Sunday, August 26, 2018

தமிழர்களின் காணிகள் அபகரிப்புக்கு எதிராக நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு!

தமிழர் தாயகப் பிரதேசத்தில் அரசாங்கத்தின் திட்டமிட்டுத் திணிக்கப்படும் புதிய குடியேற்றங்களின் மூலம் - தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதும்-  அவர்கள் தமது வாழ்வுரிமைக்காகப் போராடுவதும் - அச்சத்தின் மத்தியில் தமிழ் மக்கள் - தமது பகுதிகளிலேயே வாழ்வதுமே தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில்  இந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதில் முனைப்பாக ஈடுபட்டுவருகின்றது. - மகாவலி அபிவிருத்தி என்னும் போர்வையில் மகாவலி அதிகாரசபையூடாக தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தி சிங்கள மக்களுக்கு வழங்க எடுக்கப்படும் முன்னெடுப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

ஏற்கனவே தமிழ் மக்கள் வாழ்ந்த பல ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது- தமது சொந்தக் காணிகளின் விடுவிப்புக்காக இன்னும் தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்  -   மணலாற்றுப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் மாகாவலி அபிவிருத்திச் சபையினால் கையகப்படுத்தப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கும் செயற்திட்டம் மிக இரகசியமாக முன்னெடுக்கப்படுகின்றது.
எனவே – திட்டமிட்ட ரீதியில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் நடைபெற்றுவரும் சிங்கள மயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்படும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்குகின்றது. 28.08.2018 செவ்வாய்க்கிழமை மாகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ஜோசப் ஸ்ராலின்
பொதுச்செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம்

No comments:

Post a Comment