Wednesday, June 21, 2023

கிளிநொச்சி தெற்கு வலயப் பணிப்பாளரின் முறைகேடுகள்: இரு வாரத்தில் நடவடிக்கை இல்லையெனில் தொழிற்சங்க போராட்டம்.

கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.கி.கமலராஜனின் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இருவாரகாலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கத்தவறின், இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கி.கமலராஜனின் நிர்வாக முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும் இரத்மலானையிலுள்ள வடமாகாண அரச உத்தியோகத்தர்களின் தங்குமிடத்தில் குடிபோதையில் மிகக் கீழ்த்தரமாக செயற்பட்டிருந்தமை போன்ற குற்;றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றை பதிவுத்தபால் மூலம் அனுப்பியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவுத்துள்ளார். பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பாக இதுவரை பொருத்தமான நடவடிக்கைகளை வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்படாமை குறித்தும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த கடிதத்தில் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. 

அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கி.கமலராஜனின் நிர்வாக முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும் இரத்மலானையிலுள்ள வடமாகாண அரச உத்தியோகத்தர்களின் தங்குமிடத்தில் குடிபோதையில் மிகக் கீழ்த்தரமாக செயற்பட்டிருந்தமை போன்ற குற்;றச்சாட்டுக்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பாக இதுவரை பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து, எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

திரு.கி.கமலராஜன் குறித்து 2020.06.30 ஆம் திகதிய கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரால் 9 குற்றச்சாட்டுக்கள், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டு- அப்போது வடமாகாண ஆளுநராகவிருந்த, தற்போதைய கௌரவ ஆளுநருக்கும் பிரதியிடப்பட்டிருந்தது. அதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதை அறிய முடிகின்றது. 

அதன் பின்னர், திரு.கி.கமலராஜனின் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகள் குறித்து, கிளிநொச்சி கல்வி கலாசார மேம்பாட்டு இணையத்தால் 28 விடயங்கள் பட்டியலிடப்பட்டதாகக் குறிப்பிட்டு, குறித்த விசாரணை அறிக்கையை வடமாகாண ஆளுநர் செயலகத்தின் 2021.05.17 ஆம் திகதிய கடிதம் மூலம் அறிக்கை கோரப்பட்டிருந்த போதும், அந்த அறிக்கை வடமாகாண ஆளுநர் செயலகத்துக்குக் கிடைக்கப்பெறாமை காரணமாக , வடமாகாண ஆளுநரின் உதவிச் செயலாளரால் 2022.02.11 ஆம் திகதிய G/NPC/A7/ZDE.Matt/2022/02 இலக்க கடிதம் மூலம் குறித்த விசாரணையை நடத்தி ஒருவாரகாலத்துக்குள் அனுப்பிவைக்குமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

ஆயினும் - கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. கி.கமலராஜனின் அதிகார துஸ்பிரயோகம், முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பொருத்தமான செயற்பாடுகள் எவையும் நடைபெற்றிராத நிலையில், கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகத்தினரால், குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் அதிகார துஸ்பிரயோகங்கள், பிரதேசவாத செயற்பாடுகள், களவு, உத்தியோகத்தர்களை வசைபாடுதல், பழிவாங்கல் இடமாற்றங்கள், சுய ஒழுக்கம் அற்ற நிலை போன்ற தலைப்புக்களுடன் ஆதாரங்களைக் குறிப்பிட்டு, அவரது பழிவாங்கல்கள், முறைகேடுகள் தொடர்பாக 2022.09.22 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் - பரீட்சைக்குப் பொறுப்பான கிளிநொச்சி தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாள ரிடமிருந்து பொறுப்புக்களை தன்னிச்சையாகப் பெற்று தனக்கு இசைவான நபர்களுடன் பரீட்சைகளை நடாத்திவருகின்றார் என்னும் குற்றச்சாட்டும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் பொருத்தமற்ற நடவடிக்கையென பரீட்சைத் திணைக்கள ஆணையாளரால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியிருந்த போதும் தன்னிச்சையாகவே பக்கச்சார்பாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். 

திரு.கி.கமலராஜனின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் துணைபோகாத பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்கள் பலர் பழிவாங்கல் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். இவரது பழிவாங்கல் செயற்பாடுகளுக்கு முன்னைய செயலாளர்களும் வலயக்கல்விப் பணிப்பாளரால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். தற்போதுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களையும் வெளியேற்றும் முயற்சியாக பலரின் மாதாந்த வேலைத்திட்டம், மற்றும் தரங்கணிப்பீடு போன்றவற்றையும் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து தடுத்து வைத்துள்ளார்.

குறித்த கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கி.கமலராஜன் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதிருந்த வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரோ, வடமாகாண ஆளுநரோ - அக்கறையுடனோ பொறுப்புடனோ செயற்பட்டிருக்கவில்லை என்பதையே எம்மால் அவதானிக்க முடிகின்றது. 

அதுமட்டுமல்லாமல் - 2022.12.20 ஆம் திகதியளவில் ஆரம்பப் புலனாய்வு நடவடிக்கைக்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழுவும் பக்கச்சார்பாகவே செயற்பட்டுள்ளது என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய ஊழியரொருவரின் வாக்குமூலத்தினை, குறித்த விசாரணைக்குழுவானது, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வலயக் கல்விப் பணிப்பாளரிடம், தமது ஒப்பமிடாத பிரதியொன்றை வழங்கிச் சென்றதன் மூலம் விசாரணைக் குழுவின் நம்பிக்கைத் தன்மை நிராகரிக்கப்பட்டுள்;ளது. கிளிநொச்சி தெற்கு வலயத்தில் வைத்து நடத்தப்பட்ட ஆரம்பப் புலனாய்வு விசாரணையின்போது - குறித்த ஊழியர் வழங்கிய வாக்குமூலத்தில் திணைக்களத்திற்குச் சொந்தமான PC 1085 இலக்க வாகனத்தில் ஆடு கொண்டுவரப்பட்டு 12 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டமை தொடர்பாகவும், DAA 7846 இலக்க திணைக்கள வாகனத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தனது மனைவி பிள்ளைகளை ஏற்றியிறக்கிய விடயங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திரு.கி.கமலராஜன் அரச சொத்துக்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பாகவும், குறித்த சொத்துக்களை தனது முறைகேடான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியமை தொடர்பாகவும் மிகத் தெளிவான சாட்சியங்கள் வழங்கப்பட்ட நிலையிலும், வடமாகாண கல்வியமைச்சோ, வடமாகாண ஆளுநரோ எந்தவொரு பொருத்தமான நடவடிக்கைகளும் எடுத்திருக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும். 


வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கி.கமலராஜன் - தனது மகளுக்கு வீட்டுக்கு வந்து கற்பிக்க மறுத்த கிளிஃகனகாம்பிகைக்குளம் அ.த.க.பாடசாலை ஆசிரியரை பழிவாங்கும் முகமாக 30 கி.மீற்றருக்கு அப்பால் பழிவாங்கல் இடமாற்றம் வழங்கியிருந்தார். அதேபோன்று தனது மகள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பதற்காக கிளிநொச்சி மத்தியகல்லூரி ஆரம்பப் பாடசாலை அதிபரை இடமாற்ற முனைந்தார். இரு சம்பவங்களும் தடுக்கப்பட்டமையையும் நினைவூட்டுகின்றோம். ஆயினும் - குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு துணைபோகாத காரணத்துக்காக பலர் பழிவாங்கப்பட்டுள்ளமையையும் குறிப்பிட விரும்புகின்றோம். 

உதாரணமாக – கிளி/முக்கொம்பன் பாடசாலை வளாகத்திலிருந்த மரமொன்றினை, தனது தனிப்பட்ட தேவைக்காக, தறித்து எடுப்பதற்காக தனக்கு இசைவான புதிய அதிபரை நியமித்து, குறித்த மரத்தை தறித்திருந்தமையை குறித்த பாடசாலை சமூகத்தின் மூலமாக நம்பகமாக அறிய முடிகின்றது. (குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவரின் பெற்றோரான சாட்சியாளர், தனது பிள்ளை பழிவாங்கப்படுவதைத் தடுக்குமுகமாக, தனிப்பட்ட ரீதியில் தன்னிடம் வாக்குமூலம் பெறுப்படும்போது சாட்சியங்களை வழங்க முன்வருவதற்கு தயாராயுள்ளார்.) 

குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு உரிய நேரங்களில் - உரிய நடவடிக்கைகள் வடமாகாண கல்வியமைச்சும், வடமாகாண ஆளுநரும் எடுத்திராததன் விளைவாக – வடமாகாண கல்விப் புலத்தையே அவமானத்துக்கு உட்படுத்தும் வகையில், குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கி.கமலராஜன், இரத்மலானையிலுள்ள வடமாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட விடுதியில் குடிபோதையில் சென்று அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியும், தூசன வார்த்தைகள் பேசியும், வாந்தியெடுத்து தங்குமிடத்தையே சீரழித்திருந்தார். அங்கு தங்கியிருந்த ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தார். இவ்விடயம் குறித்து அங்கு தங்கியிருந்த மருத்துவர் உட்பட பொறியியலாளர், சுகாதார பரிசோதகரால் வடமாகாண பிரதம செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும், திரு.கி.கமலராஜனுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, வடமாகாண கல்விப்புலத்தை சீரழிக்கத்; துணைபோகும் நடவடிக்கையாகவே கருதுகின்றோம். 

பல்வேறு அச்சுறுத்தல்களையும், சவால்களையும் எதிர்கொண்டுவரும் வடமாகாண கல்விச் சமூகத்தை, வழிநடத்த வேண்டிய கல்வி அதிகாரிகள் தரத்தில் உள்ள திரு.கி.கமலராஜனின் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு உடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதுடன், சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதற்குரிய நம்பிக்கையின் அறிகுறியாக திரு.கி.கமலராஜன் வடமாகாண கல்வித் திணைக்களத்திலோ அல்லது வடமாகாண கல்வியமைச்சிலோ உடனடியாக இணைக்கப்பட்டே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம். இவ்வாறான இணைப்பின் மூலமே பாதிக்கப்பட்ட பலர் சுதந்திரமாக சாட்சியங்களை வழங்குவதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படும். 

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.கி.கமலராஜன் தொடர்பாக விரிவான விசாரணையை கோரும் அதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சியங்களை வழங்கவும் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம். 

திரு.கி.கமலராஜனின் முறைகேடுகள், அதிகார துஸ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இருவாரகாலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்கத்தவறின், இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றோம். 

எனத் தெரிவிக்கப்பட்டுள்து. இக்கடிதம் வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

Wednesday, March 23, 2022

வடமாகாண கல்வி அதிகாரிகளின் பக்கச்சார்புகளுக்கு வெளிமாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம். - ஜோசப் ஸ்டாலின் - 

 நேற்றய தினம் 23.03.2022 புதன்கிழமை வடமாகாண கல்வி அமைச்சில் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாக அறிகின்றோம். இக்கூட்டம் தொடர்பாக, இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு உரிய வகையில் தகவலெதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கை ஆசிரியர் சங்கத்தை திட்டமிட்டு புறக்கணித்து எடுக்கப்பட்டுள்ள பக்கச் சார்புடைய எந்தவொரு ஒரு தீர்மானங்களுக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் உடன்படப்போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடமாகாண கல்விப் பணிப்பாளரின் பொறுப்பேற்ற, திட்டமிடப்படாத, பக்கச்சார்பான இடமாற்ற நடைமுறைகளால் சிக்கலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இடமாற்ற நடைமுறைகளால் , வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை மட்டும் பலிக்கடாவாக்கும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப் போவதில்லை.

வடமாகாண கல்விப் பணிப்பாளராக ஏழு வருடங்கள்  பூர்த்தி செய்துள்ள நிலையிலும், இடமாற்ற பொறிமுறையொன்றை சீர்ப்படுத்தவில்லை. தொடர்ச்சியாக, இடமாற்ற சபை தீர்மானங்களை மீறி, இடமாற்ற சபையின் அனுமதியின்றி, பதிலீட்டு இடமாற்றம் வழங்கப்பட்ட பல ஆசிரியர்களுக்கு பல வருட காலங்களாக இட மாற்றங்களை ஒத்தி வைத்துள்ளார்.

அதேவேளை, ஒரே வருடங்களில் வழங்கப்பட்ட பதிலீட்டு இடமாற்றங்களின் போது, ஒரு பகுதியினருக்கு மீளவரும் திகதி குறிப்பிட்டும், இன்னொரு பகுதியினருக்கு திகதி குறிப்பிடாமல் பாரபட்சமான முறையிலும் இடமாற்றங்களை செயற்படுத்தி இருக்கின்றார். ஒரே வகுதி இடமாற்றங்களுக்கு வெவ்வேறு நிபந்தனைகள் மூலம் பாரபட்சங்கள் நடைபெற்று வருகின்றன.

அதேவேளை, கோவிட் - 19 தொற்று காலத்தின் நெருக்கடி நிலையில் நாடு இருந்த பொழுதில், அந்த காலகட்டத்தில், இடமாற்ற சபையின் அனுமதி பெறப்படாமல் ஒருசிலருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த மாவட்டத்துக்கு முறையற்ற வகையில் இட மாற்றங்களை வழங்கியுள்ளார். மருத்துவக் காரணங்களுக்காகவும், குடும்ப நெருக்கடி களுக்காகவும் தமது சொந்த வலயங்களிற்கு தற்காலிக இணைப்பு கோரி நிற்கும் வெளிமாவட்ட ஆசிரியர்களுக்கு கூட, பல இழுத்தடிப்புகளை செய்துவரும் வடமாகாண கல்விப் பணிப்பாளர், யாழ். மாவட்டத்தில் இருந்து, வெளிமாவட்ட சேவை எதனையும் செய்திராத பலரை தொடர்ச்சியாக பாதுகாத்து பக்கச்சார்பான இடமாற்ற நடைமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றார். இவ்வாறான , பக்கச்சார்பான செயற்பாடுகளால் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் முறையற்ற இடமாற்ற நடைமுறைகளால் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப்போவதில்லை.

எனவே, நேற்றைய தினம் இட மாற்றங்கள் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட பாரபட்சமான தீர்மானங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Monday, December 6, 2021

பிள்ளையானின் குண்டர்களால் தாக்குதல் முயற்சி : இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

 கிழக்கு மாகாணத்தின் கல்விப் புலத்தில் இடம் பெறும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டு வரும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் தோழர் உதயரூபனுக்கு எதிராக  - அரசாங்கத்தின் பங்காளியான பிள்ளையானின் குண்டர் படையினால் - ‘பாடசாலை சமூகம்’ என்ற பெயரில் ஆர்பாட்டம் செய்து - மாணவர்களை பாடசாலைகளுக்குள் செல்லவிடாது அடாவடியாக தடுத்தும் திருப்பி அனுப்பியுள்ளதுடன் - ஆசிரியர்களையும் பாடசாலைக்குள் நுழைய விடாமல்  - தோழர் உதயரூபனைத் தாக்கவும் முயற்சித்துள்ளனர். 

கோவிற் - 19 தொற்றால் பாடசாலை நாட்கள் பலவற்றை மாணவர்கள் இழந்திருந்த நிலையில்இ இன்றும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலும் - ஆசிரியர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் பிள்ளையானின் குண்டர் குழுவினர் அடாவடியில் ஈடுபட்டிருந்தமை மிக மோசமான செயற்பாடாகும்.

பாடசாலைகளுக்கு கொவிற் தொற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த காலத்தில் கூட - கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் - முறையற்ற விதத்தில் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தி - அரசியல்வாதியான பிள்ளையான் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைத் தளங்களில் உலாவந்திருந்தன. இத்தகைய முறைகேடான செயற்பாடுகள் தொடர்பாக உதயரூபன் முன்னின்று தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களின் சம்மதம் பெறப்படாமல் ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து - கொவிற் தொற்று தொடர்பான ஜனாதிபதி நிதியத்துக்கு சட்டவிரோதமாக பணம் கழித்தமைக்கு எதிராகவும் - இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றம் சென்று சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் முன்னின்று செயற்பட்டிருந்தார்.  இதுபோன்று - கிழக்கு மாகாண கல்விப் புலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராகவும் -  பின்ளையானின் குண்டர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு எதிராகவும் - கிழக்கு மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ச்சியாக துணிச்சலுடன் செயற்பட்டு வந்துள்ளது. 

இத்தகைய முறைகேடுகளைத் துணிச்சலுடன் வெளிக்கொண்டு வந்திருந்த -  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதிநிதிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் செயற்பாடுகளில் பிள்ளையான் குழு ஈடுபட்டு வந்திருந்தது. அநீதிகளையும் -  அதிகாரதுஸ்பிரயோகங்களையும் வெளிக்கொண்டு வருவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனநாயக வழியில் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில் - ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் செயற்பாடான தாக்குதல் முயற்சியை மேற்கொள்ள - அரசாங்கத்தின் பங்காளியான பிள்ளையானும் அவரது குண்டர்களும் ஈடுபட்டுள்ளமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. 


தாக்குதல் செயற்பாடுகளில் பிள்ளையானின் குண்டர்கள் ஈடுபட்டமை தொடர்பாகவும் - மாணவர்களின் கற்றல் செயற்பாட்டைத் தடுத்தமை தொடர்பாகவும் - ஆசிரியர்களை கடமைக்கு செல்லவிடாது இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பாகவும் - காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பாடசாலையின் ஆசிரியர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் பொலிஸ்மா அதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரால் தெரியப்படுத்தப்பட்டுமுள்ளது. 

இந்த அடாவடித்தனத்தில் ஈடுபட்ட  பிள்ளையான் குழுக் குண்டர்கள் உடனடியாக சட்டத்தின் முன்நிறுத்தப்பட வேண்டும். பொலிசார் பக்கச்சார்பாக செயற்பட முற்பட்டால் அதன் விளைவு பாரதூரமாக அமையும் என்பதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிக்கவிரும்புகின்றது. 

அரசாங்கத்தின் துணையுடன் பங்காளி குண்டர்களை ஏவி -  மேற்கொள்ளப்படும் அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வண்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


Friday, August 6, 2021

அதிபர், ஆசிரியர்களின் பேரணிக்கு ஆதரவு வழங்க அழைப்பு!


எதிர்வரும் திங்கட்கிழமை 09 ஆம் திகதி காலை 9 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள அதிபர், ஆசிரியர் பேரணிக்கு, போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட அனைத்து தரப்பினரும் பேரணி வெற்றிபெற ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

24 வருட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு கோரியும், கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவும், இலவச கல்வியில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு தீர்வை வலியிறுத்தியும், இலங்கை ஆசிரியர் சங்கம், வடமாகாண புதிய அதிபர் சங்கம், வடமாகாண ஆசிரிய ஆலோசகர் சங்கம் ஆகியன இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை 09 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபம் முன்பாக ஆரம்பித்து மாவட்ட செயலகம் வரை வாகனப் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த வாகனப் பேரணியில் அனைத்து ஆசிரியர்களும், அதிபர்களும் கலந்து கொண்டு பலம் சேர்க்க வேண்டும் என்பதுடன், எமது போராட்டத்தின் நியாயத்தை புரிந்துகொண்ட அனைத்து தரப்பினரும் பேரணி வெற்றிபெற ஆதரவு வழங்க அழைப்பு விடுக்கின்றோம்.

Sunday, August 1, 2021

ஆசிரியர்கள் அழைப்பு தொடர்பான சுற்றுநிருபத்துக்கு தொழில் சங்கங்கள் மறுப்பு 

 கல்வி அமைச்சின் செயலாளரால் ஆசிரியர்கள் அழைப்பு தொடர்பான சுற்றுநிருபத்துக்கு தொழில் சங்கங்கள் மறுப்பு தெரிவித்து கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் ED /09/12/06/01/02/2021இலக்க கல்வியமைச்சின் கடிதத்தின் படி சமூகமளிக்க மாட்டார்கள் என அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கூட்டாக கையொப்பம் இட்டு கல்வியமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாடசாலைகளை தொடங்காமல் ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பது ஆசிரியர்களின் போராட்டத்தை தடுக்கும் நோக்கம் கொண்ட அரசின் கபட நாடகம் எனவும், அதிபர் ஆசிரியர்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் உரிமை சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அதிபர், ஆசிரியர் அடிபணியாமல், அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்தில் அனைவரும் கரம் கோர்க்குமாறும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Wednesday, July 14, 2021

நாளை யாழ். பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது.

அரசின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிரான இப்போராட்டத்துக்கு ஆர்வமுடைய அனைவரும் கலந்துகொண்டு இப் போராட்டத்துக்கு வலுசேர்க்குமாறும் அழைப்புவிடுத்துள்ளனர்.

Thursday, July 8, 2021

Online வகுப்புக்களையும் ஆசிரியர்கள் புறக்கணிப்பர்: ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கைதை எதிர்ப்போம்!

கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிராக,  நாடாளுமன்ற சுற்றுவட்டத்தின் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட  குழுவினர் பொலீசாரால் நேற்று 8ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டு, பிற்பகல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

 ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த வேண்டுமென நீதிமன்றத்தின் அனுமதியை பொலீசார் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் பொலிசாரின் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது.

ஆயினும், அதிரடிப்படை, கலகமடக்கும் பிரிவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றுக்கு ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த அரசின் இராணுவமயமாக்கல், அரச அடக்குமுறை, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத சட்ட விரோத ஆட்சி முறை ,  ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, ஆசிரியர் சங்க உறுப்பினர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பலவந்தமான கைது என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைத்து ஆசிரியர்களும் தாமாக முன்வந்து கற்பித்து வரும் 'ஒன்லைன்' வகுப்புக்களையும்  இன்று முதல் புறக்கணித்து செயற்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.