Wednesday, May 10, 2017

வடமாகாண கல்விப் பணிப்பாளரால் வழங்கப்பட்ட முறையற்ற அதிபர் நியமனம் : 1998/23 சுற்றறிக்கையை அமுல்படுத்த இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!


வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற விதமாக வழங்கப்பட்ட அதிபர் நியமனங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு – அந்தப்பாடசாலைகளுக்கு 1998/23 அரசாங்க சுற்றறிக்கைக்கு அமைவாக – ஊடகங்கள் வாயிலாக அதிபர் வெற்றிடம் கோரப்பட்டு – விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் - வடமாகாண முதலமைச்சருக்கும் - வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட -  யா/காசிப்பிள்ளை வித்தியாலயம், யா/நீர்வேலி அ.த.க.பாடசாலை, யா/கலட்டி அ.மி.த.க. பாடசாலை, யா/பத்தைமேனி இரத்தினேஸ்வரி வித்தியாலயம்,

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட - யா/உடுவில் அ.மி.த.க.பாடசாலை, யா/பொன்னாலை வரராஜப்பெருமாள் வித்தியாலயம்

தீவகம் கல்விவலயத்துக்குட்பட்ட - யா/அல்லைப்பிட்டி றோ.க.த.க.பாடசாலை

தென்மராட்சி கல்விவலயத்துக்குட்பட்ட – யா/வரணி வடக்கு சைவப்பிரகாச பாடசாலை, யா/போக்கட்டி றோ.க.த.க.பாடசாலை

வடமராட்சி கல்விவலயத்துக்குட்பட்ட யா/வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயம், யா/வெற்றிலைக்கேணி றோ.க.த.க. பாடசாலை

கிளிநொச்சி கல்வி வலயத்துக்குட்பட்ட கிளி/தர்மகேணி அ.த.க.பாடசாலை, கிளி/முகாவில் அ.த.க.பாடசாலை

போன்ற பாடசாலைகளுக்கு எவ்விதமான அதிபர் வெற்றிடமும் தகுதியானவர்களிடமிருந்து கோரப்பட்டிருக்கவில்லை. பல புதிய தகுதியான அதிபர்களுக்கு பொருத்தமான பாடசாலைகள் வழங்கப்படாமல் - பல பாடசாலைகளில் அதிபர் தரத்தில் உள்ளவர்கள் - ஒரே பாடசாலையில் மூன்றுக்கும் அதிகமான பதில் அதிபர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். - கல்வியமைச்சின் சுற்றறிக்கைகளை மீறி - ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு வடமாகாணக் கல்விப் பணிப்பாளரால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை எமது சங்கத்தின் கவனத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.  இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தரம் - 3 போட்டிப்பரீட்சையில் - வடமாகாணத்தில் 389 பேர் அதிபர்களாக நியமனம் பெற்று – தகுதியான பயிற்சிகளை மேற்கொண்டு வெளியேறியுள்ள நிலையில் - அவர்களுக்குப் பொருத்தமான பாடசாலைகளை வழங்காமல் - புதிய அதிபர் நியமனம் தொடர்பான 05.09.2016 திகதிய  2016/ED/E/24 இலக்க அமைச்சரவைப் பத்திரத்தையும் மீறி - ஆசிரியர் தரத்தில் உள்ளவர்களுக்கு அதிபர் பதிவி வழங்கப்பட்டுள்ளமை மிகப் பாரிய முறைகேடாகும்.

அத்துடன் - ஒரு பாடசாலையில் - அதிபர் வெற்றிடம் உருவாகுமானால் - 1998/23 சுற்றறிக்கைக்கமைய  அப்பாடசாலைக்கு அதிபர் வெற்றிடம் தொடர்பாக ஊடகங்கள் வாயிலாகக் கோரப்பட்டு – விண்ணப்பிப்பவர்களுள் தகுதியானவர்களுக்கு நியமனம் வழங்குவதே சட்ட வரையறைக்குட்பட்டதும் நீதியானதுமான செயற்பாடாகும்.

மேற்கூறிய பாடசாலைகளுக்கு – 1998/23 சுற்றறிக்கைக்கமைய உடனடியாக அதிபர் வெற்றிடம் ஊடகங்கள் வாயிலாகக் கோரப்பட்டு – தகுதியான அதிபர் தரத்தினையுடைய அதிபர்கள் நியமிக்கப்படவேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment