Wednesday, April 15, 2020

அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி ஒருநாள் சம்பளத்தை அறவிடமுடியாது - ஜோசப் ஸ்ராலின்

கொவிட் -19 நோய்த்தொற்றைத் தடுப்பதெனும் போர்வையில் - அதிபர், ஆசிரியர்களின் ஒருநாள் வேதனத்தை கழிப்பதற்காக - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரால் 10.04.2020 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் - வடமாகாண கல்விப்பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி ஒருநாள் வேதனத்தை - திணைக்களங்கள் அறவிடமுடியாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. தற்போது நிலவும் - இக்கட்டான சூழ்நிலையில் - அதிபர், ஆசிரியர்கள் பலர் தாமாக முன்வந்து - தமது நிதிப்பங்களிப்புகள் மூலமாக - பல நலத்திட்டங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தினூடாகவும், சமூக அமைப்புகள் ஊடாகவும், தனித்தனியாகவும் முன்னெடுத்து வருகிறார்கள். ஊரடங்கு தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் - அன்றாடம் உழைத்து வாழ்ந்தவர்கள் - பட்டினியை எதிர்நோக்கும் ஆபத்தான சூழலில் இருந்தபோது - அரசு பாராமுகமாக இருந்தது. இன்றும்கூட -அரசால் அறிவிக்கப்பட்ட சலுகைகளும், உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களை சரியாக சென்றடையவில்லை என்னும் குற்றச்சாட்டு நீங்கவில்லை. இந்த சூழலில் - அதிபர், ஆசிரியர்களின் கணிசமான நிதிப்பங்களிப்புகளைப்பெற்று - இலங்கை ஆசிரியர் சங்கமும் மனிதாபிமான உதவிகளை கணிசமான அளவில் செய்துவருகிறது. அதுமட்டுமல்லாமல் - தனிப்பட்டமுறையில் பாடசாலைகளின் அதிபர் மற்றும் ஆசிரியர்களும் கூட - தமது பாடசாலை மாணவர்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்காக நிதிப்பங்களிப்பைச் செய்துவருகிறார்கள். இதுவரை அவ்வாறு செய்யாதவர்களைக் கூட - பாடசாலை மட்டங்களில் செயற்படுத்துமாறு - எமது சங்க உறுப்பினர்களூடாக அறிவுறுத்தியுள்ளோம். அதற்குரிய செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இலங்கை ஆசிரியர் சங்கம் களத்தில் நேரடியாக மேற்கொண்டுவரும் - மனிதாபிமான உதவிகளுக்கும் அதிபர், ஆசிரியர்கள் தாமாக முன்வந்து - அனுசரணை வழங்கிவருகிறார்கள். இந்நிலையில் - அதிபர், ஆசிரியர்களின் சம்மதமின்றி - அவர்களின் ஒருநாள் சம்பளத்தை - வடமாகாண கல்வித்திணைக்களம் அறவிடமுடியாது என இலங்கை ஆசிரியர்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப்ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment