Wednesday, May 17, 2017

மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் இன்று சுகயீனலீவுப் போராட்டம் - மூதூர் கல்விப் பணிப்பாளருக்கு உடனடி இடமாற்றம்


மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு எதிராகவும் - அவரை இடமாற்றவும் கோரி - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வழிநடத்தலில் மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் ஒன்றிணைந்து  - இன்று சுகயீன லீவுப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில் -  இன்று மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அக்கரைப்பற்றுக்கு இடமாற்றக் கடிதம் கிழக்குமாகாண கல்வியமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளரின் பல முறைகேடுகளுக்கெதிராக - இலங்கை ஆசிரியர் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்த போதும் - எவ்விதமான நடவடிக்கைகளையும் கிழக்குமாகாண கல்வியமைச்சு மேற்கொண்டிராத நிலையில் - இன்றும், நாளையும் சுகயீன லீவுப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. (17,18.05.2017). இந்த நிலையில் - நேற்று (16.05.2017) மாலை ஆளுநருக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன்போது - மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை இடமாற்றுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஆயினும் - வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றக் கடிதம் வழங்கப்படாத நிலையில் - திட்டமிட்டபடி இன்று (17.05.2017) மூதூர் கல்வி வலய ஆசிரியர்கள் சுகயீனலீவை அறிவித்து - சுகயீனலீவுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் இன்று (17.05.2017) வலயக்கல்விப் பணிப்பாளருக்கு இடமாற்றம் கடிதம் வழங்கப்பட்ட நிலையில் - நாளை நடைபெறவிருந்த சுகயீன லீவு போராட்டத்தை நிறுத்தி ஆசிரியர்கள் பணிக்குச் செல்லவுள்ளதாகவும் - ஆசிரியர்களின் இதுபோன்ற ஒன்றுபட்ட உரிமைச் செயற்பாடுகள் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

No comments:

Post a Comment