Monday, May 29, 2017

மூதூர் தெருவெளி அ.த.க பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகம்: இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்


மூதூர் கல்வி வலயத்துக்கு உட்பட்ட - தெருவெளி அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பாலியல் துஸ்பிரயோக செயற்பாட்டுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையான கண்டனத்தைத் தெரிப்பதோடு – குற்றவாளிகள் சட்டத்தின் முன் எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படவேண்டும்.

இவ்வாறான சம்பவங்கள் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக பாதுகாப்பான இடமாகக் கருதப்படும் பாடசாலைகளில் நிகழ்வது – பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கைத் தன்மையைச் சிதைவடையச் செய்கின்றன.  எனவே – பாடசாலைகளின் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்  இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு  எவ்வித பாரபட்சமுமின்றி – அதி உச்சத் தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொள்கின்றது.

Wednesday, May 24, 2017

அதிபர் பிரச்சினைக்கு தீர்வுவேண்டி கொழும்பில் நடைபெற்றது ஆர்ப்பாட்டம்: நாளை 8.00 மணிக்கு கல்வியமைச்சில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு!


2009.11.13 ஆந் திகதி அதிபர்சேவை 2-1இ 3 தரத்திற்கான நியமனம் பெற்ற அதிபர்கள் புதிய பிரமாணக் குறிப்பின்படி அதிபர் வகுப்பு 2, 3 ஆகியவற்றுக்கு உள்வாங்கப்பட வேண்டியதுடன் 2015.11.13ஆந் திகதிமுதல் முதலாம் - இரண்டாம் தரங்களுக்கு தரமுயர்வைப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். பதவியேற்று 6 வருடங்கள் ஆனபோதும் அவர்களுக்கு இரண்டுவருடங்களுக்கு மேலாக அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தபோதும் கல்வியமைச்சு இதுவரையும் பதவியுயர்வைபெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான எவ்விதமுயற்சியையும் மேற்கொள்ளாததினைக் கண்டித்தும் - செயற்படுத்துவதற்கான அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்குமாக இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று (24.05.2017) ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்காக விகாரமாதேவி மைதான திறந்தவெளி அரங்கில்  - இலங்கையின் பலபாகங்களிலும் இருந்தும் பல நூற்றுக் கணக்கான அதிபர்கள் கூடி கலந்துரையாடினர். பின்னர் - அலரி மாளிகைக்கு ஊர்வலமாக தமது கோரிக்கைக் கோசங்களுடன் சென்று – தமது மனுவை பிரதமரின் செயலாளர் சமன் எக்கநாயக்கவிடம் கையளித்தனர். இதன்போது – பிரதமரின் தற்போதைய ஆலோசகரும் முன்னாள் அரச நிர்வாக அமைச்சின் செயலாளருமான ததல்லகேயும் உடனிருந்தார். பிரதமரின் செயலாளர் உடனடியாக கல்வியமைச்சின் செயலாளரைத் தொடர்புகொண்டு கோரிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாளை (25.05.2017) காலை 8.00 மணிக்கு கல்வியமைச்சில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் - இச்சந்திப்பில் பிரதமரின் ஆலோசகரான ததல்லேயும் கலந்துகொண்டு பிரச்சினைதொடர்பாக ஆராயவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Wednesday, May 17, 2017

மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் இன்று சுகயீனலீவுப் போராட்டம் - மூதூர் கல்விப் பணிப்பாளருக்கு உடனடி இடமாற்றம்


மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு எதிராகவும் - அவரை இடமாற்றவும் கோரி - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வழிநடத்தலில் மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் ஒன்றிணைந்து  - இன்று சுகயீன லீவுப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் -  இன்று மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அக்கரைப்பற்றுக்கு இடமாற்றக் கடிதம் கிழக்குமாகாண கல்வியமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளரின் பல முறைகேடுகளுக்கெதிராக - இலங்கை ஆசிரியர் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்த போதும் - எவ்விதமான நடவடிக்கைகளையும் கிழக்குமாகாண கல்வியமைச்சு மேற்கொண்டிராத நிலையில் - இன்றும், நாளையும் சுகயீன லீவுப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. (17,18.05.2017). இந்த நிலையில் - நேற்று (16.05.2017) மாலை ஆளுநருக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன்போது - மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஆயினும் - வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றக் கடிதம் வழங்கப்படாத நிலையில் - திட்டமிட்டபடி இன்று (17.05.2017) மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் சுகயீனலீவை அறிவித்து - சுகயீனலீவுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் இன்று (17.05.2017) வலயக்கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றம் கடிதம் வழங்கப்பட்ட நிலையில் - நாளை நடைபெறவிருந்த சுகயீன லீவு போராட்டத்தை நிறுத்தி ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவுள்ளதாகவும் - ஆசிரியர்களின் இதுபோன்ற ஒன்றுபட்ட உரிமைச் செயற்பாடுகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

Wednesday, May 10, 2017

வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட முறையற்ற அதிபர் நியமனம் : 1998/23 சுற்றறிக்கையை அமுல்படுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற விதமாக வழங்கப்பட்ட அதிபர் நியமனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு – அந்தப்பாடசாலைகளுக்கு 1998/23 அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைவாக – ஊடகங்கள் வாயிலாக அதிபர் வெற்றிடம் கோரப்பட்டு – விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் - வடமாகாண முதலமைச்சருக்கும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட -  யா/காசிப்பிள்ளை வித்தியாலயம், யா/நீர்வேலி அ.த.க.பாடசாலை, யா/கலட்டி அ.மி.த.க. பாடசாலை, யா/பத்தைமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்,

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட - யா/உடுவில் அ.மி.த.க.பாடசாலை, யா/பொன்னாலை வரராஜப்பெருமாள் வித்தியாலயம்

தீவகம் கல்விவலயத்துக்குட்பட்ட - யா/அல்லைப்பிட்டி றோ.க.த.க.பாடசாலை

தென்மராட்சி கல்விவலயத்துக்குட்பட்ட – யா/வரணி வடக்கு சைவப்பிரகாச பாடசாலை, யா/போக்கட்டி றோ.க.த.க.பாடசாலை

வடமராட்சி கல்விவலயத்துக்குட்பட்ட யா/வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், யா/வெற்றிலைக்கேணி றோ.க.த.க. பாடசாலை

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட கிளி/தர்மகேணி அ.த.க.பாடசாலை, கிளி/முகாவில் அ.த.க.பாடசாலை

போன்ற பாடசாலைகளுக்கு எவ்விதமான அதிபர் வெற்றிடமும் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டிருக்கவில்லை. பல புதிய தகுதியான அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படாமல் - பல பாடசாலைகளில் அதிபர் தரத்தில் உள்ளவர்கள் - ஒரே பாடசாலையில் மூன்றுக்கும் அதிகமான பதில் அதிபர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். - கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளை மீறி - ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை எமது சங்கத்தின் கவனத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.  இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தரம் - 3 போட்டிப்பரீட்சையில் - வடமாகாணத்தில் 389 பேர் அதிபர்களாக நியமனம் பெற்று – தகுதியான பயிற்சிகளை மேற்கொண்டு வெளியேறியுள்ள நிலையில் - அவர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகளை வழங்காமல் - புதிய அதிபர் நியமனம் தொடர்பான 05.09.2016 திகதிய  2016/ED/E/24 இலக்க அமைச்சரவைப் பத்திரத்தையும் மீறி - ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு அதிபர் பதிவி வழங்கப்பட்டுள்ளமை மிகப் பாரிய முறைகேடாகும்.

அத்துடன் - ஒரு பாடசாலையில் - அதிபர் வெற்றிடம் உருவாகுமானால் - 1998/23 சுற்றறிக்கைக்கமைய  அப்பாடசாலைக்கு அதிபர் வெற்றிடம் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகக் கோரப்பட்டு – விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்குவதே சட்ட வரையறைக்குட்பட்டதும் நீதியானதுமான செயற்பாடாகும்.

மேற்கூறிய பாடசாலைகளுக்கு – 1998/23 சுற்றறிக்கைக்கமைய உடனடியாக அதிபர் வெற்றிடம் ஊடகங்கள் வாயிலாகக் கோரப்பட்டு – தகுதியான அதிபர் தரத்தினையுடைய அதிபர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Monday, May 1, 2017

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தினச் செய்தி – 2017


இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம், அரங்க செயற்பாட்டுக் குழு, கிராமிய உழைப்பாளர் சங்கம், தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், சமூக விஞ்ஞான ஆய்வு மன்றம் ஆகியவை இணைந்து யாழ்.பல்கலைக்கழக முன்றலிலிருந்து பேரணியொன்றையும் மேற்கொண்டிருந்தனர். அதன்பின்னர் – நிகழ்வுக்காக பல்கலைக்கழக முன்றலில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடையில் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களின் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றிருந்தன. இதன்போது – அனைத்து அமைப்புக்களாலும் பொது மேதினப் பிரகடனம் வெளியிடப்பட்டது. அத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தாலும் 2017 க்கான மேதினச் செய்தி வெளியிடப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது -  



இன்று மிக விரைவாக சரிந்து செல்கின்ற வடமாகாணத்தின் கல்வியை மீண்டும் மேல்நோக்கி உயர்த்த வேண்டிய ஆசிரியர் சமூகத்தினது கடப்பாடுகள் பற்றி - நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். ஆனால் - ஆசிரியர்களாகிய எம்மேல் - சுதந்திரமாக கடமையை மேற்கொள்ள முடியாததாக ஆக்கிவிட்டிருக்கும் தேவையற்ற பதிவுமுறைகள் - எமது கடமைநேரத்தை வீணடிப்பதோடு, மாணவர்களின் கற்றல் நிலைமையோடு நோக்காது, பதிவுமுறைகளூடாகவே பார்க்கின்றது. அதிகாரிகளால் திணிக்கப்படும் தேவையற்ற பதிவுமுறைகள் மனஉழைச்சலை தூண்டுகின்றன. பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு பெறப்படும் தரவுகள் போலியானதாகவே அமையும்.  சுதந்திரமற்ற கற்பித்தலை திணித்ததன் மூலம் - கல்வியை மட்டுமல்ல – மாணவர்கள் மட்டில் போதிக்கப்படவேண்டிய கலாசாரப் பாரம்பரியங்களுக்கும், அழகியல் உணர்வுகளுக்கும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றது. வெறும் ஆவணப்படுத்தல்களோடும், பாடத்திட்டங்களின் வரையறைகளோடும் நின்றுவிடத் திணிக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகள் - கல்வியில் மட்டுமல்ல, கலாசார விழுமியங்களின் வெளிப்பாடுகளிலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மாணவர்களின,; உளவியலுக்காகவும்,  அழகியல் உணர்வுகளுக்காகவும் இலங்கைக் கலைத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமல் - பெறுபேற்றினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படும் முறை வடமாகாணக் கல்வியில் தலைதூக்கியுள்ளது. இதன் விளைவு - இன்று அநேகமான மாணவர்களை பாடங்களில் விருப்பமற்ற - வன்முறையாளர்களாக மாற்றியுள்ளது. அத்துடன் - அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய பதிவுகள் போதாதென்று - வடமாகாண கல்வி அமைச்சால் தற்போது வழங்கப்பட்டிருக்கும் - பாடப்பதிவுப் புத்தகத்துக்கு மேலதிகமாக பதியப்படும் நீல நிற அட்டையைக் கொண்ட பதிவுப்புத்தகமானது –  இரட்டைப்பதிவுகளை மேற்கொள்ளும் அவசியமற்ற செயற்பாடாகும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம். கல்வியை சரியான விதத்தில் போதிப்பதில் - புதுமைகளை கண்டறிய வேண்டிய எமது வடமாகாணக் கல்வியமைச்சு – பாடசாலைகளில் கைரேகை அடையாளமிடும் நேர இயந்திரப் பதிவுமுறையை அமுல்படுத்தி – சேவையாக மேற்கொள்ளவேண்டிய ஆசிரியத்தை - வேலையாகக் கருதி - கடமைக்காக மட்டும் பணியாற்றவும், ஆசிரியர் தமது பாதுகாப்புக்காக பதிவுகளை மேற்கொள்ளவும் தூண்டுவதான செயற்பாடுகள் - கல்வி நிலையில் உண்மை மாற்றத்தை ஒருபோதும் உண்டுபண்ணப்போவதில்லை.

கல்வியில் நிகழ்ந்து வரும் தொடர் ஊழல்கள் - நியமனங்களில் நடந்துவரும் அரசியல் தலையீடுகள் என்பன முற்றாக நிறுத்தப்படவேண்டும். பல அதிகாரிகளினால் - முறைகேடாக மேற்கொள்ளப்படும் நிதிநடவடிக்கைகள் மற்றும் முறையற்ற ஒப்பந்தங்கள் மூலம் சரியாக வேலைகள் முடிக்கப்படாமலே பெறப்படும் பணம் - அதற்குத் துணைபோகும் அதிகாரிகளை தண்டிக்காத தன்மை என்பன வன்மையான கண்டனத்துக்குரிய விடயமாகும்.  இவ்வாறு முறையற்று வீணடிக்கப்படும் முறையற்ற செயற்பாடுகளை எதிர்த்து பல குற்றச்சாட்டுக்களை வடமாகாண கல்வி அமைச்சிடம் தெரிவித்திருந்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படாதமையும், மாறாக – குற்றங்கள் இனங்காணப்பட்டவர்களாயிருந்தும், அவர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதும் கண்டனத்துக்குரிய விடயங்களாகும்.

வடமாகாணத்தில் - அதிபர் இடமாற்றங்கள், ஆசிரியர் இடமாற்றங்கள், புதிய அதிபர் நியமனங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டும் எவ்வித பரிகாரமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. தகுதியானவர்கள் இருந்தும் நியமனங்களில் தேவையற்ற தலையீடுகள் தலைதூக்கியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதையும் - நீதிமன்றங்களில் வழங்குத் தொடுக்கப்பட்டுள்ளமையையும் - எமது சங்கம் அவர்களுக்காக குரல்கொடுத்து வருவதையும் குறிப்பிடுகின்றோம்.

ஆசிரியர்களின் கடமைகளில் - பிழைகாண முற்படும் அதிகாரிகள் - ஆசிரியர்களின் பதவியுயர்வுகள், அவர்களுக்குரிய உரிமைகள் தொடர்பாக – அக்கறையற்றுச் செயற்படுகின்றனர். ஆசிரியர்களுக்கென  புதிய பிரமாணக் குறிப்பு வெளியாகி – இருவருடங்கள் கடந்த நிலையிலும் - ஆசிரியர்களுக்குரிய பதவியுயர்வுகள், சம்பள நிலுவைகள் முழுமையாக பூர்;த்தியாக்கப்படவில்லை. இத்தகைய ஆசிரியர்களின் மீது கொண்டுள்ள அதிகாரிகளின் அசமந்தப்போக்குகளை அதிகாரிகள் மாற்றியமைக்க வேண்டும்.

2005ஆம் ஆண்டு அதிபர் சேவை ஆட்சேர்ப்புக்கு வர்த்தமாணி அறிவித்தல் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டு 2006 ஆம் ஆண்டு போட்டிப்பரீட்சையின் மூலம் - 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர்சேவை 2-II, 3ஆகிய தரங்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் இப்பதவிகள் வழங்குதலின் போது - மேற்கொள்ளப்பட்ட முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவ்வாறே இச்செயற்பாட்டிற்கு எதிராக SC/FR/2012/2010  வழக்கின் தீர்ப்பிற்கமைய 2012ஆம் ஆண்டு அதிபர் சேவைக்காக 3000 ற்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்பட்டன. ஒரே போட்டிப் பரீட்சையில் தோந்;தெடுக்கப்பட்டு  2009ஆம் ஆண்டு நியமனம் பெற்றவர்களுக்கு - நிபந்தனைகளுக்கு உட்படுத்தாமல் தரமுயர்வுபெற்றுக் கொடுப்பதும் - தங்களுக்கு ஏற்பட்ட அநீக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நியமனம் பெற்றுக் கொண்டவர்களுக்கு நிபந்தனைக்குட்படுத்துவதையும் அரசாங்கம் உடனடிய நிறுத்தி அதிபர்களுக்குரிய தரமுயர்வுகளை வழங்கவேண்டும்.
கல்விக்கு நூற்றுக்கு ஆறு (100:6) வீதம் எனக் கூறி 2016 இல் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் - 2015.01.27 முற்திகதியிடப்பட்ட தனது 2015/5 சுற்றிக்கையின்மூலம் பாடசாலைகளில் பணம் அறவிடுவதனை ஊக்குவிக்கும் செயற்பாடு உடன் நிறுத்தப்படவேண்டும். இலவசக் கல்வி நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் - மற்றும் கல்வியைத் தனியார் மயப்படுத்த எத்தனிக்கும் செயற்பாடுகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தனது வரவு செலவு திட்டத்தில் போலியான நடைமுறைகளை வழங்கி ஏமாற்றிவருகின்றது.  அத்துடன் - அரச உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியத்தினை நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. எனவே – கல்விக்குரிய ஒதுக்கீடுகளை வாக்குறுதியளித்தவாறு அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதோடு, ஓய்வூதியத்திட்டம் இல்லாமல் ஆக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்களுக்கான நியமனம் என்ற போர்வையில் அரசாங்க பிரமாணக்குறிப்புக்களை மீறி – தகுதியற்றவர்களுக்கு– கல்விநிர்வாகசேவை, கல்வியலாளர்சேவை, அதிபர் சேவை, ஆசிரியர் சேவை போன்ற நியமனங்களை வழங்குவதை நிறுத்தி - கல்விப் பிராமணக் குறிப்புகளுக்கு அமையவே நியமனங்கள் வழங்கப்படவேண்டும்.

கடந்த ஆட்சிக் காலங்களில் - ஏற்பட்டிருந்த ஆபத்தான சூழ்நிலைகளிலும் - எமது சங்கம் போதியளவு குரல் கொடுத்து வந்துள்ளது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் - தமிழ் மக்களினால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வின் மூலம் - இலங்கைத் தீவில் நிகழும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்றும் - ஆழமாக வலியுறுத்தி குரல்கொடுத்திருந்தோம். இன்று – நல்லாட்சி அரசென்று கூறிக்கொண்டிருக்கும் இன்றைய அரசும் - தாம் மக்களுக்கு வழங்கிய ஆணைக்கிணங்க – தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை உடனடியாக வழங்க முன்வரவேண்டும். அதுமட்டுமல்லாமல் - பல்வேறு சந்தர்ப்பங்களிலும் - பல போராட்டக்குழுக்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியதுபோல் - தற்போதைய தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி அரசாங்கம் விடுவிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.

யுத்தத்தை சாட்டாகக் கொண்டு – உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் - அபகரிக்கப்பட்டிருந்த மக்களின் குடியிருப்பு நிலங்களும், வளம் கொளிக்கும் விவசாய பூமிகளும், உரியவர்களுக்கு வழங்கப்பட்டு - பலாலி கலாசாலை உட்பட பாடசாலைகளும் உடனடியாக திறக்கப்படவேண்டும். இதற்காக – எமது சங்கம் பல தடவைகள் குரல்கொடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றோம். அதுமட்டுமல்லாமல் - அத்துமீறிய புதிய குடியேற்றங்கள் நிறுத்தப்படவேண்டும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கடத்தல், காணாமற்போதல் தொடர்பாக விரிவான விசாரணையை வலியுறுத்துவதோடு - இது தொடர்பான நியாயமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் - கடந்த 2013 வடமாகாண சபைத் தேர்தலின்போது காணாமல் ஆக்கப்பட்டு – கொலை செய்யப்பட்ட ஆசிரியர் நிரூபனின் மரணம் தொடர்பாகவும், இதேபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட ஏனையவர்கள் தொடர்பாகவும் உண்மையைக் கண்டறிய வேண்டும்.

விவசாயிகள், மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும். அவர்களுக்குரித்தான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு செயற்படக் கூடிய அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். கடற்தொழிலாளர்கள்; தமது கடற்தொழிலை தத்தமக்குரிய கடற்பரப்பில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும். குறிப்பாக - அத்துமீறிய மீன்பிடித்தொழிலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு - போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கை அரசானது உலக வங்கி, ஐஆகு போன்றவற்றிடமிருந்து நிபந்தனை அடிப்படையில் பெற்ற கடனுக்காக – தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கும் செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் எனவும்  எமது 2017 மேதினச் செய்தியில் அறைகூவல் விடுக்கின்றோம்.


ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்.