Thursday, March 30, 2017

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 2015/05 சுற்று நிருபத்தை மீறி மாணவர்களிடம் பணம் சேகரிப்பு


வவுனியா தெற்கு கல்விவலயத்துக்குட்பட்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் 6,7,8 ஆகிய தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களிடமிருந்து – தளபாடங்கள் திருத்துவது மற்றும் வர்ணம்பூசுதல் என்னும் காரணத்தைக் கூறி - ருபா 2000 வீதம் பாடசாலை அதிபரால் நிதி சேகரிக்கப்படுவதும் - அப்பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்கப்படாமையும் முற்றிலும் சட்டவிரோதமானதாகும். கல்வியமைச்சின் 2015/05 ஆம் இலக்க சுற்றுநிருபத்துக்கு முற்றிலும் முரணானதாகும். இச்சுற்றுநிருபம் - பாடசாலையின் பௌதீக தேவைகளுக்காக - இவ்வாறு பணம் சேகரிக்க முடியாது எனக் குறிப்பிடுகின்றது. இவ்வாறு நிதிதிரட்டப்படுமானால் - குறித்த அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இச்செயற்திட்டத்துக்கு கல்வியமைச்சில் அனுமதிபெறப்பட்டதா? அவ்வாறு அனுமதிபெறப்பட்டிருக்குமானால் - அனுமதிவழங்கிய  அதிகாரியும் சுற்றுநிருபத்தை மீறிசெயற்பட்டுள்ளார். இது இலவசக் கல்வி முறையை தடைசெய்யும் செயற்பாடாகும். அரசாங்கத்தினால் - இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கொள்கைகளுள் சகல மாணவருக்கும் தளபாடம் வழங்கும் திட்டமும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் - பற்றுச்சீட்டுக்கள் வழங்காது – முறைகேடாகப் பணம் சேகரிப்பது மோசடிக்கு வழிவகுக்கும் செயற்பாடாக அமையும்.  
இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இச்செயற்பாடு உடனடியாக நிறுத்தப்படவேண்டும். தொடருமானால் தொழிற்சங்க ரீதியான செயற்பாட்டை முன்னெடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment