Wednesday, February 12, 2020

பக்கச்சார்புகள் அகற்றப்படும்வரை பதிலீட்டு வெளிமாவட்ட இடமாற்றங்களுக்கு ஆதரவுதெரிவிக்க மாட்டோம் - இ.ஆ.சங்கம்


யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் கட்டமைப்பில் - அவசியமற்ற அரசியல் தலையீடு உட்புகுந்து – அந்தப் பாடசாலையின் வளர்ச்சி நிலையைக் குழப்பிவருவதாகவும் - அரசியல் தலையீட்டை நீக்கி - பாரபட்சங்களை இல்லாதொழிக்கவில்லையாயின் - தொழிற்சங்க நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாண கல்வியமைச்சு, வடமாகாண கல்விப் பணிப்பாளர், வடமாகாண ஆளுநர் ஆகியோருக்கு - கடிதம் அனுப்பியுள்ளது.

தமது இந்தக் கோரிக்கையை – அவர்களால் செய்யப்பட்ட பல முறைப்பாடுகளை இழுத்தடிப்புச் செய்வதுபோன்று மேற்கொள்ள முயலுவீர்களாயின் - இதன் மூலம் ஏற்படும் - வடமாகாண கல்விக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கு – வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித் திணைக்களமும் குறித்த அரசியல் வாதிகளுமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் மிகவும் பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது - 

யாழ்.செங்குந்த இந்துக் கல்லூரியின் மைதானம் தொடர்பாக – உள்ள பிணக்கை ஆரம்பத்திலேயே தீர்க்குமாறும் - வடமாகாண கல்வியமைச்சுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சருக்கும் எழுத்துமூலம் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தோம். அதன் பின்னரும் - முன்னாள் ஆளுநர்களுக்கும் தெரிவித்திருந்தோம். அப்போது நடவடிக்கை எடுக்காத – வடமாகாண கல்வியமைச்சினதும், வடமாகாண கல்வி திணைக்களத்தினதும் செயற்பாடு காரணமாக - இன்று குறித்த பாடசாலை பாரிய குழப்பநிலையை அடைந்திருக்கிறது.
இந்த குழப்ப நிலைகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் -
ஆசிரியை ஒருவருக்கு முறையாக இடமாற்றச் சபையூடாக வழங்கப்பட்ட வெளிமாவட்ட இடமாற்றங்களை – அரசியல் செல்வாக்குகளினூடாக இரு வருடங்கள் தொடர்ச்சியாகப் பிற்போட்டு – அந்த இடமாற்றம் - பின்னர் கோப்பாய் கோட்டத்துக்கான இடமாற்றமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் - தற்போது – கோப்பாய் கோட்ட பாடசாலையொன்றுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தைக் கூட – அரசியல் செல்வாக்கின்மூலம் சவாலுக்கு உட்படுத்தி - முழுக் கல்விக் கட்டமைப்பையும் சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதையும், அதற்கு உடந்தையாக வடமாகாண கல்வியமைச்சும் செயற்பட்டு வருவதையும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இடமாற்ற மேன்முறையீடுகளின் போது – குறித்த ஆசிரியை தான் கற்பித்திராத பாடத்துறையில் 100 வீதம் சித்திபெற்றுக் கொடுத்ததாக உரிமைகோர முயன்றதையும், இதனைப் போன்று பொய்யான காரணங்களையே மேன்முறையீடுகளில் தெரிவித்தும் அதிகாரிகளையும், இடமாற்றச்சபையையும் ஏமாற்றியுமுள்ளமை தொடர்பாக தற்போது – ஆதாரபூர்மான தரவுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.
யாழ்.மாவட்டங்களிலிருந்து – பதிலீடான சேவையை மேற்கொள்ளும் தேவை கருதி -  44 வயதுக்குட்பட்ட  பெண் ஆசிரியர்கள் பலரும் - பல குடும்பச்சுமைகளின் மத்தியிலும் வெளிமாவட்டங்களுக்கு சென்று பணியாற்றுகின்றனர். ஆனால் குறித்த ஆசிரியை  போன்றவர்கள் - வயது குறைந்த நிலையிலும்  அரசியல்வாதிகளை வைத்து கல்வித்துறையில் அரசியல் செய்வதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக எதிர்க்கிறது.
வெளிமாவட்ட சேவையை பூர்த்தி செய்யாது – அரசியல்வாதிகளின் தயவில் இருக்கும் குறித்த ஆசிரியைக்கு  – முன்னர் வழங்கிய  வெளிமாவட்டத்துக்கான பதிலீட்டு இடமாற்றம் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்பதை இலங்கை ஆசரியர் சங்கம் வலியுறுத்துகின்றது. இந்த இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத சந்தர்ப்பத்தில் - இந்த இடமாற்றம் சீர்செய்யப்படும்வரை – யாழ்.மாவட்டங்களிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு – பதிலீடாக அனுப்பப்படும் ஆசிரிய ஆளணியை அனுப்புவதற்கு, வடமாகாண கல்வியமைச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்ற முடிவை இலங்கை ஆசிரியர் சங்கம் எடுத்துள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
ஒரு மாத காலத்துக்குள் - குறித்த ஆசிரியையின் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் - வெளிமாவட்டங்களிற்கு -யாழ்.மாவட்டத்திலிருந்து பதிலீடாக அனுப்பப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் திரட்டி - உடனடியாகவே சொந்த வலயங்களுக்கே இடமாற்றம் வழங்கக்கோரி - தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் - போராட்டங்களில் ஈடுபடும் சந்தர்ப்பம் ஏற்படுமாயின் - ஆசிரியர்களுக்கு நாம் வழங்கும் உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது இந்தக் கோரிக்கையை – எம்மால் செய்யப்பட்ட பல முறைப்பாடுகளை இழுத்தடிப்புச் செய்வதுபோன்று மேற்கொள்ள முயலுவீர்களாயின் - இதன் மூலம் ஏற்படும் - வடமாகாண கல்விக் கட்டமைப்பின் சீர்குலைவுக்கு – வடமாகாண கல்வியமைச்சும் வடமாகாண கல்வித் திணைக்களமும் குறித்த அரசியல் வாதிகளும் வடமாகாண ஆளுநருமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 
 



No comments:

Post a Comment