Thursday, April 30, 2020

துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சம்பளம் நிறுத்தும் அதிகாரத்தை வழங்கியது யார் ? இ.ஆ.சங்கம் கேள்வி!

துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் கோட்டக்கல்விப் பணிப்பாளர்களுக்கு Np/44/20/2/3/FA/GENERAL இலக்க கடிதத்தின் மூலமாக - தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கவனம் செலுத்துகிறது.

இவ்விடயம் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் துணுக்காய் கல்வி வலய செயலாளர் இந்திரபாலன் மேலும் தெரிவிக்கையில் -

அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி - ஒரு நாள் சம்பளத்தை கொவிட்-19 க்கான அரச நிவாரணத்துக்கான அறவீடாக - அறவிடமுடியாது என ஏற்கனவே - இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வியமைச்சுக்கும் தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் - ஒரு நாள் சம்பளத்தை ஆசிரியர்களிடம் அறவிடுவதற்கு - சம்மதக் கடிதத்தை அதிபர், ஆசிரியர்களிடமிருந்து பெற்று வழங்காவிட்டால் - மே மாத சம்பளப் பட்டியல் அனுப்பப்படமாட்டாது என துணுக்காய் வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளமையானது - மிகுந்த கண்டனத்துக்குரிய விடயமாகும்.

அதிபர், ஆசிரியர்கள் தமது சம்பளத்தில் - நிதி வழங்குவது தொடர்பாக அவர்கள்தான் தீர்மானிக்கமுடியுமேயன்றி - வேறெவரும் தீர்மானிக்கமுடியாது. அச்சுறுத்திப் பெற முயற்சிக்கவும் கூடாது.

சம்மதம் தெரிவிக்க விரும்பாத அதிபர், ஆசிரியர்கள் - விருப்பமின்மை தொடர்பாக - கடிதம் வழங்கவேண்டிய எந்தவிதமான அவசியமுமில்லை. அவர்களை கடிதத்தைக்கோரி வற்புறுத்தவும் முடியாது.

அதற்காக - அதிபர், ஆசிரியர்களின் சம்பளத்தை வழங்காமல் நிறுத்துவதற்கு துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளருக்கு இத்தகைய அதிகாரத்தை வழங்கியது யார் ?

இத்தகைய அச்சுறுத்தும் செயற்பாடுகளை கல்விப்புலம் சார் தரப்புகள் கைவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

எனத் தெரிவித்தார்.

Monday, April 27, 2020

தற்போதுள்ள அச்சமான சூழலில் - இராணுவத்தினருக்கு பாடசாலைகளை வழங்கமுடியாது. – ஜோசப் ஸ்ராலின் -

அரசாங்கம் தற்போது பாடசாலைகளிலும் - ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரை தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை - இராணுவத்தினர் சில தேவைகளுக்கு - இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும் கூட – தற்போது கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் - இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து - கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரி- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களை சூழவுள்ள மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன. எனவே - இந்த அச்சமான சூழ்நிலையில் - தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தல் என்னும் போர்வையில் - பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே - மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகிள்ளது.

இந்தச் சூழலில் - பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையூம் இராணுவத்தினருக்கு வழங்குவதை அரசு நிறுத்தவேண்டும். நாடுபூராகவும் 43 லட்சம் மாணவர்கள் கல்விகற்றுவரும் நிலையில் - பாடசாலைகளை சூழ உள்ள சமூகத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் செறிவு நிறைந்த இடங்களிலமைந்த பாடசாலைகள் - மற்றும் நிறுவனங்களில் - இத்தகைய தனிமைப்படுத்தல் நிலைகளை அமைக்க முயற்சிப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக – வடக்கு மாகாணக் கல்வியமைச்சிடம் - வடமராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் - பாடசாலைகள் சிலவற்றை வழங்குமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு – கொரோனா நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பாடசாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கிறது.

''தனிமைப்படுத்தல் நிலையங்களாக பாடசாலைகள் மாற்றப்படாது” எனக் கல்வியமைச்சு அறிவித்துள்ள நிலையில் - இதன் உண்மைத்தன்மைகளை கல்வியமைச்சு முறையான அறிக்கையூடாக வெளிப்படுத்தவேண்டும்.

அச்சுறுத்தல் நிறைந்த இந்த சூழலில் – பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டை கல்வியமைச்சு உடன் நிறுத்த வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

Wednesday, April 15, 2020

அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி ஒருநாள் சம்பளத்தை அறவிடமுடியாது - ஜோசப் ஸ்ராலின்

கொவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதெனும் போர்வையில் - அதிபர், ஆசிரியர்களின் ஒருநாள் வேதனத்தை கழிப்பதற்காக - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் 10.04.2020 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் - வடமாகாண கல்விப்பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி ஒருநாள் வேதனத்தை - திணைக்களங்கள் அறவிடமுடியாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. தற்போது நிலவும் - இக்கட்டான சூழ்நிலையில் - அதிபர், ஆசிரியர்கள் பலர் தாமாக முன்வந்து - தமது நிதிப்பங்களிப்புகள் மூலமாக - பல நலத்திட்டங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தினூடாகவும், சமூக அமைப்புகள் ஊடாகவும், தனித்தனியாகவும் முன்னெடுத்து வருகிறார்கள். ஊரடங்கு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் - அன்றாடம் உழைத்து வாழ்ந்தவர்கள் - பட்டினியை எதிர்நோக்கும் ஆபத்தான சூழலில் இருந்தபோது - அரசு பாராமுகமாக இருந்தது. இன்றும்கூட -அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகளும், உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களை சரியாக சென்றடையவில்லை என்னும் குற்றச்சாட்டு நீங்கவில்லை. இந்த சூழலில் - அதிபர், ஆசிரியர்களின் கணிசமான நிதிப்பங்களிப்புகளைப்பெற்று - இலங்கை ஆசிரியர் சங்கமும் மனிதாபிமான உதவிகளை கணிசமான அளவில் செய்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் - தனிப்பட்டமுறையில் பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கூட - தமது பாடசாலை மாணவர்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். இதுவரை அவ்வாறு செய்யாதவர்களைக் கூட - பாடசாலை மட்டங்களில் செயற்படுத்துமாறு - எமது சங்க உறுப்பினர்களூடாக அறிவுறுத்தியுள்ளோம். அதற்குரிய செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இலங்கை ஆசிரியர் சங்கம் களத்தில் நேரடியாக மேற்கொண்டுவரும் - மனிதாபிமான உதவிகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தாமாக முன்வந்து - அனுசரணை வழங்கிவருகிறார்கள். இந்நிலையில் - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி - அவர்களின் ஒருநாள் சம்பளத்தை - வடமாகாண கல்வித்திணைக்களம் அறவிடமுடியாது என இலங்கை ஆசிரியர்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.