Wednesday, February 26, 2020

நாளை 27 ஆம் திகதி முதல் - காலை 7.30 - மாலை 1.30 வரை மட்டுமே அதிபர்,ஆசிரியர்கள் செயற்படுவர். 16 ம்திகதி முதல் 5 நாட்கள் சுகயீன லீவு போராட்டம்!



கல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் - வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் செல்லவில்லை.

இதன் பின்னர் கூடிய தொழிற்சங்கங்கள் - இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றுநிருபம் உடனடியாக வெளியிடப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் - 
நாளை 27 ஆம் திகதி முதல் சகல அதிபர் ஆசிரியர்களும் - காலை 7.30 மணிமுதல் மாலை 1.30 வரையும் - மலையக பாடசாலைகளில் 8.00 - 2.00 மணிவரையும் மட்டுமே பாடசாலை செயற்பாடுகளை  மேற்கொள்வர்.
ஏனைய மேலதிக செயற்பாடுகள் அனைத்தையும் புறக்கணிப்பதுடன் - அவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கமறுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

உரியதீர்வு கிடைக்கவில்லையெனின் - மார்ச்மாதம் 16 ஆம் திகதி முதல் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக சுகயீன லீவுப் போராட்டம் இடம்பெறும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இதனால் ஏற்படும்  பாதிப்புக்கள் குறித்து - தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது -ஏமாற்றிவரும் இந்த அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்றும் - ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Monday, February 24, 2020

அதிபர், ஆசிரியர் நாளை சுகயீனலீவுப் போராட்டம்! அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் தொழிற்சங்கங்கள் பொறுப்பேற்கும்! -ஜோசப் ஸ்ராலின் -


நாளை 26 ஆம் திகதி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சுகயீன லீவினை அறிவித்து - ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அதிகாரிகளினாலோ அல்லது வேறுவகையிலோ அச்சுறுத்தலேனும் அதிபர், ஆசிரியர்களுக்கு ஏற்படுமாயின் - போராட்டத்தில் பங்கேற்கும் அனைத்து தொழிற்சங்கங்களும் அதனை பொறுப்பேற்கும் என்ற உத்தரவாதத்தையும் வழங்குவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் - ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து - அனைத்து அதிபர் ஆசிரியர்களும் - சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.

வலிகாமம் கல்வி வலய பணிப்பாளரின் கடிதத்தால் அலைக்களிக்கப்பட்ட ஆசிரியர்கள்! இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.


வலிகாமம் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு என யாழ்ப்பாண நகரத்திலுள்ள பாடசாலைக்கு - அழைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அலைக்களிக்கப்பட்டுள்ளனர்.

இன்று - 24.02.2020 ஆரம்பகல்வியில் தரம் 1 ஆசிரியர்களுக்கான வாய்மொழி ஆங்கில செயலமர்வு  ஏற்பாட்டாளர்களினால் - 30 பேருக்கான செயலமர்வாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் அசமந்தமான செயற்பாட்டால் - நூற்றுக்கணக்கான ஆரம்பகல்வி ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பி அலைக்களிக்கப்பட்டனர்.
ஏற்பாட்டாளர்களினால் 30 பேருக்கானதாகவே செயலமர்வு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் - ஏனைய ஆசிரியர்களை திருப்பியனுப்ப முயற்சித்துள்ளனர்.
பாடசாலைகளில் விரல் பதிவு முறைமூலமே வரவு பதியப்படும் நிலையில் - தாம் அதிகதூரம் பணித்து - உரிய நேரத்துக்கு வந்தும் - வீணான அரைநாள் விடுகையாக கணக்கிடப்பட எதிர்ப்புத் தெரிவித்து - 
குழப்பமடைந்தபோது- வலிகாமம் கல்விவலய ஆசிரியர் வள நிலையத்துக்கு மீண்டும் அழைக்கப்பட்டு- முன்னேற்பாடுகள் எதுவுமற்ற - நேரத்தை விரயமாக்கிய விதத்தில் ஆசிரியர்களின் இன்றைய நாள் வீணடிக்கப்பட்டுள்ளது. 
இணைபாடவிதான செயற்பாடுகள் நடத்தப்பட்ட நேரங்களுக்காக - மேலதிக வகுப்புகளை வைத்து - நீலமட்டை புத்தகத்தில் பதியவேண்டும் எனவும் - இல்லையேல் கணக்காய்வுமூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர்களை அச்சுறுத்தி மேலதிக வகுப்புகளை நடாத்த செய்யும் அதிகாரிகளுக்கு - ஆசிரியர்களின் இன்றைய நாள் வீணடிக்கப்பட்டமைக்கு - வலிகாமம் பணிப்பாளருக்கு வடமாகாண கல்வியமைச்சு என்ன நடவடிக்கையை எடுக்கப்போகிறது? என இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Thursday, February 20, 2020

முறைகேடுகளை வடமாகாண கல்வியமைச்சு ஊக்குவிக்கின்றதா?விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி!


வடமாகாண கல்விப் புலத்தில் நிகழும் முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் பல  ஆதாரங்களுடன் - வடமாகாண கல்வியமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் -  குற்றங்கள்   நிரூபிக்கப்பட்ட நிலையிலும் - நடவடிக்கைகள் எடுத்திராத - வடமாகாண கல்வியமைச்சின் போக்கு - முறைகேடுகளை ஊக்குவிக்கத் துணைபோவதாகவே கருதவேண்டியுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பாக  - வடமாகாண கல்வியமைச்சு பாராமுகமாக இருப்பது பலத்த சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது என்பதுடன் - முறைகேடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு  அழுத்தங்களை ஏற்படுத்தி - அதன்மூலம் முறைகேட்டாளர்களை பாதுகாக்கும் சந்தர்ப்பங்களை - வடமாகாண கல்வியமைச்சு வழங்குகிறதா? என்னும் சந்தேகம் ஏற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடமாகாண கல்வியமைச்சின் இத்தகைய அசமந்தங்களே கல்விப் புலத்தில் - முறைகேடுகள் தலைவிரித்தாட காரணமாக உள்ளன என்பதைக் குறிப்பிட்டு - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது -

யாழ்.நகரின் ஆரம்ப பாடசாலை அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை என்பதையும்  ,
நிதிப்பிரமாணக்குறிப்பின் பிரகாரம் பாடசாலைப் பொருட்பதிவேட்டைத் தவிர்த்து - தற்காலிக பொருள் பதிவேடு போன்று ஒன்றை தயாரித்து முறைகேடுகளை மூடிமறைக்க பலரது அனுசரணை பெறப்பட்டுள்ளமையையும், விசாரணைக்குழுவில் மூவருள் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த - வடமாகாண கல்வித் திணைக்கள கணக்காளரின் பிரசன்னமின்றி ஒரே நாளில் விசாரணை முடிக்கப்பட்டமை தொடர்பாகவும், முறைப்பாட்டைச் செய்திருந்த இலங்கை ஆசிரியர் சங்க தரப்பிடமிருந்தோ அல்லது ஏனைய சாட்சியாளர்களிடமிருந்தோ எவரும் அழைக்கப்பட்டு வாக்குமூலம்  ஒன்றைக்கூட விசாரணைக்குழு பெற்றிருக்காதமை தொடர்பாகவும் குறிப்பிட்டு -
அதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - விசாரணையாளர்கள் முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளார்கள்  என்பதைக் குறிப்பிட்டு - நீதியான மீள் விசாரணைகோரி -  06.12.2019 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் -வடமாகாண கல்வியமைச்சின் செயலாளராகிய தங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தோம். 

ஆயினும் - முறைகேட்டுக்கு துணைபுரிந்திருந்த அதே விசாரணைக்குழுத் தலைவருக்கே - 27.12.2019 ற்கு முன் - முறைப்பாடு செய்திருந்த இலங்கை ஆசிரியர்
சங்கத்திடம் வாக்குமூலம் பெற்று - அதனையும் உள்வாங்கி மீள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரி - அவருக்கு அனுப்பப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை எமக்கும் அனுப்பி தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் - இன்றுவரை - அவ்விசாரணைக்குழுவினால் எவ்வித வாக்குமூலமும் எம்மிடமிருந்தோ, சாட்சிகளிடமிருந்தோ பெறப்படவில்லை என்பதுடன் - விசாரணை அறிக்கையும் முழுமைப்படுத்தப்படவில்லை. 

இதே போன்றே - எம்மால் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய பல முறைப்பாடுகள் தொடர்பாகவும் -  நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் வடமாகாண கல்வியமைச்சின் போக்கு - முறைகேடுகளை ஊக்குவிப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
இத்தகைய தாமதத்தை - வடமாகாண கல்வியமைச்சு பாராமுகமாக இருப்பது பலத்த சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது.

குறித்த அதிபரின் முறைகேடுகள் தொடர்பாகவும் - விபரங்களுடனேயே வடமாகாண கல்வியமைச்சிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
பலமாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையிலேயே - எமது தொடர் அழுத்தத்துக்காக -  வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை மீண்டும் இழுத்தடிக்கப்படுகிறது.

விசாரணை முடிவுறுத்தப்படாத  நிலையில் - மாணவர் அனுமதிக்கு பணம்பெற்றவிடயம் கண்டறியப்பட்டநிலையில் - தற்காலிக பொருட்பதிவேடு ஒன்று பேணப்பட்ட விடயமும் குறிப்பிட்டுள்ள நிலையில் -விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும் கூறி  - இந்த முறைகேடுகளை மறைத்து வெள்ளையடிப்பதற்காக நேற்றைய தினம் 20.02.2020 வியாழக்கிழமை - அதிபரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிலரால் பொதுக்கூட்டம் ஒன்று பாடசாலையில் கூட்டப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்திற்கு யாழ்.வலயக்கல்வி பணிமனையும் அனுமதி வழங்கியுள்ளதன் பின்னணி என்ன?

இதில் - அதிபரின் முறைகேடுகளை வெளிக்கொணர்வதற்கு துணையாகவிருந்த - அப்பாடசாலையின் பிரதி அதிபரை இடமாற்றுவதற்கு - கையொப்பமிடுமாறு சிலரால் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை - இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அதேவேளை - வடமாகாண கல்வியமைச்சின் இத்தகைய அசமந்தங்களே பாடசாலைகளில் முறைகேடுகள் தலைவிரித்தாட காரணமாக உள்ளன என்பதும் இத்தகைய சம்பவங்கள் மூலம் வெளிப்படுகின்றன.


மேலதிக ஆளணியாக அதிபர் நியமனம் பெற்ற ஒருவரை  - நியமனம் பெற்ற பாடசாலையை தவிர வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்க முடியாது. அப்படி வழங்கும் பட்சத்தில் அவரது சேவை  ஆசிரியர் சேவையாகவே கருதப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே - குறித்த பாடசாலை அதிபரின் நியமனமே -வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளில் முதன்மையானதாகும்.

குறித்த விசாரணைகளை - இழுத்தடிக்காது  வடமாகாண கல்வியமைச்சு விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என - வலியுறுத்துகின்றோம்.

எனக் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wednesday, February 19, 2020

பெப்பரவரி 26 - சுகயீன லீவு போராட்டம் ; வெற்றியடைய ஒத்துழைக்க வேண்டும்! -ஜோசப் ஸ்ராலின் -


பெப்பரவரி 26 ஆம் திகதி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் சுகயீன லீவினை அறிவித்து - ஆசிரியர் அதிபர்களின் சம்பள முரண்பாட்டைத் நீக்க வலியுறுத்துவோம் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் - ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து - அனைத்து அதிபர் ஆசிரியர்களும் - சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் -

ஆசிரியர் அதிபர் சேவைக்கு B.C.பெரேரா சம்பள ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்ட 23 வருடங்களாக இருக்கும் சம்பள முரண்பாட்டை நீக்குதல் உட்பட 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் வேலை நிறுத்தங்களின் பலனாக - கடந்த அரசங்கத்தின் அமைச்சரவைக் குழு 2019 ஒக்டோபர் 1 ஆம் திகதி ஆசிரியர், அதிபர் சேவைகளை அகப்படுத்தப்பட்ட சேவையாக மாற்றி <CLOSED service) புதிய சம்பளப் பரிமாணங்கள் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது.
தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பிரயோகித்த அழுத்தங்களின் விளைவாக புதிய சம்பளத் திட்டத்தை அழுல்படுத்தும் வரை - இடைக்கால சம்பள யோசனை ஒன்றை நடைமுறைப்படுத்த வலியுறுத்தப்பட்டதுடன் அதற்காக 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதி மீண்டும் அமைச்சரவையில் முடிவு எடுக்க வேண்டியதாக இருந்தது. அத்துடன் இடைக்கால சம்பளத்தைக் கொடுப்பதற்கான சுற்றறிக்கையை வடிவமைக்கும் வேலையை சம்பள ஆணைக்குழுவுக்கு பொறுப்பளிக்கப்பட்டது.
ஆசிரியர், அதிபர்கள் பல தசாப்த காலமாக நசுக்கப்பட்டு வரும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க கடந்த அரசாங்கத்தின் அமைச்சு எடுத்த தீர்மானம் - தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி தேர்தலின் வாக்குறுதியாகவும் மாறியது. 

இந்த அரசாங்கம் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கி அதை ஏற்றுக் கொண்டதால் சம்பள முரண்பாட்டைத் தீர்க்கும் பொறுப்பில் இருந்து தற்போதைய அரசால் விலக முடியாது.

2019 டிசம்பர் 17 ஆம் திகதி தற்போதைய கல்வி அமைச்சர் ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினை தொடர்பாக எமது தொழிற்சங்கங்களுடன் உரையாடி - 2020.01.21 திகதி அன்று மீண்டும் கலந்துரையாடல் நடந்தாலும் - உரிய பதில் வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில் எமது சங்கங்கள் 2020.02.03 முன் உரிய சுற்றறிக்கையை வெளியிடுமாறும் - அதை வெளியிடாத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக எழுத்து மூலம் அறிவித்தோம்.

ஆனால் எமது கோரிக்கைகளுக்கு அரசு உரிய பதில் கொடுக்காதபடியால் 2020.02.14 திகதி தொழிற்சங்கங்கள் பல இணைந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் அருகில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தி மீண்டும் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம்.

தற்போதைய அரசு இந்த செயற்பாட்டிற்கும் உரிய பதில் கொடுக்கத் தவறியபடியால் - நாம் எல்லோரும் எதிர்வரும் 26 ஆம் திகதி புதன்கிழமை - 'சுகயீன லீவு' அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு போக தீர்மானித்துள்ளோம்.

ஆசிரியர், அதிபர்களின் சம்பள உயர்வை வலியுத்தி தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் போராட்டம் - ஒவ்வொரு ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் நலனுக்கானதே என்பதை உணர்ந்து - அனைத்து அதிபர் ஆசிரியர்களும் - சம்பள உயர்வை வலியுறுத்தி சுகயீன லீவு போராட்டம் வெற்றியடைய ஒத்துழைக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்புவிடுத்துள்ளார்.

இதேவேளை - காலை 9.30 மணிக்கு இசறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால் - சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி - தொழிற்சங்கங்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Friday, February 14, 2020

20ஆம் திகதிக்குமுன் பேச்சுவார்த்தை - ஆயினும் இடைக்கால சம்பள திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்வரை 26 ஆம்திகதிய சுகயீன லீவு போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும்.


ஆசிரிய, அதிபர் சேவை அகப்படுத்தப்பட்ட சேவையாக்கப்பட்ட நிலையில் - இடைக்கால சம்பள அதிகரிப்பு  தொடர்பாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தொழிற்சங்கங்களுக்கு வழங்கிய உறுதிமொழிக்கிணங்க - கடந்த 3 ஆம் திகதிக்கு முன்னர் - சுற்றுநிருபமாக வெளியிடவேண்டும் என்ற கோரிக்கை அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் சுற்றுநிருபமாக வெளியிடப்படாத நிலையில் - தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்வோம் என்ற முன்வைப்புக்கிணங்க - இன்று 14 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கலை 11 மணிக்கு - பேரணி ஆரம்பிக்கப்பட்டு - லோட்டஸ் வீதியூடாக ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது. குறித்த பேரணியில் பல ஆயிரக்கணக்கான அதிபர், ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி செயலகத்தை பேரணி வந்தடைந்தபோது - தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் பிரதிசெயலாளர் றோகண அபேரத்னவுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
2மணி நேர பேச்சுவார்த்தையின் பின்னர், 
இடைக்கால சம்பள அதிகரிப்பு தொடர்பாக - முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக - எதிர்வரும் திங்கட்கிழமை - ஜனாதிபதிசெயலகம் , கல்வியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கூடி ஆராய்ந்து வரும் 20 ம் திகதிக்கு முன்னர் தொழிற்சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி - தொழிற்சங்கத்துக்கு சாதகமான விடயம் குறித்து செய்யக் கூடியவற்றை அறிககையாக தருவதாக உறுதிவழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் - வரும் 26 ஆம்திகதி நடபெறவுள்ள சுகயீன லீவு போராட்டம் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும் - இடைக்கால சம்பள திட்டத்துக்கான சுற்றறிக்கை வெளியிடப்படும்வரை - அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடமுடியாது எனவும் தெரிவித்தார். வெற்றியின் இறுதி தருணத்தில் - ஆசிரியர்கள் வரும் 26 ஆம் திகதி முழுமையாக போராட்டம் வெற்றிபெற ஒத்துழைக்கவேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை -ஆர்ப்பாராட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு செல்லுமாறு பொலிஸார் கால்களால் உதைத்து தள்ளினர். ஆயினும் -ஜனாதிபதி  செயலகம் முன்பாகவே தொடர்ச்சியாக அதிபர் ஆசிரியர்கள் கூடியிருந்தனர்.
ஜனநாயக முறையில் அதிபர் ஆசிரியர் போராடியவேளை - ஆசிரியர்களை தாக்கிய பொலிஸாரின் அடாவடித்தன செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம் எனவும் - அரசு இத்தகைய செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் எனவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Wednesday, February 12, 2020

பக்கச்சார்புகள் அகற்றப்படும்வரை பதிலீட்டு வெளிமாவட்ட இடமாற்றங்களுக்கு ஆதரவுதெரிவிக்க மாட்டோம் - இ.ஆ.சங்கம்


யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் கட்டமைப்பில் - அவசியமற்ற அரசியல் தலையீடு உட்புகுந்து – அந்தப் பாடசாலையின் வளர்ச்சி நிலையைக் குழப்பிவருவதாகவும் - அரசியல் தலையீட்டை நீக்கி - பாரபட்சங்களை இல்லாதொழிக்கவில்லையாயின் - தொழிற்சங்க நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வியமைச்சு, வடமாகாண கல்விப் பணிப்பாளர், வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு - கடிதம் அனுப்பியுள்ளது.

தமது இந்தக் கோரிக்கையை – அவர்களால் செய்யப்பட்ட பல முறைப்பாடுகளை இழுத்தடிப்புச் செய்வதுபோன்று மேற்கொள்ள முயலுவீர்களாயின் - இதன் மூலம் ஏற்படும் - வடமாகாண கல்விக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கு – வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித் திணைக்களமும் குறித்த அரசியல் வாதிகளுமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் மிகவும் பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - 

யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் மைதானம் தொடர்பாக – உள்ள பிணக்கை ஆரம்பத்திலேயே தீர்க்குமாறும் - வடமாகாண கல்வியமைச்சுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கும் எழுத்துமூலம் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தோம். அதன் பின்னரும் - முன்னாள் ஆளுநர்களுக்கும் தெரிவித்திருந்தோம். அப்போது நடவடிக்கை எடுக்காத – வடமாகாண கல்வியமைச்சினதும், வடமாகாண கல்வி திணைக்களத்தினதும் செயற்பாடு காரணமாக - இன்று குறித்த பாடசாலை பாரிய குழப்பநிலையை அடைந்திருக்கிறது.
இந்த குழப்ப நிலைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் -
ஆசிரியை ஒருவருக்கு முறையாக இடமாற்றச் சபையூடாக வழங்கப்பட்ட வெளிமாவட்ட இடமாற்றங்களை – அரசியல் செல்வாக்குகளினூடாக இரு வருடங்கள் தொடர்ச்சியாகப் பிற்போட்டு – அந்த இடமாற்றம் - பின்னர் கோப்பாய் கோட்டத்துக்கான இடமாற்றமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் - தற்போது – கோப்பாய் கோட்ட பாடசாலையொன்றுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தைக் கூட – அரசியல் செல்வாக்கின்மூலம் சவாலுக்கு உட்படுத்தி - முழுக் கல்விக் கட்டமைப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதையும், அதற்கு உடந்தையாக வடமாகாண கல்வியமைச்சும் செயற்பட்டு வருவதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இடமாற்ற மேன்முறையீடுகளின் போது – குறித்த ஆசிரியை தான் கற்பித்திராத பாடத்துறையில் 100 வீதம் சித்திபெற்றுக் கொடுத்ததாக உரிமைகோர முயன்றதையும், இதனைப் போன்று பொய்யான காரணங்களையே மேன்முறையீடுகளில் தெரிவித்தும் அதிகாரிகளையும், இடமாற்றச்சபையையும் ஏமாற்றியுமுள்ளமை தொடர்பாக தற்போது – ஆதாரபூர்மான தரவுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
யாழ்.மாவட்டங்களிலிருந்து – பதிலீடான சேவையை மேற்கொள்ளும் தேவை கருதி -  44 வயதுக்குட்பட்ட  பெண் ஆசிரியர்கள் பலரும் - பல குடும்பச்சுமைகளின் மத்தியிலும் வெளிமாவட்டங்களுக்கு சென்று பணியாற்றுகின்றனர். ஆனால் குறித்த ஆசிரியை  போன்றவர்கள் - வயது குறைந்த நிலையிலும்  அரசியல்வாதிகளை வைத்து கல்வித்துறையில் அரசியல் செய்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கிறது.
வெளிமாவட்ட சேவையை பூர்த்தி செய்யாது – அரசியல்வாதிகளின் தயவில் இருக்கும் குறித்த ஆசிரியைக்கு  – முன்னர் வழங்கிய  வெளிமாவட்டத்துக்கான பதிலீட்டு இடமாற்றம் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்பதை இலங்கை ஆசரியர் சங்கம் வலியுறுத்துகின்றது. இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் - இந்த இடமாற்றம் சீர்செய்யப்படும்வரை – யாழ்.மாவட்டங்களிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு – பதிலீடாக அனுப்பப்படும் ஆசிரிய ஆளணியை அனுப்புவதற்கு, வடமாகாண கல்வியமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற முடிவை இலங்கை ஆசிரியர் சங்கம் எடுத்துள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
ஒரு மாத காலத்துக்குள் - குறித்த ஆசிரியையின் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் - வெளிமாவட்டங்களிற்கு -யாழ்.மாவட்டத்திலிருந்து பதிலீடாக அனுப்பப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் திரட்டி - உடனடியாகவே சொந்த வலயங்களுக்கே இடமாற்றம் வழங்கக்கோரி - தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் - போராட்டங்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் - ஆசிரியர்களுக்கு நாம் வழங்கும் உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது இந்தக் கோரிக்கையை – எம்மால் செய்யப்பட்ட பல முறைப்பாடுகளை இழுத்தடிப்புச் செய்வதுபோன்று மேற்கொள்ள முயலுவீர்களாயின் - இதன் மூலம் ஏற்படும் - வடமாகாண கல்விக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கு – வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித் திணைக்களமும் குறித்த அரசியல் வாதிகளும் வடமாகாண ஆளுநருமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.