Wednesday, November 22, 2017

குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து தீர்மானங்களை எடுப்பவர்கள் – ஆரோக்கியமான தீர்மானங்களை எடுக்கவேண்டும்.


வடமாகாணத்தில்அ மைந்துள்ள பல கஸ்டப்பிரதேச பாடசாலைகளில் வெளிமாவட்டங்களிலிருந்து சென்று பணியாற்றுவதற்கு தடையாக - ஒழுங்கற்ற போக்குவரத்துக்களும் - தங்குமிட வசதிகளின்மையையும் காணப்படுகின்றது. – வெளிமாவட்டங்களிற்கு சென்று பாரிய மனச்சுமைகளோடு பணியாற்றும் ஆசிரியர்களின் நலன்சார்ந்து சிறிதளவேனும் சிந்திக்காது –வடமாகாணத்தின் கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என வடமாகாண கல்வியமைச்சு கருதுகின்றதா? என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிரியர்களின் வரவை உறுதிப்படுத்தும் இயந்திரப்பதிவு முறையினால் - ஆசிரியர்கள் எதிர்நோக்கியுள்ள மனஅழுத்தங்கள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை அண்மைய நாட்களில் வடமாகாணத்தில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசாங்க நிர்வாக முகாமைத்துவ அமைச்சினால் - விரல் அடையாள இயந்திரப் பதிவுமுறையை அமுல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பினும் - அது சார் நடவடிக்கையினை பாடசாலைகளில் அமுல்படுத்தமுன்னர் – வடமாகாணத்தின் பாடசாலைகளின் - இதர வசதிவாய்ப்புக்களின் சாதக - பாதக நிலைகள் கருத்திலெடுத்து – பாடசாலைகளுக்கான நேர நிர்ணயம் வடமாகாண கல்வியமைச்சால் செய்யப்பட்டிருக்க வேண்டும். 

பல மாவட்டங்களில் உள்ள - பல பாடசாலைகளிற்கு காலை 7.30 மணிக்கு முன்னர் சென்றடையமுடியாத போக்குவரத்து காணப்படுகின்றது. இவ்விடயங்கள் சீர் செய்யப்படாமலேயே 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் அரை மணிநேரம் முன்னரான 7.30 க்கு ஆரம்பிக்குமாறு வடமாகாண கல்வியமைச்சால் அறிவுறுத்தப்பட்டது.

பாடசாலைகளின் ஆரம்பிக்கும் நேரங்களை மாற்றியமைக்கும் சுதந்திரம் சுற்றுநிருபத்தினூடாக வழங்கப்பட்டிருந்தும் - பாடசாலை நேரத்தினை பிந்தி ஆரம்பித்து முடிப்பதற்கு – ஆசிரியர்களின் நலன் சார்ந்து சிந்தித்து அதிகாரிகள் செயற்படவில்லை. இந்த நிலையில் -  வரவை உறுதிப்படுத்தும் இயந்திரப்பதிவு முறையும் - காலை 7.30 மணிக்கு வடமாகாணத்தின் பாடசாலைகளின் இயங்கு நிலையும் - பின்தங்கிய பிரதேசங்களில் மேலதிக நேரங்கள் நின்று பணியாற்றியும் கூட-  ஆசிரியர்களுக்கு அவசியமற்ற விடுமுறை இழப்புக்களையும் -பாரிய மனஅழுத்தங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

விரலடையாளப் பதிவிடலில் சட்டம் பற்றிப் பேசும் அதிகாரிகள் - பாடசாலை முடிந்த பின்னரும் ஆசிரியர்களை மறித்து மேலதிக நிகழ்வுகளையும், ஆசிரியர் கூட்டங்களையும் நடாத்துவது சட்டவிரோதம் என்பதை பேசமறுக்கின்றனர். இவற்றை அதிகாரவர்க்கத்தின் அடக்குமுறையின் அடையாளமாகவே நோக்கவேண்டியுள்ளது. இத்தகைய அதிகார அடாவடித்தனங்களின் மூலம் ஆசிரியர்களை அடக்க நினைப்பவர்களின் செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

மாணவர்களுடன் நேரடியாக தொடர்புபடுபவர்கள் ஆசிரியர்களே. இவர்களே களப்பணியாளர்கள். இவர்களின் உளவியல் என்பது மிகமுக்கியமானது.  குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து தீர்மானங்களை எடுப்பவர்கள்  – ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கக்கூடிய தீர்மானங்களை எடுக்கவேண்டும். மாறாக – தமது அதிகாரத் திணிப்பினூடாக ஆசிரியர்களையும் மாணவர்களையும் விரக்திநிலைக்கும் கொண்டுசெல்லும் முடிவுகளை எடுக்கக்கூடாது.

பாடசாலை முடிவடைந்த பின்னர் - நடைபெறும் நிகழ்வுகளில் ஆசிரியர்கள் கலந்துகொள்வது அவரவர்களின் விருப்பமாகும். ஆசிரியரின் விருப்பின்றி எவ்வித நிர்ப்பந்தங்களையும் எவரும் வழங்கமுடியாது. அவ்வாறான நிர்ப்பந்தங்களை வழங்கும் - அடக்குமுறைச் செயற்பாட்டை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கின்றது.

இவ்விடயங்கள் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சு பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோசப்ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்


No comments:

Post a Comment