கு உட்பட்ட எமது அழுத்தத்தை நாம் ஒவ்வொருவரும் ஒன்றாய் திரண்டு பிரயோகிப்போம். எவர் கைவிட்டாலும் - அவர்களை நாம் கைவிடமாட்டோம் என்ற தகவலைச் சொல்லுவோம்.
(1) தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற உடனடிக் கோரிக்கையையும்இ அவ்வாறு மாற்றப்பட்டதன் பின்பு - தமது வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவு காண வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து - அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவுத் துறப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் கோரிக்கைகளை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும்..
(2) முழுத் தமிழ் அரசியற் கைதிகளையும் ஓர் அரசியற் தீரமானத்தினூடாக விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும் ..
(3) அசமந்தப் போக்கைக் கைவிட்டும் - மழுப்பல் பதில்களை வழங்காமலும் - அனைத்து தமிழ் அரசியற் கைதிகளையும் விடுவிப்பதற்கான நேரடி அழுத்தத்தினை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்குமாறு எமது நாடாளுமன்றப் பிரதிநிதிகளை வற்புறுத்தியும் ..
(4) வரும் 14.10.2017இ சனிக்கிழமைஇ யாழ்ப்பாணம் வருகை தரவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு - தாமதமற்ற தீர்வு காண வேண்டிய இந்த விவகாரத்தின் தீவிரத் தன்மையை உணர்த்துவதற்குமாக -
எதிர்வரும் 13.10.2017 - வெள்ளிக்கிழமை - வடமாகாணம் தழுவிய முழுமையான கதவடைப்பினை மேற்கொள்ளுவதற்கு அனைத்து தமிழ் மக்களையும் நாம் உரிமையோடு
அழைக்கின்றோம். அவசர மருத்துவ சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் முழுமனதோடு நிறுத்தி - நியாயத்தோடும் சாவோடும் போராடுகின்ற தமிழ் அரசியற் கைதிகளுக்கு எமது ஆத்ம பலத்தைக் கொடுப்போம்.

தமிழ் அரசியற் கைதிகளுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்வரை நாம் ஓயமாட்டோம் என்ற செய்தியை - இந்த நாட்டின் அரசாங்கத்திற்கும் - எமது நாடாளுமன்றப் பிர-திநிதிகளுக்கும் - இதன் பொறுப்புடைய ஒவ்வொரு தரப்புக்கும் உறுதியாகத் தெரிவிக்க எதிர்வரும் 13.10.2017 - வெள்ளிக்கிழமை - காலை 09:30 மணிக்கு - வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஒன்றெனத் திரள்வோம்.

Friday, October 6, 2017

அதிபர் ஆசிரியர்களின் உரிமைகளை வலியுறுத்தி ஆசிரியர் தினமான இன்று கொழும்பில் கவனயீர்ப்பு



அரசாங்கம்  மற்றும் அதிகாரிகள்  - ஆசிரியர் அதிபர்களது அடிப்படைத் தேவைகளை நடமுறைப்படுத் துவதில்லை. - ஆசிரியர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் -  போலி விளம்பரங்கள் மூலமாக ஆசிரியர்,  அதிபர்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இச்செயற்பாட்டைக் கண்டித்து ஆசிரியர் தினமான இன்று (06.10.2017) கொழும்பு வலயக் கல்விப் பணிமனைக்கு அருகில்  மாலை 2.30 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தொழிற்சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 2014 ஒக்டோபர்மாதம் வெளியிடப்பட்ட - புதிய ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பிலும் , புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பிலும் குறிப்பிட்டுள்ள உரிமைகள் தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. 16/2017 சுற்றறிக்கையின்படி அதிபர்களின் சம்பளம் 6500 ரூபாவரை உயர்த்தப்பட்ட நிலையில் - ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனைவிட - ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவைகளை வழங்காமை, வருடாந்த சம்பள
ஏற்றங்களை உரிய நேரத்தில் செயற்படுத்தாமை,  ஆசிரியர்களின் சேவைக்கால செயலமர்வுகளை முறைப்படி திட்டமிடாமல் நடத்துதல்,  ஆசிரியர்களின் 10 மாத கடன்தொகையை வழங்குவதில் இழுத்தடிப்ப செய்தல் , பரீட்சைப் பெறுபேறை அதிகரித்தல் எனும் பெயரில் நடைமுறைசாத்தியமற்ற நிபந்தனைகளை திணித்தல். போன்றவற்றுடன்
 ஆசிரியர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை மதிக்காது - நசுக்கத்துடிக்கும் அதிகாரத்தரப்பு - ஆசிரியர்தினத்தை கொண்டாடுவதாக போலி முகங்களையே காட்டுகின்றன.
இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன்- ஆசிரியர்களின் உரிமைகள் கிடைக்க அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தக் கவனயீர்ப்பு  நடைபெற்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.