Tuesday, July 31, 2018

நடமாடும் சேவையில் வடமாகாண கல்வியமைச்சரின் அடாவடி: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.


வடமாகாணத்தின் கல்வி வலயங்களில் நடைபெறும் நடமாடும் சேவை - கல்வியமைச்சரின் அரசியலை வளர்ப்பதற்குரிய இடமாக மாறிவருவது கண்டனத்துக்குரியதாகும். நேற்றைய தினம் (31.07.2018) தீவக கல்விவலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையில் - பாடசாலை நேரம் தவிர்ந்த வேளைகளில் வகுப்புக்களை நடாத்த வலயக்கல்விப் பணிப்பாளர் அனுமதி தருவதில்லை என ஒரு அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இதன்போது –  மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தான் தடைவிதிக்கவில்லை எனவும் - மேலதிக வகுப்புக்கள் நடாத்துவது தொடர்பாக தாபனவிதிகளின் அடிப்படையில் சில விடயங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் பின்பற்றுவதுடன் மேலதிக வகுப்புக்களினை நடாத்தும் ஆசிரியர்களின் சம்மதக் கடிதங்களையும் வழங்கி அனுமதிபெற்று வகுப்புக்களை நடாத்தலாம் என கூறியுள்ளதாக, தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் கூறியபோதும் - வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் அதனை செவிமடுக்காது - தகாதவார்த்தைப் பிரயோகங்களால் பேசி வலயக் கல்விப் பணிப்பாளரை பல அதிபர்களின் முன்னால் அச்சுறுத்தியுள்ளார். இதனால் அங்குள்ள சில அதிபர்கள் கல்வியமைச்சரின் இச்செயற்பாடு தவறானது என சுட்டிக்காட்டியுமுள்ளனர். இத்தகைய கல்வியமைச்சரின் அடாவடியான செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கமும் மிகவன்மையாகக் கண்டிக்கிறது.

வடமாகாணத்தின் கல்வியை தமது தனிப்பட்ட அரசியல் செய்வதற்குரிய களமாக எவரும் பயன்படுத்தமுடியாது. வடமாகாணத்தின் கல்வியமைச்சர் தகாதவார்த்தைப் பிரயோகங்களால் அதிகாரிகளை அச்சுறுத்தமுடியாது. ஒருவர்மீது குற்றஞ்சாட்டப்படும்போது – குற்றஞ்சாட்டப்பட்டவர் சொல்லும் கருத்தினையும் ஆராய்ந்துபார்த்தே முடிவெடுக்கவேண்டும். அவ்வாறு கருத்துக்களைக் கேட்க முடியாத கல்வியமைச்சர் – பாடசாலை தவிர்ந்த நேரங்களில் மேலதிக வகுப்புக்களை எடுப்பதற்குரிய தாபன விடயங்களையாவது அறிந்திருக்கவேண்டும்.

இவ்வாறு – கல்வியமைச்சர் எனும் தோரணையுடன் - அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வடமாகாண கல்வியமைச்சர் உடனடியாக நிறுத்தவேண்டும். தொடருமாயின் இவ்வாறாக அச்சுறுத்தி - அடிபணியவைக்கலாம் என்னும் அரசியல் அதிகாரவர்க்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.



Wednesday, July 25, 2018

நாளைய கல்விசார் பணிபகிஸ்கரிப்பு தற்காலிக நிறுத்தம்: ஜனாதிபதி எழுத்துமூல உத்தரவாதம்!


இன்று  ஜனாதிபதி மாளிகையில் - கல்விசார் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் - காணப்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து – நாளை 26 ஆம் திகதி நடைபெறவிருந்த சுகயீன விடுகைப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

அரசியல்  பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படவிருந்த முறையற்ற நியமனத்தை நிறுத்தக் கோரி – கல்விசார் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை சுகயீனப்போராட்த்தை அறிவித்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட தயாரான நிலையில் இருந்த போது - இச்சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 இதில் - தற்போது வெளிவந்துள்ள பட்டியலை நிறுத்துவதாகவும், இதற்காக மூவர் அடங்கிய விசாரணைக் குழுவினை அமைத்து அதனைப் பரிசீலிப்பதாகவும், அதன் அடிப்படையில் உண்மையிலேயே எவராவது – அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டிருந்தால் அவை தொடர்பாக மட்டும் பொதுச்சேவை ஆணைக்குழுவிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உறுதிமொழி வழங்கப்பட்டதுடன் மேலும் சில இணக்கப்பாடுகளும் காணப்பட்டன.

ஆயினும் - இவ்விடயத்தினை எழுத்துமூலம் உறுதிப்படுத்துமாறு – தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தியமைக்கு அமைய – ஜனாதிபதியினால் எழுத்துமூல உறுதிப்பாடும் வழங்கப்பட்டுள்ளதாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

இவ்வாறு காணப்பட்டுள்ள இணக்கப்பாடு காரணமாக – நாளை 26 ஆம் திகதி நடைபெறவிருந்த பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

Saturday, July 21, 2018

ஜுலை 26ம் திகதியன்று சுகயீன லீவு போராட்டம்: அதிபர், ஆசிரியர்களை ஒன்றிணையுமாறு அழைப்பு!


கல்விச் சேவைக்கு அரசியல் பழிவாங்கல் என்னும் போர்வையில் நியமனம் வழங்குவதை எதிர்த்து 2018 ஜுலை 26ம் திகதியன்று  அனைத்துப் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் - சுகயீன லீவை அறிவித்து - வேலை நிறுத்தம்; செய்து – கல்வியில் அரசியல் தலையீட்டை ஒழித்து – தரமான கல்வியை உறுதிப்படுத்த பொறுப்புணர்வுடன் ஒன்றிணைய வேண்டுமென்று இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.

அரசியல் பழிவாங்கப்பட்டுள்ளதாக கூறி - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி கல்வி நிர்வாக சேவைக்கும், ஆசிரிய கல்வியியலாளர் சேவைக்கும் அதிபர் சேவைக்கும், 1014 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வேளையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக எமது முதலாவது செயற்பாடு, 2018 ஜுலை 04ம் திகதி அன்று, சுகயீன விடுகை எடுத்து பணி நிறுத்தத்தை மேற் கொண்டு இசுறுபாய கல்வியமைச்சின் முன்னால் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தோம்.

இத்தருணத்தில் - நாம் இந்த நியமனத்தை இரத்துச் செய்ய கல்வியமைச்சுக்கு 14 நாட்கள் கால அவகாசத்தை வழங்கியிருந்தோம். இது வரை எவ்வித பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. இச்செயற்பாட்டிற்குப் பின்பு சகல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் 2018.07.10 அன்று பொதுச் சேவை ஆணைக்குழுவிற்குச் சென்று உரிய தகவல்களை தெரிவித்ததன்பின், இந்நியமனத்தைப் பெறவுள்ள நபர்களின் சுயவிபரக் கோவையை பரிசீலிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன்படி,
இந்நியமனங்களைப் பெறவுள்ள நபர்களின் பெயர்ப் பட்டியல் வெளிவந்தது, அதில் - அடிப்படைத் தகைமையே இல்லாத, க.பொ.த. சாதாரண தரத்தில் கணித பாடம் சித்தியடையாத – அதிபர் சேவை,
நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைகளில் சித்தியடையாத – போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்காத – பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளான – ஒழுக்காற்று நடவடிக்கைகளின்போது குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு தண்டனை பெற்ற – நபர்களின் பெயர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் - அதிபர்கள் கல்வித்துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பது நாளுக்கு நாள் பின்னடைந்து வரும் வேளையில், அதாவது - சம்பளம், பதவியுயர்வுகள், சம்பள நிலுவை, வழங்குவது உட்பட தொழிற்பிரச்சினைகள் எனப் பரவிச் செல்லும் நிலையில் - நாம் முதலாவதாக செய்ய வேண்டியது, கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதில் இருந்து விடுவித்துக் கொள்வதாகும். இந்த வகையில் - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி நியமனம் வழங்குவதன் மூலம் எதிர் காலத்தில் இச்சேவைகளுக்கு உள்வாங்க எதிர்பார்த்திருக்கும் ஆசிரிய அதிபர்களுக்கு பாரிய அநீதி ஏற்படுவதோடு இது முழுக்கல்வியையும் பாரிய சரிவுக்கு இட்டுச் செல்லும் செயலாகும்.
அரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில் நியமனம் வழங்குவதை நிறுத்துவதற்காக நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை முன்னெடுக்க 2018 ஜுலை 26ம் திகதி சுகயீன விடுகை எடுத்து பணியைப் புறக்கணித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து கல்வி சார் ஊழியர்களையும் அழைக்கின்றோம்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையின்போது ஊழியர்கள் சார்பாக எழக்கூடிய அனைத்து பிரச்சினைகள் சவால்களையும் - எதிர்கொள்ள  சகல பொறுப்புக்களையும் கல்வியைப் பாதுகாக்கும் தொழிற்சங்க ஒன்றியத்தினருடன் இணைந்து இலங்கை ஆசிரியர் சங்கமும் பொறுப்பேற்கும். சகலரும் கல்வி நிர்வாக சேவை, ஆசிரிய கல்வியலாளர் சேவை, இலங்கை அதிபர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை, அதிகாரிகள்
அனைவரும் அச்சமின்றி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய - கல்வியை அரசியல் மயப்படுத்துவதில் இருந்து விடுவித்துக் கொள்வதற்காக பொதுச் செயற்பாடொன்றில் இணைந்துள்ளோம். இதில் பெற்றோரகளின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம். எதிர்காலத்தில் எங்கள் சந்ததியின் கல்வியினை தரமானதாக பேணவேண்டுமாயின் இப்போராட்டத்திற்கு பெற்றோர்களும், கல்விச் சமூகமும்  இணைந்து போராட வேண்டும். இதனால் பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளிலும் பரீட்சை நடவடிக்கைகளிலும் தடை ஏற்படுத்துவதன் மூலம் உங்களுக்கு அசௌகரியம் ஏற்படும் என்பதை நாம் அறிவோம். இது இப்போராட்டத்தினால் ஏற்படும் விளைவாகும்.
இப்போராட்டம் கல்வித்துறையைப் பாதுகாப்பதற்கும் - எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்கானதுமானதுமாகும்.
அந்நிலைமையைத் தடுத்துக் கொள்வதற்காகவும் கல்வித்துறையை அரசியலில் இருந்து விடுவித்துக்
கொள்வதற்காகவும் கல்வித்துறையின் நலனுக்காகவும் வடமாகாணத்திலும் நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரள்வோம்.



Wednesday, July 4, 2018

நாடுதழுவிய ரீதியில் நடைபெற்ற கல்வியாளர்களின் பணிப்புறக்கணிப்பு: அரச கைக்கூலிகள் போராட்டக்காரர் மீது கல்வீச்சு!


அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - சேவைப் பிரமாணக் குறிப்புக்களை மீறி தகுதியற்றவர்களுக்கு - அரசியல் ரீதியாக வழங்கப்படவுள்ள 1200 நியமனங்களை எதிர்த்து இன்று நாடுதழுவிய ரீதியில் கல்வியியலாளர்களால் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பாடசாலைகளுக்கு அனைத்து ஆசிரியரும் செல்லவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையிலும் நாடுதழுவிய ரீதியில் பாடசாலைகளில் ஆசிரியர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் சுகயீன விடுகை அறிவித்து பணியைப் புறக்கணித்திருந்தனர். வடமாகாணத்தில் 60 வீதமான ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் வீழ்ச்சிகண்டிருந்தது. சில பாடசாலைகள் முற்றாக இயங்கவில்லை.  வலய - மற்றும் மாகாணக் கல்வி அலுவலகங்களும் கல்வி நிர்வாகசேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பால் செயலிழந்திருந்தன.
இதேவேளை – கல்வி நிர்வாகசேவை - அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கள் இணைந்து பல ஆயிரகணக்கானோர் - பத்தரமுல்லையிலிருந்து இசுறுபாய கல்வியமைச்சு வரை பேரணியாக சென்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இங்கு கலகம் அடக்கும் பொலிஸாரும  குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது – அரசியல் கைக்கூலிகளால் கல்வீச்சு தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதில் சிலர் காயமடைந்தனர்.  இக்கைக்கூலிகளின் செயற்பாடு கல்வியமைச்சின் பிரதி பணிப்பாளருள் ஒருவரான  பிரியந்த பத்தேரிய தலைமையிலேயே நடைபெற்றுள்ளது.




இதன்போது - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கருத்துத் தெரிவிக்கையில் -
இந்த அரசாங்கம் கைக்கூலிகளை ஏவி கல்லெறிவதை விட – முறையற்ற விதத்தில்- தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படவுள்ள அரசியல் நியமனங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். இதற்காக நாங்கள் 14 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ளோம். இக் கால அவகாசத்துக்குள் வழங்கப்படவுள்ள முறையற்ற நியமனங்களை நிறுத்தாதுவிடின் - பரீட்சைச் செயற்பாடுகளைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளுக்கு செல்ல வேண்டியேற்படும் எனவும் தெரிவித்தார்.

Tuesday, July 3, 2018

திட்டமிட்டவாறு நாளை பணிப்புறக்கணிப்பு: பிரதமருடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை.

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் பிரமாணக் குறிப்புகளை மீறி – கல்வித்துறையில் முறையற்ற அரசியல் நியமனங்களை வழங்குவதற்கு எதிராக – நாளை புதன்கிழமை நாடுதழுவிய ரீதியில் 16 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில் - இன்று செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் - இலங்கை கல்வி நிர்வாகசேவை, அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க அனைத்துப் பிரதிநிதிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

இதனால் - திட்டமிட்டவாறு நாளைய தினம் (04.07.2018) புதன்கிழமை – நாடு தழுவிய ரீதியில் கல்வியியலாளர்களின் பணிப்புறக்கணிப்பு நடைபெறும் எனவும் - பத்தரமுல்லவில் அமைந்துள்ள புத்ததாஸ விளையாட்டு அரங்கிலிருந்து – மத்திய கல்வியமைச்சு அலுவலகத்தை நோக்கி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியும் - மத்திய கல்வி அமைச்சின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமும் நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

Monday, July 2, 2018

கல்வித்துறையினரால் 4 ஆம் திகதிய பணிப்புறக்கணிப்பு நடத்தப்படுவது ஏன்?

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - அமைச்சரவை அனுமதியினூடாக தகுதியற்ற - அரசியல் எடுபிடிகள் கல்வி நிர்வாகசேவைக்கும் - ஆசிரியகல்விச் சேவைக்கும் - அதிபர் சேவைக்கும் உள்வாங்கப்படல் - இலங்கைக் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.

இதனால் - சேவைப் பிரமாணக்குறிப்புகளுக்கு அமைய – போட்டிப்பரீட்சைகளின் மூலம் தகுதியான ஆசிரியர்கள் - அதிபர்கள் -  கல்விநிர்வாகசேவை உத்தியோகத்தர்களை சேவைகளில் உள்வாங்குவதற்கு இருக்கும் சந்தர்ப்பம் பலவருடங்களுக்கு இல்லாமல் போகும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் - கல்விஅமைச்சு உட்பட - மாகாண மற்றும் வலயப் பாடசாலைகள் சம்மந்தமான தீர்மானங்கள் யாவும் இப்படியான தகுதியற்ற அரசியல் எடுபிடிகளின் ஆணையின் கீழ் செயற்படுமாயின் - இலங்கையின் கல்வித்துறையில் பாரிய முறைகேடுகள் நிகழும் சந்தர்ப்பங்கள் ஏற்படும்.

அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் போர்வையில் - குறுக்கு வழியால் - உட்புகும் தகுதியற்றவர்களால் - தகுதியானவர்களின்; பதவியுயர்வுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படவுள்ளதுடன் - தகுதியானவர்கள் - தகுதியற்றவர்களின் ஆணையின் கீழ் செயற்படும் அவமானங்களும் நடைபெறும்.

கல்வித்துறையை முறையற்ற அரசியல் நியமனங்களில் இருந்து முழுமையாக விடுவிப்போம்…….

 அரசியல் பழிவாங்கல் நியமனம் என்னும் முகமூடியைப் போர்த்துக்கொண்டு;  இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குள் நுழைந்து கொள்ளத் துடிக்கும் - தகுதியற்ற – தமது அரசியல் அடிவருடிகளுக்கு நியமனம் வழங்குவதே அரசினது   நோக்கமாகும்.

இதனால் - ஆசிரியர்களுக்கும் - அதிபர்களுக்கும் ஏற்படவுள்ள கேடுகளையும் - அவமானத்தையும் எண்ணிப்பாருங்கள் !

 மேற்படி தொழில்களுக்கு முறையற்ற நியமனங்கள் வழங்கப்படுவதன் மூலம்  ஆசிரிய சமூகத்திற்கும் - இலங்கைக் கல்வித்துறைக்கும் - கற்கவுள்ள எதிர்கால சந்ததிக்கும்  பெரும் சவாலும் அவமானமுமே - இதன் விளைவாகக் காத்திருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள்!

 அரசியல் இலாபம் தேடும் குறுகிய மனப்பான்மையில் - முழுக் கல்வியையும் பணயம் வைத்து - இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கும் - இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவைக்கும் - இலங்கை அதிபர் சேவைக்கும் - தகுதியற்ற ஆயிரக்கணக்கானோரைப் பின்கதவால் நுழைப்பதற்கு இந்த அரசு முயற்சி செய்கின்றது. இதற்காக அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து - அடிப்படை நடவடிக்கைகளை நிறைவேற்றிவிட்டது.

முதலாவதாக - மேற்படி நபர்களுக்கு பதவிவழங்காது - வேதனம் - மற்றும் சலுகைகளை வழங்கவுள்ளது. பின்னர் நியமனங்களை வழங்கவுள்ளது.

 முன்னைய அரசாங்கமும் இவ்வாறு முயற்சித்தபோதும் - அவற்றை முறியடிப்பதில் நாம் வெற்றிபெற்றோம்.

இலங்கை கல்வி நிர்வாகசேவை - இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவை - இலங்கை அதிபர் சேவை என்பவற்றில் இணைந்துகொள்வதற்கு பொருத்தமான நடைமுறை ஒழுங்குகள் உள்ளன. அந்த முறையான நடைமுறைகளுக்கு அமைய அச்சேவையில் உள்வாங்கப்படுவதற்கு எவ்வித அழுத்தங்களும் அரசால் கொடுக்கப்படுவதில்லை.

இலங்கை கல்வி நிர்வாகசேவையில் இணைந்துகொள்வதற்கு இவர்களுக்கு சேவைப்பிரமாணக் குறிப்புகளுக்கமைய சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தும் - இவ்வாறான ஒழுங்கற்ற முறையில் உள்வாங்கப்படுவதானது - முறையாக நியமனம் பெறமுன்வரும் ஆசிரியர்கள் - அதிபர்கள் - பட்டதாரிகளுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்கிறது. இதனால் - சேவையின் தரமும் புனிதமும் இல்லாது போய்விடும்.

 இவ்வாறாக - சேவைப் பிரமாணக் குறிப்புகளுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிராக வழங்கப்படும் முறையற்ற நியமனங்களால் - இலங்கை கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை - எமது ஒன்றுபட்ட எதிர்ப்பின் மூலம் வெளிப்படுத்த சகல ஆசிரிய - அதிபர் - கல்விச் சேவையாளர் சங்கங்களும் - கல்வி நிர்வாகசேவை சங்கமும் இணைந்துள்ளன.

 இதன்படி - 2018.07.04 புதன்கிழமை சகல பாடசாலைகள் - வலயக்கல்விப் பணிமனைகள் - மாகாணக்கல்வித் திணைக்களங்கள் - கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிலையங்களிலும் சேவைசெய்யும் ஆசிரியர்கள்  -அதிபர்கள் - ஆசிரியகல்விச் சேவையாளர்கள் - கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் - சுகயீன விடுமுறையை அறிவித்து பணியைப்; புறக்கணித்து - எமது சமூகக் கடமையைப் பொறுப்புடன் முன்னெடுப்போம்.