Sunday, February 17, 2019

கடல் கடந்த தீவுகளுக்குச் சென்று பணியாற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவேண்டும்.



  • கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் - நெடுந்தீவில் வைத்தியர்கள் பணியாற்ற தயக்கம் காட்டுவதாகவும், அதற்காக அவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ஐம்பதாயிரம் வழங்கப்பட வேண்டும் எனவும் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி கேட்ட விடயம் ஊடகங்களில் வெளிவந்திருந்தது.  

    அதிகஸ்டப்பிரதேசங்களில் பணியாற்றுபவர்கள் - சொந்த இடத்தில் பணியாற்றும்போது அனுபவிக்கக்கூடிய சலுகைகளை இழப்பதால் இக்கொடுப்பனவை அவர்களுக்கு வழங்கவேண்டும் என அவர் குறிப்பிட்ட விடயங்கள் வரவேற்கப்படவேண்டிய விடயமாகும். 

    அதேவேளை - இவ்வாறாகவே வெளிபிரதேசங்களிலிருந்து கடல் கடந்த தீவுகளுக்கு சென்று ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். கடல் கடந்த தீவுகளுக்கு சென்று பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளை வழங்குவதோடு; - மாணவர்களின் சமமான கல்வி உரிமை பாதுகாக்கப்படவும் வேண்டும் என - எவராலும் குரல் கொடுக்கப்படவில்லை என்பது எமக்கு கவலையளிக்கின்றது. 
    பிரதமரிடன் அபிவிருத்தி தொடர்பாக கதைத்த மக்கள் பிரதிநிதிகள் எவரும் -  வடமாகாணத்துக்குள் தங்களால் தீர்க்கப்படக் கூடிய – கல்வி விடயங்களில் நடைபெறும் நியமன முறைகேடுகள், தேவையற்ற அரசியல் தலையீடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. 

    அதிகஸ்ட பிரதேசங்களுக்கு - முதல் நியமனங்கள் வழங்கப்படுகின்றபோதிலும் - அரசியல்வாதிகள் மற்றும் வடமாகாண அதிகாரிகளின் துணையுடன் வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்குத் தெரியாமலேயே பாடசாலைகள்; மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மேலதிக சீராக்கல்களை கருத்தில் கொண்டு வழங்கும் பாடசாலைகள் – வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்காமலேயே - ஆசிரியர்கள் போதியளவு உள்ள பாடசாலைகளுக்கே மேலதிகமாக வடமாகாண கல்வி அதிகாரிகளினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இவை அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகளா? அல்லது அரசியல் வாதிகளினது அழுத்தங்களால் அவர்கள் முறையற்று செயற்படுகிறார்களா? என்பது கண்டறியப்பட்டு – வடமாகாணக் கல்வி கட்டமைப்பு சீராக்கப்படவேண்டியுள்ளது.

    வடமாகாணத்தின் சில கல்வி வலயங்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இல்லை. அதிலும் - ஒரு வருடமாக யாழ்.கல்வி வலயத்துக்கு வலயக்கல்விப் பணிப்பாளர் நியமனம் நேர்மையாக நடைபெற முயற்சிகள் எடுக்கப்படவில்லை. 

    இத்தகைய குறைபாடுகளைப் பற்றி குறித்த மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளாக தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்  அறியாமல் இருப்பதும் - சாத்தியமான வழிமுறைகளை ஆராயாமல், இருப்பதும் மிகுந்த கவலையளிக்கிறது. 
    இத்தகைய கல்விசார் விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து – மக்கள் பிரதிநிதிகள் எதிர்கால மாணவர் சமூகத்தின் கல்வி விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment