Friday, January 3, 2020

அவசர நீதி கோரி வடக்கு ஆளுநருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடிதம்!


வலிகாமம் கல்வி அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக மேற்கொள்ளப்படும் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கைகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் - பாடசாலையில் அதிபரினால் கையொப்பமிட அனுமதிக்கப்படாத நிலையில் விடுப்பில் உள்ள ஆசிரியருக்கு அவசர நீதி கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாணத்தின் புதிய ஆளுநர் திருமதி சார்ள்ஸ் அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதன் பிரதி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது

இணுவில் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய திரு.,,,,,,,,,,,,,,,,,,,,,, என்பவருக்கு வலிகாமம் வலய கல்விப் பணிமனையினராலும்- குறித்த பாடசாலை அதிபரினாலும் உள்நோக்கம் கொண்ட முறையற்ற இடமாற்றம் கடந்த வருட இறுதிப்பகுதியில் - இடமாற்றச்சபையின் அனுமதியின்றி வழங்கப்பட்டிருந்தது.

வெளிமாவட்டங்களில் போதிய ஆசிரிய வளம் இல்லாத நிலையில் -பட்டதாரியான குறித்த ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் தான் கற்ற புவியியல் பாடத்தை கற்பித்து 8 வருடங்கள் சேவையாற்றியிருந்தார். வெளிமாவட்ட சேவையை பூர்த்தி செய்த பின்னர் -  ஆரம்பக்கல்வி நியமனத்தை பெற்றிருந்தாலும் - இன்றுவரை அவர் புவியில் பாடத்தையே கற்பித்து வந்துள்ளதோடு - உயர்தர மதிப்பீட்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். குறித்த ஆசிரியர் மிகக் கடினமான சூழ்நிலைகளில் வெளிமாவட்ட அதிகஸ்டப் பிரதேசங்களில் 8 வருடங்கள் கடமையாற்றி – தனது சொந்த வலயமான யாழ்ப்பாண கல்வி வலயத்துக்கே இடமாற்றம் கோரியிருந்தார்.

ஆயினும் - அப்போது வெளிமாவட்டம் சேவையாற்றாத ஆசிரியர்கள் யாழ்.வலயத்தில் இருந்த நிலையிலும்-  யாழ்.வலயத்தில் வெற்றிடமின்மையைக் காரணமாக கூறி - வலிகாமம் கல்வி வலயத்துக்கே இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

 1 இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த இணுவில் இந்துக் கல்லூரியில் போதிய பாடவேளைகள் வழங்கப்பட்ட நிலையில் - 2019 இல் புவியியல் பாடத்தைக் கற்பித்து வந்துள்ளார். (நேரசூசி அ-1 இணைக்கப்பட்டுள்ளது.)

2. புவியியல் பாடத்தில் தரம் 11 மற்றும் உயர்தரப் பெறுபேறுகளில் சிறந்த அடைவுமட்டத்தைக் காட்டியதற்கான ஆதாரமாக – குறித்த பாடசாலை அதிபரினால் சிபார்சுசெய்யப்பட்ட ஆசிரியர் தரங்கணிப்புப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (தரங்கணிப்புப் படிவம் அ-2 இணைக்கப்பட்டுள்ளது.) 

3. குறித்த பாடசாலையில் - நேரத்துக்கு பாடசாலைக்குச் சென்று கடமையாற்றும் ஆசிரியராகவும்இ லீவுகளை மிகக் குறைந்த அளவு பெற்று சேவையாற்றிய ஆசிரியராகவும் குறித்த ஆசிரியர் இணுவில் இந்து ஆரம்பப் பாடாசலை பரிசளிப்பு விழா மலரில் கௌரவிக்கப்பட்டுள்ளார். (2019 - பரிசளிப்பு விழா மலரின் குறித்த பக்கம் அ-3 இணைக்கப்பட்டுள்ளது.)

இவ்வாறு – அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வந்த ஆசிரியரை நீக்கி – அதிகாரிகள் தமக்கு வேண்டப்பட்டவர்களை இணுவில் இந்துக் கல்லூரியில் நியமிப்பதற்காக – குறித்த பாடசாலை அதிபரினால் - அதிபர் - தான் தை மாதமளவில் ஒய்வு பெறவுள்ளதாகவும் அதனால் ஆசிரியருக்கு தாவடி பகுதியிலுள்ள பாடசாலையொன்றை பெற்றுத்தருவதாக ஆசிரியரை வற்புறுத்தி – ஆசிரியரிடமிருந்து கடிதம் ஒன்றை பெற்றுள்ளார். குறித்த பாடசாலையில் 5 வருடங்களே ஆசிரியர் பணியாற்றி வருகின்றார்.  ஆனால் - ஆசிரியருக்கு குட்டியப்புலம் பாடசாலையே இடமாற்றமாக வழங்கப்பட்டது. அதிபரின் வற்புறுத்தலுக்கு இணைங்க - தாவடி பகுதியிலுள்ள பாடசாலைக்கு செல்வதற்கே இடமாற்றம் கேட்டிருந்த நிலையில் - அவருக்கு சாதகமற்ற இன்னொரு பாடசாலையை வழங்கிய போது – அவருக்கு விருப்பமில்லையாயின் - தற்போது கடமையாற்றும் பாடசாலையிலேயே கடமையாற்ற அனுமதித்திருக்க வேண்டும்.

இதற்காக குறித்த ஆசிரியர் மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால் - இடமாற்றச்சபை எதுவும் கூடாமலேயே மேன்முறையீடும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரால் தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டிருந்தது.

இவ்விடயம் எமது சங்கத்தின் கவனத்துக்கு வந்தபோது – ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதால் - தேர்தல் காலங்களில் இவ்வாறு இடமாற்றம் செய்தமை தவறு என தேர்தல் திணைக்களத்துக்கு எம்மால் முறைப்பாடு செய்யப்பட்டு இடமாற்றம் நிறுத்தப்பட்டது.

ஆயினும் - குறித்த ஆசிரியர் 03.10.2019 , 07.12.2019 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் - தனக்கு வழங்கப்பட்ட முறையற்ற இடமாற்றம் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். இதன் அடிப்படையில் - 17.10.2019 திகதிய NP/3/2/1/5/TT/IN.ZE/2019-60 இலக்க கடிதத்தின் மூலம் வடமாகாண கல்வியமைச்சின் உதவிச் செயலாளரினால் - குறித்த ஆசிரியரின் மேன்முறையீடு தொடர்பாக உரிய பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் - குறித்த ஆசிரியரின் இடமாற்றம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடந்த 24.12.2019 நடைபெற்ற இடமாற்றச் சபையில் - குறித்த விடயமும் வந்திருந்தபோது – எமது சங்கப் பிரதிநிதி கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரால் எமது உறுப்பினரின் ஆட்சேபனை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. வடமாகாண கல்வியமைச்சால் குறித்த ஆசிரியரின் மேன்முறையீடு தொடர்பாக ஏற்கனவே அறிவுத்தப்பட்டிருந்த விடயத்தை - இடமாற்றச் சபைக்கு மறைத்து – குறித்த ஆசிரியரினால் வழங்கப்பட்ட மேன்முறையீட்டில் அதிபரின் கையொப்பம் இல்லை என்று வேண்டுமென்றே காரணத்தை கல்விப் பணிப்பாளர் உருவாக்கயிருந்தார். இந்த மேன்முறையீட்டை பரிசீலிக்க முடியாது என்றே ஒற்றைக்காலில் நின்றுள்ளார்.

இந் நிலையிலும்  - எமது ஆட்சேபனை  பதிவுசெய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக - மிகத் திட்டமிட்ட முறையில் அந்த இடமாற்றச் சபையில் அறிக்கை எதுவும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரால் பேணப்பட்டிருக்கவில்லை.

இடமாற்றச்சபை தீர்மானங்கள் அறிக்கைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

தீர்மானங்களில் இடமாற்ற சபை உறுப்பினர்கள் கையொப்பமிடவேண்டும்.

ஆனால் - பெயர்கள் மட்டும் கொண்ட பட்டியலின் அடியில் கையொப்பம் வாங்கிவிட்டு – எம்மால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகளையும் எதிர்ப்புக்களையும் மறைத்து  - எமது தொழிற்சங்கமும் குறித்த இடமாற்றத்துக்காக கையொப்பமிட்டது என்று அப்பட்டமான பொய்யைகூறி – தனது முறைகேட்டை திசைதிருப்ப முயற்சிக்கும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரின் அதிகார துஸ்பிரயோகம்மிக்க செயற்பாடுகள் கல்விப் புலத்துக்கே மிகவும் ஆபத்தானதாகும்.

இவை ஒருபுறமிருக்க – குறித்த ஆசிரியர் மேன்முறையீடு செய்திருந்த நிலையில் மேன்முறையீட்டுக்கான பதில் கிடைக்கும் வரை – குறித்த ஆசிரியர் முன்னர் தான் கடமையாற்றும் பாடசாலையிலேயே கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும். ஆனால் - பாடசாலையின் அதிபரால்  ஆசிரியர் கையொப்பமிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. கையொப்பமிட அனுமதிக்காதமைக்கு வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரே தூண்டுதலாகவும் இருந்துள்ளார்.

எனவே – குறித்த நடைமுறையை மீறி – குறித்த ஆசிரியரை மிகக் கீழ்த்தரமாக நடத்தியதன் மூலம் - குறித்த பாடசாலை அதிபரும் வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரும் மிகப்பெரும் முறைகேட்டைப் புரிந்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக – உடனடியாக நீதியான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து - இவைபோன்ற முறையற்ற பழிவாங்கல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் - பாதிக்கப்பட்ட ஆசிரியருக்கு நீதி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment