Wednesday, September 7, 2016

முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரின் அதிகாரதுஸ்பிரயோகம் முறையான விசாரணை கோருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்




முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரின் அதிகாரதுஸ்பிரயோகம் தொடர்பாக – முறையான விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதன் பிரதிகளை வடமாகாண முதலமைச்சர், வடமாகாண கல்வியமைச்சர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பிவைத்துள்ளது.


மு/புதுக்குடியிருப்பு ...............வித்தியாலயத்தில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றும் ................................என்பவருக்கு NP/44/20/01/05 இலக்க 30.08.2016 திகதியிடப்பட்ட முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளரினால் சுயவிபரக்கோவையினுள் இடப்பட்ட கடிதம் எவ்விதமான ஆசிரியரின் நியாயப்பாடுகளையும் ஆராயாமல் மேற்கொள்ளப்பட்ட அதிகாரதுஸ்பிரயோக நடவடிக்கையாகும். (கடிதப் பிரதி இணைக்கப்பட்டுள்ளது)
குறித்த கற்பித்தல் நிகழ்வு 30.08.2016 அன்று நடைமுறைப்பட்டுத்தப்பட்டுள்ளது.  இதற்கு முன்னைய நாள் 29.08.2016 அன்றே அதிபரினால் ஆசிரியருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தெரியப்படுத்தப்பட்டபோதே – குறித்த ஆசிரியரால் பாடசாலை அதிபருக்கு தனது சுகயீனம் தொடர்பாகவும், இதனால் வரமுடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த செயற்பாடு தவணை விடுமுறைக் காலங்களிலேயே ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பாடசாலை விடுமுறை விடுவதற்கு முன்னர் - முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையினர் - திட்டமிடல்களை மேற்கொண்டு எவ்விதமான எழுத்துமூலமான அறிவித்தல்களையும் ஆசிரியருக்கு வழங்கவில்லை.  ஒழுங்காக திட்டமிடல்களை மேற்கொண்டு – ஆசிரியர்களுக்குரிய சாதகமான நேரங்களையும், பிரச்சினைகளையும் அறிந்து செயற்படுத்துவதை விடுத்து – அச்சுறுத்தும் பாணியில் விடுமுறைக்கால செயற்பாடுகளை முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் மேற்கொண்டமையையும் - அதேவேளை சம்பந்தப்பட்டவரிடம் விளக்கம் ஏதும் கோராமல் - ஆசிரியர்களை அச்சுறுத்தும் பாணியில் குறித்த முல்லைத்தீவு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆசிரியரின் சுயவிபரக்கோவையில் ஆசிரியரை அச்சுறுத்தும் விதமாக தனது கடிதத்தை இட்டு - மேற்கொண்ட இந்த முறைகேடான செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தாபன விதிக்கோவையை மீறும் செயற்பாடுமாகும்.
அத்துடன் - செல்வி .............................. என்னும் குறித்த பாடசாலை மாணவி இவ்வருட 2016 ஆங்கில தினப்போட்டியில் கவிதைப்போட்டியில் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினைப் பெற்றிருந்த போதிலும் - மாகாணமட்டப் போட்டியில் கலந்துகொள்ள மாணவிக்கோ, பாடசாலை அதிபருக்கோ அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இது முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஒன்றாகும். இவ்விடயம் குறித்த பாடசாலை அதிபரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ( கடிதத்தின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)
அத்துடன் - குறித்த மாணவி மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றாமையால் மிகுந்த மனவுழைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என அவரது தாயார் மூலமும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் - முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமனையினர் தமது தவறுகளை மூடி மறைப்பதற்கு – இந்தப் பழியையும் குறித்த பாடசாலையின் அதிபர் மீதும் ஆசிரியர் மேலும்  போட்டு – தாம் தப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டு - ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறு முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளரின் திட்டமிடாத செயற்பாடுகளால் ஏற்படும் விபரீதங்களை - இறுதியில் ஆசிரியர்கள் மத்தியில் திணித்து தாம் தப்பிக்க முயலும் செயற்பாடுகள் தொடர்பாக - உடனடியாக முறையான விசாரணையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment