Saturday, August 5, 2017

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி - யாழ்.பஸ்நிலையம் முன்பாக செவ்வாயன்று கவனயீர்ப்பு!


சிறையில் கொல்லப்பட்ட அரசியல் கைதி டில்ருக்ஷனின் நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி யாழில் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றை முன்னெடுக்க பொது அமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கம் - யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் - கிராமிய உழைப்பாளர் சங்கம் - சமூக விஞ்ஞான ஆய்வு மையம் - தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகியன கூட்டாக இணைந்து கவனயீர்ப்புக்கான அழைப்பினை விடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் யாழ். பேருந்து தரிப்பிடம் முன்பாக இடம்பெறவுள்ளது. இதில் அனைத்துத் தரப்பிரும் கலந்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்

இது தொடர்பில் குறித்த ஐந்து அமைப்புக்களும் இணைந்து இன்றைய தினம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் -

யுத்தம் முடிவுற்று எட்டு வருடங்கள் கழிந்தும் 130 பேர் வரையிலான அரசியல் கைதிகள் தொடர்ந்தும் சிறைகளில் வாழ்கின்றனர். சிலருக்கு வழக்குத் தொடுக்கப்படவேயில்லை.

வழக்குத் தொடுக்கப்பட்டோரில் பலருக்கு 8-10 வருடங்கள் கழிந்தும் வழக்கு முடிவின்றி துன்புறுகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதனால் பிணை மறுக்கப்படுகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு அல்லது தொடுக்கப்பட்டிருக்கின்ற வழக்குகளைத் துரிதப்படுத்துமாறும் உண்ணாவிரதம் இருந்தனர்.

அன்றைய மகிந்த ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் அவர்கள் மீது கொடூர கொலை வெறித் தாக்குதலை மேற்கொண்டு தலை, கை, கால்களை உடைத்தனர். தாக்குண்டவர்களில் நிமலரூபன்,  டில்ருக்ஸன் இருவரும் கொல்லப்பட்டனர்.

வவுனியா சிறையில் அரசியல் கைதிகள் நடத்திய போராட்டத்தினை நிறுத்திட ஆயுதம் தரித்த இராணுவம் அனுப்பப்பட்டது.

கைவிலங்கிடப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட கைதிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தோர் எனச் சந்தேகிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்தி மேற்கொண்ட பயங்கரத் தாக்குதலில் 15 பேரளவில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகினார்கள்.

இதில் - நிமலரூபன் அடுத்த நாளே மரணித்தார். டில்ருக்ஸன் உடல் அசைவற்ற நிலையிலும் வைத்தியசாலையில் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையில் ஒரு மாதத்தின் பின்னர் மரணத்தைத் தழுவினார்.

1983 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கைதிகளில் நூறு வரையானோர் சிறைகளில் கொல்லப்பட்டுள்ளனர். காயங்களுக்குள்ளாகி வாழ்நாள் பாதிக்கப்பட்டோரும் உள்ளனர்.

1971 மற்றும் 1989, 1998 ஆம் ஆண்டுகளில் தெற்கின் இளைஞர்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கினர். கைது செய்யப்பட்டோரின் வழக்குகள் மூன்று முதல் நான்கு வருடங்களுக்குள் நிறைவு செய்யப்பட்டன.

கடந்த நாட்களில் நீதியமைச்சர் 'தற்போது சிறைகளில் உள்ளோர் பயங்கரமானவர்கள். இவர்களை விடுதலை செய்ய முடியாது' என நீதிமன்றங்களில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே தமது தீர்ப்பினை வழங்கியிருப்பது நாட்டின் சட்டத்தையும் நீதிமன்றையும் அவமதிக்கும் செயலாகும்.

இவர்களிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. நல்லாட்சி அரசில் நம்பிக்கை வைத்து வாக்களித்த நாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எம் அரசியல் தலைவர்களும் ஏமாற்றுகின்றார்கள் என்பது எம்மை விரக்தி நிலைக்குள் தள்ளியுள்ளது.

வடக்கின் காணிப்பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அகதிகள் பிரச்சினை போன்றன தீர்க்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் அமர்ந்து போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசியல் கைதிகளின் பெற்றோர் தம் உறவுகளின் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர், காணிகள் இழந்தோர், அரசியல் கைதிகள் போன்றோரின் பிரச்சினைகளைத் தீர்க்க ஆயத்தமில்லாதோர்கள் நாம் விரும்பும் அரசியல் தீர்வை முன்வைக்கப் போவதில்லை.

நல்லாட்சி முகமூடி அணிந்தோர் இனவாத அரசியலுக்குள் அடைக்கலம் புகுந்து தமது எதிர்கால அரசியலை திட்டமிடுகின்றனர் இவர்களே நல்லிணக்கம் தொடர்பாகவும் கதைக்கின்றனர். இது தமிழர்கள் விடயத்தில் இவர்களின் இரட்டை நிலைப்பாடு எனலாம்.

டில்ருக்ஸன் நினைவேந்தல் நாளில் அரசிடம் கோருவது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி, இராணுவ முகாம்களை அகற்றுதல், காணிவிடுவிப்பு, அரசியல் தீர்வு என்பவற்றின் ஆரம்பகட்டமாகவும் நல்லிணக்கத்தின் அடையாளமாகவும் ஆட்சியாளர் அரசியல் தீர்மானம் எடுத்து அனைத்து அரசியல் கைதிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment