Thursday, April 26, 2018

நுண்கலை ஆசிரியர்களுக்கு பொருத்தமான நடவடிக்கை இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கை

2018 வருடாந்த இடமாற்றத்தின் போது பாதிக்கப்பட்ட சங்கீதம், நடனம் பாடங்களைக் கற்பிக்கும் வெளிமாவட்ட சேவைக்காலத்தைப் பூர்த்தி செய்த நுண்கலைப் பட்டதாரிகளுக்கு இழுத்தடிப்புக்களை விடுத்து வடமாகாண கல்வித்திணைக்களம் உடனடியாக சொந்த வலயங்களுக்கு இடமாற்றம் வழங்கவேண்டும்.

மேற்குறிப்பிட்ட பாடங்களுக்கு யாழ்.மாவட்டத்தில் மேலதிகம் என காட்டப்பட்டதற்கிணங்க அவ்விடயத்தை எவ்வகையில் கையாள்வது என்பது தொடர்பில் இடமாற்றச்சபையிலும் மேன்முறையீட்டு சபையிலும் இரண்டுவிதமான யோசனைகளையும் முன்வைத்திருந்தோம்.

ஆயினும் இவ்விடயம் தொடர்பாக  ஆசிரியரின் நலனில் அக்கறையற்று - ஆசிரியர்களை வெற்றிடமுள்ள பாடசாலை விபரங்களை வலயங்களில் பெற்றுவரும்படி அலைக்களித்துள்ளனர். வலயங்களும் வெளிமாவட்ட சேவை செய்யாத தமக்கு வேண்டப்பட்டவர்களின் தரவுகளை மறைத்து காப்பாற்றியுள்ளமை தொடர்பான விபரங்களும் எமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இத்தகைய சுயநலமான கல்விப்புல அதிகாரிகளினால் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதையும் அலைக்களிக்கப்படுவதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்தும் அனுமதிக்கப்போவதில்லை. நடைமுறை சிக்கலை வடமாகாண  கல்வித்திணைக்களத்தோடு இணைந்து தீர்ப்பதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் போதிய ஒத்துழைப்பையும் சாத்தியமான முன்மொழிவுகளையும் போதிய கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது.

ஆயினும் எமது இந்த விட்டுக்கொடுப்புகளை வடமாகாண கல்வித்திணைக்களம் அக்கறையுடன் செயற்படுத்தத் தவறிவிட்டது. இன்னும் சில காலங்களில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு மேற்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் இலங்கை ஆசிரியர்சங்கம் செயற்படுவது தவிர்க்க முடியாது போகும். எனவே  இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வி திணைக்களமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.