Saturday, November 21, 2020

நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாட்டை விடுத்து, கல்வியமைச்சு அனைவருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும்! - ஜோசப் ஸ்ராலின் -

பாடசாலைகளை நாளை மறுதினம் 23.11.2020 திகதி ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் எவ்விதமான முன்நடவடிக்கையும் இல்லாமல் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இதனால் பாடசாலைகளில் கொவிட் சமூகத்தொற்று உருவாகக்கூடிய அபாய நிலையே ஏற்பட்டுள்ளது.. கல்வியமைச்சு பாடசாலையை ஆரம்பிப்பதாக இருந்தால் ஒரு திட்டம் இருந்திருக்க வேண்டும். அப்படியான ஒரு திட்டமும் இல்லாமல் பாடசாலை ஆரம்பிப்பது முட்டாள்தனமானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் :

பாடசாலைகளை நாளை மறுதினம் 23.11.2020 திகதி ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் எவ்விதமான முன்நடவடிக்கையும் இல்லாமல் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். இதனால் பாடசாலைகளில் கொவிட் சமூகத்தொற்று உருவாகக்கூறிய அபாய நிலையே ஏற்பட்டுள்ளது.. கல்வியமைச்சு பாடசாலையை ஆரம்பிப்பதாக இருந்தால் ஒரு திட்டம் இருந்திருக்க வேண்டும். அப்படியான ஒரு திட்டமும் இல்லாமல் பாடசாலை ஆரம்பிப்பது முட்டாள்தனமானது. 

நாளை மறுதினம் பாடசாலைகள் ஆரம்பிக்ககூடிய வகையில்  பாடசாலை தொற்று நீக்கம் செய்யப்பட்டு துப்புரவு செய்யப்படவில்லை. இன்னொரு பக்கத்தில் டெங்கு நோய் பிரச்சினையும் உள்ளது. இந்த நிலைமைகளில் பாடசாலை மாணவர்களை அபாயத்துக்குள் தள்ளும் செயற்பாடொன்றையே கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளரும், பொதுச் சுகாதார பரிசோதகர்களும், பொலிஸ், போக்குவரத்து துறை ஆகியவற்றைக் கொண்டு குழு அமைக்குமாறு கல்வியமைச்சின் செயலாளர் அறிக்கை விட்டுள்ளார். நாளை மறுதினம் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன்னர் இப்படியான குழுக்களை உருவாக்க முடியுமா? 

பாடசாலைகள் நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஆரம்பித்தால், டிசெம்பர் 23 ம் திகதி விடுமுறை கொடுக்கிறார்கள். இக்காலப்பகுதிக்குள் நான்கு வாரங்களே உள்ளன. ஆயினும், தற்போது ஒரு வகுப்பறையில் 15 மாணவர்களையே வைத்திருக்க வேண்டும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஒரு தரத்தில், வகுப்பில் இந்தவாரம் 15 மாணவர்களையும், அடுத்தவாரம் 15 மாணவர்களையும் கொண்டே வகுப்புக்கள் நடத்தப்படவேண்டும் என கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அப்படியானால், இரண்டு வாரத்துக்குரிய கல்வி நடவடிக்கையே நடைபெறப்போகின்றது. இவைகள் அனைத்தும் திட்டமில்லாமல் செய்யப்படும் செயற்பாடாகும். 

கொவிட் 19 சமூகத் தொற்றின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் இந்த வேளையில், திட்டமில்லாத வகையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. 

எனவே, பாடசாலைகள் ஆரம்பிப்பதாக இருந்தால், பாடசாலைகள் அனைத்தும் பூரண தொற்று நீக்கம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக தரம் 11,12,13 வகுப்புக்களை சமூக இடைவெளியுடன் முதல் வாரத்தில் ஆரம்பிக்க முடியும்.  அதன் பின்னரே மற்றைய தரங்களை ஆரம்பிக்கலாம். ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவில்லை. அப்படியாயின், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கல்வி அமைச்சு தெளிவுபடுத்தவில்லை. ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வரவேண்டுமா? இல்லையா? என்பது பற்றி கல்வியமைச்சிடம் திட்டமில்லை. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் பாரிய குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பாடவேளைகள் இல்லாமல் வீணாக போக்குவரத்து செய்யும் அச்ச நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியாவின் கர்நாடகா, ஹரியானா, மத்திய பிரதேஸ், போன்ற இடங்களில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கொவிட் - 19 தொற்று மிகமோசமாக அதிகரிக்கப்பட்டுள்ளமையையும் கல்வியமைச்சு கவனத்தில் கொள்ள வேண்டும். 

நாளை மறுதினம் பாடசாலை ஆரம்பிப்பதாகக் கல்வியமைச்சு கூறியுள்ளதைத் தவிர, பாடசாலை ஆரம்பிப்பது தொடர்பாக எந்தவிதமான திட்டமும் அவர்களிடம் இல்லாமல் ஆரம்பிப்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக, எல்லோருடனும் கலந்துரையாடி சரியான தீர்மானமொன்றை கல்வியமைச்சு எடுக்க வேண்டும். எமக்குத் தெரிந்த அளவில், சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆலோசனைகள் பெறாமலேயே கல்வியமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. 

பிள்ளைகளுடன் ஆசிரியர்கள் இணைந்து செயற்படுவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. பாடசாலை ஆரம்பித்தால், ஆசிரியர்கள் நிச்சயம் பணியாற்ற வேண்டும் என்பதில் நாம் அக்கறையுடன் உள்ளோம்.  அதற்கு ஆசிரியர்களும் தயாராகவே உள்ளனர். ஆனால் பாடசாலைகள் சரியான திட்டத்துடன் முறையாக ஆரம்பிக்கப்படவேண்டும்.  கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும், ஆசிரியர்களை அலுவலகங்களுக்குள் உள் நுழைய விடாது  பாதுகாப்பாக இருந்து வருகின்ற நிலையில், தொற்று நீக்கங்களும், சமூக இடைவெளிகளைப் பேணக்கூடிய திட்டங்களும் பாடசாலைகளில் உருவாக்கப்படாமல் ஆரம்பிப்பது, நாட்டுமக்களை படுகுழிக்குள் தள்ளும் செயற்பாடாகும். எனவே, உடனடியாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி, பொருத்தமான தீர்மானம் ஒன்றை கல்வியமைச்சு எடுக்க வேண்டும் என்றார்.


No comments:

Post a Comment