Friday, July 7, 2017

போயா தினத்திலும் - தொலைபேசி அழைப்பில் வலிகாம வலயத்தில் நாளை செயலமர்வு : ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

ஞாயிறு மற்றும் போயா தினங்களில் ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை தவிர்க்குமாறு பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்துள்ள போதிலும்  - அத்தகைய விடுமுறை தினங்களிலேயே ஆசிரியர்களுக்கான செயலமர்வுகளை நடத்தி ஆசிரியர்களை அடிமைபோன்று நடத்தும் வடமாகாண கல்வி திணைக்களத்தின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாளை சனிக்கிழமை போயாவிடுமுறை தினமாகும். அத்துடன் - இந்துக்களின் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தின் தேர்த் திருவிழாவுமாகும். இந்நிலையில் -  வலிகாமம் கல்வி வலயத்தில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை செயலமர்வுக்கு வருமாறு – திடீரென இன்று வெள்ளிக்கிழைமை தொலைபேசி வாயிலாக - அச்சுறுத்தல் தோறணையில் ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட நிதியினை செலவழிப்பதற்காகவே இந்தச் செயலமர்வு நடத்தப்படவுள்ளது.; ஆசிரியர்களுக்கு போதிய கால அவகாச அழைப்பினைக்கூட விடுக்காது – தொலைபேசி அழைப்பினூடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நயினாதீவு ஆலய தேருக்கு செல்லவேண்டும் எனக் கூறிய ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு - ஆசிரியர்களை அடிமையாக நடத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். இதனை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இவ்விடயம் தொடர்பாக – வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்த போதிலும் - தமது செயற்பாடு தவறு என அவரால் குறிப்பிட்டிருந்த போதிலும் - அவரால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக – வடமாகாண கல்வியமைச்சு – ஆசிரியர்களின் நலன் சார்ந்தும் சிந்திக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.  


No comments:

Post a Comment