Thursday, February 20, 2020

முறைகேடுகளை வடமாகாண கல்வியமைச்சு ஊக்குவிக்கின்றதா?விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவது ஏன்? - இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி!


வடமாகாண கல்விப் புலத்தில் நிகழும் முறைகேடுகள், மோசடிகள் தொடர்பாக - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் பல  ஆதாரங்களுடன் - வடமாகாண கல்வியமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் -  குற்றங்கள்   நிரூபிக்கப்பட்ட நிலையிலும் - நடவடிக்கைகள் எடுத்திராத - வடமாகாண கல்வியமைச்சின் போக்கு - முறைகேடுகளை ஊக்குவிக்கத் துணைபோவதாகவே கருதவேண்டியுள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பாக  - வடமாகாண கல்வியமைச்சு பாராமுகமாக இருப்பது பலத்த சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது என்பதுடன் - முறைகேடுகளை வெளிப்படுத்துபவர்களுக்கு  அழுத்தங்களை ஏற்படுத்தி - அதன்மூலம் முறைகேட்டாளர்களை பாதுகாக்கும் சந்தர்ப்பங்களை - வடமாகாண கல்வியமைச்சு வழங்குகிறதா? என்னும் சந்தேகம் ஏற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வடமாகாண கல்வியமைச்சின் இத்தகைய அசமந்தங்களே கல்விப் புலத்தில் - முறைகேடுகள் தலைவிரித்தாட காரணமாக உள்ளன என்பதைக் குறிப்பிட்டு - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு - இலங்கை ஆசிரியர் சங்கத்தால் கடிதம் ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது -

யாழ்.நகரின் ஆரம்ப பாடசாலை அதிபரின் முறைகேடுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப புலனாய்வு விசாரணையானது - முறையாக நடைபெற்றிருக்கவில்லை என்பதையும்  ,
நிதிப்பிரமாணக்குறிப்பின் பிரகாரம் பாடசாலைப் பொருட்பதிவேட்டைத் தவிர்த்து - தற்காலிக பொருள் பதிவேடு போன்று ஒன்றை தயாரித்து முறைகேடுகளை மூடிமறைக்க பலரது அனுசரணை பெறப்பட்டுள்ளமையையும், விசாரணைக்குழுவில் மூவருள் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த - வடமாகாண கல்வித் திணைக்கள கணக்காளரின் பிரசன்னமின்றி ஒரே நாளில் விசாரணை முடிக்கப்பட்டமை தொடர்பாகவும், முறைப்பாட்டைச் செய்திருந்த இலங்கை ஆசிரியர் சங்க தரப்பிடமிருந்தோ அல்லது ஏனைய சாட்சியாளர்களிடமிருந்தோ எவரும் அழைக்கப்பட்டு வாக்குமூலம்  ஒன்றைக்கூட விசாரணைக்குழு பெற்றிருக்காதமை தொடர்பாகவும் குறிப்பிட்டு -
அதிபரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே - விசாரணையாளர்கள் முறைகேடுகளுக்கு துணைபோயுள்ளார்கள்  என்பதைக் குறிப்பிட்டு - நீதியான மீள் விசாரணைகோரி -  06.12.2019 திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் -வடமாகாண கல்வியமைச்சின் செயலாளராகிய தங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தோம். 

ஆயினும் - முறைகேட்டுக்கு துணைபுரிந்திருந்த அதே விசாரணைக்குழுத் தலைவருக்கே - 27.12.2019 ற்கு முன் - முறைப்பாடு செய்திருந்த இலங்கை ஆசிரியர்
சங்கத்திடம் வாக்குமூலம் பெற்று - அதனையும் உள்வாங்கி மீள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரி - அவருக்கு அனுப்பப்பப்பட்ட கடிதத்தின் பிரதியை எமக்கும் அனுப்பி தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் - இன்றுவரை - அவ்விசாரணைக்குழுவினால் எவ்வித வாக்குமூலமும் எம்மிடமிருந்தோ, சாட்சிகளிடமிருந்தோ பெறப்படவில்லை என்பதுடன் - விசாரணை அறிக்கையும் முழுமைப்படுத்தப்படவில்லை. 

இதே போன்றே - எம்மால் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய பல முறைப்பாடுகள் தொடர்பாகவும் -  நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் வடமாகாண கல்வியமைச்சின் போக்கு - முறைகேடுகளை ஊக்குவிப்பதாகவே கருதவேண்டியுள்ளது.
இத்தகைய தாமதத்தை - வடமாகாண கல்வியமைச்சு பாராமுகமாக இருப்பது பலத்த சந்தேகங்களையும் தோற்றுவிக்கிறது.

குறித்த அதிபரின் முறைகேடுகள் தொடர்பாகவும் - விபரங்களுடனேயே வடமாகாண கல்வியமைச்சிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
பலமாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையிலேயே - எமது தொடர் அழுத்தத்துக்காக -  வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்ட இந்த விசாரணை மீண்டும் இழுத்தடிக்கப்படுகிறது.

விசாரணை முடிவுறுத்தப்படாத  நிலையில் - மாணவர் அனுமதிக்கு பணம்பெற்றவிடயம் கண்டறியப்பட்டநிலையில் - தற்காலிக பொருட்பதிவேடு ஒன்று பேணப்பட்ட விடயமும் குறிப்பிட்டுள்ள நிலையில் -விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும் கூறி  - இந்த முறைகேடுகளை மறைத்து வெள்ளையடிப்பதற்காக நேற்றைய தினம் 20.02.2020 வியாழக்கிழமை - அதிபரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிலரால் பொதுக்கூட்டம் ஒன்று பாடசாலையில் கூட்டப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்திற்கு யாழ்.வலயக்கல்வி பணிமனையும் அனுமதி வழங்கியுள்ளதன் பின்னணி என்ன?

இதில் - அதிபரின் முறைகேடுகளை வெளிக்கொணர்வதற்கு துணையாகவிருந்த - அப்பாடசாலையின் பிரதி அதிபரை இடமாற்றுவதற்கு - கையொப்பமிடுமாறு சிலரால் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை - இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அதேவேளை - வடமாகாண கல்வியமைச்சின் இத்தகைய அசமந்தங்களே பாடசாலைகளில் முறைகேடுகள் தலைவிரித்தாட காரணமாக உள்ளன என்பதும் இத்தகைய சம்பவங்கள் மூலம் வெளிப்படுகின்றன.


மேலதிக ஆளணியாக அதிபர் நியமனம் பெற்ற ஒருவரை  - நியமனம் பெற்ற பாடசாலையை தவிர வேறு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்க முடியாது. அப்படி வழங்கும் பட்சத்தில் அவரது சேவை  ஆசிரியர் சேவையாகவே கருதப்படவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே - குறித்த பாடசாலை அதிபரின் நியமனமே -வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகளில் முதன்மையானதாகும்.

குறித்த விசாரணைகளை - இழுத்தடிக்காது  வடமாகாண கல்வியமைச்சு விரைவாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என - வலியுறுத்துகின்றோம்.

எனக் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. Use this diet hack to drop 2 lb of fat in just 8 hours

    More than 160000 men and women are using a easy and secret "liquid hack" to burn 2 lbs every night while they sleep.

    It is scientific and works on anybody.

    You can do it yourself by following these easy steps:

    1) Go get a drinking glass and fill it with water half glass

    2) Now use this proven HACK

    and you'll be 2 lbs thinner as soon as tomorrow!

    ReplyDelete