Sunday, January 5, 2020

வலிகாமம் பணிப்பாளருக்கு எதிராக புதன்கிழமை கவனயீர்ப்பு: ஆசிரியர்கள் ஒன்றிணைய வேண்டும்.! - ஜோசப் ஸ்ராலின் அழைப்பு


வலிகாமம் கல்விப் பணிப்பாளரின் ஏதேச்சதிகாரமான அடாவடித்தனங்களினால் - வலிகாமம் கல்வி வலயத்தில் முறையற்ற இடமாற்றங்களும், பழிவாங்கல்களும் இடம்பெற்று வருகின்றன. சட்டரீதியாக ஏற்று அங்கீகரிக்கப்பட்ட தாபனவிதிகளையும், சுற்றுநிருபங்களையும் மதிக்காது தான்தோன்றித்தனமாக செயற்பட்டுவரும் செயற்பாடுகளைக் கண்டித்து எதிர்வரும் புதன்கிழமை 08.01.2020 மாலை 2.00 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் - கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

செம்மணி வீதி – நல்லூரில் அமைந்துள்ள வடமாகாண கல்வியமைச்சு மற்றும் வடமாகாண கல்வித் திணைக்களம் ஆகிய அலுவலகங்களுக்கு முன்னால் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் - வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் பழிவாங்கல் செயற்பாடுகளும் வரம்புமீறிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஒரு சில அதிபர்கள் மூலமாக – ஆசிரியர்களை வற்புறுத்தி – விருப்பக் கடிதங்கள் போன்று பெற்று முறையற்ற இடமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. மேலதிக ஆசிரிய ஆளணி என்ற போர்வையில் - இடமாற்றச்சபைக்கு தவறான தகவல்களை வழங்கி இடமாற்றங்களை தொழிற்சங்க உறுப்பினர்களைச் கொண்டு செய்வது போலவே இடமாற்றச்சபையை தவறாக வழிநடத்தியுள்ளார்.

வலிகாமம் வலயத்தில் தமது எடுபிடிகள் சிலரை வைத்துக்கொண்டு – ஏனைய கல்வி அதிகாரிகளையும், ஆசிரியர் ஆலோசகர்களையும் அச்சுறுத்தும் செயற்பாடுகளிலும், பழிவாங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இதனால் மன உழைச்சலுக்கு உள்ளாகியுள்ளவர்கள் - வலிகாமம் கல்வி வளர்ச்சியில் ஈடுபாட்டுடன் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக – எமக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒரே பாடசாலையில் ஏழு வருடங்களுக்கு அதிகமாக பணியாற்றியவர்கள் பலர் இருக்கும்போது – அவர்களுக்கான இடமாற்றங்கள் தொடர்பாக எவ்வித அக்கறையும் இதுவரை காட்டவில்லை. தமக்கு சார்பானவர்களை தக்கவைப்பதற்காகவும் தமக்கு வேண்டப்பட்டவர்களின் வேண்டுதல்களுக்காகவும் வலிகாமம் கல்விவலயத்தின் கல்விக் கட்டமைப்பையே தவறாக வழிநடத்திவருகின்றார்.

முறையற்ற விதத்தில் இடமாற்றம் வழங்குவதோடு – பாதிக்கப்படும் ஆசிரியர்கள் மேன்முறையீடு செய்யும் உரிமை - சட்டத்தில் உள்ள நிலையிலும், அதனை ஏற்க மறுக்கும் செயற்பாடுகளும் - ஆசிரியர்களை பொருத்தமற்ற வார்த்தைப் பிரயோகங்களின் மூலம், மன உழைச்சலுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு – பாதிக்கப்பட்டவர்கள் எமது சங்கத்தை நாடி வந்தபோது – அவர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தபோது – அவர்களது பாடசாலைகளுக்கு சென்று அவர்களை அச்சுறுத்துவதுடன், பொய்க் குற்றச்சாட்டுக்களையும் சுமத்த எத்தணித்த விடயங்கள் நடைபெற்றுள்ளன.

கடந்த  ஜனாதிபதி தேர்தல் காலங்களில் நடைபெற்ற முறையற்ற இடமாற்றங்களை – தேர்தல் திணைக்களத்தினூடாக நிறுத்தியிருந்தோம். ஆயினும் - தேர்தல் முடிவடைந்த பின்னரும் அவர்களை பழிவாங்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார்.

வெளிமாவட்டங்களில் சேவையாற்றி – ஆசிரியர்கள் தாம் கோரிய வலயத்துக்கு வெற்றிடம் இல்லை எனக் கூறி – வலிகாமம் கல்வி வலயத்துக்கு இடமாற்றம் வழங்கப்பட்டபோது – தூர இடங்களில் பணியாற்றி வருபவர்கள் என்ற மனிதாபிமான சிந்தனைகள் இன்றி – தூர இடங்களுக்கு பாடசாலைகளை வழங்குவதும், அவர்கள் தமது பிரச்சினைகளைக் கூறும்போது – பொருத்தமற்ற வார்த்தைகளால் ஆசிரியர்களை துன்புறுத்துவதும் நடைபெற்று வந்துள்ளன.
எனவே - இத்தகைய செயற்பாடுகள் - கல்விப்புலத்துக்கு முன்மாதிரிகையான செயற்பாடாக  ஒருபோதும் அமையப்போவதில்லை.

எனவே – தற்போது இவரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறையற்ற இடமாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

முழுமையான விசாரணையொன்று வடமாகாண கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்படவேண்டும். 

ஆசிரியர்கள் தொடர்ந்தும் அவமதிக்கப்படுவதையும், சட்டத்தை மீறி அச்சுறுத்தப்படுவதையும் இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் - இத்தகைய செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் புதன் கிழமை வடமாகாண கல்வியமைச்சின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளோம். இதற்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லையாயின் - எதிர்வரும் காலங்களில் பாரியளவிலான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment